சொர்க்கம் உன்னருகில் 18

        தான் சொன்ன பெண்ணை திருமணம் செய்யாமல்  சுஜியை  திருமணம் செய்ததற்கு ஜெய்யை பழிவாங்க நினைத்தாள் கீதா. அதற்காக அவள் செய்த குளறுபடிகளால் விளைந்த பிரச்சனைகளுக்கு தன்னால் முடிந்தவரை தீர்வு கண்டான் விஜயன்.

     தனது பெற்றோரை இனி தன்னுடனே வைத்துக்கொள்ள போவதாக விஜயன் சொல்லி இருந்தான்.

    கீதா உடனே எல்லோரையும் பார்த்து, “ நீங்க இருக்கும்போதே நானும் என்னோட முடிவ சொல்லிடறேன். நான் சமைச்சத இவர பெத்தவங்க குறை சொல்லாம சாப்பிடனும். ஏன்னா சின்ன மருமக நேரத்துக்கொரு குழம்பு வைச்சி குடுத்தா. என்னால அது முடியாது.”

     “ உட்கார்ந்துகிட்டு தண்ணீ கொண்டு வா, வெந்நீ வச்சுக்குடு, காபி போட்டுக்குடுன்னு கட்டளை போடகூடாது. தண்ணீ வேணும்னா வந்து எடுத்து குடிச்சுக்கனும்.”

    “அத சாப்பிடலாம்னு இருக்கு. இத செஞ்சித்தான்னு நச்சறிக்ககூடாது. நான் சமைக்கிறத சாப்பிடனும்”.

     “யேந்தங்கச்சி வர்றா அவளுக்கு உளுந்து வடை செய்யி, என் பேரன் வர்றான் அவனுக்கு கறி பிரியாணி செஞ்சி சில்லி போட்டு வைன்னு சில்லியா சொல்லக்கூடாது”.

      “சமைச்சி வச்சிட்டு – ‘வாங்க வந்து சாப்பிடுங்கன்னு’ என்னால ஒவ்வொரு முறையும் கூப்பிட முடியாது. பசிச்சா வந்து இருக்கிறத போட்டு சாப்பிட்டுக்கனும்”.

    “ஒவ்வொரு விசயத்துக்கும் இவங்ககிட்ட கேக்க முடியாது. என்ன சமைக்க? என்ன பண்ணலாமு-ன்னு? எல்லாத்தையும் இவங்ககிட்ட என்னால கேட்டுக்கிட்டு இருக்க முடியாது.”

    “இவங்க துணிய இவங்கதான் துவைச்சிக்கனும். நான் இவங்க வீட்டுல வாழத்தான் வந்தேன். வேலை செய்ய வரல.”

     “அங்க உட்கார்ந்துகிட்டு ஊர பேசுனமாதிரி இங்கயும் இருக்காம வீட்ட கூட்டனும், என்னோட வேலையை ஷேர் பண்ணிக்கனும்”

     “நாங்க ரெண்டு பேரும் வெளிய எங்கையாவது கிளம்பும்போது எப்ப வருவீங்க? நான் அங்க வர்றேன்னு சொல்லிட்டேன் நீங்க இப்ப வெளிய போயே ஆகனுமா? நாளைக்கு போங்கன்னு இவங்க அம்மா குறுக்கால வந்து விழக்கூடாது.”

       “இதெல்லாம் ஓகேன்னா எங்களோட வர சொல்லுங்க”, எனச் சொல்லி திரும்பி எல்லோரையும் பார்க்க, யாரும் எதுவும் சொல்லாமலிருக்கவும் தன் கணவனை பார்த்தாள். அவனாவது ஜெய்யுடன் பேசி அவர்களை அவனுடன் அனுப்புவான், இல்லை சுஜியே “எங்களோட வரட்டும்” என சொல்லுவாள் என எதிர்ப்பார்த்தாள். இதெதுவும் நடக்கவில்லை. அடுத்த நாடகத்தை தொடங்கினாள்.

      “இத்தனை வருசம் தெம்பா இருக்கிறப்போது அவங்களோட வச்சிருந்திட்டு ஓஞ்சி படுக்கிற வயசுல எங்கிட்ட விட்டா நான் எப்படி பாத்துக்கிறது?”

    “ஒன்னு அவங்களை கூட்டிட்டு போக சொல்லுங்க. இல்ல ஒரு ஆள் போட்டு பாத்துக்க சொல்லுங்க. என்னால இதுங்கள பாத்துக்க முடியாது,” கீதா முடிக்க

     சுசிலா, பரமசிவத்தின் முகங்களில் ஈயாடவில்லை.

