“எப்படி வேதா முடியும்? இல்ல எப்படி முடியும்னு கேட்கிறேன். நாங்க இருக்கும் போதே, இத்தனை பேரை கூப்பிட்டு வச்சு சட்டமா சொத்தை எழுதிக் கேட்குற உன் அண்ணி, அதை அமைதியா வேடிக்கை பார்க்குற உன் அண்ணன், இவங்களை நம்பி என் பொண்ணுக்கு ஒண்ணுமில்லாம எப்படி நான் விட முடியும்.” என்றார் காதம்பரி.

“அம்மா..! எப்பவுமே உங்களுக்கு என் மேல நம்பிக்கையே இருக்காதா? நான் வேதாவை அப்படியே விட்ருவேன்னு நினைக்கிறிங்களா? இப்ப கூட எனக்கு சொந்தமா கம்பெனி ஸ்டார்ட் பண்ணனும்னு தான் இந்த சொத்தைக் கேட்டேன். மத்தபடி எனக்கு வேற எந்த எண்ணமும் இல்லை..” என்றான் மனோகரன் விரக்தியாய்.

“நீ கம்பெனி ஸ்டார்ட் பண்ண நினைக்கிறது  நல்ல விஷயம் தான் மனோகர். அதை நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, அதுக்காக பூர்வீக சொத்தை வித்து தான் செய்யணும்னு இல்லையே?” என்றார் காதம்பரி.

அவரின் பேச்சைக் கேட்ட வேத வர்ஷினிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.

‘அண்ணா இந்த சொத்தை எல்லாம் விக்கப் போறானா..?’ என்று நினைத்தவளுக்கு தொண்டைக்குழியை விட்டு வார்த்தைகள் வர மறுத்தது. இந்த பிரச்சனை பல மாதங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று அவளுக்குத் தெரியும். ஆனால் இதற்காகத்தான் என்று அவளுக்குத் தெரியாது. அண்ணன் சொத்தை எழுதிக் கேட்கிறான், அதுவும் அண்ணியின் தூண்டுதலின் பேரில் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், அத்தனையையும் விற்று, அதில் வரும் பணம் மூலம் கம்பெனி ஆரம்பிக்க இருக்கிறான் என்ற விஷயமே இப்போது தான் அவளுக்குத் தெரியும்.

வேகமாக சரணின் அருகில் சென்றவள்,

“சரண் அண்ணா..! இந்த விஷயம் உங்களுக்கு முன்னமே தெரியுமா? மனோ அண்ணா சொத்தை எல்லாம் விக்கப் போறானா?” என்றாள் மீண்டும்.

“எனக்கு இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும் வேதாம்மா..! மனோவோட இந்த முடிவு எனக்கு அதிர்ச்சி தான். அதுவும் ராம் அப்பாவுக்கு இது எப்படிப்பட்ட வலியைத் தரும்னு தெரிஞ்சும் இப்படி பண்றானேன்னு எனக்கும் கோபம் தான். அதனால தான் காதும்மா இவ்வளவு போராடுறாங்க..! இன்னொரு முக்கியமான விஷயம்… சொத்தை வாங்குறது நம்ம சிவச்சந்திரன் அப்பா தான். நீலாம்மா பேர்ல வாங்கப் போறதா வேற கேள்விப் பட்டேன்..”என்றான் சரண்.

“என்னண்ணா சொல்ற? இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை?” என்றாள்.

“இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத ஸ்ட்ரெஸ் தான வேதாம்மா..! காதும்மாவுக்கு உன்னைய படிக்கும் போதே மேரேஜ் பண்ணி வைக்கப் போறோம்ன்ற குற்ற உணர்ச்சி. இதுல இதையெல்லாம் உன்னோட தலையில ஏத்த வேணாம்னு நினைச்சாங்க..” என்றான் சரண்.

அங்கு நடந்து கொண்டிருந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு எரிச்சலாய் வந்தது.

