நெஞ்சை கொய்தாள் வஞ்சி -10

அத்தியாயம் -10

கனிஹாவுக்கு மனமே சரியில்லை, தர்மாவோ சாதாரணமாகவே இருந்தான். விருந்து முடியவும் பெரும்பாலான விருந்தினர்கள் சென்று விட்டனர். தாமரையும் கனியின் பெரியம்மாவும் மட்டும்  இருந்தனர். 

காவல்நிலையம் செல்ல தர்மாவை அழைத்தார் நம்பி. 

“நீங்க எதுக்கு மாமா? நான் போய்ட்டு வர்றேன்” என தர்மா சொல்ல, அவர் கேட்பதாக இல்லை. 

தாமரை தன் மகனுடன் நேருக்கு நேர் நல்ல முறையில் பேசியே வெகு காலமாகி விட்டது. இப்போது, “உனக்கு குடும்பம் இருக்கு, பழி பகைன்னு திரிஞ்சு வாழ்க்கையை கெடுத்துக்காத” என தன்மையாக சொன்னார் தாமரை. 

அம்மாவை அழுத்தமாக பார்த்தானே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை தர்மா. கனி கலக்கமாக பார்த்து நிற்க, “ஸ்டேஷன் போனாலே தப்பு, ஆபத்து வந்திடும் இப்படிலாம் யோசனை பண்ணாத கனி, வந்திடுவேன்” என சொல்லி வெளியேறினான்.

வழியில் தங்கள் வக்கீலையும் அழைத்துக் கொண்டனர். விசாரணை என சொல்லி தர்மாவை மட்டும் தனியே அழைத்து சென்றான் வினோத். மரியாதை இல்லாமல் அவன் பேசியதில் கோவம் கொண்ட தர்மாவும் வார்த்தைகள் விட்டான். 

எப்போது என்னாகுமோ என அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிள்களுக்கு கொஞ்சம் பயம். 

நல்ல வேளையாக அந்த பையன் கிடைத்து விட்டதாக செய்தி வந்தது. அவனுக்கும் அவனது சகாக்களுக்கும் சேர்ந்துதான் ஊரை விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டு அடிதடியாகி இருக்கிறது. 

மதுரை அரசு மருத்துவ மனையில் நினைவு தப்பிய நிலையில் அனுமதிக்க படிருக்கிறான் அந்தப் பையன். இப்போதுதான் விவரம் தெரிந்தது. 

வினோத் நடந்து கொண்ட முறையில் அதிருப்தி அடைந்திருந்த நம்பி தன் செல்வாக்கை பயன்படுத்தியிருந்தார். ஆகவே எஸ்பி இங்கு வந்து கொண்டிருந்தார். 

இந்த விஷயத்தில் தப்பித்து கொண்டாய், இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு வாலை சுருட்டிக் கொண்டு இருக்க வேண்டும்; அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என இஷ்டத்திற்கு இருந்தால் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என நம்பியையும் தர்மாவையும் மிரட்டிக் கொண்டிருந்தான் வினோத். 

தர்மா கோவமாக பேசுவதற்குள் எஸ் பி  வந்து விட்டார். தர்மாவையும் நம்பியையும் உடனே அனுப்பி வைத்தவர் வினோத்தை கடிந்து கொண்டார். 

“இவங்க மேல தப்பு இருந்தாலே அஞ்ச மாட்டாங்க, செய்யாத தப்புக்கு எதுக்கு சீன் கிரியேட் பண்ற? நம்பி இப்போ எதிர்க்கட்சிலதான் இருக்காருன்னு ஈஸியா நினைச்சிட்டியா?” என கோவப்பட்டார் எஸ் பி. 

“கம்ப்ளைண்ட் கொடுத்ததுக்குதான் ஸார் நான் ஆக்ஷன் எடுத்தேன்” என்றான் வினோத். 

“அப்படியா? இங்கதான் போஸ்டிங் வேணும்னு ரொம்ப  மெனெக்கெட்டு இங்க வந்து சேர்ந்திருக்கன்னு எனக்கு தெரியும். உன் சொந்த விஷயங்களை வேலைக்குள்ள கொண்டு வராத” என எச்சரிக்கை செய்து விட்டுத்தான் கிளம்பினார் எஸ் பி. 

