“ரொம்ப பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை. எனக்கு உன்னோட புத்தியும் தெரியும். உன் ஒன்னு விட்ட அண்ணன் பொண்ணு புத்தியும் தெரியும். எனக்கும் அண்ணனுக்கும் கருத்து வேறுபாடு தானே தவிர பரம்பரை பகை இல்லை. தப்பு என் மேல தான்னு எனக்கு நல்லாவே தெரியும். ஏன் அது உனக்கும் கூட தெரியும். அப்படி இருந்தும் ஒரு ஏக்கர் நிலத்தையே எனக்காக விட்டுக் கொடுத்தார் அவர். அதுவும் உனக்கு நல்லா தெரியும். நடந்த எல்லா பிரச்சனைக்கு காரணம் நீதான்அப்படின்றதும் எனக்கு நல்லா தெரியும். இத்தனை தெரிஞ்சும் அமைதியா இருக்குறதுக்கு ஒரே காரணம்,என்னால கீழ இறங்கிப் போய் அவர்கிட்ட மன்னிப்பு கேட்க முடியாதுன்ற ஒரு எண்ணம் தான். அதையே காரணம் காட்டி இதுக்கு மேலயும் எதையாவது பண்ணிட்டு இருந்த.. நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்றார் சிவச்சந்திரன்.

“நீங்க தானேங்க, அவங்களோட அந்த தோப்பையும் வயலையும் நாம் வாங்கிட்டா, ஒரே ஓருசா போய்டும்னு சொன்னிங்க?” என்றார்.

“அடியேய்..! அதுக்காக நான் என்ன அடிச்சு,குடும்பத்தை கெடுத்தா பிடுங்கனும்னு சொன்னேன். மனோ அதை விக்கிறேன்னு சொன்னான். மூணாவதா ஒரு ஆளை உள்ள விடுறதுக்கு, நாமளே வாங்கிக்கிட்டா என்னன்னு தோணுச்சு. அதான் பொது ஆளைவிட்டு அவன்கிட்ட பேசுனேன். வேற எந்த உள்நோக்கமும் இல்லை. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு, பிரச்சனை பண்ணி அதுல குளிர் காயலாம்னு நினைக்காத.” என்றவர்,

“வேதா கல்யாணத்துக்கு போகணும். அதுக்கும் தயாரா இரு” என்றார்.

“பத்தோடு பதினொன்னா பத்திரிக்கை வச்சா நாம போகனுமா? நானும் வர மாட்டேன். நீங்களும் போகக் கூடாது.” என்றார் நீலாவதி.

“அவங்களாவது பத்திரிக்கை  வச்சாங்க. நாம கனி கல்யாணத்துக்கு அதுவும் கூட வைக்கலை. ஆனா, அண்ணாவும் அண்ணியும் வந்தாங்க இல்ல. அந்த அறிவு கூடவா உனக்கு இல்ல. நான் சொல்றதை செய். “ என்று கோபமாக சொல்லிவிட்டு அவர் செல்ல,

“இங்க பார்த்தியாடா கிரி..! உங்கப்பா பேசிட்டு போறதை. மதிக்காதவங்க வீட்டுக் விசேஷத்துக்கு போகணுமாமே?” என்று மகனைத் துணைக்கு அழைக்க,

“நீங்க யாரு போனாலும், போகாட்டியும் நான் கண்டிப்பா போவேன். என் தங்கச்சி கல்யாணம், நான் இல்லாமையா?” என்று பட்டென்று சொன்னவன் அறைக்குள் சென்று விட,

“அப்பனுக்கும் பிள்ளைக்கும் ஏதோ பேயடிச்சிருச்சு போல. தங்கச்சியாமே தங்கச்சி. அவளை என்ன நானா பெத்தேன். வந்துட்டான் பெரிய பாசத்தைத் தூக்கிக்கிட்டு..” என்று நீலாவதியால் புலம்ப மட்டுமே முடிந்தது. அவருடைய எல்லா பேச்சுக்கும் ஆமாம் சாமி போடுவது கனிமொழி மட்டுமே.

இதற்கெல்லாம் காரணம் வேத வர்ஷினி தான் என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பிரச்சனையெல்லாம் நடப்பதற்கு முன்பே சிவச்சந்திரனையும், கிரியையும் தனித் தனியாக பார்த்து பேசியிருந்தாள். ஏற்கனவே அவள் மீது பாசமாக இருந்த சிவச் சந்திரன், அவளின் ‘சிவாப்பா சிவாப்பா’ என்ற வார்த்தைகளில் நெக்குருகிப் போனார். இதெல்லாம் நீலாவதிக்கு தெரிந்தால் இதற்கு ஒரு ஆட்டம் ஆடுவார் என்று தெரிந்து அவர்கள் இருவரும் எதையும் சொல்லவில்லை.

