“வீட்டை விட்டு கிளம்பியே ஒரு மணி நேரம் ஆகல, அதுக்குள்ள எதுக்கு கூப்பிடுற? மதியானம் வர்றேன்” என்றான் தர்மா.

“நான் கூப்பிட்டா வர மாட்டியா மாமா?” எனக் கேட்டாள்.

கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளுடன் ஏதோ பேச்சு வார்த்தையில் இருந்தவன், “நேரங் காலம் தெரியாம கிறுக்கு தனமா பேசாத, வை!” என அதட்டி அழைப்பை துண்டித்து விட்டான்.

“அவனை முக்கியமா நினைக்காத உனக்காக போய் ஓடி வருவானாக்கும்?” என வேண்டுமென்றே பேத்தியின் கோவத்தை தூண்டி விட்டார் பாட்டி.

“மாமா ஒன்னும் அப்படி செய்யாது” என்றாள் கனி.

“நான் எதுக்கு இருக்கேன், அவனை செய்ய வைப்பேன்” என வீராப்பாக சொன்னார் பாட்டி.

“நான் இருக்கிற வரைக்கும் அப்படிலாம் ரெண்டாம் கல்யாணம் பண்ண முடியாது, உன் பேரன் மேல கேஸ் கொடுத்திடுவேன்” என பாட்டிக்கு பதில் தந்தாள் கனி.

“போடி போடி! எத்தன கேஸை பார்த்தவன் அவன், உன் கேஸ் அவனை என்ன செஞ்சிடும். நீ கூட வந்து வாழலைன்னு நானே போய் கோர்ட்ல சொல்லுவேன். அவுகளே பார்த்து வேற கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க” என்றார்.

“கோர்ட் என்ன உன் பாட்டனோட கெஸ்ட் ஹவுஸா, இல்லை அங்க உள்ளவங்க எல்லாம் உன் அங்காளி பங்காளிங்களா? அறிவு இருக்கா இல்லையா அப்பத்தா உனக்கு? உன் இஷ்டத்துக்கு பேசாத” என எரிச்சலாக சொன்னாள் கனி.

“என் இஷ்டதுக்குத்தான் பேசுவேன் டி. நீ இல்லாத சமயம் நல்லதா ஒரு பொண்ண பார்த்திடுவேன். அவ கழுத்துல தாலி கட்டலைனா உசுர விட்ருவேன்டான்னு அவனை மிரட்டினா கட்டாம விட்ருவானா அவன்?” எனக் கேட்டுக் கொண்டே புடவையின் கொசுவைத்தை அள்ளி சொருகினார் பாட்டி.

தன்னை பயப்படுத்தி பார்க்க பேசுகிறார் என்பது அவளுக்கு புரிந்தாலும் அந்த பேச்சை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“உனக்காக இங்க வந்த என்னை சொல்லணும், என்கிட்ட ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது சொல்லிட்டேன்” என கோவமாக சொல்லி மகனோடு அறைக்குள் நுழைந்தவள்தான்.

மகனுக்கு வேண்டியதை வேலை செய்யும் பெண் மூலமாக அறைக்கே வரவழைத்துக் கொண்டாளே தவிர அறையை விட்டு வெளிவரவில்லை. பாட்டியும் அவளை கண்டு கொள்ளவில்லை.

மதியம் தர்மா வந்து சேர்ந்த போது பாட்டி அவனிடமும் முகத்தை காட்டினார்.

“வர வர நீதான் அம்மாச்சி குழந்தையாகிட்டு வர்ற. நீ கேட்டுகிட்ட படி அவளை உன்கிட்ட கொண்டாந்தும் விட்டுட்டேன், அப்புறமும் என்ன? அவளை எங்க? எதுக்கு உடனே என்னை வர சொன்னா?” என்றான்.