“டேய் சரண்..! இந்த ட்ராமாவெல்லாம் என்னால பார்க்க முடியலை. இது வரைக்கும் இப்படி ஒரு சென்டிமென்டல் இடியட்சை  நான் பார்த்ததே இல்லை. எந்த அண்ணனாவது இப்படி பண்ணுவானா? நாளைக்கு மறுநாள் சிஸ்டர் மேரேஜ். ஆனா, இன்னைக்கு சொத்து வேணும்னு கேட்குற அண்ணன். செம்ம இல்ல. இவனையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? இவனுக்கெல்லாம் கடைசி வரைக்கும் தன்னோட சம்பாதியத்துல வாழ்ற  எண்ணமே இல்லை போல. இந்த ஒட்டுண்ணி வாழ்க்கையையே கடைசி வரைக்கும் வாழ்ந்துட்டு போய்டுவான். இவனெல்லாம் ஒரு ஆளு.. இதைப் பேச பத்துப் பேரு. சிவனேன்னு இருந்த என்னைய ஏன்டா இங்க கூட்டிட்டு வந்த? “ என்று டன் கணக்கில் எரிச்சலை முகத்தில் காண்பித்தான் விஜய ரகு நந்தன்.

விஜய் பேசுவதைக் கேட்டு முறைத்த வேதா,

“பார்த்து பேசுங்க! எங்க அண்ணனைப் பேசுறதுக்கு நீங்க யாரு? அவர் ஒன்னும் அவரா பேசலை. எங்க அண்ணி வேலை தான் இதெல்லாம். அது தெரியாம வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க” என்றாள் கோபமாய்.

“ஏன்? உங்க அண்ணனுக்கு சொந்த புத்தி எதுவும் இல்லையா? யார் எது சொன்னாலும் சரி சரின்னு தலையாட்டுவானா?  இவனெல்லாம் படிச்சு, பெரிய வேலைல இருக்கான்னு வெளிய சொல்லிடாதிங்க..” என்றான் நக்கலாய் விஜய்.

வேதா அவனை எதுவும் பேச முடியாமல் சரணை முறைக்க,

“கொஞ்ச நேரம் அமைதியா தான் இரேன்டா..!” என்றான்.

ராமச்சந்திரனின் அருகில் சென்ற வேதா.. அங்கு மாமா முறையில் இருந்த ஒருவரைப் பார்த்து,

“மாமா இதைப் பத்தி இன்னொரு நாள் பேசிக்கலாம். எங்களுக்காக நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி மாமா. சிரமத்துக்கு மன்னிக்கணும்..” என்றாள் பணிவாய்,அதே சமயம் அழுத்தமாய்.

“அட என்ன வேதாம்மா? மன்னிப்பெல்லாம்  கேட்டுட்டு. நாங்களும் அதைத் தான் சொன்னோம், இன்னொரு நாள் பேசிக்கலாம்னு. உங்க அண்ணி புள்ள தான் கேட்கலை. இப்போ  நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்கமா. ஆனா, பூர்வீகத்தை விக்கனுன்னு நினைச்சுப் புடாதிங்க..” என்றார் அவர்.

“கண்டிப்பா மாமா..!” என்றாள். அவர்கள்  செல்லும் வரை அமைதியாக இருந்தவள்,  சென்ற பின்பு நேராக மனோவிடம் வந்தாள்.

“இந்த சொத்தை விக்கிறதுக்காகத் தான் என்கிட்ட கையெழுத்து கேட்டிங்களா ண்ணா..” என்றாள் நிதானமாய்.

“முழுசா விக்கலை வேதா. நம்ம சிவாப்பா தோப்பை ஒட்டி இருக்குற தோப்பு, வயல் மட்டும் தான்…” என்றான் அமைதியாய்.

“சோ..! நம்மளை ஆகவே ஆகாதுன்னு நினைக்கிறவங்க கிட்டையே, நம்ம சொத்த வித்து, நம்ம அப்பா கௌரவத்தை அவங்க காலடியில குழி தோண்டி புதைக்க தயாராகிட்டிங்கன்னு சொல்லுங்க” என்றாள் நக்கலாய்.