     “அப்பா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் சூப்பர் எக்ஸாம்பிள் “ பவன் கைகொட்டி சிரிக்க

     “விஜயா என்னடா இப்படி சொல்றா? நீ வேடிக்கை பாத்திட்டு இருக்க. நாங்க உன்னை பெத்தவங்க. எங்க நிலைமை யாருக்குமே வர கூடாது” சுசிலா அழ

    “அம்மா நான் ஜெய் கல்யாணம் முடிஞ்சதும் உங்ககிட்ட சொன்னது ஞாபகம் இருக்கா? இன்னும் ஒருமுறை இப்ப சொல்லட்டுமா?

‘ இவகூட சேந்த நீ வீணா போயிடுவ. நல்லா நியாபகம்

வச்சிக்க. நாளபின்ன உனக்கு ஏதாவது ஒன்னுன்னா சுஜிதான் பாக்கும். அதுகிட்ட பாத்து பக்குவமா நடந்துக்க. இவள நம்புன இப்ப நாடகம் போட்டமாறி உங்கிட்டயும் போட்டு நடுரோட்டுல நிப்பாட்டுவா பாத்துக்க’ அப்படின்னு சொன்னேன் நீ கேக்கல. இப்ப அனுபவிக்கிற.”

     “அப்பா இப்ப சொன்னது எல்லாம் கவனிச்சிங்களா? இதெல்லாம் இவங்க இங்கிருந்து போன் வழியா சொல்லி அங்க சுஜிமா அவசரமா ஸ்கூல் கிளம்பும் போது தாத்தாவும், பாட்டியும் செஞ்சது. தன் வினை தன்னைச் சுடும்னு கேட்டதில்லையா தாத்தா? அவங்க சொன்னாங்கன்னா உங்க ரெண்டு பேருக்கும் அறிவு வேலை செய்யலியா? போயி கிணத்துல குதிக்க சொன்னா குதிச்சிடுவிங்களா? அப்ப யோசிக்கல இப்ப அவஸ்தைபடுங்க. அப்பா இவங்களுக்கும் நீங்க சப்போர்ட் பண்ணாதிங்க. இவங்க ரெண்டு பேரும் ஒன்னும் தெரியாதமாதிரியே இருந்து முதுகுல குத்துவாங்க. மூணுபேரையும் தராசுல வச்சாகூட சரிசமமாதான் இருப்பாங்க. டிராமா போடறதில மூணுபேருமே கில்லாடிங்க. ஏமாந்திடாதிங்க.” என பவன் சொல்ல, அவனை முறைக்கதான் முடிந்தது அவர்களால்.

      “சுஜி நீதான் அவங்கள வச்சி பாத்துகிட்டா என்ன? அவங்க வீட்டை எழுதி வாங்கிக்கிட்ட, அப்புறம் அவங்கள பாத்துக்கமாட்டேன்னு சொன்னா எப்படி?” கீதாவின் அம்மா சுஜியை கேட்பது போல  மறுபடியும் ஆரம்பித்தார்.

     “இங்க பாருங்க…..உங்க பொண்ண ஒழுங்க வளக்க துப்பில்லாம இப்படி வளத்து விட்டுட்டு நீங்க இத பேசக்கூடாது. இதேமாதிரி நானும் கண்டிஷன் போடட்டா? உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் ஊரான் பொண்ணுன்னா ஒரு நியாயமா? அவங்க பதினேழு வருசம் அவங்ககூட வச்சிருந்தாங்க. இதுவரை ஏதாவது இப்படி கண்டிஷன் போட்டாங்களா?அவங்ககிட்ட பிடிங்கி வச்சிக்கும் போது இனிச்சது. இப்போ கசக்குதா? உங்க மவ மேல பாசம் பொங்குதோ? அப்ப நீங்க அவளோட போயி கொஞ்ச நாளு இருங்க. இல்ல அந்த ரூல்ஸோட இவ அங்க வரக்கூடாது, உங்களோட தொடர்பு வச்சிக்ககூடாதுன்னு நானும் கொஞ்சம் சேத்து சொல்றமாதிரி இருக்கும்” ஆனந்தி கொதிக்க

      “இல்ல சம்பந்திங்க பாவமில்ல. அதனால தான் சொன்னேன். அவங்க வீட்டு நியாயம் நமக்கெதுக்கு? நாம கிளம்புவோம் வாங்க.” என்றார் அவர்.

