மஞ்சள் காட்டு மைனா 15

வைரவேலிடம் “சந்தோஷ் மேல பைல் பண்ற இன்னொரு கேஸை நீங்க பார்த்துக்கோங்க சித்தப்பா” என்று சொல்லிவிட்டான் தேவா.

வைரவேலுக்கு யோசனை. “மோசடி கேஸ் நடத்தணுமா தேவா? நமக்கு தான் விவாகரத்து கிடைச்சிருச்சு இல்லை” என்று கேட்டார்.

ஏற்கனவே சுந்தரத்தின் பல கணக்குகள் தவறிவிட்டன. இதில் இந்த வழக்கு அவரை மேலும் தூண்டிவிடுவது போலாகி விடுமா?

வளர்மதி, துளசிக்கு அவர் ஏதும் தொந்தரவு கொடுத்து விட கூடாது என்பது அவரின் எண்ணமாக இருந்தது. அதை மகனிடமும் சொன்னார்.

“அவரோட கண் எல்லாம் சொத்து மட்டுமே. துளசி அதுக்கான வழி தான். வழியை இப்போ மொத்தமா விலகிட்டோம். அதுவே அவருக்கு பெரிய அடி. இதுல கேஸ் வேற நடத்தணுமா?” என்று கேட்டார்.

வளர்மதியும் அதை பற்றி பேச இருவருக்கும் அழைத்தார். “என்னோட சந்தேகம் தான் அவங்களுக்கும்” என்றார் வைரவேல்.

“சரி கிளம்புங்க. நாம நேர்ல போய் அங்கேயே பேசிடலாம்” என்றான் தேவா.

“டீச்சர் வீட்டுக்கு போயிடலாம்” என,

“அவங்க மில்லுக்கு டீச்சரை வர சொல்லிடுங்க சித்தப்பா” என்றான் மகன்.

“துளசிக்கு நடக்கிறது தெரியணும் தானே தேவா. வீட்டுக்கு போனா அவளுக்கும்”

“சித்தப்பா. அவளுக்கு நீங்க சொல்லிக்கோங்க. நான் டீச்சர்கிட்ட மட்டும் தான் பேசணும்”

“தேவா என்னாச்சு சாமி?” என்று வைரவேல் கவலை கொண்டார்.

மகன் ஒருமாதிரி இறுக்கமாகவே இருக்கிறான் என்பதை வீட்டில் எல்லாம் உணரத்தான் செய்கின்றனர்.

“எனக்கென்ன? வீட்டு வேலை ஆரம்பிச்சிடுச்சு. அந்த டென்சன் தான்” என்றான்.

இரு அக்காக்களை வர வைத்து, இன்று காலை தான் பூஜை போட்டிருந்தான்.

‘அப்படியும் இருக்குமோ? முதன் முறையாக மகன் தலையெடுத்து ஒன்று செய்கிறான். பதட்டம் இருக்கத்தானே செய்யும்’ வைரவேலுக்கு அதில் உவகை தான்.

அப்பாவும், மகனும் மாலை மில்லுக்கு சென்றனர். வளர்மதி அங்கு தயாராக இருக்க, முதலில் இருவருக்கும் குடிக்க டீ எடுத்து வர சொன்னார்.

“இல்லை மிஸ். நான் சொல்றப்போ காபி கொண்டு வர சொல்லுங்க. இப்போ வேண்டாம்” என்றான் தேவா.

வளர்மதி புரிதலுடன் அவன் சொன்னதை செய்தார்.

“சந்தோஷ் மேல கேஸ் பைல் பண்ண உங்களுக்கு இஷ்டமில்லயா?” என்று கேட்டான் தேவா.

“இஷ்டத்தை பத்தி இல்லை தேவா. எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்ன்னு தோணுது” என்றார் வளர்மதி.

“உங்க பொண்ணு பேர்ல சொத்து இருக்கிறவரை எதுவும் முடியாது” என்றான் தேவா.

