அன்று மாலையே விஜய்யின் வீட்டிற்கு மாறியிருந்தனர் வேதாவும், அகரனும். அவர்களுக்கு பெரிதாக எந்த வேலையும் இருக்கவில்லை. அவர்கள் பொருளை அடுக்குவதைத் தவிர. மற்றபடி வீட்டிற்கு தேவையான அனைத்து அத்யாவசிய பொருட்களும் அங்கு இருந்தது.
“அண்ணா, நான் கேட்கணும்னு நினைச்சேன். வீட்டு யூஸ்க்கு தேவையான எல்லா பொருளும் இருக்கு. இதெல்லாம் நாம வாங்கவே இல்லையே. அது மட்டுமில்லாம, நாங்க இங்க படிக்கிறதுக்காகத் தான் தங்குறோம். அதுக்கு ஏன் இவ்வளவு திங்க்ஸ்..?” என்றாள் கேள்வியாக.
“அதைத் தான் நானும் சொல்றேன். படிக்கிற வரைக்கும் தான இங்க இருக்க போறீங்க? அதுக்கு ஏன் எல்லாம் புதுசா வாங்கணும். ஆல்ரெடி இருக்குறதையே யூஸ் பண்ணிக்கலாம்..” என்றான் சரண்.
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் மாதிரி தெரியலை..” என்றாள்.
“எப்படியோ பதில் சொல்லிட்டேன் தானே வேதாம்மா..!” என்றவன்,
“அதை விடு, ராம் அப்பாட்ட பேசுனியா?” என்று பேச்சை மாற்றினான். விஜய் வாடகை வேண்டாம் என்று சொன்னது, அதற்குமேல் அவன் பேசியது என்று தெரிந்தால், வேதா நிச்சயமாக ஒப்புக் கொள்ள மாட்டாள் என்று சரணுக்குத் தெரியும்.
“சமைக்க கொஞ்சம் மளிகைப் பொருளும், காய்கறியும் வாங்கணும்” என்றாள்.
“நான் போய் வாங்கிட்டு வரேன் வேதா..! “ என்றவன், அகரனை அழைத்துக் கொண்டு சென்றான்.
முதன் முறையாக ஒரு தனி வீட்டில், தான் மட்டும் தனியாக இருக்கிறாள். இதுவரைக்கும் அவளுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. கீர்த்தனா கீழே அமுதாவுடனும், விஜய்யுடனும் பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் வருவதற்குள் மீண்டும் ஒரு முறை வீட்டை சுற்றி வந்தாள். எத்தனை முறை சுற்றினாலும் அலுக்கவில்லை அவளுக்கு. ஒவ்வொரு பூக்களும் அவளுக்கு ஒவ்வொரு கதை சொல்ல, மனதிற்கு இதமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்படி இதத்தை அனுபவிக்கிறாள்.
அவள் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த சரண், கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். பக்கம் தான் என்றாலும், வேதாவின் இந்த முடிவு சரணுக்கு பிடிக்கவில்லை என்று அவளுக்குத் தெரியும். ஆனால், தான் எடுத்த முடிவு சரி என்று சரண் புரிந்து கொள்வான் என்று எண்ணினாள்.
அகரன் தன் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்க,வேதாவிற்கு செய்வதற்கு வேலை ஒன்றுமில்லை.
‘சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இருப்பிடம்’ என்பதை போல் அவளுக்கு மீண்டும் பழைய எண்ணங்கள் தலை தூக்க, காலையில் அனுப்பிய அந்த ‘ஹாய்’ மேசேஜ்ஜையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது பார்க்கப்பட்டதற்கு அடையாளமாய் இரண்டு புளூ டிக்குகள் இருக்க, பதில் செய்தியாய் எதுவும் வரவில்லை. காலையில் இருந்து நூறாவது முறையாக பார்த்துவிட்டாள்.
தாலி கட்டியதுடன் சென்றவன் தான். இதுவரை எந்த தகவலும் இல்லை. அவனைச் சொல்லியும் குற்றமில்லை. பெற்ற தாய் தந்தையை மீறி அவனால் என்ன செய்ய முடியும்? பெரிதாக நந்தகுமாருடன் பேசிப் பழகவில்லை என்றாலும் தனக்குப் பார்த்த மாப்பிள்ளை என்ற வகையில் அவளும் பார்த்திருந்தாள். இதுவரை அன்னை-தந்தையின் தேர்வு அவளுக்கு தவறாக போனதில்லை. அவனுக்கும் அவளைப் பிடித்திருந்தது.அவன் கண்களில் பிடித்ததை கண்டிருக்கிறாள்.அவளுக்கும் பிடித்திருந்தது. எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அவனை யாருக்குத் தான் பிடிக்காது. ஏனோ இன்று அவனின் நினைவு அதிகமாய் வர, நொந்து கொண்டாள். பேசக் கூடாது என்று நினைத்தாலும் அவளால் முடியவில்லை.