“வந்தவ இங்கேயே இருப்பான்னு நான் நினைச்சா திரும்ப போயிடுவேன்னு சொல்றா? என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? ஒன்னா சேர்ந்து ஒரு ஏழு எட்டு மாசம் வாழ்ந்திருப்பீங்களா? வாழ்க்கைய காப்பாத்திக்க துப்பில்லாம நீ என்னத்தடா அடுத்தவன் பிரச்சனைக்கு பஞ்சாயத்து வச்சிக்கிட்டு இருக்கிற?” என அவனை பிடித்துக்கொண்டார்.

“ஐயைய… நிறுத்து அம்மாச்சி! என்ன பண்ண சொல்ற என்னை? கட்டி போட்டா அவளை நிறுத்தி வைக்க முடியும்?” என கடுப்பாக கேட்டான்.

“கட்டி போடணும் டா, அன்பால ஆசையால உன்னோட கட்டி வைக்கணும் அவளை. மத்தத எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு அவளை பாரு, உன் வாழ்க்கையை கைப்பத்திக்க” என பாட்டி பேசிக் கொண்டே இருக்க, சலிப்பாக மூச்சு விட்டுக் கொண்டே மாடிப் படிகளில் ஏறினான்.

அவனது வரவுக்காகவே காத்திருந்த கனி, “அதென்ன நான் கூப்பிட்டா வர மாட்டியா நீ?” என குறையாக கேட்டாள்.

உறங்கிப் போயிருந்த மகனை கண்களால் தழுவிக் கொண்டவன், “அப்படியென்ன அவசரம் கனி?”  எனக் கேட்டான்.

பாட்டி பேசியதை சொன்னவள், “அப்பவே அப்பத்தா முன்னாடி உன்னை நிறுத்தி வச்சு அது சொல்ற மாதிரிலாம் நடக்க வாய்ப்பு இல்லைனு சொல்ல வைக்கத்தான் கூப்பிட்டேன். எவ்ளோ கொழுப்பு இருந்தா உனக்கு வேற கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லும்?” எனக் கேட்டாள்.

அவளை முறைத்தவன், “நீங்க அடிச்சு உதைச்சு விளையாட  நான்தான் கிடைச்சேனா? அது அப்படி சொன்னா சரிதான் கட்டி வைன்னு சொல்லிட்டு போவியா, அதை விட்டுட்டு அது கூட மல்லுக்கு நின்னு எனக்கு வேற கூப்பிடுற, அங்க நான்…” என சொல்லிக் கொண்டிருந்தான் தர்மா.

அவனை முழுதும் பேச விடாமல் அவனது சட்டையை கொத்தாகப் பற்றியவள், “கட்டி வைன்னு என் வாயாலேயே சொல்லணுமா நான்?” என பற்களை கடித்துக் கொண்டு கேட்டாள்.

லேசாக சிரித்தவன், “என்ன பண்ற கனி?” எனக் கேட்டான்.

அவனது சட்டையை விட்டவள், “கோவமா வருது மாமா. வேணும்னே அப்பத்தா இப்படிலாம் பேசுது. எதெதுல விளையாடுறதுன்னு இல்லையா? அதுகிட்ட சொல்லி வை” என்றாள்.

“என்னன்னு?”

“உன் வாழ்க்கைல என் ஒருத்திக்கு மட்டும்தான் இடம்னு”

“ம்ம்…”

“என்ன ஏதோ போல ம் போடுற?” எனக் கேட்டவளை கண்டனமாக பார்த்தான்.

“எனக்கே சில்லியா தெரியுதுதான் மாமா. ஆனாலும்…” என இழுத்தாள்.

“என்ன கனி ஆனாலும்… ஹ்ம்ம்… என்ன ஆனாலும்? ஒரு வேளை எனக்கு ஏதாச்சும் ஆகிப் போச்சுன்னு வச்சுக்க, உன் அத்தை உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிடாம போயிடுவாங்களா?”  என சற்றே கோவமாக கேட்டான்.

நெஞ்சம் பதற, “என்ன மாமா இப்படி பேசிட்ட?” எனக் கேட்டாள்.

“ஏன் கேட்டதுல என்ன தப்பு கனி?”

