நெஞ்சை கொய்தாள் வஞ்சி-16

அத்தியாயம்-16

அடுத்த நாள் தர்மாவுக்கு கடந்த சில மாத கால வழக்கத்திற்கு மாறாக மனைவி மகனுடன் விடிந்தது. 

மகன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, கனி தன் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள். அதியன் எழும் வரை விழித்திருந்தாலும் தர்மாவும் எழுந்து கொள்ளவில்லை. அம்மாவை எதிர்கொள்ள வேண்டாமென்றும் நினைத்திருந்தான். 

ஆனால் தாமரை புறப்படுவதற்கு முன்பே அதியன் விழித்துக் கொண்டான். தர்மாவுக்கு மகனை தூக்கிக் கொண்டு வெளியில் வர வேண்டியதாகி விட்டது. 

உணவருந்தவென அமர்ந்த தாமரை மகனை முறைத்தவாறே, “கனி… வந்து குழந்தைய பாரு, நான் தோசை ஊத்திக்கிறேன்” என குரல் கொடுத்தார். 

நிதிலா இன்னும் உறங்கிக் கொண்டிருக்க மனைவியிடம் சென்றவன் அம்மாவுக்கு சாப்பாட்டு வேலையை முடிக்கும் படி சொல்லி குழந்தையுடன் வெளியே சென்று நின்று கொண்டான். 

கால் மணி நேரத்தில் கல்லூரிக்கு புறப்பட வெளியில் வந்த தாமரை, “உன்னையும் இப்படித்தான் மார்லேயும் தோள்லேயும் போட்டு வளர்த்து ஆளாக்கினேன். என் வருத்தத்தை கோவத்தை என் பக்க நியாயத்தை இப்ப கூட புரிஞ்சுக்க முடியலைல உன்னால?” என கேட்டு விட்டு, அவனது பதிலுக்கு காத்திராமல் காரில் ஏறி சென்று விட்டார். 

மகனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் அம்மா பேசியதில் வருத்தம் கொண்டவனாக உள்ளே சென்றான். மகனை வாங்கி அவனை கவனித்தாள் கனி.  

இன்று நிதிலாவுக்கு அலுவலகம் செல்ல வேண்டும், தாமதமாக எழுந்தாலும் வேகமாக தயாராகி அம்மாவுக்கு மதிய உணவாக கனி செய்திருந்த தக்காளி சாதத்தையே தனக்கும் பேக் செய்து எடுத்துக் கொண்டு அண்ணனிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டாள்.

தர்மா குளிக்கும் போதே கனி சாப்பிட்டு விட்டாள். பாட்டிதான் பேரனுக்காக காத்திருந்து அவனுடன் உணவருந்தினார். அந்த நேரமே வீட்டு வேலை செய்யும் அம்மா வர பாத்திரங்களை ஒழித்து போட்ட கனி, அழுக்கு துணிகளை மெஷினில் போட்டு, அவர் வீடு துடைக்க ஏதுவாக ஒழுங்கு படுத்தி வைத்தாள். 

இனியாவது அறைக்கு வருவாள் என அவன் பார்க்க, குழந்தைக்கு பசியாற்றும் நேரம் கூட அவனை தூக்கிக் கொண்டு தர்மா இல்லாத அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள். குழந்தை உறங்குகையில் கோதுமை காய வைக்கிறேன், குழந்தைக்கு கஞ்சி மாவு தயாரிக்கிறேன் என எதாவது வேலை செய்து கொண்டே இருந்தாள். 

வேலை செய்பவர் தன் வேலைகளை முடித்துக் கொண்டு செல்லவும் அடுத்து மதிய சமையலுக்கான ஆயத்தம். 

வேண்டுமென்றே தன்னை பிஸியாக வைத்திருக்கிறாள் என கடுப்பாகி விட்டான் தர்மா. அவன் வாங்கிக் கொடுத்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்த பாட்டி, “நீ பேசினா மசிஞ்சு போயிடுவோம்னு பயம் அவளுக்கு. நீதான் அவகிட்ட இறங்கிப் போய் பேசணும்” என்றார். 