‘என்னாச்சு வேதா உனக்கு? அதான் பதில் வரலைன்னு தெரியுதுல்ல. அதை விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியது தான..?எப்ப இருந்து உனக்கு இப்படி பட்ட எதிர்பார்ப்புகள் எல்லாம் வர ஆரம்பிச்சது..?’ என்று ஒரு மனம் கேள்வி கேட்க, அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, கல்லூரி பாடத்தை படிக்க ஆரம்பித்தாள். அது அவளுக்கு நன்றாக வேலை செய்தது. தேவையில்லாத எண்ணங்கள் பின்னே செல்ல, படிப்பில் மூழ்கிப் போனாள்.
சரணும் அவர்கள் வீட்டில் அப்படித்தான் இருந்தான். இறுகிப் போய் இருந்தவனைப் பார்த்த கீர்த்தனாவிற்கு பாவமாய் இருந்தது.
“என்னாச்சு சரண்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றாள்.
“தெரியலை கீர்த்தனா..! ஆனா, மனசு ஒரு பக்கம் பாரமா இருந்தாலும், ஒரு பக்கம் நிறைவா இருக்க மாதிரி இருக்கு. மனசுக்குள்ள சின்னதா ஒரு நெருடல். வேற ஒண்ணுமில்லை.” என்றான்.
“தெரியலை கீர்த்தனா. நான் செஞ்சது சரியான்னு தெரியலை. இப்ப செய்றது சரியான்னும் தெரியலை. இனி என்ன செய்ய போறேன்னும் தெரியலை. நான் கீர்த்தனாக்கு ஒரு நல்ல அண்ணன் தான?” என்றான் கலக்கத்துடன்.
“இப்போதான் சரண் உங்களை ரொம்ப பிடிக்குது. உங்களைத் தவிர யாராலையும் ஒரு நல்ல அண்ணனா இருக்க முடியாது. கூடப் பிறந்தவங்க கூட இப்படி இருக்க மாட்டாங்க..” என்றாள் பேச்சு வாக்கில்.
“இனி ஒரு முறை அப்படி சொல்லாத கீர்த்தனா. அகரன் எப்படியோ அப்படித்தான் வேதாவும் எனக்கு. நான் ரெண்டு பேரையும் எப்பவும் பிரிச்சு பார்க்குறது இல்லை”
“உங்களைப் பார்த்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு..” என்றாள் முகத்தை சுருக்கி.
“அப்படியா?” என்று சரண் சிரிக்க,
“நல்ல அண்ணாவா இருக்குறது எல்லாம் சரித்தான். சார் எப்ப நல்ல புருஷனா இருப்பிங்க..?” என்றாள் அவளும் சிரித்தபடி.
“நல்ல புருஷன்னா எப்படி? இப்படியா?” என்று அவளை இழுக்க, அவன் மீது மொத்தமாய் விழுந்தவள்,
“பாருங்கப்பா..! சார் ரொமான்ஸ் எல்லாம் பண்றார்..” என்றாள் கேலியாக.
“நானும் மனுஷன் தாண்டி..! தங்கச்சி தம்பியை வீட்ல வச்சுகிட்டு எங்க இருந்து ரொமான்ஸ் எல்லாம் பண்ண?அதான் அவங்களே ரூட் போட்டு கொடுத்துட்டு போய்ட்டாங்களே..! இனி பாரு அய்யாவோட ஆக்சனை” என்றவன், அவளை மேற்கொண்டு பேச விடாமல் மொத்தமாய் அவளுள் மூழ்கிப் போய்விட்டான்.
அங்கே வேதாவோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். புது இடம் என்பதால் அவளுக்குத் தூக்கம் வருவேனா என்றது. அகரன் பக்கத்து அறையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு வழியாக நடு ஜாமத்திற்கு மேல் உறங்கிவிட்டிருந்தாள்.
காலையில் எப்பொழுதும் போல் விழிப்பு வர, வேதாவிற்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. அந்த வீட்டிற்கு வந்த ஞாபகமே இல்லாமல் ஏதோ ஒரு சிந்தனையில் எழுந்தாள். எப்பொழுதும் அருகில் இருக்கும் தாய் தந்தை புகைப்படமும் இல்லாதிருக்க, அப்போது தான் அவளுக்கு சுயமே உரைத்தது. வேகமாய் எழுந்து தன்னுடைய பையில் இருந்த புகைப்படத்தை எடுத்தவள், அருகில் இருந்த மேசை மீது வைத்தாள். அவர்களுக்கு காலை வணக்கத்தை கூறியவள், குளித்து முடித்து வெளியே வந்தாள். அகரனும் அப்போது தான் எழுந்திருந்தான்.