கைப்பேசி வாயிலாக கட்டளை இடாமல் எஸ் பி நேரில் வந்ததிலேயே இவர்களின் செல்வாக்கு வினோத்துக்கு புரிந்தது. நல்ல சந்தப்பம் கிடைக்கும் போது பார்த்துக் கொள்கிறேன் என உள்ளுக்குள் கருவிக் கொண்டான். 

மகன் வீடு வரவும்தான் தாமரைக்கு பட படப்பு நின்றது. அந்தப் பையன் கிடைத்து விட்டான் எனத் தெரியவும் நிம்மதியுடன் தன் வீட்டுக்கு புறப்பட்டார். அவரை தனியாக அனுப்பாமல் கோபுவை கொண்டு போய் விட்டு வரச் சொன்னான் தர்மா. 

கனியின் பெரியம்மாவுக்கு தர்மாவிடம் எது சொல்லவும் பயம். ஆகவே நம்பியிடம், “என் தங்கச்சிதான் வாழ வேண்டிய வயசுல போயிட்டா, அவ பொண்ணாவது நல்லா வாழணும், ரெண்டு பேரையும்  வேற எங்கேயாவது அனுப்பி நிம்மதியா வாழ விடுங்க, உங்க பொறுப்பு கனி” என்றார். 

பயப்பட ஏதுமில்லை என அவரிடம் நம்பி சொல்லிக் கொண்டிருக்க, “குடும்பத்தை பிரிக்கிற வேலைலாம் வேணாம்” என கடினக் குரலில் சொன்னான் தர்மா. 

கோவமடைந்த கனியின் பெரியப்பா அங்கு நில்லாமல் வெளியேறி விட, கனியின் பெரியம்மாவும் சங்கடமாக நின்றிருந்தார். 

“அவன் தெரியாம பேசிட்டான், விடுங்க, நல்ல படியா போய்ட்டு வாங்க” என அவரிடம்  நல்ல விதமாக பேசிய நம்பி, வெளியில் சென்ற கனியின் பெரியப்பாவிடமும் சமாதானமாக பேசி அவர்களை அனுப்பி வைத்தார். 

“என்ன மாமா,  பெரியம்மாகிட்ட போய் இப்படி பேசிட்ட?” என கணவனிடம் வருத்தமாக கேட்டாள் கனி. 

“அப்புறம் நம்மள  வீட்ட விட்டு வேற எங்கேயோ போக சொன்னா?” எனக் கேட்டான் தர்மா. 

“எம்மேல உள்ள அக்கறையில சொல்லிட்டாங்க”

“எது உம்மேல எனக்கும் மாமாக்கும் இல்லாத அக்கறை அவங்களுக்கு இருக்கா?”

 “சரி விடு, அவங்க சொன்னா உடனே நாம போக போறோமா? என் அம்மா இல்லாம போனா கூட இப்ப வரை எல்லாத்துக்கும் வந்து நிக்கிறாங்க” 

“அதான் மாமா சமாதானம் செஞ்சு வச்சிட்டாரே, அதையே பேசாத” என்றான். 

உள்ளே வந்த நம்பியும் அவனை கண்டிக்க, அவரிடம் எதுவும் சொல்ல முடியாமல் வெளியேற பார்த்தான். அவனை விடாத கனி, “ஒரு வாய் தண்ணி கூட குடிக்காம எப்ப வருவேன்னு பார்த்திட்டே இருந்தேன், திரும்ப எங்க போற நீ?” எனக் கேட்டாள். 

“சண்டை போட்ருவேன் அவர் கூட, கொஞ்ச நேரத்துல வர்றேன் விடு” என்றான். 

“பரவாயில்லை இங்கேயே இருந்து சண்டை போடு, ஒழுங்கா வீட்லேயே இரு மாமா” 

“விடுன்னா விடு கனி!” என அதட்டியவன் அவள் விட்டதும் விடு விடு என நடந்து காரெடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். 

பாட்டிதான் பேத்தியை சமாதானம் செய்து ஓய்வெடுக்க சொல்லி அறைக்கு அனுப்பி வைத்தார். 