“நான் நிம்மதியா இருந்தேன் அப்பத்தா, இவதான் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இப்ப போட்டு படுத்தி வைக்கிறா” அலுத்தான் தர்மா. 

“சும்மா அதையே சொல்லாதடா, என்னென்ன கனவு வச்சு உன்னை கட்டிக்கிட்டாளோ? அதுக்கு தக்க நடக்காம போனது நீதான்” 

“நான் அவ கூட இருந்தா மட்டும் போதும்னு சொல்லித்தான் கட்டிக்கிட்டா” 

“அப்படிப்பட்டவ ஏன் விட்டுட்டு வந்தா?” 

“நேத்து நைட் அம்மாகிட்ட பேசினது பார்த்து நீ என் கட்சினு நினைச்சேன், இப்பதான் புரியுது நீ இவ கட்சி”

“கட்சிக்காரன் வேற எப்படி பேசுவான்? எங்கடா உன் தாடிய காணோம்? மழிச்சாதான் கட்சில சேர்த்துப்போம்னு சொல்லிட்டாங்களா?” கிண்டல் செய்தார் பாட்டி. 

கன்னத்தை தடவிக் கொண்டவன், “சமைச்சு முடிக்கவும் சாப்பிடுறதுக்கு என்னை கூப்பிட அவதான் வரணும், என்ன புரிஞ்சுதா?” என சொல்லிக் கொண்டே அறைக்கு சென்று விட்டான். 

பேரனுக்கு உதவ, சாப்பிட்டு முடிக்கவும் ஓய்வெடுக்க சென்று விட்டார் பாட்டி. 

எழுந்து விட்ட மகனுக்கு உணவூட்டி ஹாலில் விளையாட விட்ட கனி,  “நல்லா புடிச்சு வச்சுக்க போறார்” என முனகிக் கொண்டே கணவனிடம் சென்றாள்.

அவளுக்காகவே காத்திருந்தவன் அவளது “வா மாமா” காதில் விழவுமே, அவளைப் பார்க்க திரும்பிப் படுத்து கையசைத்து தன்னிடம் அழைத்தான்.

 தயங்கிக் கொண்டே அவள் வர, “என் நினைப்பு வரவே இல்லையா கனி உனக்கு? ஒரு நொடி ஒரு பொழுது கூடவா என்கூட வந்திடலாம்னு உனக்கு தோணாம போச்சு? அப்படியா வாழ்ந்தோம் நாம?” எனக் கேட்டான். 

“உனக்கு என்ன தோணுது மாமா?” எனக் கேட்டாள். 

வேகமாக எழுந்தமர்ந்தவன், “அப்புறம் என்ன இதுக்குடி இங்க கெடக்குற?” எனக் கோவப்பட்டான். 

அசராதவள், “பழசையெல்லாம் பேசாம இருந்தா நீ செஞ்சதையெல்லாம் மறந்திட்டேன்னு நினைச்சிடாத மாமா. அந்த மஹா பிரச்சனையாலதானே வீட்டை விட்டு போனேன் நான்? அப்பவும் அவளுக்காக சென்னைக்கு போன நீ” என குற்றம் சுமத்தினாள். 

“சென்னைக்கு எதுக்கு போனேன்? ஏதாவது மோசமா கேட்ற போறேன்? அவளே அவ புருஷனோட போயிட்டா. இன்னும் அவளை பத்தி பேசுவியா?” எனக் கேட்டான். 

தர்மா சென்னைக்கு சென்ற அன்றே மஹா அவளது மண வாழ்வில் கணவனோடு இசைந்து வாழவில்லை என்பதை  அருண் மூலமாகவே தெரிந்து கொண்டான். என்ன நினைத்து குழந்தையை தன்னுடன் அழைத்து சென்றேன் என்பதையும் சொன்னான் அருண். அவன் அப்படி செய்ததை நியாயம் என தர்மா நினைக்கவில்லை என்றாலும், மஹாவின் மீதும் தவறு இருப்பதை புரிந்து கொண்டான். 