     “அதெப்படி அதுக்குள்ள கிளம்புவீங்க? உங்க பொண்ணு சொன்னத கேட்டவங்க, நான் சொல்லறதையும் கேக்கனும்.     தேவையில்லாம யாரையும் திட்டி பேசக்கூடாது. எங்கப்பா, அம்மாவுக்கு ஆகாத சாப்பாட்டை வேணும்னே சமைக்ககூடாது. என் தம்பி குடும்பம் வந்து போவாங்க. அதுக்கு ஏதாச்சும் குடைச்சல் குடுத்தா நான் சேகரிச்ச ஆதாரங்கள வச்சி சுஜியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதா கேஸ் போட வச்சிடுவேன். அப்புறம் நான் எனக்கு ஏதாவது ஆனால்…. இவங்க தான் காரணமுன்னு கீதா, கவின்  பேர எழுதி போலீஸ்ல கொடுத்திருக்கேன்.” என விஜயன் சொல்ல

     “நான் உங்கள என்னங்க செய்யப்போறேன்? என்னை நம்ப மாட்டேங்கிறிங்களே?” கீதா அழ

     “நானும் நீயும் ஒன்னுன்னு நான் நம்பிக்கிட்டு இருந்தேன். ஆனா எப்போ ஜெய்யோடையும், எங்கப்பாகூடயும் சேர்த்து குடும்பம் நடத்தறேன்.  கல்யாணம் ஆனா நீயும் இவங்க மூணுபேர் கூடவும் குடும்பம் நடத்தனுமுன்னு நீ சொல்லறத கேட்டேனோ அப்பவே என்னை பொறுத்தவரை நம்ம உறவு செத்துடுச்சி. பழக்கமே இல்லாத ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி பேச நா கூசல உனக்கு.” விஜயன் வெறுப்புடன் சொல்ல

      சுசிலா பதறிக்கொண்டு வந்து, “என்ன இவ்வளவு கேவலமாவா சுஜிக்கிட்ட பேசினா? இத கேட்டுமா இத்தனை வருசம் அமைதியா இருந்த? உடனே பஞ்சாயத்து கூட்டி அத்துவிட்டிருக்கலாம். வேற நல்ல பொண்ணா பாத்து…..” விஜயன் முறைப்பில் வாயடைத்து நிக்க

     “இவ்வளவு தான் நீங்களும், இவளும். என்னை பொறுத்தவரை உங்களுக்கும், இவளுக்கும் வித்தியாசம் இல்லை. அவ என்னை ஜெய்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சா, நீங்க விஜி மாமாவை அவகிட்ட இருந்து பிரிக்க நினைக்கறிங்க.. உங்க குடும்ப ஜீன்லயே இந்த…. அடுத்தவங்கள பிரிக்கிற உணர்வு ஊறி போயிருக்குமா?” சுஜி வெறுப்புடன் கேட்டுட்டு திரும்பி ஜெய்யிடம்

      “பிள்ளைகளை வச்சிகிட்டு கண்டவிசயங்களை பேச முடியாது. இத பின்னால பேசிக்கலாம். இப்போ கிளம்பலாமே?” என கேட்டாள்.

      “சுஜி யோகனையும், கவியையும் நான் கூட்டிட்டு போகட்டுமா?” விஜயன் கேக்க

      “அம்மா வீட்டுக்கு போயி நாங்க தங்கி பல வருசம் ஆகுது மாமா. அவங்களுக்கும் இவங்க பேர பசங்க தானே, இன்னும் ரெண்டுநாள் லீவு இருக்கு. இப்படியே போயிட்டு வர்றோம்” என சுஜி சொல்ல

     “அங்க எதுக்கு போறிங்க? நான் இந்த லீவுல கீதாகூட வந்து இருக்கறதா சொல்லியிருக்கேன். விஜயன் வீட்ல இருந்துட்டு ஊருக்கு திங்க கிழமை கிளம்பிடலாம்.” சுசிலா எங்கே ஜெய் சுஜியுடன் கிளம்பிடுவானோ என வேகமாக பேச

      “ஜெய் உன் ப்ரெண்ட்ஸ வழி அனுப்பிட்டு கிளம்பு. நான் இங்க பாத்துக்கிறேன்.” என்றவன், சுசிலாவிடம் திரும்பி, “ அம்மா அவங்க நாலுபேரும் போகட்டும். நீங்க இனி எப்பவுமே உங்க செல்ல மருமவ கீதாவோடதான். வாங்க போலாம்”னு சொல்லி மீதமிருந்த பைகளை காரில் வைக்க சென்றான் விஜயன்.