சரிதானே!

“துளசி சொத்தை கொடுக்க மாட்டேன்னு சொல்றா” என்றார் வளர்மதி.

“அப்படி ஒரேடியா சொல்லிட முடியாது. அவ கொடுத்து தான் ஆகணும். உங்க மாமனார் சேர்த்தது மட்டும் அதுல இல்லை. சுந்தரம் தலையெடுத்து நிறைய சேர்த்திருக்கார். அதை கொடுக்க மாட்டேன்னு சொல்ல முடியாது”

“எல்லாம் தாத்தா பணத்துல வாங்கினது தான்” என்று துளசி வர,

“சித்தப்பா” என்றான் மகன்.

“நான் துளசியை வர சொல்லலை சாமி” என்றார் அவர் வேகமாக.

“நான் தான் வர சொன்னேன் தேவா. ஏன் அவ வேண்டாமா?” வளர்மதி கேள்வியாக பார்த்தார்.

“இவளுக்கெல்லாம் நான் விளக்கிட்டு இருக்க முடியாது மிஸ்”

“ஏன்? ஏன் எனக்கு சொல்ல மாட்டீங்க?” துளசி கேட்க,

“இன்னும் நீ எனக்கு பீஸே கொடுக்கலை” என்றான் தேவா.

துளசி அதுபற்றி உண்மைக்கும் மறந்தே போயிருந்தாள். வைரவேல் கேஸ் எடுக்கும் நேரமே, பணத்தை பற்றி பேச கூடாது என்று கண்டிப்பாக மறுத்திருந்தார்.

வளர்மதி, துளசி முகம் பார்த்து சங்கடம் கொண்டவர்கள், “நான் இதை யோசிச்சிருக்கணும். சாரி தேவா” என்றார் வளர்மதி.

“மிஸ். சாரி எல்லாம் நீங்க ஏன் சொல்றீங்க? அதுவும் என்கிட்ட போய்” என்று குறிப்பாக துளசியை பார்த்தான்.

அதிலே, “சாரி. நான் கேட்டிருக்கணும்” என்றாள் துளசி.

“பரவாயில்லை சொல்ல மாட்டேன். எப்போ பீஸ் கொடுப்ப?”

“நீங்க அமவுண்ட் சொல்லுங்க”

“டப்பு பார்ட்டி நீ? மனசுக்கு தோணுறதை பெருசா கொடு” என்றான்.

“நான் இப்போதான் மாமாகிட்ட ஜுனியரா சேர்ந்திருக்கேன். என்னை போய் டப்பு பார்ட்டி சொல்றீங்க?” என்றாள் முகத்தை சுருக்கி.

“அதாவது என்  சித்தப்பா கொடுக்கிற சம்பளத்தை வைச்சு தான் உன் வாழ்க்கையே ஓடுது இல்லை” என்று அவர்கள் மில்’லை சுற்றி கண்களை ஓட்டினான்.

“இது, இந்த வருமானம்” என்று முழித்தாள்.

மில் வருமானம் முழுதும் துளசியை சார்ந்தது. வளர்மதி சம்பளமே இவர்களுக்கு அதிகம் என்பதால் மில் வருமானத்தை மகளின் கையில் ஒப்படைத்துவிட்டார்.

துளசிக்கு பொறுப்பு வர வேண்டும், அவள் தனியாக நின்று எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும் என்பது வளர்மதியின் எண்ணம்.

மகளும் எதிர்பார்த்ததை விட நன்றாகவே பணத்தை கையாண்டாள். அப்பாவின் மில் என்பது கூடுதல் ஒட்டுதல்.

இப்போது தேவா அதை சரியாக கண்டறிந்து கேட்டதுடன், “கிரிமினல் லாயர் என்னையே ஏமாத்த பார்க்கிற இல்லை நீ?” என்று பெண்ணை அரட்டினான்.

