மகனை கவனித்து அவனுக்கு ஆடை மாற்ற விட்டவள், “டயப்பர் போடல, திரும்ப திரும்ப ஈரம் பண்ணினா போட்டு விட்ருவேன் பார்த்துக்க” என மிரட்டினாள். 

தா தா பா மா என மழலையில் பிதற்றினான் அதியன். 

“என்னடா சொல்ற?” எனக் கேட்டு மகனின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள். 

“ம்ம்… எந்த கவச குண்டலும் வேணாம்,  நான் சமத்து புள்ளைன்னு சொல்றான்” என சின்ன சிரிப்புடன் சொல்லி மகனை வாங்கிக் கொண்டான். 

“அத்தை விட மாட்டாங்க மாமா, அவங்கள மீறி என்னாலேயும் வர முடியாது” என தன்மையான குரலில் சொன்னாள். 

“ஏன் உன் அத்தை என்னை கட்டிக்க வேணாம்னு சொன்னப்போ கேட்டியா? இப்ப மட்டும் எதுக்கு அவங்க பேச்சை கேட்குற?” 

“நான் கஷ்ட பட்ட காலத்துல என்னை கவனிச்சுகிட்டவங்க. இவன் பொறந்த நேரத்துல அம்மா இல்லையேன்னு என்னை ஏங்க விடாம பார்த்துகிட்டவங்க. இப்பவும் எதுக்கு வேலைக்கு போறாங்க?  இவன் வளர்றதே அவங்க தயவுலதான். அவங்க சேவிங்ஸ்ல  பொண்ணுக்கு  பாதி மட்டும் கொடுத்து  மீதியை எம்பேர்ல போட்டு வச்சிருக்காங்கன்னா என்னையும் நிதியையும் அவங்க வேற வேறயா பார்க்கலைன்னுதானே அர்த்தம்? அவங்க சொல்லை என்னால மீற முடியாது மாமா” என்றாள்

இப்படிலாம் நீ சொல்லுவ, என்னை காய படுத்துவேன்னு தெரிஞ்சேதான் வந்தேன் கனி. என்ன செய்ய… உன் கையால காயமாகுதுன்னா ஏத்துக்கடான்னுதான் மனசு சொல்லி தொலைக்குது”

“உன்னால நானெல்லாம் ஹர்ட் ஆகவே இல்லை மாமா” என நக்கலாக சொன்னாள். 

“என்னை விடு, அம்மாச்சி ஆசைக்காக அங்க வந்து தங்கிட்டு போ, ஒரு பத்து நாள் போதும்” என்றான். 

அவள் யோசிக்க, “அம்மாச்சி டிராவல் பண்ற கண்டிஷன்ல இல்லை கனி, உன்னை வளர்த்தவங்கங்கிற பாசம் கூடவா இல்லை உனக்கு?” எனக் கேட்டான். 

“இப்படிலாம் சொல்லாத மாமா. அத்தைகிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்றாள். 

நான் பேசினால் வருவாள் என்ற நம்பிக்கை உடைந்து விட, இறுதியாக பாட்டியை காரணமாக்கி கேட்டான், அதற்கும் அவள் அத்தையிடம் கேட்கிறேன் என சொல்லவும் மனதில் விறு விறுவென விரக்திதான் பரவியது. 

பின் என்ன செய்வான், அம்மாவின் முடிவை பொறுத்து யோசிக்கலாம் என விட்டு விட்டான். 

மாலையில் தாமரை வரவும் கனியும் பாட்டியும் பேசி பேசி பத்து நாட்கள் கனி அங்கு இருக்கட்டும் என்ற முடிவை எடுக்க வைத்தனர். 

பத்து நாட்கள் அவளுடன் இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது, இதை பயன்படுத்தி தன்னோடு நிரந்தரமாக தங்க வைத்துக் கொள்வேன் என்ற உறுதியோடு அடுத்த நாள் அவளோடு ஊருக்கு பயணப் பட்டான் தர்மா.

இந்த பத்து நாட்களை பயன்படுத்தி அவன் மனதில் வாழ்க்கை குறித்தான பயத்தை உண்டாக்கு, அனைத்தையும் விட்டு விட்டு அடித்து பிடித்துக்கொண்டு உன்னிடம் ஓடி வருவான் அவன் என அன்னலக்ஷ்மி பாட்டி அவளுக்கு அறிவுரை சொல்லியிருந்தது பற்றி அவனுக்கு தெரியாது. 