“வார்த்தையை பார்த்து பேசு வேதா. யாருக்கோ விக்கிறதுக்கு, அவங்க நம்ம ரத்தம், அவங்களுக்கு விக்கிறதுக்கு என்ன? நாம விக்கிறோம், அவங்க வாங்குறாங்க அவ்வளவு தான். இதுல கௌரவம் எங்க குறையுது?” என்றான் கோபமாய்.

“சொத்தையெல்லாம் விக்க முடியாது..!” என்றாள்.

“அதை நீ சொல்லத் தேவையில்லை..” என்றாள் சந்தியா.

“நான் என் அண்ணாகிட்ட பேசிட்டு இருக்கேன். நான் சொல்லாம வேற யார் சொல்லுவாங்க அண்ணி..! இது என்னோட தாத்தா, அப்பா சம்பாரிச்ச சொத்து. இதுல எதை விக்கனும்னாலும் என்னோட சம்மதமும் தேவை. எனக்கு இந்த சொத்தை விக்குறதுலஉடன்பாடு இல்லை..” என்றாள் தீர்மானமாக.

“நான் சொல்லலைங்க..! இவ இப்படித்தான் பேசுவான்னு. நீங்க தான் நம்பலை..இப்ப தெரியுதா உங்க தங்கச்சியோட சுயரூபம்” என்றாள் சந்தியா.

“வேதா பிளீஸ்..!நீ சின்ன பொண்ணு. உனக்கு இதெல்லாம் புரியாது. இப்பவே விக்கனும்னு நானும் சொல்லலை. இன்பேக்ட் நாம இதைப் பத்தி இப்ப பேச வேண்டாம்.  பர்ஸ்ட் உன்னோட மேரேஜ் நல்ல படியா முடியட்டும். அப்பறம் பேசிக்கலாம்டா..” என்றான் மனோ.

“சாரிண்ணா..! எப்ப பேசுனாலும் என்னோட பதில் நோ தான்..” என்றாள் தீர்மானமாய்.

“சொந்தமா கம்பெனி ஸ்டார்ட் பண்ணனும்ங்கிறது என்னோட பல வருஷ கனவு வேதா” என்றான்.

“அதை நான் தப்பு சொல்லலை அண்ணா. சொத்துப் பத்திரத்தை எல்லாம்  அடமானம் வச்சு பேங்க்ல அமௌன்ட் வாங்கலாம். இல்லையா இதையெல்லாம் ஷ்யூரிட்டியா காட்டி லோன் கேட்கலாம். இப்படி எத்தனையோ வழி இருக்கு. இதையெல்லாம் விட்டுட்டு ஏன் வித்து தான் எல்லாம் பண்ணனும்னு நினைக்கிறிங்க?” என்றாள் விடாமல்.

“இந்த ஐடியா குடுக்குற வேலையெல்லாம் வேண்டாம்..” என்றாள் சந்தியா வெடுக்கென்று.

இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.

“வேதா சொல்றதும் சரிதான மனோ மாமா. நாம ஏன் அப்படி ட்ரை பண்ணக் கூடாது. கண்டிப்பா பேங்க்ல பெரிய அமௌன்ட் கிடைக்க வாய்ப்பிருக்கு.” என்றாள்.

“இங்க பாரு கீர்த்தனா..! உன்னோட வேலையை மட்டும் நீ பாரு. எங்க குடும்ப விஷயத்துல நீ தலையிடாத” என்றாள் சந்தியா.

“இதுவும் என்னோட வேலை தான் சந்தியாக்கா..! மாமா தான் புரியாம பேசுறார்னு பார்த்தா நீங்களும் அவருக்கு தூபம் போடுற மாதிரி பேசிட்டு இருக்கீங்க? இதனால அத்தை மாமா மனசு எவ்வளவு கஷ்ட்டப் படும். அதைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களா..” என்றாள் கீர்த்தனா.