“இல்லை. இல்லை. ஏமாத்த எல்லாம் நினைச்சது இல்லை. நீங்க எவ்வளவுன்னு சொல்லுங்க. இப்போவே உங்க அக்கவுண்டுக்கு அனுப்பிடுறேன்” என்றாள் துளசி.

தனக்கு நல்லது செய்தவனை வாய் விட்டு கேட்கும் படி செய்துவோட்டோமோ என்று துளசிக்கு அதிகளவில் வருத்தம்.

“ம்ம். பீஸ் எவ்வளவுன்னு நாளைக்கு அருண்கிட்ட கேட்டு, கம்பெனி பேருக்கு அனுப்பிடு” என்றவன்,

“வரும் போது என்னவோ சொன்னியே? என்ன அது?” என்று கேட்டான்.

“அது, தாத்தா பணத்துல தானே சொத்தை வாங்கினாங்க. அதான்” என்ற துளசி அவன் கண்கள் இடுங்குவதில் நிறுத்திக்கொள்ள,

“உழைப்பு அவரோடது” என்றான் தேவா.

“நம்மை சுத்தி யார் வேணா தப்பா இருக்கட்டும். நாம சரியா இருக்கணும்” என்றான்.

‘அதை நீ சொல்றியா ராசா? வேலைக்குன்னு பணம் கொடுத்து ஏமாந்தவங்களுக்கு நியாயம் கிடைக்க விடாம பண்றது யாராம்?’ துளசி மனதில் நினைக்க,

“பணம் கொடுத்து ஏமாந்தவங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன். அவங்க சரியா இருந்தா, இப்படி குறுக்கு வழியில போய் ஏமாந்திருக்க மாட்டாங்க இல்லை” என்றான் தேவா பளிச்சென.

“அவங்களை போலான ஆளுங்க தான் எங்களுக்கு தொழிலை கொடுக்கிறாங்க. அதனால அவங்களை மன்னிச்சு விட்டுடலாம். என்ன மிஸ் நான் சொல்றது சரி தானே?” என்று வளர்மதியிடம் கேட்க,

வளர்மதி மாணவனை கண்டிக்கவா, இல்லை பாராட்டவா என்று புரியாமல் ஓர் நொடி விழித்தார்.

“சாமி. நீ சரிதான். அந்த பேச்சை விட்டு, சுந்தரம் விஷயத்துக்கு வா” என்றார் வைரவேல்.

“என்னை தப்புன்னு யாராவது சொல்லட்டும். அப்புறம் இருக்கு” என்று துளசியை பார்த்தே மிரட்டியவன்,

“சுந்தரம் விஷயம் சிம்பிள். அவர் என்னதான் வட்டிக்கு விட்டு பிழைச்சாலும் சொத்தை பயங்கரமா சேர்த்து வைச்சிருக்கார். உங்க தாத்தா மேல தான் எல்லாம் எழுதியிருக்காங்க. அதுக்கு காரணம் ஆனந்தி மேடம்”

“சுந்தரத்துக்கும் பொண்டாட்டி பேச்சை மீற முடியாது. முழுசும் அவங்க கட்டுப்பாடு. அவங்களால தான் எல்லாங்கிறதால கூட இருக்கும்”

“ஆனந்தி எப்படி நமக்கு சாதகமா சாட்சி சொன்னா தேவா?” வளர்மதி கேட்க,

“அவங்களே உங்ககிட்ட பேசுவாங்க மிஸ். நான் அதை சொல்ல முடியாது” என்றான் தேவா.

சுந்தரத்தின் வழக்கறிஞர் தேவா என்ற முறையில் ஆனந்திக்கும், அவனுக்கும் ஓர் ஆரோக்கியமான புரிதல் உண்டு. அது வைரவேலுக்கும் தெரியும்.

