திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்திருக்க, கனியும் ஃபேக்டரி செல்ல ஆரம்பித்திருந்தாள். எப்போதாவதுதான் தர்மாவும் அவளும் சேர்ந்து செல்வார்கள், பெரும்பாலும் தர்மா முன்னரே சென்று விடுவான், மாலையில் திரும்பும் நேரமும் மாறுபடும்.
அலுவலகத்துக்குள் பார்க்கும் வேலைகளை கனி கவனித்துக் கொள்ள, தர்மா தொழிற்சாலையிலும் வெளி வேலைகளுமாக இருப்பான்.
நம்பியுடன் முகம் கொடுத்து பேசுவதில்லை தர்மா. தான் இறங்கி சென்றால் மீண்டும் மஹா விஷயத்தில் ஈடுபாடு காட்டுவான் என நினைத்து அவரும் அப்படியே விட்டு விட்டார்.
மாமனுக்கும் மருமகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்க மூன்றாம் நபர் தேவை என்ற நிலையாகி விட்டது. இது குறித்து கனிக்கு மிகுந்த வருத்தம்.
அத்தை விருந்துக்கு அழைத்திருக்கிறார் என கணவனிடம் கனி சொன்ன போது வர முடியாது என சொல்லி விட்டான். அன்னலக்ஷ்மி பாட்டி கெஞ்சி அழைக்கவும்தான் ஒத்துக் கொண்டான். அப்போதும் கனியை முன்னரே வீட்டில் விட்டு வெளியில் சென்று விட்டவன் உணவு நேரத்துக்குத்தான் வந்தான்.
சாப்பிடும் போதும் அதிகம் பேசாமல் உணவு முடியவுமே மாலையில் வந்து அழைத்துக் கொள்கிறேன் என மனைவியிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
“அண்ணாக்கு என்னாச்சு? உன்கிட்டயாவது நல்லா பேசுறாரா இல்லையா?” என கவலையாக கேட்டாள் நிதிலா.
ஏன் என தாமரை கேட்டதற்கு தெரியாது என சொல்லி விட்டாள். வேலம்மாள் பாட்டிதான் இதையெல்லாம் தாமரையிடம் சொல்லாதே, அவளும் அவள் பங்குக்கு தர்மாவை வறுத்து எடுப்பாள் என சொல்லியிருந்தார்.
தாமரையோ முழு விஷயமும் தெரியாமல், “உங்கப்பாட்ட பேசலையா? ரொம்ப சந்தோசம், அவர் பேச்சை அவன் கேட்காம இருந்தாலே போதும்” என மகிழ்ச்சியாக கனியிடம் சொன்னார்.
இருவரும் பேசிக் கொள்வதில்லையே தவிர, வேறெந்த மாற்றமும் இல்லாமல் அவர்களின் பணிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது என மனதில் நினைத்தாலே தவிர மாமியாரிடம் சொல்லிக் கொள்ளவில்லை கனி.
மாலையில் அவள் புறப்பட்ட போது வீட்டுக்குள் கூட வராமல் வெளியில் இருந்த படியே கனியை அழைத்து சென்று விட்டான் தர்மா.
“அத்தை செஞ்ச புலாவ் வரை சாப்பிட்டாச்சு, இன்னும் உன் கோவம் தீரலையா?” எனக் கேட்டாள் கனி.
தாமரை தன் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பத்திருக்கிறார். இந்த வீட்டை விற்கவும் சொல்லி வைத்திருக்கிறார். எதையும் தர்மாவிடம் ஆலோசனை செய்யாமல் அவராகவே செய்கிறார். நிதிலாவுக்கு படிப்பு முடியவும் அஜய்யை விடுதியில் தங்க வைத்து விட்டு இங்கிருந்து சென்று விட திட்டம் போட்டிருக்கிறார்.
மகளின் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமையவும் சின்ன மகனின் படிப்பு முடியவும் அவனையும் இந்த இடத்திலிருந்து தூரமாக இருக்க வைக்கவும் இங்கிருந்து செல்வது ஒன்றே வழி என முடிவு செய்திருக்கிறார். நிதிலா மற்றும் அஜய்க்கு கூட தெரியும், யாரிடமும் சொல்ல வேண்டாம் என அவர் சொல்லியிருக்க அவர்களும் அண்ணன் அண்ணியிடம் சொல்லவில்லை.
கனிக்கு இப்போதே தெரிந்தால் வருத்தப்படுவாள், போகும் போது சொல்லிக் கொள்ளலாம் என நினைத்திருந்தார் தாமரை. தன் மாமியாரிடம் கூட விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என அத்தனை கண்டிப்போடு சொல்லியிருக்க, மருமகளுக்கு பயந்து பாட்டியும் வாய் திறக்கவில்லை.
தாமரை சொல்லா விட்டாலும் இதையெல்லாம் அறிந்து கொள்வது தர்மாவுக்கும் நம்பிக்கும் பெரிய விஷயமில்லை.