வீட்டிலிருந்து புறப்படும் போது தன்னிடமிருந்த குறுவாளை ஆசைத் தம்பியிடம் கொடுத்தான் தர்மா. அதைக் கண்டு விட்ட கனி கண்டனமாக பார்த்தாள். 

“அவன் பொருளு கனி, திரும்ப கொடுக்கிறேன், ஃபிளைட்ல அலோ பண்ண மாட்டாங்க” என்றான். 

“இவ்ளோ நாளா நீங்களும் இப்படித்தான் சுத்திட்டு இருந்தீங்களா தம்பியண்ணா?” என ஆதங்கமாக கேட்டாள் கனி. 

ஆசைத்தம்பி என்ன சொல்லவென பார்க்க, “ரொம்ப கேள்வி கேட்காத கனி, காரோட்ட யார் வேணும்னாலும் கிடைப்பாங்க, சும்மாவா இவனை இங்க விட்ருக்கேன்? சிலது எல்லாம் இப்படித்தான்” என தீவிர தொனியில் சொன்னான் தர்மா. 

அவன் சொன்ன விதத்தில் மேற்கொண்டு அவளால் பேச முடியவில்லை. 

அவர்கள் மதுரைக்கு வந்து சேரவும் அழைத்து செல்ல கோபு வந்திருந்தான். உறங்கிப் போயிருந்த மகனை கனியிடமிருந்து வாங்கிக் கொண்டு காரில் ஏறச் சொன்னான் தர்மா. 

கனியிடம் நலம் விசாரித்த கோபு, காரை எடுக்காமல் தர்மாவிடம் எதையோ தருவது அரை குறையாக அவளின் கண்ணில் பட்டது. தர்மாவும் காரில் அமரவும் வேகமாக அவனது இடையை தொட்டுப் பார்த்தாள் கனி. 

அவளின் கையை கெட்டியாக பிடித்து விலக்கி விட்டவன், அவளை முறைத்தான். 

“என்ன மாமா அது?” பயத்தோடு கேட்டாள் கனி. 

“கார் எடுக்கலாமா ண்ணா” என சங்கடத்தோடு கேட்டான் கோபு. 

மூன்றாவது ஆளின் முன்னிலையில் எதுவும் பேசாதே என்ற கட்டளையோடு மனைவியை பார்த்த தர்மா, காரை எடுக்க சொல்லி உத்தரவிட்டான். 

தொட்டு பார்த்து விட்டத்திலேயே என்னவாக இருக்கும் என ஓரளவு கணித்து விட்ட கனியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. 

மூன்று மணி நேரப் பயணத்தில் மகனை கவனித்தாளே தவிர கணவனோடு ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை அவள். 

வீடு வந்ததும் இறங்கிய கனிக்கு அப்பாவின் நினைவுகள். அவர் வளர்த்த நாய் இன்னும் இவளை நினைவு வைத்து இவளிடம் ஓடி வந்து வாலை ஆட்டியது. அப்பாவின் கார், அவர் அமரும் இருக்கை என எல்லாமே கண்களில் தென்பட அவளுக்கு அழுகையாக வந்தது. 

இவளின் வரவு அறிந்து தள்ளாத வயதிலும் வேகமாக நடந்து வந்தார் பாட்டி. 

“வந்திட்டியா என் தங்கம்! உங்கப்பனை வழியனுப்பி வச்சிட்டு போன நீ எங்க என்னை அனுப்பி வைக்க வர மாட்டியோன்னு நினைச்சிருந்தேன்…” என புலம்பிக் கொண்டே  பேத்தியை கட்டியணைத்துக் கொண்டு அழுதார். கனியாலும் அதற்கு மேல் தன்னை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. 

“இதென்ன அம்மாச்சி வீட்டுக்குள்ள கூட விடாம வாசல்ல வச்சே நீயும் அழுது அவளையும் அழ விடுற, எம்பையன் பயப்படுறான் பாரு” என அதட்டினான் தர்மா.

அதியனும் அப்படித்தான் உதடுகள் பிதுக்கி அழ தயாரானான். 

“அடேய் அடுத்து நீ ஆரம்பிக்காத, நாம உள்ள போவோம்” என்ற தர்மா உள்ளே நுழைய போக, பாட்டி விடவில்லை. 