நேரமும், பொழுதும் விரைவாக செல்ல, மறுநாள் விடியலும் விரைவாகவே வந்திருந்தது. ஏற்கனவே கல்யாண வீட்டின் ஜொலிப்பில் இருந்த வீடு, இப்போது இன்னும் பிரகாசமாக..பரபரப்பாய் இருந்தது. அனைத்து சடங்குகளும் மண்டப்பத்தில் தான் என்றாலும், வீட்டிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்க, காதம்பரிக்கு நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார். விசேஷ வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் பத்தாது என்பதைப் போலத்தான் அனைவரும் சுற்றிக் கொண்டிருந்தனர்.

சரண் மட்டுமே வேதாவின் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். கீர்த்தனாவைக் காணவில்லை. கீர்த்தனாவின் அம்மா கூட கண்களில் தட்டுப் பட்டார். அவளை மட்டும் காணவில்லை.

“சரண் அண்ணா..! எங்க அண்ணியை காணோம்?” என்று வேதா கேட்டு வைக்க, என்ன சொல்வான் சரண்.

‘அதெல்லாம் கீர்த்தனா அங்க வர மாட்டா. மண்டபத்துல பார்த்துக்கட்டும். அந்த டேஞ்சர் லேடி இருக்குற வீட்டுக்கு என் தங்கையை அனுப்ப முடியாது’ என்று விஜய் சொன்னதை அப்படியேவா சொல்ல முடியும்.

அப்படி சொன்னால் வேதாவின் ரியாக்சன் எப்படி இருக்குமென்று சரணுக்குத் தான் தெரியுமே.

“அண்ணிக்கு முக்கியமான ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு போலடா வேதாம்மா. அதான் வொர்க் பண்ணிட்டு இருக்கா. ஈவ்னிங் உன்கூட ஜாயின்ட் பண்ணிப்பா..” என்றான் சந்தேகம் வராதபடி. இருந்தாலும் அவனை சந்தேகப் பார்வை பார்த்து வைத்தாள் வேதா.

“என்னடா அப்படி பார்க்குற?” என்றான்.

“உனக்கு பொய் சொல்ல வரலைண்ணா. ஏன் ட்ரை பண்றிங்க? எப்படியும் அந்த கடப்பாறை மூஞ்சிக்காரன் தான் அண்ணியை விட்ருக்க மாட்டான். எனக்குத் தெரியும்..” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.

அவள் சொன்ன ‘கடப்பாறை மூஞ்சிக்காரன்’ என்ற வார்த்தையில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு,

“இதென்ன புதுப்பழக்கம் வேதா? மரியாதை இல்லாம பேசுறது?” என்று அதட்டினான்.

“அப்பறம் அண்ணியை என்கிட்டே வரக் கூடாதுன்னு சொல்றதுக்கு அவர் யார்? அண்ணியும் அவர் பேச்சைக் கேட்டுட்டு இங்க வரலை தான? உங்க மேரேஜ் அப்போ நான் அண்ணி கூடவே தான இருந்தேன். ஆனா, அவங்க மட்டும் இப்போ என்கூட இல்லை. இத்தனை பேர் இருந்தும் நான் யாரும் இல்லாத மாதிரி  பீல் பண்றேன். எனக்கு யாரும் வேண்டாம். யாரும் வரவும் வேண்டாம்..” என்றவள் கலங்கிய கண்களுடன் சென்று விட்டாள்.

சரணுக்குத் தான் ஒரு மாதிரி இருந்தது அவள் அப்படி பேசியது. நேராக கீர்த்தனாவிடம் சென்றவன், வேதா பேசியதைக் கூற,

“இதுக்குத்தான் நான் அப்பவே அங்க போறேன்னு சொன்னேன். யாரு கேட்டிங்க? பாருங்க வேதா எப்படி பீல் பண்றான்னு?” என்று அவளிடம் போக எத்தனிக்க,

“அவளே ஒரு டிராமா குயின். அவ போடுற டிராமாவ நம்பி நீ ஒன்னும் போகத் தேவையில்லை” என்றான் விஜய்.

“டேய்.. இப்போ சந்தியாண்ணி அங்க இல்ல. அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. கீர்த்தனாவை யாரும் எதுவும் சொல்ல மாட்டங்க” என்றான் சரண்.

“சோ வாட்..! அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் மஹாலுக்கு கிளம்பிடுவிங்கள்ல. அப்பறம் என்ன? நீ போய் வேலையைப் பாரு” என்றான் லேப்டாப்பை பார்த்துக் கொண்டே.

‘வேதா உன்னை கடப்பாறை மூஞ்சிக்காரன்னு சொன்னது தப்பே இல்ல மச்சான்’ என்று மனதிற்குள் நினைத்தவன், அவனை முறைத்தபடி சென்றான்.