ஆகவே அன்று அவன் சென்னையிலேயே இருந்தாலும் நீதிமன்றம் செல்லவே இல்லை. மஹாவிடமும் ஒழுங்காக பேசி தீர்த்துக் கொண்டு வாழ்க்கையை வாழப் பார் என சொல்லியிருந்தான். 

அதன் பின் தலைகுப்புற நின்று தண்ணீர் குடிக்காத குறையாக மஹாவை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்து சென்று விட்டான் அருண். 

“பழசு எதையும் மறைச்சு கல்யாணம் பண்ணினேனா உன்னை? பழகின பொண்ணு கஷ்டத்துல நிக்கும் போது ஹெல்ப் பண்ணினா உடனே உன்னை விட அவ முக்கியம்னு அர்த்தம் ஆகிடுமா கனி? சரி உன் பார்வையில தப்பாவே இருக்கட்டும், அதுக்கு திட்டு சண்டை போடு, பிரிஞ்சு போவியா?” என கோவமாக கேட்டான்

“ஹையோ மாமா! அந்த நேரம் எல்லா கோவமும் சேர்ந்துதான் விட்டுட்டு வந்தேன். நீ இப்ப பண்ணிட்டு இருக்கிறது தெரிஞ்சுதான் ரொம்ப கோவம். எல்லாத்தையும் விட்டுட்டு வா, நாம இங்கேயே நிம்மதியா இருக்கலாம்” என்றாள். 

நிம்மதியா எப்படி இருக்க முடியும்? இங்கேயும் என்னை தேடிட்டு வர எவ்ளோ நாள் ஆகும்னு நினைக்கிற நீ?”

“இதுக்கு என்னதான் மாமா வழி?”

“சும்மா இருந்தவன் வாழ்க்கைல தானா வந்து குதிச்சவ நீதான் கனி. ஆசை காட்டி மோசம் பண்ணினா விட்டுட்டு போவேன்னு நினைக்காத, கட்டாயப்படுத்தி என்னோட அழைச்சிட்டு போக முடியாதுன்னு நினைக்கிறியா?” என அவன் கேட்கவும், அவனது பேச்சில் எரிச்சலாகி வெளியேறி விட்டாள். 

சில நிமிடங்கள் கழித்து தர்மாவும் வெளியே வந்தான். விளையாடிக் கொண்டிருந்த மகனை தூக்கப் போனான். விளையாட்டு ஆர்வத்தில் இருந்த அதியன் அவனிடம் வர மறுத்தான். 

“அதுக்குள்ள உங்கம்மா சொல்லி கொடுத்திட்டாளாடா?” என கனியை பார்த்துக் கொண்டே மகனிடம் கேட்டான். 

“நான் கூட இல்லைங்கவும் உன் இஷ்டம் போல இருக்க நல்ல வசதியா இருந்துச்சுதானே, பிறகு ஏன் இப்ப என்கிட்ட வந்திருக்க?” என சூடாக கேட்டாள். 

“என்னத்தடி இஷ்டம் போல இருந்தேன்? நீ வந்து பார்த்தியா? புருஷன் கூட இல்லாம நீதான் உன் மாமியாரோட நல்லா ஜாலியா இருக்க” என கிண்டலாக சொன்னான். 

அதற்குள் குழந்தை ஈரம் செய்து விட்டு அதிலேயே விளையாடிக் கொண்டிருந்தான். 

“டயப்பர் போடாம கொஞ்ச நேரம் விட்டா சும்மா இருக்கியாடா நீ?” என மகனை கடிந்து கொண்டாள்.

 “புள்ளைனா அப்படித்தான் இருக்கும், நீ சின்ன புள்ளையா இருந்தப்போ என்னென்ன கூத்தடிச்சிருப்பேன்னு அம்மாச்சிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்க” என சொல்லிக் கொண்டே மகனை தூக்கி நிறுத்தி அவனது ஈரமான டிரவுசரை கழட்டி விட்டான். 

“ச்சீ பேச்சை பாரு!” என்றவள் தரையை சுத்தம் செய்தாள். பின்னர் மகனையும் சுத்தம் செய்ய தூக்கிச் செல்ல, அவனும் அவளுடனே சென்றான்.