“சரியாகிட்டான் கனி, அவனை என்கிட்ட கொடுத்திட்டு இதை குடி” என சொல்லி ஜூஸ் இருந்த கிளாசை நீட்டினான்.
“இல்லை என்கிட்டேயே இருக்கட்டும்” என்றாள்.
“அவனோட அப்பன் கனி நான். நார்மல் ஆகு முதல்ல” என்றவன் குழந்தையை மெதுவாக தூக்கி படுக்கையில் படுக்க வைத்து, அவளையும் ஜூஸ் பருகச் செய்தான்.
இன்னும் பயம் தெளியாதவள் அவனை நெருங்கி வந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளை தன்னோடு சேர்த்து நன்றாகவே அணைத்துக் கொண்டவன் அவளின் கன்னம் கை தோள் என தடவிக் கொடுத்தான்.
“பயந்திட்டேன் மாமா” என்றாள்.
“ம்ம்…”
“நீ இல்லைனா என்ன ஆகியிருக்கும்?”
“ஷ் ஷ், அவனுக்கு ஒன்னும் ஆகல, நான் இல்லைன்னாலும் பெருசா ஏதும் ஆகிருக்காது. ஆனா இனிமே உங்களை தனியா விடுறதா இல்லை நான்” என்றான்.
அவனுடன் தர்க்கம் செய்யும் மனநிலையில் இல்லாதவள் அமைதியாகவே இருந்தாள்.
“நீயும் படுத்துக்க” என்றவன் வெளியில் கிளம்பினான்.
“எங்க மாமா?”
“கூப்பிட்டா வர மாட்டேங்குற, எங்க போறேன்னு எதுக்கு உன்கிட்ட சொல்லணும்?” எனக் கேட்டவன் வெளியேறி விட்டான்.
ஆசைத்தம்பியை காரை எடுக்க சொல்லி புறப்பட்டான். காரின் உடைந்த கண்ணாடியை மாற்றத்தான் சென்றான்.
“கனியம்மா வர மாட்டேன்னு சொல்லிட்டாங்களா ண்ணா?” என வருத்தமாக கேட்டான் ஆசைத்தம்பி.
“இப்ப வரத்தான் நினைக்கிறா போல, அவ அத்தைக்கு பயந்து வெளிப்படையா சொல்ல பயப்படுவாளா இருக்கும்” என்றான் தர்மா.
“என்ன செய்ய போறீங்க ண்ணா?”
“குழப்பத்துல இருக்கா, பேசினா வந்திடுவா”
“அப்புறமும் ஏன் ண்ணா கவலையா இருக்குறீங்க?”
“அவ வந்திடுவா அம்மா நிதி அப்பத்தாலாம் இங்கதானே இருக்காங்க”
“அவங்கள்ட்டேயும் பேசலாமே ண்ணா”
“வேணாம்டா, அவங்க இங்கேயே இருக்கட்டும். நிதி இங்கதானே வேலை பார்க்கிறா, அங்க வந்தா என் கூட தங்கினாதான் சரியா இருக்கும். அதுக்கு அம்மா ஒத்துக்காது. இப்போதைக்கு இங்கேயே இருக்கிறது பெட்டர். உனக்கு கல்யாணம் பண்ண துடிச்சிட்டிருக்காங்க உன் அம்மா. நீயும் இங்கேருந்து கிளம்பு, கோபு இருப்பான் இங்க” என்றான் தர்மா.
ஆசைத்தம்பி ஒத்துக் கொள்ளவில்லை, இன்னும் ஒரு வருடம் கழித்துதான் எனக்கு திருமணம், அதுவரை நானே இங்கு இருக்கிறேன் என தீர்மானமாக சொல்லி விட்டான்.
தர்மாவும் சரியென விட்டு விட்டான்.
கார் கண்ணாடியை மாற்றி, பாட்டி அமர வசதியாக சாய்வு நாற்காலி, தங்கை வேலை செய்ய வசதியான மேசை நாற்காலி, மகனுக்கு விளையாட்டு சாமான்கள், பழங்கள் என வாங்கிக் கொண்டு பத்து மணிக்குத்தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மா.