      “ஜெய் செக்கப் போகனும்.  தீபாவளிக்கு பசங்களுக்கு  துணி எடுக்கனும் நீ பாட்டுக்கு பொண்டாட்டி கூட போறேன்னு கிளம்பற? இதெல்லாம் யாரு செய்வா?” சுசிலா வேகமாக எழுந்து வர

    “கடைசிவரை அவன விடக்கூடாது இல்ல? கொஞ்சூண்டு விஷம் இருந்தா குடுத்து அவன கொன்னுடு. அவன் எங்கேயும் போகாம ஒரே இடத்துல கிடப்பான். இத்தனை பஞ்சாயத்து முடிஞ்சும் அவன்கிட்ட துணி கேக்கற?  இத்தனை பேர்  முன்னாடி எங்களுக்கு துணி வாங்கிக்க வசதியில்லன்னு சொல்ல வர்றியா?” என விஜயன் பொறும

    “இல்ல கீதாதான் கேளுன்னு ஜாடை காட்டினா, அதான் கேட்டேன்” சுசிலா குனிந்தபடி முணுமுணுக்க

     “கவின் உங்கம்மாவும் நீயும் உங்க அம்மாயி வீட்டுல ஒரு பத்து நாளு இருந்துட்டு தீபாவளிக்கு துணி வாங்கிகிட்டு வாங்க. ஆனந்தி நான் சொன்னது விளங்குச்சா?”

      “நல்லா விளங்குச்சிங்க அண்ணா. சரிங்க நம்ம ஓட்ட காருல உங்க தங்கச்சி வர மாட்டாங்க. அதனால அவங்க வாடகை கார் பிடிச்சி நாலு பேரும் வரட்டும். நாம போலாம் பிள்ளைகளை கூப்பிடுங்க.” என்றவள்

    கீதாவின் தங்கையை பார்த்து, “அண்ணி அவங்க உங்க அம்மா வீட்டுக்கு போறாங்க. நம்ம வீட்டுக்கு இல்ல அதனால நீங்க இந்த வாரம் வாங்க. நாம ரெண்டு பேரும் நம்ம காசுல நம்ம பசங்களுக்கு துணி எடுத்துகிட்டு வரலாம்” என்க

    “ஆமாங்கண்ணி, நாம நம்ம வரவுக்கு தகுந்தமாறி எடுப்போம். நாம என்ன ஒரு சிலராட்டம் மத்தவங்க இரத்தத்தை உறிஞ்சியா வாழறோம்.”  என்றாள் கீதாவின் தங்கை.

     ஜெய் குடும்பத்துடன் கிளம்ப சுசிலா தடுக்கமுடியாமல் கீதாவின் முகம் பாக்க, அதில் கொலைவெறி தாண்டவமாட, “நான் எப்படியாவது தடுத்து நிறுத்திடறேன். என்னை ஒன்னும் பண்ணிடாத”ன்னு நடுங்க ஆரம்பித்தார் சுசிலா.

      “என்னை போலீஸ் புடிச்சிட்டு போயிடுவாங்களா? நான்தான் ஒன்னுமே பண்ணலயே? கொலை பண்ண முயற்சிதான பண்ணேன். உசுர எடுக்கிற தைரியம் இல்லாமதான இத்தனை வருசமா தடுமாறுறேன்? ஏன் என்னை சித்ரவதை செய்யற?” சுசிலா பிதற்ற

      “யாரை கொலை பண்ண பாத்திங்க? என்ன செஞ்சிங்க?” ராகினியின் கணவர் கண்ஜாடையில் விஜயன் கேக்க

      “இவ உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கும்போதே இந்த சொத்தெல்லாம் தனக்கு மட்டும் சொந்தமாகனுமுனு நெனச்சாளாம். ஜெய் கல்யாணத்தை நிப்பாட்டினா, மறுபடியும் கல்யாணப் பேச்சை எடுக்கவிடாம தடுத்து அவன் சம்பாரிக்கிறதும் தானே வாங்கிக்கவும் திட்டம் போட்டுட்டா.”

