காலையில் கண் விழித்ததும் எழுந்து கொண்ட தர்மா அறையின் பால்கனிக்கு போய் நின்றான். சூரியன் தன் பணியை எப்போதோ ஆரம்பித்திருக்க, அவனது மனதில் எந்த பரபரப்பும் இல்லை.
சரியும் தவறுமாக தான் ஓடி வந்த பாதை தன்னை இப்படி நிறுத்தும் என அவன் கற்பனை கூட செய்திருக்கவில்லை.
தனக்கென எதுவும் நிலைக்காது என்பது சாபமோ என எப்போதும் போல இன்றைய நாளின் துவக்கத்திலும் நினைத்துக்கொண்டான்.
கண் மூடி தன் கனியோடு வாழ்ந்த நாட்களை அசை போட்டுப் பார்த்தான். நினைவுகள் இனிமை கொடுப்பதற்கு பதில் இன்று அந்த வாழ்க்கை தனக்கு இல்லையே என்ற ஏக்கத்தையே அவனுக்கு கொடுத்தது.
அவனது வாழ்க்கை மட்டுமா ஆளும் மாறிப் போயிருந்தான். தாடியின்றி மழு மழுவென சவரம் செய்யப் பட்டு லேசாக முறுக்கிய மீசையுடன் கட்சி வேஷ்டியும் வெள்ளை சட்டையுமாக இருந்தான்.
அவளுடன் வாழ்ந்த அறையில் படுப்பதே இல்லை. அவளின் நினைவுகள் வாட்டுகிறதாம், எங்கே இருந்தாலும் அவளை அவனால் மறக்க முடியாது என்பதுதானேஉண்மை.
படிக்கட்டுக்களில் இறங்கி வந்த அண்ணனிடம், “சாப்பிடலாமா ண்ணா?” எனக் கேட்டான் அஜய்.
படிப்பை நிறைவு செய்து விட்ட அஜய் அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக இருக்கிறான். மேற்படிப்புக்காக தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறான்.
ஒரு காலத்தில் அண்ணனை கண்டால் கோவம் கொண்டு வெறுப்பு காட்டிய அஜய் இன்று அவனோடுதான் வசிக்கிறான். தன்னுயிர் காத்த மாமாவின் வாயிலிருந்து உதிர்த்த கடைசி வார்த்தையே ‘தர்மா’ என்பதுதான். அப்படியிருக்க மாமா இல்லாத போது அவருக்கு உயிரான தர்மாவுடன் இருப்பது தனது கடமை என நினைத்து விட்டான்.
ஆமாம் தமிழ்நம்பி இப்போது இவ்வுலகில் இல்லை. வஞ்சகம் அவரை விழுங்கி விட்டது.
ஹாலில் இருந்த நம்பியின் உருவ படத்திற்கு முன் கைக்கூப்பி கண் மூடி நின்றான் தர்மா. கண்கள் கலங்கவில்லையே தவிர அவனது உள்ளம் கலங்கி தவித்துப் போனது.
தம்பி காத்திருப்பது உணர்ந்து உணவருந்த சென்றான் தர்மா.
“நம்ம கட்சி ஆஃபீஸ் எதிர்த்தாப்புலேயே அவனுங்க கட்சி பேனர் வச்சிருக்கானுங்க அண்ணா, என்ன செய்யலாம்?” கைப்பேசியில் சுட சுட வந்த தகவலை தர்மாவிடம் உடனே பகிர்ந்து கொண்டான் கோபு.
அண்ணனுடன் சேர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த அஜய், ‘காலையிலேயே கலவரத்துக்கு புள்ளி வச்சிட்டாய்ங்க” என மனதுள் அலுத்துக் கொண்டான்.
“சும்மாலாம் அதை எடுக்க கூடாது, எவன் வச்சானோ அவனே வந்து எடுக்கணும், இனி இப்படி செய்யணும்னு அவன்மட்டுமில்லவேறஎவனும் கனவுல கூட நினைக்க கூடாது” அழுத்தம் கூடிப் போன குரலில் சொன்னான் தர்மா.
தலையாட்டிக் கொண்ட கோபு அகன்றான்.
“ஏன் ண்ணா இதெல்லாம்? எப்ப நாம எல்லாம் ஒரே குடும்பமா வாழறது? அம்மா அண்ணி எல்லாம் பாவம் இல்லையா? உன் முகம் பார்க்காம வளர்ற அதியனை நினைச்சு பார்க்க மாட்டியா?” எனக் கேட்டான் அஜய்.
பதில் சொல்லாத தர்மாவால் மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. பழைய நினைவுகள் ஆக்டோபஸ் போல அவனை சுற்றி வளைத்து கழுத்தை நெறித்தது. பழியும் வெறியும் இன்னும் மிச்சமிருப்பதாக உள்ளம் உறும, எழுந்து சென்று விட்டான்.
அஜய்க்கும் அதற்கு மேல் சாப்பிட மனமில்லை. மருத்துவமனை செல்லும் போது காலைப் பட்டினி கூடாது என்பதால் மனமின்றி சாப்பிட்டு முடித்தான்.
நம்பி இருந்த காலத்தில் கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தர்மா இப்போது கட்சியின் மாவட்ட செயலாளர்.
உள்ளாட்சி தேர்தல் நடந்த சமயத்தில் எதிர்க் கட்சியாக இருந்தும் கூட இந்தப் பகுதியில் அனைத்து இடங்களிலும் வெற்றியை தேடிக் கொடுத்தான்.இப்போது நம்பியை விட அதிக செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியாக நிற்கிறான். என்ன… அவனது குடும்பம்தான் அவனுடன் இல்லை.
