அன்றைய இரவெல்லாம் தர்மாவுக்கு உறக்கமே இல்லை, அடுத்த நாள் காலையில் மருத்துவமனை சென்று குழந்தைதான் என உறுதியான பிறகுதான் அப்பாடா என இருந்தது.
வருகிற வழியில்தான் மஹா வீடிருக்கும். அந்த தெரு முனையில் மஹாவும் அவளது கணவனும் நின்றிருந்தனர். அந்தப் பக்கம் பாராமல் காரை செலுத்தினாலும் மஹாவின் அழுகை அவனை அசைத்து பார்த்தது.
காரை நிறுத்தியவன் கனியிடம், “வந்திடுறேன் கனி” என சொல்லி இறங்கிச் செல்லப் போனான். அவன் கையை பிடித்து தடுத்தவள், “அவங்க ஹஸ்பண்ட் வைஃப் ஏதோ பேசிப்பாங்க, இப்ப நீ போனா தப்பாகிடும் மாமா” என்றாள்.
“இல்லை கனி, அவன் ஏதோ ஹராஸ் பண்றான் போல, அழறது தெரியலை உனக்கு? பார்த்திட்டு எப்படி அப்படியே போக முடியும்?” எனக் கேட்டான் தர்மா.
“அவங்க வீடு இங்கதானே மாமா இருக்கு, ஆள் இல்லாத காட்டுல ஒன்னும் அவங்க நிக்கல, நீ போக வேண்டிய அவசியம் இல்லை மாமா” என அழுத்தி சொன்னாள் கனி.
கனியின் வார்த்தையை மீற முடியவில்லை, அதே சமயம் மஹாவை அப்படி விட்டுச் செல்லவும் முடியவில்லை. கார் எடுக்காமல் சாலையை வெறித்துக் கொண்டிருந்தவனிடம், “காரை எடு மாமா” என்றாள் கனி.
“எப்போலேருந்து கனி இவ்ளோ கல் மனசு ஆனது உனக்கு?” என அவன் கேட்கவும், என்னவோ கனியால் அவனது பேச்சை பொறுக்க முடியவில்லை.
உண்டாகியிருக்கிறேன் என சற்று முன்தான் உறுதியாக தெரிந்திருக்க, அவன் முன்னாள் காதலிக்காக என்னை கல் மனசுக்காரி என்பானா என அவளுக்கு நல்ல கோவம்.
கார் கதவை திறந்து கொண்டு இறங்கியவள் சாலையில் நடக்க ஆரம்பித்து விட்டாள்.
கனியின் செயலை எதிர்பாராதவனும் இறங்கி அவளின் பின்னால் ஓடிச் சென்றான்.
ஆட்டோ ஏதும் தென்படுகிறதா என அவள் பார்க்க, அவளிடம் வந்து விட்டவன், “கார்ல ஏறு, நாம வீட்டுக்கு போலாம்” என்றான்.
“நீ இங்கேயே இருந்து அவளுக்கு என்ன ஏதுன்னு பார்த்திட்டு வா. எனக்கு போயிக்க தெரியும்” என ரோஷமாக சொன்னாள் கனி.
அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான் தர்மா.
எதிர்ப்பக்கத்தில் நின்றிருந்த மஹா இவர்களை பார்த்து விட்டாள். மஹாவின் கணவன் அருணுக்கும் தர்மாவை அடையாளம் தெரியும். இருவருமே தர்மா, கனி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை கண்டனர்.
நீதிமன்றம் மூலமாக சென்றால் மஹா தன்னை விட்டு கண்டிப்பாக பிரிந்து விடுவாள் என்பதால்தான் பேசி தீர்த்துக் கொள்ள முயல்கிறான் அருண். இன்று மஹா தனியாக கோயிலுக்கு செல்வாள் என்பதை அறிந்து கொண்டுதான் வழியில் வைத்து பேச முனைந்தான். வழக்கம் போல பேச்சு சுமூகமாக அல்லாமல் சண்டையின் பாதையிலேயே சென்று விட்டது.
தர்மாவையும் அவன் மனைவியையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. நேராக இவர்களிடம் வந்து விட்டான் அருண்.
“கோவமா வருது, நீ போ மாமா. ஆசை ஆசையா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல எனக்கு நல்லா வேணும்” என கனி சொல்ல, “ரோட்ல வச்சு வம்பு பண்ணாம வா” என அதட்டினான் தர்மா.
“வீட்ல வச்சு உங்க கூட பேச முடியாமதான் ரோட்லேயும் நியாயம் கேட்டு சண்டை போடுறோம்” என்றான் அருண்.
தர்மாவும் கனியும் அவனை பார்த்து விட்டு ஒரு நொடி அமைதியானார்கள்.
“என்னம்மா சிஸ்டர், இவரும் உன் கூட பிரச்சனை பண்றாரா? இவரும் என் பொண்டாட்டியும் என்ன திட்டத்துல இருக்காங்கன்னு தெரியலை. போராடித்தான் நம்ம வாழ்க்கைய காப்பாத்திக்கணும்” என்றான் அருண்.
“உன் வேலைய பார்த்திட்டு போடா” என்றான் தர்மா.
