“உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதாப்பா?” என்றாள். அவர் நிமிர்ந்து அங்கு லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த மனோவைப் பார்க்க, அவளுக்கு விஷயம் ஓரளவுக்குப் புரிந்தது.
“அண்ணி ஏதாவது சொன்னாங்களாப்பா..” என்றாள்.
“ஏன்? என்னைப் பார்த்தா சண்டைக்காரி மாதிரி இருக்கா?” என்று சரியாக ஆஜரானாள் சந்தியா.
“நான் உங்களை எப்போ அண்ணி அப்படி சொன்னேன்?” என்றாள் புரியாமல்.
“அப்போ அப்படி வேற சொல்லுவியா?” என்று சந்தியா ஆரம்பிக்க,
“வேதாம்மா..! சென்னையில இருந்து சரண்-கீர்த்தனா வந்திருக்காங்க. நீ போய் அவங்களைப் பார்த்துட்டு வாம்மா..” என்று காதம்பரி அவளை அங்கிருந்து கிளப்ப முயல,
“அவங்களை நான் பார்த்துக்கறேன். இப்ப இங்க என்ன பிரச்சனைன்னு சொல்லுங்கம்மா” என்றாள் விடாமல்.
“நீ தான் பிரச்சனை. இருக்குற சொத்துல சரி பாதி உனக்குன்னு மாமா சொல்றார். அப்போ கல்யாணத்துக்கு செய்ற இந்த 200 பவுன் நகை எதுல சேர்த்தி? இதைக் கேட்டா நான் பொல்லாத மருமக ஆகிடுறேன் உங்க அம்மா, அப்பாவுக்கு” என்றாள் சந்தியா வெடுக்கென்று.
“சந்தியா” என்று மனோ அவளை அதட்ட,
“எதுக்கெடுத்தாலும் என் வாயையே மூடுங்க. இந்த வீட்ல பேருக்குத் தான் நீங்க பையன். ஆனா எல்லாரும் அவளைத் தான் தலையில தூக்கி வச்சுட்டு ஆடுறாங்க. இதோ இவளும் கூடப் பிறந்த அண்ணன்னு உங்களை மதிக்கிறதே இல்லை. சொல்லப் போனா, சரண், அகரன் மேல இருக்குற பாசத்துல கால்வாசி கூட உங்கமேல கிடையாது. அது என்னைக்குத்தான் உங்களுக்குப் புரியப் போகுதோ?” என்றாள்.
“இப்போ எதுக்கண்ணி எங்க அண்ணாவை ஏத்தி விட்டுட்டு இருக்கீங்க? இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை? அப்பாவே கொடுத்தாலும், எனக்கு இந்த சொத்தெல்லாம் வேண்டாம். அண்ணாவே வச்சுகட்டும் எல்லாத்தையும். அதான் எனக்கு நகை போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கல்ல. அதுவே போதும். இதை என்கிட்டே கேட்டிருந்தா நானே பதில் சொல்லியிருப்பேன். அதை விட்டுட்டு அம்மா,அப்பாவை கஷ்ட்டப் படுத்துற மாதிரி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதிங்க..” என்று பட்டென்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
எது எப்படியோ, அவள் சொத்து வேண்டாம் என்று சொன்னது சந்தியாவிற்கு சற்று ஆசுவாசமாய் இருந்தது. மனோகரன் தங்கையை குற்ற உணர்வுடன் பார்க்க, பெற்றவர்கள் அவனை வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நந்தகுமார் வீட்டில் இருந்து அவன் பெற்றோர் மற்றும் அவன் அத்தை வந்திருக்க, வேதா வீட்டினர் அவர்களை உபசரித்தனர்.
“இங்க பக்கத்துல வந்துட்டு மருமகளைப் பார்க்காம போனா நல்லா இருக்காதுன்னு தான் கிளம்பி வந்துட்டோம். இவங்க எனக்கு அக்கா முறையாகனும். நிச்சயத்தப்போ வர முடியாத சூழ்நிலை. இவங்களும் வேதாவை பார்க்கனும்னு சொன்னாங்க. அதான் அழைச்சுட்டு வந்தோம்” என்று நந்தாவின் பெற்றோர்கள் சொல்ல,
“அதுக்கென்ன சம்பந்தி..! வேதா இனி உங்க வீட்டுப் பொண்ணு. அவளைப் பார்க்க வர்றதுக்கு நீங்க இவ்வளவு யோசிக்கத் தேவையில்லை சம்பந்தி..” என்றார் ராமச்சந்திரன்.