தேவா, “நான் இப்போ இரண்டு விஷயம் சொல்லிடுறேன். முதல்ல கேஸ். அதை கண்டிப்பா நடத்தணும். சந்தோஷ், சுந்தரம் குடுமி லீகலா நம்மகிட்ட இருக்கணும். என்னைக்கு இருந்தாலும் அதனால அவங்களுக்கு தண்டனை கிடைக்குங்கிற பயம் இருந்தா மட்டும் தான் அவங்க உங்களை திரும்ப தொந்தரவு பண்ண மாட்டாங்க. இல்லை நிச்சயம் திரும்ப சந்தோஷ் வருவான்”

“அடுத்து சொத்து. பரம்பரை சொத்தை தவிர மீதியை, அதாவது சுந்தரம் சேர்த்த சொத்தை அவங்ககிட்ட கொடுத்திடுங்க. மொத்தமா எடுத்துக்கிட்டா அவர் எப்படி வேணும்ன்னாலும் திரும்பலாம்” என்றான்.

இப்போது வரை வைரவேலுக்கு நடந்த விபத்து பற்றிய உண்மையான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

வைரவேலை இடித்த கார் திருட்டு வண்டி. இப்போது சாலைகளில் இல்லை. “சார் இடிச்ச அன்னைக்கே கார் ஸ்க்ரேப்க்கு போயிருக்கும். அக்கு, அக்கா பிரிச்சு வேலை பார்த்திருப்பாங்க. கண்டுபிடிக்கிறது கஷ்டம். உங்களுக்காக முயற்சி பண்ணிட்டு தான் இருக்கோம்” என்றார் இன்ஸ்பெக்டர்.

சுந்தரம் இதிலெல்லாம் கில்லாடி. அவரிடம் விசுவாசமான ஆட்கள் அதிகம் உண்டு.

இரு பெண்கள் அவரின் பகைக்கு ஆளாவதை தேவா விரும்பவில்லை.

“தைரியம் எல்லா நேரமும் கை கொடுக்காது. சட்டமும் தான்” என்றான்.

அதிகளவு பொருள் அதில் உள்ளதை மற்றவர்கள் புரிந்து கொண்டார்கள்.

“சித்தப்பா மேடம் சொத்தை கொடுக்க ரெடியாகிட்டா என்கிட்ட சொல்லுங்க. நான் சுந்தரம்கிட்ட பேசுறேன்” என்றான்.

“தேவா இங்க ஏன் வர சொன்ன?” என்று அவனின் ஒட்டு மொத்த குடும்பமும் மில்லுக்கு வந்தது.

இரு அக்காக்களின் குடும்பமும் அதில் அடங்கியிருக்க, ஜெயலட்சுமிக்கு துளசியை அங்கு பார்க்கவும் ஏதேதோ தோன்றிவிட்டது.

மகனை கோவமாக பார்த்தவர், பெரிய மகளின் காதை கடித்தார். “ம்மா. அப்படி இருக்காது. நீங்க பொறுமையா இருங்க” என்றாள் செல்வி.

“வணக்கம் மிஸ்” என்று செல்வி, அகல்யா இருவரும் வளர்மதியிடம் பேசினர். தங்கள் குழந்தைகளையும், கணவரையும் அறிமுகம் செய்து வைத்தனர்.

துளசி இவர்கள் எல்லோர் வரவும், ஒதுங்கி நின்றுவிட்டாள்.

“வாங்க” என்று கூட யாரையும் அழைக்கவில்லை. ஆனால் ஆட்கள் மூலம் எல்லோருக்கும் அமர இருக்கை ஏற்பாடு செய்தாள்.

பசுபதிக்கு மகன் ஏதோ செய்ய போகிறான் என்பது புரிந்து போனது. ‘என்னவா இருந்தாலும் அவன் கேட்கிறதை செஞ்சிடணும்’ தனக்குள் தந்தை உறுதி பூண்டார். திரும்பி ஜெயலட்சுமியையும் கண்களால் எச்சரிக்க மறக்கவில்லை. செல்வியிடமும் பார்த்துக்க சொல்லி ஜாடை செய்தார்.