வீட்டிற்கு வந்தவள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். மற்றவர்களுக்காக வெளியே சிரிப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும், மனதின் ரணங்களை உடனடியாக எப்படி மறக்க முடியும் அவளால். அங்கிருந்த பால்கனியின் ஓரத்தில் அமர்ந்தவளுக்கு, தன் வீடும், அதில் நிறைந்திருந்த வாழ்வியலும் ஞாபகத்திற்கு வர, தன்னையறியாமல் கண் கலங்கினாள். எவ்வளவு முயன்றும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல் போக, கன்னங்களில் வழிந்த கண்ணீரின் தடங்கள், அவள் உள்ளக் கிடக்கையை கொஞ்சம் ஆற்ற, கண்களைத் துடைத்துக் கொண்டாள். சில நாட்களுக்கு முன்பு வரை இப்படியெல்லாம் நடக்கும் என்று கூறியிருந்தால் சிரித்திருப்பாள். அடக்கி வைத்திருந்த ரணங்கள் அவளை மீண்டும் ஆட்படுத்த, அங்கு இருப்பதே அவளுக்கு மூச்சடைப்பதைப் போல் இருந்தது. உணர்வுகள் கரையுடைக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்க,

“வேதா”  என்ற கீர்த்தனாவின் குரலில் சற்று இயல்புக்கு வந்தவள்,

“அண்ணி” என்றாள்.

“என்னாச்சு வேதா? ஏன் என்னமோ மாதிரி இருக்க?” என்றாள்.

“நத்திங் அண்ணி..! வீட்டு ஞாபகம்” என்றாள். அவளைப் பார்த்து பெருமூச்சு விட்ட கீர்த்தனா,

“இப்படி தனியா வந்து உட்கார்ந்திருந்தா நடந்த எதையும் உன்னால மறக்க முடியாது. அது உன் உடம்புக்கும் நல்லதில்லை. உனக்கு நான் சொல்லனும்னு இல்லை. இதையும் கடந்து போய்த்தான ஆகணும்” என்றாள்.

“நானும் முயற்சி பண்றேன் அண்ணி..” என்றவளுக்கு, அதற்குமேல் அடக்க முடியவில்லை.

“முயற்சி மட்டும் தான் பண்றேன் அண்ணி, ஆனா, முடியலையே…” என்று கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.

“வேதா” என்று கீர்த்தனா அவளை அணைத்துக் கொள்ள,

“ஒரு மாதிரி ஸ்ட்ரெஸா இருக்கு அண்ணி. என்னன்னு சொல்லத் தெரியலை. எனக்கு அப்பாகிட்ட போகணும். நான் ஊருக்குப் போறேன்” என்றாள் சிறுபிள்ளையாய். அவளின் அழுகை சத்தம் கேட்டு சரணும்,அகரனும் வந்துவிட,

“என்னாச்சுடா வேதா? பிளீஸ் அழாத வேதா” என்றான் சரண்.

“அண்ணா..! ப்ளீஸ்..! என்னை ஊருக்கு அனுப்பிடுங்க. என்னால இங்க இருக்க முடியும்னு தோணலை. எனக்கு அப்பாவைப் பார்க்கணும்” என்றாள் தேம்பியபடி.

“நீ இப்படியெல்லாம் பேசுவன்னு தெரிஞ்சு தான் ராம் அப்பா கிளம்பி வந்துட்டு இருக்காங்க. உன்னை தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா சின்ன பிள்ளைன்னு ப்ரூவ் பண்ணிட்டு இருக்க..” என்றான் கண்டன குரலில்.

“எனக்கு இந்த கல்யாணம் நடந்திருக்கவே வேண்டாம்..” என்று அழுதவள்,

“யாருக்கும் என்னால நிம்மதி இல்லை” என்றாள் விரக்தியுடன்.

“அப்படியெல்லாம் பேசாத வேதா.இப்படி நடக்கும்னு நாம என்ன கனவா கண்டோம். விதி.. இப்படித்தான் நடக்கனும்னு இருந்திருக்கு. நாம இதைக் கடந்து வந்து தான் ஆகணும். இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருக்கிறதா உத்தேசம். நீ இப்படி இருந்தா  அப்பா எப்படி நிம்மதியா இருப்பார்? நாங்க எப்படி நிம்மதியா இருப்போம். உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்கிற எண்ணம் இருக்கா இல்லையா? உனக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் தான். ஆனா, இன்னும் எத்தனை நாளைக்கு அதையே சொல்லிட்டு அழுதுட்டு இருக்கப் போற. பழைய வேதாவா மாறலைன்னாலும், உன்னை நீயே ரொம்ப படுத்திக்காம இரு வேதா” என்றான் சற்று கண்டிப்பான குரலில்.

அவனின் அந்த கண்டிப்பான குரல் வேலை செய்தது. சட்டென்று அழுகையை நிறுத்தியவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“சாரிண்ணா!” என்றாள் குற்ற உணர்வுடன்.

“எனக்குத் தேவை சாரி இல்லை வேதா. நீ சரி ஆகணும் அவ்வளவு தான். ராம் அப்பா வந்தா அவர் கூட எப்பவும் போல இருக்கணும். அதை விட்டுட்டு இப்படி அழுது வடியக் கூடாது. அவருக்கு இப்போதைக்கு இருக்குற ஒரே நிம்மதி நீ மட்டும் தான். எங்களுக்கும் தான்.” என்றான்.

