தடையாக இருந்த கைப்பேசியின் மீது எரிச்சல் பட்டுக் கொண்டேதான் அவளை விடுவித்தான். 

தாமரைதான் அழைத்திருந்தார். அவளுக்கு வேலைக்கு பார்த்திருப்பதாக சொன்னவர், விவரங்களை வாட்ஸ் ஆப் செய்திருப்பதாக தெரிவித்தார். 

எப்படிப் பட்ட வேலை என்ன சம்பளம் போன்ற விவரங்களை கேட்டாள். உன் குரல் சரியில்லையே என்னவானது என அவர் சந்தேகமாக கேட்ட போது அப்படியெல்லாம் இல்லை என சமாளித்தாள். இவனது வரவை பற்றி இப்போது சொன்னால் அவரால் உடனே வரவும் முடியாது, நிம்மதியாக வேலையும் செய்ய முடியாது என்பதால் அந்த நேரம் ஏதும் சொல்லவில்லை கனி. 

தான் அனுப்பிய செய்தியில் அனைத்து விவரங்களும் இருப்பதாக சொல்லி பேச்சை முடித்துக் கொண்டார் தாமரை. 

கனி பேசியதை வைத்தே என்ன விஷயம் என்பதை அறிந்து கொண்டவன், “இன்னும் எவ்ளோ நாளைக்கு என்னை சித்ரவதை செய்யலாம்னு இருக்க கனி?” என வேதனையாக கேட்டான். 

“எனக்கும் அதே சித்ரவதைதான் மாமா”

“ஏன் நாம அப்படி கஷ்ட படணும் கனி?”

“இன்னிக்கு என் அப்பா இல்லை”

“நான்தான் காரணமா டி?” வருத்தமாக கேட்டான். 

“நீ இருந்திருந்தா ஒரு வேளை அப்பா இன்னிக்கு இருந்திருப்பாரு. எனக்கு அம்மா இல்லை, அப்பாவும் இல்லை”  என்றவளுக்கு தந்தையின் நினைவில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. 

நம்பிக்கு மகள் மீது அன்பிருந்தாலும் ஒரு நாளும் அன்பாக அக்கறையாக என ஏதும் பேசியதே கிடையாது. இவள் உண்டான பிறகுதான் மகளிடம் கனிவாக நடந்து கொண்டார். கனியின் பல வருட ஏக்கம் அது, ஆனால் அது வெகு காலம் நீடிக்கவில்லை. 

“மாமா போனதுல எனக்கு துக்கம் இல்லையா? இப்ப வரை அவரை மிஸ் பண்றேன். அந்த நேரம் அவர் கூட நான் இல்லையேன்னு இப்ப வரை என்னை நானே நொந்துக்கிறேன். எனக்கு பெரிய தண்டனை அவரும் கொடுத்திட்டார்” என்றவன் சில நொடிகள் எடுத்து தன் உணர்வுகளை நிலைப் படுத்தினான். 

“அவர் இப்போ இல்லை, நான் அவரை விட்டுட்டேன். தெரிஞ்சு செய்யலைன்னு உனக்கு தெரியும், அதுக்காக என்னை வேணாம்னு ஒரேயடியா விட்ருவியா கனி?”

“அது மட்டும்தானா மாமா?”

“வேற என்னடி?”

“அதி என் வயித்துல இருந்தப்பவே என்ன கேட்டேன் உன்கிட்ட? அவனை அமைதியா வளர்க்கணும்னு சொன்னேன்தானே? ஆனா என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என குரல் உயர்த்தாமல் கேட்டாள். 

“நான் செய்றதை சட்டையை கழட்டுற மாதிரி கழட்டி போட முடியாது கனி, கூட வந்து இரு கனி, எல்லாத்துக்கும் டைம் எடுக்கும்” என்றான். 

“அதுக்கு நீ மனசு வைக்கணும். அப்பா போனதும் சும்மா இருந்தியா நீ? அந்தாளை படுக்க வச்சிட்டுத்தான் ஓஞ்ச, இன்னும் எதுக்காக அங்க இருக்க? கட்சியோட கரை வேஷ்டி சட்டையை  போட்டுக்கிட்டு எங்கப்பாவோட வாரிசா மாறிட்ட. அடுத்து என்ன… இவனையும் அப்படி மாத்தணுமா?” 

“அதுக்காக என்னை விட்டுட்டு வந்திட்டா ஆச்சா? எங்கம்மா கூட அப்படித்தான் அவங்க அண்ணனை விட்டு போனாங்க, அவங்க பையனோட தலையெழுத்த அவங்களால மாத்த முடிஞ்சுதா?” என அவன் கேட்க, கோவமாக பார்த்தாள். 