வேதா அவர்களுக்கு டீ எடுத்து கொண்டு வர அவளைப் பார்த்த நந்தாவின் அத்தை முகத்தில் ஒரு திருப்தி உணர்வு.
“சும்மா சொல்லக் கூடாது. பொண்ணு தங்க விக்ரகம் மாதிரி இருக்கா” என்று அவர் சொல்ல, அதைக் கேட்ட நந்தாவின் பெற்றோருக்கும் திருப்தி.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சு சீர் வரிசையில் வந்து நிற்க, நந்தாவின் அத்தை,
“பொண்ணுக்கு செய்றதை நீங்க குறையில்லாம செய்வீங்கன்னு என் தம்பி சொன்னான். பொண்ணு வீட்ல வாங்கித்தான் பிழைக்கணும்னு என் தம்பி குடும்பத்துக்கு அவசியம் இல்லைதான். ஆனா, சொந்த பந்தம் வாய்க்கு பயந்து தான ஆக வேண்டியிருக்கு. வர்ற மருமக தரத்தோட வந்தாதான் அவளுக்கும் பெருமை, என் தம்பி குடும்பத்துக்கும் பெருமை..” என்று சொல்ல,
“அதைப் பத்தி நீங்க கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லங்க. எங்க பொண்ணுக்கு செய்றதுல எந்த குறையும் வைக்க மாட்டோம்..” என்றார் ராமச்சந்திரன்.
“அக்கா இப்படி பேசுறாங்கன்னு எதுவும் நினைக்காதிங்க சம்பந்தி” என்று நந்தாவின் அப்பா சொல்ல,
“நாங்க எதுவும் நினைக்கலை சம்பந்தி. இதையெல்லாம் பேசுறது நம்ம பக்கம் முறை தானுங்களே..” என்றார் ராமச்சந்திரன்.
மேற்கொண்டு சில விஷயங்களை பேசியவர்கள், அடுத்து கிளம்பிவிட, மழை அடித்து ஓய்ந்தார் போல் இருந்தது.
“பையனோட அத்தை பேச்சு எதுவும் எனக்குப் பிடிக்கலைப்பா” என்றான் மனோகரன் பட்டென்று.
“ஆமா..! இப்பவே நகை, சீர்னு பேசுறாங்க. கேட்காம கேட்குற மாதிரி இருக்கு” என்று சந்தியாவும் சொல்ல,
“பொண்ணை எங்க கட்டிக் கொடுத்தாலும், போடுற நகையை போட்டுத் தானே ஆகணும். வேதாவுக்கு செய்றதுல என்ன கணக்கு. இவ்வளவு சம்பாரிச்சு வச்சிருக்கேன். என் பொண்ணுக்கு இல்லாததா?” என்றார்.
“எல்லாமே அவளுக்குத் தான்றது தான் பிரச்சனை மாமா” என்றாள் சந்தியா.
“நாங்க உன்னோட நகையையோ, இல்லை உங்க வீட்டு சொத்தையோ வேதாவுக்கு கேட்கலை சந்தியா. எங்க சம்பாத்தியம்.. எங்க பொண்ணுக்கு என்ன செய்யணும்னு எங்களுக்குத் தெரியும். அதே மாதிரி மனோவையும் நாங்க அப்படியே விடலை. அவனை அவன் விருப்பட்டதை படிக்க வச்சோம். எங்க செலவுல கல்யாணமும் பண்ணி வச்சோம். பெங்களூர்ல சொந்த அப்பார்ட்மென்ட்டும் வாங்கிக் கொடுத்திருக்கோம். அது போக பூர்விக சொத்தும் இருக்கு. இதையெல்லாம் கணக்குப் பார்த்தா கூட வேதாவுக்கு செய்றது ரொம்ப கம்மி தான் “ என்றார் காதம்பரி.
“சொல்லிக் காட்டுறதுக்காக எந்த பெத்தவங்களும் பிள்ளைகளுக்கு செய்ய மாட்டாங்க அண்ணி..” என்றாள் வேதா.
“சந்தியா அமைதியா இருக்கப் போறியா இல்லையா?” என்று மனோகரன் அதட்டவும் தான் அமைதியானாள்.
அப்போதும் மனோ எதுவும் பேசாதது வேதாவை உறுத்தியது.
இவர்கள் வீட்டுப் பிரச்சனை அப்படியே இருக்க, கல்யாண நாளும் நெருங்கியது. இரண்டு நாட்கள் இருந்த நிலையில்,
பார்லரில் இருந்து வந்தவர்கள் வேதாவிற்கு மெகந்தி போட்டுக் கொண்டிருக்க, அவளோ இருக்கையில் தலை சாய்த்து, உதட்டைப் பிதுக்கியபடி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த சரணுக்கு சிரிப்பாக வந்தது. அவள் அவர்கள் வீட்டில் தான் இருந்தாள்.