கனிக்கு சக்தி முழுதும் வற்றியே விட்டது. ஒரு பிரச்சனை முடிந்தால் ஆசுவாசம் கொள்ள கூட நேரம் கிடைக்காமல் அடுத்த பிரச்சனை வந்து குதித்தால் அவளும் என்ன செய்வாள்?

விருந்து முடித்துக் கொண்டு கிளம்பிய உறவினர்கள் அனைவரும் இவளிடம் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை என்ற போதும் பரிதாபமாக பார்த்து விட்டுத்தான் சென்றனர். 

தர்மாவைதான் திருமணம் செய்வேன் என அவள் உறுதியாக முடிவு செய்த போது இந்த வாழ்க்கை சாதாரணமாக இருக்காது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அதை எதிர்கொள்ளும் போது மனம் துவண்டு போகிறதே. 

நன்றாகத்தான் விடிந்தது. ஆனால் அதன் பின் இந்த நொடி வரை கலக்கமும் பயமும்தான். இப்படியேதான் வாழ்க்கை செல்லுமா என நினைக்கும் போதே அவளது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. 

படுத்துக் கொண்டவள் தர்மா அவளுக்காக செய்தவை அனைத்தையும் திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தாள். கலக்கம் தரும் யோசனைகளை தள்ளி வைத்து, ‘என் மாமா என்னை மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ வைப்பான்’ என கணவன் மீதே எல்லா நம்பிக்கையையும் வைத்து கண்களை திறந்தாள். 

‘எங்கு போக போகிறான், எப்படியும் என்னைத் தேடிக் கொண்டு என்னிடம்தான் வந்து சேருவான்’ என்ற நினைவோடு கீழே சென்றாள். 

மனம் போன போக்கில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் தர்மா. கலங்கிய கண்களோடு தன் கை பிடித்து நின்ற கனியின் முகம் நெஞ்சை வாட்டிக் கொண்டே இருக்க, ஒரு வழியாக வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான்.

 வழியில் காருக்கு பெட்ரோல் நிரப்ப பங்க் ஒன்றுக்கு சென்றான். 

பெட்ரோல் போட்டுக் கொண்டு வெளியில் வர, சற்று தள்ளி ஏதோ பிரச்சனை போல தெரிந்தது. கூட்டத்தின் மத்தியில் மஹா தெரிய, உடனே காரை ஓரம் கட்டி விட்டு இறங்கி சென்றான். 

மஹாவின் இரண்டாவது அண்ணனுக்கும் இன்னொருவனுக்கும் ஏதோ வாக்குவாதம். அவர்கள் பேசியதை வைத்து அந்த இன்னொருவன் மஹாவின் கணவன் என புரிந்தது. தான் இடை புகுவது சரியாக இருக்குமா என்ற யோசனையோடு, அங்கிருந்து செல்லவும் மனமில்லாமல் நின்றிருந்தான் தர்மா. 

மஹாவின் கணவன் தன் மகள் தனக்கு வேண்டும் என கேட்க, கோர்ட்டில் பார்த்துக் கொள் என சொல்லிக் கொண்டிருந்தான் மஹாவின் அண்ணன். பூட்டிய காருக்குள் சின்ன டெடியை கட்டியணைத்துக் கொண்டு தேம்பிக் கொண்டிருந்தது குழந்தை. 

“உங்க சண்டைல பாப்பா மிரண்டு போய் அழுது பாருங்க” என யாரோ சொல்லவும், மஹாவின் கணவனும் காருக்குள் பார்த்தான். 

“எம்பொண்ணுக்காக இப்போ இங்கேருந்து போறேன் நான், ரியா இல்லாம இந்தியா விட்டு போக மாட்டேன்” என சொல்லி அகன்றான் மஹாவின் கணவன். 

கூட்டமும் கலைய, கார் கதவை திறக்க போனாள் மஹா. எதிர்பாராத விதமாக தர்மாவை கண்டு விட்டு ஒரு நொடி தயங்கினாள். 

“பாப்பாவை தூக்கு” என மஹாவின் அண்ணன் அதட்ட, உடனே குழந்தையை கவனிக்க சென்று விட்டாள் மஹா. 

இப்போதுதான் தர்மாவை பார்த்த மஹாவின் அண்ணன் அவனை முறைத்துக் கொண்டே, “என்னடா வேடிக்கை?” என அதட்டினான்.