ஆசைத்தம்பிக்கான உணவை கொடுத்து அவனை அனுப்பி விட்டு கேட் பூட்டிய தர்மா உள்ளே நுழைந்தான்.
எப்போது கிளம்புகிறாய் எனதான் கேட்டார் தாமரை. அவனுக்கு ரோஷம் மிகுந்து போக வெளியேறி விட கால்கள் துடித்தன.
அம்மாவுக்கும் பின்னால் விளையாடிக் கொண்டிருந்த மகனை பார்க்கவும், “தெரியலை மா, கனி அதி ரெண்டு பேரையும் கூட்டிட்டுத்தான் போகணும். ஃபிளைட் டிக்கெட் எப்ப கிடைக்குதுன்னு பார்த்திட்டு சொல்றேன்” என சாதாரணமாக சொல்லி அம்மாவை கடந்து சென்று மகனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
“உன் பொண்டாட்டி புள்ளையோட வாழ வேணாம்னு சொல்லலை நான், ஆனா அந்த ஊருக்கு இவங்கள அனுப்ப மாட்டேன்” என்றார் தாமரை.
“அதை என்ன நீ சொல்றது, என் பொண்டாட்டி சொல்லட்டும்” என்றான்.
“நீயே சொல்லு கனி!” என மருமகளை அதட்டினார் தாமரை.
அத்தை சொல்ல சொல்வதை அப்படியே சொல்ல நினைத்து கணவனை பார்த்து வாய் திறக்க போனவள், அவனது கடினப் பார்வையில் வார்த்தை எழாமல் தடுமாறினாள்.
அவளின் பயத்தில் கொஞ்சமாக மனம் இளகியவன் வேலம்மாள் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை சொன்னான். கனி பதறிப் போனாள்.
நம்பாத தாமரை உடனடியாக அம்மாவுக்கு காணொளி அழைப்பு செய்தார். வைத்தியத்தின் பலனாக பழைய படி சாதாரணமாக பேசினார் பாட்டி. கனியை வரச் சொல்லி கேட்டு, கொள்ளுப் பேரனையும் ஆசையாக பார்த்துக் கொண்டார்.
தன் அம்மாவிடம் பேசி முடித்த பின் ‘நன்றாக இருப்பவருக்கு சுகக்கேடு என பொய்யா சொல்கிறாய்? கையிலேயே கத்தியை வைத்துக்கொண்டு சுற்றும் நீ குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கு இல்லை’ என மகனை நன்றாக திட்டினார் தாமரை.
அம்மாச்சி இப்போதுதான் குணமாகியிருக்கிறார், நான்கைந்து நாட்களாக மிகவும் சிரமப் பட்டார், கனியை நேரில் காண வேண்டும் என அடமாக கேட்டார் என தர்மா சொல்வதையெல்லாம் பொருள் செய்யவே இல்லை தாமரை.
“அப்ப அப்பத்தா சொன்னதாலதான் இங்க வந்தியா மாமா?” என ஆதங்கமாக கேட்ட கனி, தன் மாமியாரின் முறைப்பில் அமைதியானாள்.
“உன்னை வந்து கூப்பிட தைரியம் இல்லை கனி, அம்மாச்சியால எப்படியோ வந்திட்டேன். குதர்க்கமா யோசிக்காத” என்றான் தர்மா.
“ஏன் அவனோட போலாம்னு இருக்கியா நீ?” என மருமகளை தாமரை அதட்ட, வேகமாக “இல்லை அத்தை” என்றாள் கனி.
“அவ என்ன உன் ஸ்டூடண்ட்டா, சும்மா சும்மா மிரட்டிட்டே இருக்க?” என அம்மாவிடம் எரிச்சல் பட்டவன், மனைவியிடமும், “என்கிட்ட மட்டும்தான் சவுண்ட் வுடுவியா? அவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டாம உன் மனசு சொல்ற படி கேளு” என்றான்.
“அப்படி கேட்டுத்தான் இன்னிக்கு இங்க வந்து கெடக்குறா, நீ இடத்தை காலி பண்ணு” என்றார் தாமரை.