“வீட்டுக்குள்ள வச்சு சண்டை போட்டா நான் ஏன் வர போறேன், இது ரோட் ஸார்” என்றான் அருண். அதற்குள் அங்கு வந்து விட்ட மஹா, “என்ன பண்றீங்க அருண், அவங்கள போக விடுங்க” என்றாள்.
“உன்னை மாதிரியே உன் எக்ஸ்… எக்ஸ்தானே? என்னவோ இவரும் வைஃப் கூட சண்டை போட்டுட்டு நிக்கிறார். என்னை போல அப்பாவி ஜீவனுக்கு சப்போர்ட் பண்ணலாமேன்னு வந்தேன்” என்றான் அருண்.
தர்மாவுடன் கோவம் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த கனி, அவன் பக்கத்தில் வந்து நின்று, “மாமா வா நாம போயிடலாம்” என்றாள்.
“நில்லு இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்கு போய் பயந்துகிட்டு” என்றான் தர்மா.
“கரெக்ட், நானெல்லாம் உன்னை மாதிரி கட்டுமஸ்தான ஆள் இல்லதான். அதனாலதான் என்னை கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு பொண்ணை பெத்தும் உன்னை நினைச்சுகிட்டு இருக்கா இவ” என மஹாவை பார்த்து கோவமாக சொன்னான் அருண்.
அப்படி பேசியதற்காக தன் கணவனை திட்டினாள் மஹா.
“இல்லையா பின்ன? என் கூட இருக்கிறப்ப எல்லாம் எதையோ பறி கொடுத்த மாதிரியே இருந்த, உன்னை சந்தோஷமா வச்சுக்க எவ்ளோதான் மெனெக்கெடுறது நான்? வேலை போனாலும் பரவாயில்லைனு லீவ் முடிஞ்சும் கிளம்பாம கூட வாடின்னு உன்கிட்ட வந்து கெஞ்சிகிட்டு இருக்கேன். வரமாட்டேன்னு பிடிவாதம் செய்றியே ஏன்? இந்தாளை மனசுல வச்சுக்கிட்டுதானே?” என அருண் மஹாவை கேட்க, டேய் என அதட்டினான் தர்மா.
இனியும் இங்கு நிற்க கூடாது என நினைத்து, அழுத முகத்தோடு வீடு நோக்கி சென்று விட்டாள் மஹா.
அதிக கூட்டமில்லை என்றாலும் ஆள் நடமாட்டம் இருந்தது. தள்ளி நின்றவாறே வேடிக்கை பார்த்தனர் அங்கிருந்தோர்.
கனியை பார்த்த அருண், “என் பொண்ணுக்கு ஸ்கூல்ல சீட் வாங்கித் தர்றாராம் இவரு, கல்யாணத்துக்கு வான்னு இன்விடேஷன் வேற. அவ ஃபோன்ல இவர் நம்பர் இருக்கு. இங்கேயும் செக் பண்ணு, கண்டிப்பா இருக்கும். முன்னாடி ஒரு நாள் என் பொண்ண பார்க்க ட்ரை பண்ணினேன். நான் போனதும் அவ அண்ணன் கூட பிரச்சனை பண்ணியிருக்கார். ஜாக்கிரதையா இரும்மா, இல்லைனா ரெண்டு பேரும்…” என காட்டமாக சொல்லி மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் தர்மாவை கோவமாக பார்த்தான்.
அருணை அடித்து விட தர்மாவின் கை பர பரவெனதான் இருந்தது. கனி பயப்படக் கூடும் என நினைத்து கட்டுப்பாட்டுக்குள் இருந்தான்.
“இவரு என்ன எப்படின்னு ஏதாவது தெரியுமா உங்களுக்கு? வாய்க்கு வந்த படி தப்பு தப்பா பேசாதீங்க. உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ எங்களுக்கு தெரியாது, இவரை காரணம்னு சொன்னீங்க… அவ்ளோதான்!” என்ற கனி தன் கணவனிடம் கோவமாக, “காருக்கு நடங்க” என்றாள்.
அதற்குள் தர்மாவின் முகம் இறுகி கோவத்தை சுமந்து கொண்டிருக்க, பயத்தில் அமைதியாக ஓரம் சென்று விட்டான் அருண்.
தர்மாவின் கை பிடித்து காருக்கு நடந்தாள் கனி. அவனும் அவளது இழுப்புக்கு நடந்தான்.
காரில் அமர்ந்ததும், “இனி மஹாங்கிற பேர் உன் வாய்லேருந்து வரக்கூடாது, அப்படி ஒரு கேரெக்டர் உன் வாழ்க்கைல வந்து போனதை சுத்தமா மறந்து போற, இல்லைனா அவ்ளோதான் பார்த்துக்க” என்றாள் கனி.
கோவத்தில் அவளுக்கு மூச்சு வாங்க, பயந்து போனவன் அவளுக்கு பருக தண்ணீர் கொடுத்தான்.
நீர் பருகியவளுக்கு எங்கே தான் பேசியதில் கோவம் கொள்வானோ என பயம் பிடித்துக்கொண்டது. கலக்கமாக அவனை ஏறிட்டாள். அவனது முகம் உர் எனதான் இருந்தது. ஆனால் அவளை ஏதும் கடிந்து கொள்ளாமல் காரை செலுத்த ஆரம்பித்தான்.
மன சோர்வின் காரணமாக ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்துக் கொண்டாள் கனி.