“அதி என்னை மாறி ஆக மாட்டான், நான் விட மாட்டேன்” என்றான். 

“எல்லாத்தையும் விட்டுட்டு வந்து சொல்லு, நம்புறேன்”

“புரியாம பேசாதடி. சும்மா நான் இங்க வந்திட்டா நிம்மதியா வாழ விட்ருவாங்களா? என் பையனுக்கு என் குடும்பத்துக்கு நிம்மதியான பகை இல்லாத வாழ்க்கையை கொடுக்கத்தான் இன்னும் அங்க உட்கார்ந்து கிடக்கேன்”

“இன்னும் என்ன செய்ய போற மாமா? பயமா இருக்கு மாமா? உனக்கு எப்ப என்ன ஆகுமோன்னு தினம் தினம் பயந்து பயந்து…” என்றவள் உன்னிடம் சொல்லி என்ன பிரயோஜனம் என நினைத்து பேசுவதை விட்டாள். 

எதற்காகவோ அறையை விட்டு வெளி வந்த நிதிலா அண்ணனை கண்டு விட்டு திகைத்தாள். அவளுக்கு பேச்சே வரவில்லை. 

“ஏன் வந்தேன்னு நீயும் கேட்க போறியா ம்மா?” என அவன் கேட்கவும்தான், “அண்ணா…” என அழைத்துக் கொண்டு அவனருகில் சென்றாள். 

அண்ணனும் தங்கையும் பேசிக் கொள்ள, மகனை அங்கேயே விட்டு அறைக்கு சென்று படுத்து விட்டாள் கனி. 

நிதிலா அலுவலகத்தில் பேசி விடுப்பு எடுத்துக் கொண்டாள். பாட்டியும் வந்து விட்டார். அவர் ஒரே அழுகை. இயல்புக்கு திரும்பவே நேரம் பிடித்தது.

அதியனும் அம்மாவை தேடவே இல்லை. தங்கைதான் அண்ணனுக்கு பருக பால் கலந்து கொடுத்து அவனது வயிற்றை கவனித்தாள். மனைவியை காணச் செல்லாமல் தன் மகனுடனே நேரத்தை செலவிட்டான் தர்மா. 

மகனுக்கு பசியாற்றும் நேரம் வந்ததும் எழுந்து வந்த கனி, மகனை தூக்கிக் கொண்டு அமைதியாக அறைக்கு சென்று விட்டாள். 

வேலம்மாள் பாட்டிக்கு முடியவில்லை, கனியை பார்க்க வேண்டும் என்கிறார் என்பதை சொன்னான் தர்மா. 

என்னையெல்லாம் பார்க்க நினைக்கவில்லை என நிதிலா குறையாக கேட்டாள். கனி அவருக்கு பேத்தியல்ல மகள் போல, உன் மீது அன்பில்லை என்றில்லை, அவள் அவருக்கு எப்படியென தெரியாதா என எடுத்து சொன்னான் தர்மா. 

“அப்படியாவது இவன் கூட சேர்ந்து வாழ மாட்டாளான்னு நினைச்சு கூட அழைச்சிட்டு வர சொல்லியிருப்பாங்க, அவ கூட உனக்கென்ன போட்டி” என்றார் அன்னலக்ஷ்மி பாட்டி. 

இவள் அங்கு வரும் எண்ணத்தில் இல்லை, அம்மா வேலைக்கு ஏற்பாடு செய்கிறார் என்பதையும் சொன்னான். உன் அம்மாச்சியின் உடல்நிலை பற்றி சொல், தாமரையிடம் நான் பேசுகிறேன் என நம்பிக்கை சொன்னார் அவனது அப்பத்தா. 

நான் வந்ததில் கனி மிகவும் உணர்ச்சி வசப் பட்டிருக்கிறாள், மதிய உணவுக்கு பின் பொறுமையாக நானே அம்மாச்சியை பற்றி அவளிடம் சொல்கிறேன், இப்போது அவளுக்கு தெரிய வேண்டாம் என சொல்லி விட்டான். 

மதிய சமையல் செய்ய என  எழுந்து வந்தாள்  கனி. அதியன் உறங்கி விட்டான். ஹாலில் இருந்தவர்களை கண்டு கொள்ளாமல் சமையலறை சென்ற கனி, “காரக் குழம்பு வெண்டைக்காய் பொரியல் ஓகேவா நிதி? “எனக் கேட்டாள். 