    கீதா குறுக்கிட்டு, “உங்கதைய சொன்னா நீதான் மொதல்ல மாட்டுவ. என்னை ஒன்னும் பண்ண முடியாது. நான் செஞ்சதுக்கு ஆதாரம் எங்க இருக்கு? எனக்கு ஒன்னும் தெரியாது. இவங்க பொய் சொல்லறாங்கன்னு நான் அழுது சாதிச்சிடுவேன். உன்னதான் கொலகாரின்னு ஊரே சொல்லும்.” என சுசிலாவை மிரட்ட

     “இதில இவன் லவ் பண்றது தெரியவும் அதில் பிரச்சனைப் பண்ணினா. அத கண்டுக்காம இவன் சுஜியை கட்டவும் சுஜியை கொல்ல நானும், இவளும் சேந்து பல தடவை முயற்சி செஞ்சோம். அதுல ஒரு கொழந்த…… ” என்க

     “அடப்பாவிகளா” என்ற விஜயன் கீதாவிடம் திரும்பி, “அப்ப நம்ம குழந்தை அதை என்ன பண்ணிங்க? நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் கொன்னிங்களா? கொலகார பாவிங்களா? உங்களோடவா இத்தனை வருசம் இருந்தேன்?” விஜயன் தலையிலடித்துக் கொண்டு அழ

     “பாலுல இந்தம்மா விஷம் கலந்து வச்சிருந்தது. அது தெரியாம நானு குழந்தைக்கு கொடுத்துட்டேன்.” கீதா அழுதபடி நல்லப்பிள்ளையாய் நடிக்க

     “ நீ தெரியாமதான குடுத்த. அப்புறம் இத்தனை நாளாய் ஏன் சொல்லல? இந்த விஷ ஜந்துக்களோட இருந்திருக்கேனே? ரெண்டு பேரும் திட்டம் போட்டிங்க, உனக்கு எப்படி தெரியாம போவும்? சொல்லுடி?” விஜயன் கீதாவின் கழுத்தை பிடிக்க

    “அந்த வெளங்காதவளுக்காக ஆத்தி வச்ச பால குழந்தைக்கு குடுத்திட்டேன்” சுசிலா அழ, “புரியறமாதிரி சொல்லு” விஜயன் மிரட்ட

     “அவ ஏதோ தெரிஞ்சிகிட்டு வீட்டுல சாப்பிடாம இருந்தா. இந்தம்மா  உந்தம்பிகிட்ட  அப்பப்ப ஏதாவது கொடுத்துவிடும் சாப்பிட, குடிக்க. அன்னிக்கு அவ எதுவும் சாப்பிடாம கெளம்பினா. ரெண்டு நாளா வீட்டுல ஏதும் சாப்பிடல. அதனால பிரச்சனை வந்தா என்ன பண்ணண்ணு, பால காச்சி வச்சிட்டு அவன வந்து எடுத்துட்டு போயி குடுன்னு சொல்லப் போயிடுச்சி உங்கம்மா.  அவ வேணாமுன்னு வெரப்பா போயிட்டா. அந்த பால நான் குழந்தைக்கு சங்குல ஊத்திட்டேன். அதுல விஷத்தை கலந்து வச்சிருக்கும் போல. நுறைதள்ளி செத்துப்போச்சி.” கீதா சாதாரணமாக சொல்ல,

    “இல்ல நான் கலக்குல. நான் பால காய்ச்சினேன். அதுக்குள்ள அவ கிளம்ப, நான் அவள தடுக்க ஓடினேன். பாலுல நா ஒன்னும் கலக்கல. ஆனா நான் திரும்பி வந்து பாத்தப்ப டம்ளர்ல பால் சூடா இருந்துச்சி.  நானு டம்ளர்ல ஊத்தி வச்ச நியாபகத்துல அவ குடிக்காம போனதுனால அவள திட்டிக்கிட்டே பால் பாத்திரத்தில ஊத்தி மூடி வச்சிட்டேன்” சுசிலா கதற

     “பாத்திரத்துல இருந்த பாலு எப்படி டம்ளருக்கு வந்துச்சி? நீ என்ன கலந்த?” விஜயன் விசாரிக்க

      “ஆமா நாந்தான் பால ஊத்தி அதுல விஷமும் கலந்து வச்சேன். அவ ஜஸ்ட் மிஸ்ல மிஸ்ஸாயி இன்னும் யேன் கண்ண உறுத்துறா.” கீதா அசால்ட்டா சொல்ல