தன் மகளையே வெளியூரில் திருமணம் செய்து வைக்கத்தான் விரும்பினார் நம்பி, ஆகவே தங்கையின் செயலில் உள்ள நியாயத்தை புரிந்து தலையிட்டுக் கொள்ளவில்லை நம்பி.
தர்மாவுக்கோ நானிருக்க என்னை வைத்தே அனைத்தையும் செய்யலாமே, நான் செய்து கொடுக்க மாட்டேனா, நான் என் அம்மாவுக்கு ஒன்றுமே இல்லையா என்ற மன வருத்தம்.
“என்ன மாமா இன்னும் அத்தை மேல கோவமா?” என மீண்டும் கேட்டாள் கனி.
“ஹ்ம்ம்… வேற ஏதாவது வாங்கணுமா? வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் சொல்லாத” என்றான் தர்மா.
“நீ இருக்கியே… சரியான அழுத்தக்காரன்!” என்றவள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள். கனியை வீட்டில் விட்டு மீண்டும் வெளியில் சென்று விட்டான் தர்மா.
அப்படி என்னதான் வெளியில் வேலையோ என மனதுக்குள் சலித்துக் கொள்ள மட்டும்தான் கனியால் முடிந்தது.
உள்ளூரில் நம்பியின் கட்சியை சேர்ந்த ஒருவனுக்கு இடம் விற்பனை செய்வதில் தகராறு. தீர்த்து வைக்கும் படி நம்பியிடம் வந்து நின்றான்.
தன் நிலத்தை விற்பனை செய்வதற்கு முன்பணம் பெற்றுக் கொண்டு வாங்குபவனிடம் அக்ரிமெண்ட் போட்டாகி விட்டது. வாடகைக்கு விட வீடுகள் கட்ட போவதாக சொல்லி இடத்தை வாங்கியவன் மேகநாதனுக்கு பினாமி என இப்போதுதான் தெரிந்ததாம்.
உள்ளடங்க இருக்கும் அந்த இடத்திற்கு பாதை பொதுவானது. விற்றவனுடைய பங்காளிகளும் அங்குதான் வசிக்கிறார்கள். மேகநாதன் அந்த இடத்தின் உரிமையாளர் ஆகிவிட்டால் பாதையில் மட்டுமல்ல தங்கள் இடங்களுக்கும் பிரச்சனை வரும் என பயப்படுகிறார்கள் அவர்கள். எங்களுடன் ஆலோசனை செய்யாமல் எப்படி இடத்தை விற்றாய்? என அவனிடம் கோபித்தும் கொண்டார்கள்.
இப்போதைய பணத்தேவைக்கு நாங்கள் உதவுகிறோம் இடத்தை விற்க வேண்டாம் என பங்காளிகள் சொல்ல, விற்றவனுக்கும் அதுவே சரியெனப் பட்டது.
இன்னும் பத்திரப் பதிவு நடக்காத நிலையில் கொடுத்த முன் பணத்தை வாங்கிக் கொண்டு அக்ரிமெண்டை முறித்துக் கொள்ளும் படி கேட்கிறான் இடத்தை விற்றவன். வாங்கியவனோ திரும்பக் கொடுக்க மறுக்கிறான்.
இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்து வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் நம்பி. இடத்தை வாங்கி விட்டால் என் இஷ்டப்படி என்ன வேண்டுமென்றாலும் செய்வேன், வேறு யாருக்கும் கொடுப்பேன் எனக்கு உரிமை இருக்கிறது என்றான் வாங்கியவன்.
கொடுத்தவனோ இவன் வீடு கட்ட போவதாக நினைத்தே விற்க சம்மதித்தேன், இப்போது எனக்கு விருப்பமில்லை என்றான்.
நம்பி தன் ஆளிடம் என்ன ஏதென முன்னரே விசாரித்திருந்தார். மேகநாதன் வாங்குவது தெரிந்து விட்டது. இடம் வாங்குவதில் வேறு ஏதோ திட்டம் என்பதும் தெரிய வந்தது.
பொதுவாகவே மேகநாதன் இது போல இடத்தை வாங்கினால் சும்மா இருக்க மாட்டான். அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு மறைமுகமாக தொல்லைகள் கொடுத்து தன்னிடமே குறைந்த விலையில் அவர்களின் இடத்தையும் விற்கும் படி செய்து விடுவான்.
கொடுத்த முன்பணத்துக்கு வட்டி போட்டு கொடுக்க சொல்கிறேன், வாங்கிக் கொண்டு அக்ரிமெண்ட் பத்திரத்தை திருப்பிக் கொடுத்து விடு என பேசி விட்டார் நம்பி. ஒத்துக் கொள்ளவில்லை வாங்கியவன்.
அந்த பணத்தை வங்கியில் போட்டு விடு, அவனுக்கு விற்பனை செய்ய வேண்டாம், அவனுக்கு எப்போது பணம் வேண்டும் என கேட்கிறானோ அப்போது எடுத்துக் கொடு, மேற்கொண்டு பிரச்சனை செய்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என பேசி முடித்து அவர்களை அனுப்பி வைத்து விட்டார் நம்பி.