வேலம்மாள் பாட்டிக்கு இரண்டு தினங்களாக மூச்சுத் திணறல். ஆகையால் அறையிலேயேதான் இருந்தார். அவரின் அறையில் தர்மா இருக்க, அஜய்யும் அங்கு சென்றான்.
பாட்டியின் உதவிக்கென இருந்த பெண்ணிடம் மருத்துகளை சரியாக கொடுக்கிறாளா என கேட்டறிந்து கொண்டிருந்தான் அஜய்.
தர்மாவின்கைப்பற்றிநன்றாகஅமர்ந்துகொண்டபாட்டி, “ரொம்பநாள்இருக்கமாட்டேன்டா, என்னையஎம்பேத்திகிட்டஅழைச்சிட்டுபோ” என்றார். பேசி முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது அவருக்கு.
“வைஷாக் என்ன பக்கத்துல இருக்கா அம்மாச்சி? உன் உடம்பு கண்டிஷன்ல அவ்ளோ தூரம்லாம் டிராவல் பண்ண முடியாது. அதான் வீடியோ கால்ல பேசுறீல்ல?” என்றான் அஜய்.
உன்னிடம் பேசவில்லை என அஜய்யிடம் சாடை செய்த பாட்டி, தர்மாவின் கையை இறுக பற்றிக் கொண்டு ஏக்கமாக பார்த்தார்.
இரு கைகளாலும் அவரின் கையை அழுத்திக் கொடுத்த தர்மா, “அவளை இங்க அழைச்சிட்டு வர்றேன் அம்மாச்சி” என்றான்.
“வேணாம் உன் அம்மா விட மாட்டா, அவளும் வர மாட்டா. எம்மேல ரெண்டுக்கும் கோவம்…” என்றவரின் முதுகை நீவி விட்டான் தர்மா.
“தம் கட்டி பேச முடியலைல அம்மாச்சி, அமைதியா சாஞ்சுக்க” என அதட்டினான் அஜய். தம்பியை முறைத்தான் அண்ணன்.
அஜய்யும் என்ன செய்வான், தன்மையாக எது சொன்னாலும் கேட்பதில்லை பாட்டி, அதட்டினால் மட்டுமே கொஞ்சமாக ஒத்துழைப்பு தருகிறார்.
“எல்லா மருந்து மாத்திரையும் சரியா சாப்பிடு, உனக்கு முடியாம இருக்கும் போது எப்படி வர மாட்டேன்னு சொல்லுவா?” எனக் கேட்டான் தர்மா.
“அவ வந்து சேருற வரைக்கும் தாங்க மாட்டேன், என்னை அழைச்சிட்டு போ” என திணறலோடு சொன்னார் பாட்டி.
அவரை சமாதானம் செய்து அமைதி படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
பாட்டியின் அறையிலிருந்து வெளியேறிய பின் ‘இந்த மருத்துகளை சாப்பிட்டு வந்தால் ஒரு வாரத்தில் சரியாகி விடுவார், இவரையும் அங்கேயே போய் விட்டு விடலாம், மகிழ்ச்சியாக இருப்பார்’ என்றான் அஜய்.
பாட்டியை பார்க்க எனவாவது என்றோ ஒரு நாள் இங்கு வருவாள் என நம்பிக் கொண்டிருக்கும் தர்மாவுக்கு தம்பியின் யோசனை பகீர் கிளப்பியது.
“ஏன் இங்க வர்றேன்னு அண்ணி உன்கிட்ட சொல்லிச்சா?” எனக் கேட்டான் அஜய். தலையை லேசாக அசைத்துக் கொண்டான் தர்மா. அதற்கு என்ன அர்த்தம் என அஜய்யால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
திருமணம் ஒன்றில் பங்கேற்க வேண்டும் தர்மா. அரசியல் வாழ்க்கை தொடங்கிய பிறகு இதெல்லாம் அவனுக்கு அவசியமாகி விட்டது. ஐந்து நிமிடங்கள் அங்கு சென்று தலை காட்டிய பிறகு இன்னொரு கட்டிடத் திறப்பு விழாவுக்கு செல்ல வேண்டும்.
மண்டபத்தின் வாயிலில் தர்மாவின் கார் நுழையும் போதே மணமக்களின் பெற்றோர் ஓடி வந்து வரவேற்க தயாராக நின்றனர். இறங்கிய தர்மாவின் முகத்தில் திடீரென வீடியோ கேமராவின் வெளிச்சம் விழ, கை காட்டி தடுத்தான்.
வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவன் பயந்து விலகினான். பவ்யமாக கை கொடுத்து வரவேற்றவர்களிடம் புன்னகையை சிந்தி விட்டு உள்ளே சென்றான். மேடையேறி மணமக்களை வாழ்த்தப் போக, அவர்களோ அவனது காலில் விழப் போனார்கள். தடுத்து விட்டான்.
மணமகனின் அப்பா சால்வை போர்த்தி மரியாதை செய்தார். திருமணம் நடக்கும் இடத்தில் இப்படியெல்லாம் செய்யும் முறையை யார் கொண்டு வந்ததோ என மனதில் நொந்து கொள்ள மட்டும்தான் அவனால் முடிந்தது.
மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக நிற்க, இன்னும் சிலர் அந்த புகைப்படத்தில் நின்று கொள்ளவென வந்தனர். இவனுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டியே எனக்கு தர்மாவை தெரியும் என சொல்லி காரியங்கள் சாதித்துக் கொள்பவர்கள் பலர் இருந்தனர்.