     “இத்தனை வருசங்கழிச்சி இது எதுக்கு? எப்படியும் அவள நான் போடப் போறேன். நான் ஆசப்பட்ட நிலத்தையும் எழுதி வச்சிட்டயில்ல உங்க எல்லாருக்கும் நாந்தான் எமன். மொதல்ல அவ. அவமட்டும் கல்யாணத்தை நிப்பாட்டியிருந்தா ராணியாட்டம் எங்கயாச்சும் பொழச்சிருக்கலாம்.  விதி யார விட்டது?” அவ பேசிக்கிட்டே போக

     “அது நம்ம குழந்தை. அத கொன்னும் உன் ஆச அடங்கலியா? கோழிகூட தன்னோட குஞ்ச காப்பாத்த போராடுது. ஆனா நீ?” விஜயன் கொந்தளிக்க,

     “அவள பத்தின நினைப்புல அது உருவானதே எனக்கு தெரியல. நாந்தான் உங்கிட்ட கவின் பிறந்தபோதே சொன்னனே, இந்த ஒரு குழந்தை போதுமுன்னு.”

    “ நாளைக்கு என்னைய போல யேன் மருமவளும் பண்ணிட்டா என்ன செய்யன்னு உங்கிட்ட சொன்னேனே அது இதத்தான். நீதான் கவினுக்கு தெணைக்கு வேணுமுன்னு இவன் கேட்ட.”

    “ இவனயே நான் ஒழுங்க பாக்கல. இதுல இன்னும் ஒன்னா? ச்சே நெனப்பே சகிக்கல. அத கலைக்க முடியாம பெத்துக்கிட்டேன். அத ஒங்கம்மா கொன்னுப்புட்டா. அத வச்சி மிரட்டி நான் காரியம் சாதிக்கறதுக்குள்ள அவள தனிக்குடித்தனம் வச்சி பத்திரபடுத்திட்டிங்க.”

      “சரி எங்க போயிடுவான்னு நானும் நின்னு இவ்வளவையும் செஞ்சா இப்ப நீ எல்லாத்தையும் ஒன்னுமில்லாம செஞ்சிட்ட. நாம நல்லா பணக்காரங்களா வாழ நா வழி பண்ணினால் இப்படி ஏதாவது ஒரு தடங்கல் வந்துகிட்டே இருக்கு. இந்த கிழவிய நம்பி மோசம்போனதுதா மிச்சம்.” கீதா பேச, பேச எல்லாரும் வாயடைத்து நின்றனர்.

     மண்டபவாசலில் நின்ற ஜெய் பேச வார்த்தை இல்லா அதிர்ச்சியில் நிற்க, கையில் ஏதோ பத்திரத்துடன் வந்த சுஜி வந்த வேகத்தில் கீதாவை பட்டென அறைந்தாள். “நீயெல்லாம் மனுஷியே இல்ல ராட்சசி…. குழந்தை உன்னையபோலவே இருந்துச்சே! அத கொன்னும் உன் பண ஆச அடங்கலியா?” வெறுப்புடன் கத்திவிட்டு

       “பவன் நீயும் என்னோட கிளம்பு. நீ இனியும் இங்க இருக்க வேணாம். அவலை நெனச்சி உரலை இடிச்ச கதையா ஒரு உசுரு போனது போதும். உன்னையும் ஏதாவது செஞ்சிடறதுக்கு முன்னால நாம எச்சரிக்கையா இருக்கறது நல்லது.” என்றவள்

      “மாமா இனிமேல் உங்கள பெத்தவங்க மூச்சிகாத்துகூட பசங்க மூணுபேரு மேலயும் படகூடாது. உங்களுக்கு வந்த சொத்தை கவினுக்கு எழுதி வச்சிடுங்க. பவனுக்கு நாங்க பாத்துக்கிறோம். எங்கள பாக்கணுமுன்னு தோணுச்சின்னா நீங்க மட்டும் வாங்க. இவங்க யாரையும் இனி என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வராதிங்க. கவின் மேல பாசம் அதிகம். அதனால மத்த பசங்கள கவனிக்கலன்னு நான் நினைச்சேன். ஆனா இப்படின்னு நான் நினைக்கலியே!” அதிர்ச்சியில் கைகால் நடுங்க சுவற்றைபிடித்து சமாளித்து பவனின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

      விஜயனுக்கு எதுவும் புரியாத நிலை. தன் மகளின் சாவுக்கு தன் தாயும், மனைவியும் காரணமென்பதை அறிந்ததும் எல்லாம் இழந்த உணர்வு. இனி என்ன?