“வேணாம்னா விடவா போற, செய் செய்” என குரல் கொடுத்தாள் நிதிலா. 

“இவளா சமைக்க போறா?” என வியப்பாக கேட்டான் தர்மா. 

மேல் வேலைக்கு மட்டும்தான் ஆள். சமையலுக்கு வேண்டாம் என சொல்லி விட்டாராம் தாமரை. ஆரம்பத்தில் தாமரையே மதியமும் சமைத்து வைத்து விட்டு செல்வார். அத்தையின் கஷ்டத்தை பார்த்த கனி, தன் மகனுக்கு மூன்று மாதங்கள் ஆகவுமே சமையலறை வந்து விட்டாள். 

பாட்டி பக்குவம் சொல்ல கேட்டு கேட்டு சமைக்க ஆரம்பித்தவள் இப்போது தனியாக செய்யும் அளவுக்கு முன்னேறி விட்டாள். நிதிலா வீட்டில் இருந்து அவளுக்கு நேரமும் இருந்தால் உதவுவாள், இரவு தாமரை உதவுவார். 

வீட்டிலும் எந்த விதமான ஆடம்பர பொருட்களும் இல்லை, சோஃபா டைனிங் டேபிள் என எதுவும் கிடையாது. பழைய வீட்டை விற்ற போதே பெரும்பாலான பொருட்களையும் விற்று விட்டார் தாமரை. வசதிகளை சுருக்கிக் கொண்டு பெண்களாக இருந்து அனைத்தையும் சமாளித்துக் கொண்டனர்.

சமையல் எல்லாம்  பழகியிராத கனி இதையெல்லாம் செய்வதை பார்க்கும் போது அவனுக்கு கவலையாகத்தான் இருந்தது. 

“நீ போய் ஹெல்ப் பண்ணேன் ம்மா” என தங்கையிடம் சொன்னான். 

“நீ சொல்லாட்டாலும் போயிருப்பேன் ண்ணா” என்ற நிதியும் சென்று விட்டாள். 

பேரனை ஓய்வெடுத்துக் கொள்ளும் படி பாட்டி சொல்ல, மகன் படுத்திருந்த அறைக்கு சென்றான். 

மகனின் பிஞ்சுக் கையை பிடித்த படி கண்களை மூடிக் கொண்டான். கனி வருவாளா என்பது உறுதியாக தெரியா விட்டாலும் தன்னை அவள் துரத்தி விடாதது அவனுக்கு நேர்மறையாக பட்டது. 

மாலையில் வந்து சேரும் அம்மாவை வேறு சமாளிக்க வேண்டுமே என யோசனை ஓடினாலும் கனியும் மகனும் இல்லாமல் இங்கிருந்து நகரப் போவதில்லை என தீர்மானித்துக் கொண்டவனாக உறங்கிப் போனான். 

சமையலின் இடையில் மகனை காண்பதற்காக அறைக்குள் வந்தாள்  கனி. அப்பாவின் மேலேறி குப்புற படுத்திருந்தான் அதியன். உறங்கும் போது அம்மா, அத்தை, பாட்டி என யார் அருகில் இருந்தாலும் இப்படி அவர்களையே பஞ்சனையாக்கிக் கொள்வது அதியனுக்கு வாடிக்கைதான். 

ஆனால் இந்தக் காட்சி கனியை என்னவோ செய்தது. குழந்தை மீது தர்மாவுக்கும் எல்லா உரிமைகளும் இருக்கிறதே. எத்தனை ஆசையாக பிள்ளையின் வரவை எதிர்பார்த்திருந்தான். பதினோரு மாதங்களாக பெற்ற பிள்ளையை தூக்க கூட முடியாதவனாகி விட்டவன் அதை நினைத்து எத்தனை தவித்திருப்பான்? 

தந்தையை விட்டு இப்படி தள்ளி வைத்திருப்பது குழந்தைக்கும்  அநியாயம் செய்தது போலதானே? 

குற்றம் இழைத்து விட்டது போல மருகிப் போனாள். சில நொடிகள்தான் அப்படியெல்லாம் யோசனை. 

வன்முறையின் நிழல் படாமல் என் மகன்  வளர்வதை காட்டிலும் வேறு எதுவும் முக்கியம் இல்லை, மாலையில் அத்தை வந்தால் அவரே பேசி இவனை ஊருக்கு அனுப்பி வைத்து விடுவார் என நினைத்தவள் அறையை விட்டு வெளியேறி விட்டாள்.