மூவரையும் சேர்ந்து நிற்க வைத்து வேலை செய்யும் பெண்மணியை கொண்டு ஆரத்தி எடுக்க வைத்துதான் உள்ளே விட்டார். 

அதன் பிறகு கனிக்கு பாட்டியோடே நேரம் சென்றது. பாட்டியும் வெகு உற்சாகமாக அவர்களை கவனிக்க ஆரம்பித்து விட்டார். 

அஜய்யிடம் வர மறுத்தான் அதியன். குட்டிக்கரணம் போடாத குறையாக நிறைய சேட்டைகள் செய்து அண்ணன் மகனை ஈர்த்து தன்னிடம் வரச் செய்து விட்டான். 

அண்ணி என முறை வைத்து பேசியவனை அதிசயமாக பார்த்தாள் கனி. அவளின் பார்வையில் என்ன சொல்வதென அவன் தயக்கமாக பார்க்க, “எப்படி போகுது உன் வேலையெல்லாம்?” எனக் கேட்டு கனியே அவனை இலகுவாக்கி விட்டாள். 

மாமியாருக்கு அழைத்து நல்ல படியாக இங்கு வந்து சேர்ந்து விட்டதை அறிவித்தாள் கனி. அவரோ திரும்ப வருவதற்கு நாளையே டிக்கெட் போட சொல்லி விடு என அறிவுறுத்தி விட்டு கைப்பேசியை வைத்தார். 

இரவு உணவு வரை கனி மாடியேறவே இல்லை, உறங்கும் நேரம் வரவும் அதற்கு மேல் கணவனை தவிர்க்க முடியாமல் தனதறைக்கு சென்றாள். அப்போதே கணவன் இங்கு தங்குவதில்லை என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. 

மகனுடன் அவள் படுத்த பிறகுதான் அந்த அறைக்குள் நுழைந்தான் தர்மா. 

“தூங்கிட்டானா?” என கேட்டுக் கொண்டே அவளின் காலடியில் அமர்ந்தான். 

“கோபு அண்ணா உன்கிட்ட ‘கன்’தானே கொடுத்தார்?” என எடுத்த உடனே கேட்டாள். 

“லைசென்ஸ் இருக்கு கனி, பாதுகாப்புக்கு” என்றான். 

“எல்லாரும் இப்படித்தான் உன்னை மாதிரி சுத்துறாங்களா? இவன் வளர வளர விவரம் வரும், அவன் முன்னாலேயும் நீ இப்படித்தான் இருப்ப, உனக்கு புரியுதா மாமா அத்தை ஏன் உன்னோட எங்களை விட மாட்டேங்குறாங்கன்னு?” எனக் கேட்டாள். 

“ஒன்றரை வருஷத்துக்கும் மேல ஆச்சு இந்த வீட்டை விட்டு நீ போயி, வந்த உடனே சண்டைக்கு வரிஞ்சு கட்டாத”

“ஆமாமாம் சண்டைன்னாலே ஸார் காத தூரம் ஓடிப் போயிடுவாரு!” 

“தூக்கம் வரலையா உனக்கு?” 

“ஏன் உனக்கு வரலையா? எதுக்கு இங்க வந்திருக்க?” 

“கனி!” என அதட்டினான். 

“வெறும் பத்து நாள் இங்க இருக்க போறேன் மாமா, எதுவும் நமக்குள்ள மாற வேணாம்” என்றாள். 

“என்னை பத்தி தெரிஞ்சுதானே கனி கல்யாணம் பண்ணிக்கிட்ட?”

“உன்னை பத்தி தெரியும் மாமா, ஆனா இந்த வாழ்க்கை எப்படி போகும்னு தெரியாம பண்ணிக்கிட்டேன் மாமா, அன்னிக்கு எனக்கு உன்னை தவிர வேற ஏதும் கண்ணுக்கு தெரியலை. இன்னிக்கு இவனோட அம்மா நான், இவனோட எதிர்காலம்தான் எனக்கு முக்கியம்” என்றவள் அவ்வளவுதான் என்பது போல இழுத்து போர்த்திக் கொண்டாள். 

இரண்டு நிமிடங்கள் அவளையே வெறித்து பார்த்தவன் தனதறைக்கு சென்று விட்டான்.