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு? அவங்க எனக்கு தான் அத்தை மாமா. அப்பறம் இவர் என் புருஷன். ஏதோ உன்னோட புருஷன் மாதிரி அக்கறையை வழிய விட்டுட்டு இருக்க..” என்று அளவில்லாமல் பேச,

“வார்த்தையை பார்த்து பேசுங்க அண்ணி..!” என்றான் சரண் கோபமாக.

“நீங்க முதல்ல உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லி வைங்க. வந்த கொஞ்ச நாள்லயே இந்த வேதாவைத் தான் கைக்குள்ள போட்டுகிட்டா பார்த்தா, இப்ப என் புருஷனையும் அவ கைக்குள்ள போடப் பார்க்குறா? அதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமா?” என்று அவள் பேசி முடிக்கும் முன்,

‘சப்’பென்று அறையும் சத்தம் கேட்க, கண்ணத்தில் கைவைத்தபடி சந்தியா அதிர்ந்து நோக்க, காதம்பரி தான் அறைந்திருந்தார். அங்கே மற்றொருபுறம் சரண் கண்ணத்தில் கை வைத்த படி அதிர்ந்து நின்றிருந்தான். விஜய் தான் அவனை அறைந்திருந்தான்

விஜய் அவனை அடித்திருந்தாலும் பார்வை முழுவதும் சந்தியா மீது தான் இருந்தது.

“இப்ப என் பையனை எதுக்கு அடிச்சிங்க தம்பி..” என்று மைதிலி கேட்க,

“கட்டுன பொண்டாட்டியை இங்க சிலர் வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. அதைக் கேட்க துப்பில்லாம நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தா கொஞ்ச சொல்றிங்களா ஆன்ட்டி. உங்க வீட்ல இப்படி பட்ட தராதரமில்லாத வார்த்தையைக் கேட்கத் தான் என் தங்கச்சியை கட்டிக் கொடுத்தோமா? அவன் பொண்டாட்டியை பேசுனா அவன் வேணும்னா அமைதியா இருக்கலாம். ஆனா ஒரு அண்ணனா என்னால அமைதியா இருக்க முடியாது. என்னால அந்த லேடியை அடிக்க முடியாது. அதான் இவனை அடிச்சேன். ஆனா, நான் செய்ய நினைச்சதை காதம்பரி ஆன்ட்டி பண்ணிட்டாங்க. அதுவே திருப்தி தான்..” என்றான் நக்கலாய்.

அவன் பேசியது சரியென்றே பட்டது வேதாவுக்கு. முதன் முறையாக விஜய் மீது கோபம் வரவில்லை அவளுக்கு. சற்று வியப்பாய் கூட இருந்தது.

“கீர்த்தனா இது அவங்க வீட்டு விஷயம். நீ கிளம்பு முதல்ல..” என்றான் விஜய் அதட்டலாய்.

“அண்ணா..!” என்ற கீர்த்தனா, வேதாவைப் பார்த்து தயங்க,

“கிளம்புன்னு சொன்னேன்..!” என்றான் விஜய் உறுமலாய். அந்த குரலிலும், அவனின் கோபத்திலும் அனைவரும் அதிர்ந்து விழிக்க, வேதா ஒரு நிமிடம் அரண்டுவிட்டாள். 

“தேவையில்லாம சீன் கிரியேட் பண்ணாதிங்க மிஸ்டர் விஜய்..” என்றான் மனோகரன்.

அவனைப் பார்த்து முறைத்த விஜய்,’நீயெல்லாம் ஒரு ஆளு..!’ என்ற ரீதியில் பார்த்தவன்,

“சீன் கிரியேட் பண்றது எப்படின்னு உன் வொய்ப் கிட்ட கேளு. ஒரு புக்கே போடலாம்.’ என்று சொல்லி விட்டு சென்றான்.