“ஆசை ஆசையா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் மாமா, நம்ம கல்யாணம் நடக்காம போயிருந்தா கூட உன்னையவே நினைச்சிட்டு வாழ்ந்திருப்பேன், என்கிட்ட போய் இப்படி கேட்குறியே?”

“ம்ம்… நான் இல்லாம போனா கூட என் நினைப்புல வாழ்ந்திடுவேன்னு சொல்றியே? நான் இன்னும் இருக்கேன் கனி, உயிரை ஒட்ட வச்சுக்கிட்டு உனக்காக இன்னும் இருக்கேன். இன்னிக்கு தூங்குறவன் விடிஞ்சு போறப்ப மூச்சு விட்டுட்டு இருப்பானான்னு உறுதியா சொல்ல முடியுமா? சாவெல்லாம் யார் கையிலேயும் இல்லை. நடக்கணும்னு விதி இருந்தா எப்படியும் நடக்கும்,   ஏதாவது நடந்திடும் நடந்திடும்னு பயந்திட்டு இருக்கிற காலத்தை வீணடிக்கிறியே கனி?” எனக் கேட்டவனின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.

இப்படி தன் மாமாவை அவள் பார்க்கவும், நெஞ்சம் பொறுக்காமல் அவனது கையை பிடித்துக் கொண்டாள்.

“நான் இருக்கிற வரைக்கும் என் புள்ளைக்கு ஏதும் ஆகாது, எங்கம்மா என்னை பார்த்து பார்த்து வளர்த்தும் என் விதி நான் இப்படி ஆகிட்டேன். என்னை பார்த்து வளர்ந்துதான் என் புள்ள என்னை மாதிரி  ஆவான்னு இல்லை கனி.  உன் வளர்ப்புல எனக்கு நம்பிக்கை இருக்கு. என் வளர்ப்புல நம்பிக்கை இல்லையாடி? நம்ம நல்லா வளர்ப்போம், அவன் விதியும் நல்லாத்தான் இருக்கும்னு நம்புவோம்.

சத்தியமா சொல்றேன் கனி, நம்ம கல்யாணம் முடிஞ்சதிலேருந்து இதையெல்லாம் விட்டு ஒழிச்சிட்டு உன் கூட நிம்மதியா இருக்கத்தான் ஒவ்வொரு நொடியும் ஆசை பட்டேன், என்னை மீறி இங்க வந்து நிக்கிறேன்.

 இப்பவும் ஏதாவது ஒரு சந்து பொந்து கிடைக்காதா இதை வுட்டுட்டு ஓடிப் போகன்னுதான் பார்க்கிறேன். நிச்சயம் ஒரு நாள் வெளியேறி போவேன் கனி. அதுவரைக்கும் கூட நிக்க மாட்டேன்னு நீ சொன்னா எந்த தைரியத்துல முன்னாடி ஓடுவேன் கனி?” என அவன் கேட்டதுதான் தாமதம்…

அவனை அணைத்துக் கொண்ட கனி,  “நான் எங்கேயும் போகல மாமா” என தேம்பிக் கொண்டே சொன்னாள்.

எப்படியும் தன்னிடமே நின்று விடுவாள் என தர்மாவுக்கு நம்பிக்கை இருந்தது. அவள் வாய் மொழியாக கேட்கவும் மிகுந்த ஆசுவாசம். அவளை அணைத்துக் கொண்டவன் மனதில் அழுத்திக் கிடந்த வேதனையை  பெரியதொரு மூச்சை விட்டு வெளியேற்றினான்.

சில நிமிடங்கள் கழித்து முகத்தை மட்டும் விலக்கி அவனை பார்த்தவள், “நீ செஞ்சதுக்கெல்லாம் கூட இருந்து சண்டை போட்டுக்கிறேன், இனி என்ன செஞ்சாலும் கூட நேருக்கு நேர் நின்னு சண்டை போட்டுப்பேன். விட்டுட்டு போக மாட்டேன் மாமா” என்றாள்.

“சண்டைதான?” எனக் கேட்டு புன்னகை செய்தவன் சம்மதம் என்பதாக தலையசைத்து மீண்டும் அவளை கட்டியணைத்துக் கொண்டான்.