“குட் மார்னிங் அகரா..” என்றாள் புத்துணர்ச்சியாய்.
“குர்மார்னிங் வேதா” என்று கொட்டாவி விட்டவன், செம்ம தூக்கம் என்றான்.
“ஏன் சொல்ல மாட்ட..? இங்க ஒருத்தி தூக்கம் வராம பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்..” என்றாள்.
“புது இடம்னால அப்படி இருந்திருக்கும்.வெளிய தங்குறது உனக்கு இது தான பர்ஸ்ட் டைம். அதான் அப்படி. போக போக சரியா போய்டும். எனக்கெல்லாம் பழகிடுச்சு. வேதாக்காவோட ஸ்பெஷல் டீ கிடைக்குமா?” என்றாள்.
“டேய்..! அதுக்கு முதல்ல பால் வேணும்..” என்றவள், இன்னைக்கு ஒரு நாள் நீ போய் வாங்கிட்டு வா. நாளையில இருந்து பால் பாக்கெட் போட சொல்லிடலாம்” என்றாள்.
“ம்ம் சரி..” என்றவன், முகம் கழுவ சென்றான். என்ன செய்வதென்று யோசித்த வேதா, தன் வீட்டில் வழமையாய் செய்வதைப் போல், வாசல் தெளித்து கோலமிடச் சென்றாள்.
“வேதா எங்க போற?” என்றான் அகரன்.
“வாசல் தெளிக்க வேண்டாமா? சரண் அண்ணா வீட்ல நான் தான தெளிப்பேன்” என்றாள்.
“அது அங்க. இங்க நாம மேல் போர்ஷன்ல இருக்கோம். உனக்கு கோலம் போடணும்னா இதோ இங்க மாடிலேயே போடு.” என்றவன், “இருந்தாலும் உன் ஆர்வக் கோளாறுக்கு ஒரு அளவே இல்லை வேதாக்கா..” என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்க,
“எதுக்குடா அப்படி சொல்ற?” என்று கேட்டபடி அவளும் அவன் பின்னால் வர,சட்டென்று அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.
“என்னடா?” என்றாள்.
“ஸ்ஸ்..! சத்தம் போடாத. அங்க பாரு” என்றான் அகரன்.
அங்கே வீட்டின் முன் அமுதா வீல் சேரில் அமர்ந்திருக்க, அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தான் விஜய ரகு நந்தன். அவனது முன் சிகை அவனுக்கும் காற்றுக்கும் அடங்காமல், பரந்த அவன் நெற்றியில் வந்து விழுந்து கொண்டிருக்க, அந்த காட்சி அத்துனை அழகாய் இருந்தது.ஆனால், அவனின் கவனமோ, கோலத்திற்கு வண்ணம் தீட்டுவதிலேயே இருந்தது.
“ம்ம்..! அழகா இருக்கு. ஆனா, இன்ஜினியரிங் ப்ரொபசர்னு கன்பார்ம் பண்றார்டா..” என்றாள், அவன் வரைந்திருந்த த்ரீடி கோலத்தைப் பார்த்து. அவர்கள் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதை அறியாதவன்,
“மாம் ஓகே வா..!” என்றான் கண்ணை சிமிட்டி. அந்த செய்கையில், அந்த சிரிப்பில் அவன் முகம் அவ்வளவு அழகாய் இருக்க, நொடி நேரத்தில் விழி விரித்து விட்டாள் வேதா.
அமுதாவோ மகனை கனிவுடன் பார்த்தவர், “நல்லா இருக்கு” என்பதைப் போல் சிரித்து மெதுவாக தலையை ஆட்ட,
“மிஷன் கம்ப்ளீட்டேட்” என்று எழுந்தவன், அன்னையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தவளோ
“ம்ம்..! காலேஜ்ல மூணு கிலோ புண்ணாக்கை முழுமூச்சா தின்னவர் மாதிரி முகத்தை முப்பது கோணலா வச்சுகிட்டு, எப்ப பார்த்தலும் ஒரு டெரர் லுக் விட்டுகிட்டு இருப்பாருடா. அதுக்கே கேர்ள்ஸ் எல்லாம் இவரை அப்படி சைட் அடிப்பாங்க.இங்க என்னடான்னா விஜய் சார் சிரிக்கிறார்டா..” என்றாள் அதிசயத்தைக் கண்டது போல.
“விட்டா ரகு அண்ணா சிரிக்கிறதை உலக அதிசயத்துல சேர்த்துடுவ போல” என்றான்.
“கண்டிப்பா! இவர் சிரிக்கிறதை மட்டும் எங்க கிளாஸ் கேர்ள்ஸ் பார்க்கணும்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பில்டர் காபியின் மணம் காற்றில் தவழ்ந்து வர, பேச்சை நிறுத்திய வேதா,