“தங்கம் ஏதாவது குடிக்கிறியாடா?” என்று கேட்ட படி மைதிலி வர,
“ம்மா..! உங்க தங்கம் இங்க எப்படி தூங்குறான்னு பாருங்க” என்றான் சரண்.
“பிள்ளைக்கு அலுப்பா இருக்கும். கண்ணு வைக்காதடா” என்றார் மைதிலி.
“இவளை நான் கண்ணு வைக்கிறேனா? நல்லா வருவிங்கம்மா நீங்க. கொஞ்சமாச்சும் பொண்ணு மாதிரி இருந்தாளா? என்னா ஆட்டம்? நைட் இவளும் அகரனும் ஆடுன ஆட்டத்துல நான் கூட வீட்டுக்கு எதுவும் ஆகிடுமோன்னு நினைச்சேன்”என்றான் சரண் சிரித்துக் கொண்டே.
“என்ன சொல்லு சரண். வேதா இருந்தாலே போதும். அந்த இடமே சந்தோஷமா இருக்கும்.பிள்ளையையும் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு நாங்க என்ன பண்ண போறோம்னு தெரியலை. தடி மாடுங்க மாதிரி ரெண்டு ஆம்பளப் புள்ளைங்க இருந்து என்ன பிரயோஜனம்..? வேதா மாதிரி வருமா? நாங்க முகம் சுனங்குனா கூட புள்ள கண்டுபிடிச்சுடும்.” என்று அவர் கவலையை சொல்ல,
தாயின் வருத்தம் புரிந்தவன்,
“இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அவ இங்க இருக்குற மதுரைல தான் இருக்கப் போறாம்மா. நீங்க நினைச்ச நேரம் போய் பார்க்கலாம். அதனால சோகத்தை தூக்கி ஓரமா வச்சுட்டு, மகளோட கல்யாணத்தை என்ஜாய் பண்ணுங்க..” என்றான்.
வெளியே கார் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தவன்,
‘ரகு கார் மாதிரி இருக்கே’ என்று யோசிக்க, சாட்சாத் விஜய ரகு நந்தன் தான் வந்திருந்தான்.
“மச்சான்..! சொல்லவே இல்ல. மேரேஜ் அன்னைக்குத் தான் வர்றதா சொன்ன. நான் சொன்னதுக்காக, எனக்காக இன்னைக்கே வந்திருக்க. உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு மச்சான்..” என்றான் சரண்.
பல்லைக் கடித்த விஜய்,
“கடுப்பேத்தாதிங்கடா..! கீர்த்தனா இதை மறந்து வச்சுட்டு வந்துட்டாளாம். சித்திகிட்ட போன் போட்டு கேட்க, அவங்க உடனே எல்லாத்தையும் பேக் பண்ணி என்னையும் பேக் பண்ணிட்டாங்க” என்றான் கோபமாய்.
“அண்ணா..! நான் அவங்களை வரும் போது தான் எடுத்துட்டு வர சொன்னேன்” என்றாள்.
“அவங்களும் தான் வந்திருக்காங்க. அங்க சரணோட பெரியப்பா வீட்டுக்கு போயிருக்காங்க.” என்றவன், கையில் இருந்த பேக்கை நீட்ட,
“சரி சரி கோபப்படாம உள்ள வா மச்சான்..! இன்னும் டூ டேய்ஸ் தான இருக்கு. இருந்துட்டு மேரேஜ் பங்க்ஷனை முடிச்சுட்டு போடா” என்றான்.
“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல..” என்று விஜய் பேசிக் கொண்டே.. உள்ளே வந்தவன், அங்கு வேதாவைப் பார்த்து திகைத்து விட்டான்.
த்ரீ போர்த் பேண்ட்டும், டீஷேர்ட்டும் அணிந்து, மெகந்தி வைத்து முடித்த இரண்டு கைகளையும் விரித்து, தலை சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க, மெகந்தி வைத்துக் கொண்டிருந்த பெண்ணோ, இப்போது அவள் கால்களுக்கு வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளை இரண்டு நிமிடங்கள் ஆழ்ந்து பார்த்தவன், பின் பார்வையை கைவிட்டவனாய் திரும்பிக் கொள்ள, உள்மனம் மட்டும் திரும்பாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.
தன்னை ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அறியாத பெண்ணோ, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.