அன்னலக்ஷ்மி பாட்டிக்கு கோவம் வந்து விட்டது. தர்மா உன் மகனாகவே இருக்கட்டும், கனி உன் அண்ணன் மகளாகவே இருக்கட்டும். அவர்களிடம் உனக்கு எல்லா உரிமைகளும் உள்ளது, ஆனால் அவர்கள் இருவரும் கணவன் மனைவி, அவர்களின் வாழ்க்கை குறித்த முடிவை அவர்கள் இருவர் மட்டும்தான் எடுக்க வேண்டும். வாழ வேண்டிய பிள்ளைகள் இருவரும், நீ தலையிட்டு அவர்களை பிரிக்க முயலாதே என்றார்.
தாமரை முகத்தை உர் என வைத்துக்கொண்டார். இந்த வீட்டுக்கு நான்தான் மூத்தவள் என்ற மரியாதை இருந்தால் நான் சொல்கிற படி கேள், அவன் இங்குதான் தங்குவான், இரண்டு நாட்கள் இருக்கட்டும், கனி என்ன முடிவு செய்கிறாளோ அதை அவளே செய்யட்டும், வேறு யாரும் இடையிடக் கூடாது. அவர்கள் இருவரும் பேசி முடிவெடுப்பார்கள் என சொல்லி விட்டார்.
மாமியாரின் பேச்சில் அதிருப்தி கொண்ட தாமரை அறைக்குள் சென்று விட்டார்.
தர்மாவுக்கு உணவு எடுத்து வைத்தாள் கனி. நிதியை தங்கள் அறைக்கு வந்து விடும் படி சொன்னார் பாட்டி.
“அதெல்லாம் வேணாம், நான் இங்க ஹால்ல படுத்துக்கிறேன் அப்பத்தா” என்றான் தர்மா.
“இப்பதானடா உன் அம்மாகிட்ட சொன்னேன், உனக்கு வேற சொல்லணுமா?” என பேரனை அதட்டினார் பாட்டி.
என்னவென மூவரும் பார்க்க, “எம்மேல மரியாதை இருந்தா நான் சொல்றதை கேட்டு நடங்க” என சொல்லி சென்று விட்டார். அவரை வால் பிடித்துக்கொண்டே நிதிலாவும் சென்று விட்டாள்.
“அங்க பெட்ல எப்படி மூனு பேர் படுக்க முடியும், என்னவோ உன் கூட தங்க விருப்பம் இல்லாமத்தான் நான் ஹால்ல படுக்கிறேன்னு சொல்ற மாதிரி அப்பத்தா கோவ படுது” என்றான் தர்மா.
“நீ எனக்கும் அத்தைக்கும் இடைல பிரச்சனை உண்டாக்க பார்க்கிற மாமா” என குறை சொன்னாள்.
“எனக்கு வேற வேலை இல்லையா?” என அவன் கடுப்படிக்க, பேசாமல் மகன் பக்கத்தில் அமர்ந்து விட்டாள்.
சாப்பிட்டவன் மகனுடன் விளையாட அமர, “அவனுக்கு தூங்குற நேரம் வந்தாச்சு மாமா, பகல்ல விளையாடு. இன்னிக்கு வேற ரொம்ப அழுதிட்டானா… தூங்க டைம் மாறிப் போனா நைட்லேயும் அழுவான்” என்றாள்.
“உனக்கு நான்தான் பயப்படுறேன், இவன் எனக்கும் மேல, அதான் உன்னையே அலற விடுறான்”
“ஆனா ரெண்டு பேரும் என்னை அழ விடுறீங்கதானே?” எனக் கேட்டாள்.
மகனை அவளிடம் கொடுத்தவன், “பேசாம தூங்க போ, சண்டை போடுற மூட் இல்லை இப்போ” என்றான்.
“அத்தை சொல்ற மாதிரி நாளைக்கு ஊருக்கு கிளம்பு, நானும் உன்னோட வர்ற மூட்ல இல்லை” என சொல்லித்தான் படுக்கையறை சென்றாள்.
நாளை மறுநாள் பிற்பகல் நேரத்துக்கு மதுரை செல்ல தனக்கும் கனிக்கும் விமான டிக்கெட் போட்டு விட்டுத்தான் அறைக்கு சென்றான் தர்மா.
மகனை உறங்க வைத்துக் கொண்டிருந்தவளின் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான். அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் உறங்க முற்பட்டான்.