“ம்ம்..!” என்று தலையாட்டினாள்.

“நந்தாகிட்ட பேசுனியா?” என்றான்.

“இல்லைண்ணா. எனக்கு இப்போ பேச விருப்பம் இல்லை.” என்றாள்.

“அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் ஆவது போடு வேதா” என்றான்.

“சரிண்ணா”

“இன்னைக்கு காலேஜ்ல, கிளாஸ் எப்படி போச்சு? எல்லாம் எப்படி பழகுனாங்க? எல்லாம் ஓகே வா?” என்றான்.

“எல்லாம் ஓகேண்ணா..! எந்த பிரச்சனையும் இல்லை. எல்லோரும் ரொம்ப பிரண்ட்லி. முக்கியமா பொண்ணுங்களை விட பசங்க தான் ரொம்ப கேஷுவலா பேசுனாங்க” என்றாள் அமைதியாக.

“ஓகே..!” என்றவன்,

“உனக்கு மேரேஜ் ஆன விஷயத்தை சொல்லிட்டியா?” என்றான்.

“இல்லைண்ணா” என்றாள் தயக்கமாக.

“இனியும் சொல்ல வேண்டாம்” என்றான்.

‘ஏன் என்பதைப் போல் அவனைப் பார்த்தாள்.

“இப்போ வேண்டாம். நேரம் வரும் போது சொல்லிக்கலாம்..” என்றவன், சிரிப்புடன்,

“நீ என்னோட சிஸ்டர்னு சொன்னியா?” என்றான்.

“இல்லை. சொல்ல வேண்டாம்” என்றாள்.

“ஏன்?”

“நேரம் வரும் போது சொல்லிக்கலாம்” என்று அவனைப் போலவே சொல்ல,

“ஓல்ட் வேதா இஸ் பேக்” என்றான் அகரன்.

“அண்ணா இன்னொரு விஷயம்” என்று அவள் தயங்க,

“என்னடா?

“இல்லை, நான் காலேஜ் ஹாஸ்ட்டல்ல தங்கிக்கட்டுமா?” என்றாள் தயக்கத்துடன்.

கோபத்துடன் அவளை முறைத்த சரண்,

“நம்ம வீடு இருக்கும் போது, நீ ஏன் ஹாஸ்ட்டல்ல தங்கணும்?” என்றான்.

“அப்படி இல்லைண்ணா..! நீங்களும் வொர்க் போகணும், அண்ணியும் வொர்க் போகணும். இதுல நான் வேற உங்களுக்கு தொந்தரவா..” என்று இழுக்க,

“நீ இருக்குறது எங்களுக்கு என்ன தொந்தரவு?” என்றான் காட்டமாய்.

“சரண்.. இப்ப ஏன் இவ்வளவு கோபப்படுறிங்க?” என்று கீர்த்தனா அவனை அடக்க,

“பின்ன என்ன கீர்த்தனா? அவ இருக்குறது நமக்கு தொந்தரவாமே? எப்படி இப்படி எல்லாம் பேச மனசு வருது இவளுக்கு?” என்றான்.

“அகரனும் ஹாஸ்ட்டல தான இருக்கான். அதான் நானும் கேட்டேன்.” என்றாள் வேகமாக.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். வேணும்னா பெரிய வீடா பார்த்து போகலாம்.” என்றான்.

“அண்ணா..! ப்ளீஸ். வீடெல்லாம் பிரச்சனை இல்லை.” என்றாள் வேதா. புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு இடையில் இருப்பது அவளுக்கு சங்கட்டமாய் இருந்தது. தன்னால் அவர்கள் சந்தோஷமும் கெடுகிறது என்ற எண்ணம் அவளுக்கு.

“ஹாஸ்ட்டல் சாப்பாடு நல்லா இருக்காது வேதா. சாப்பாடு டேஸ்ட் இல்லைன்னா நீ எந்த லட்சணத்துல சாப்பிடுவேன்னு எனக்கு நல்லா தெரியும்..” என்றான் சரண்.

“அண்ணி சமைக்கிற சாப்பாட்டுக்கு ஹாஸ்ட்டல் சாப்பாடு எவ்வளவோ மேல்” என்றான் அகரன் சிரிக்காமல். வேதாவிற்கு கூட இதழோரம் சிரிப்பு வந்தது.

“என்னடா இப்படி சொல்ற?” என்று சரண் பாவமாய் கேட்க,

“உண்மையை தானண்ணா சொன்னேன்” என்றான் அகரன்.

“அதைத்தான் இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டியே? பின் விளைவுகளைப் பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தியா?” என்றான்.

“அதையேன் நான் யோசிக்கணும்? அது உன் பாடு” என்றவன்,

“வேதா பேசாம நாம பக்கத்துல வேற வீட்டுக்கு வாடகைக்கு போகலாம். உன் புண்ணியத்துலயாவது எனக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்” என்றான்.

“அப்ப நான் மட்டும் பாவம் இல்லையா?” என்று சரண் அப்பாவியாய் கேட்க, அவனை முறைத்தாள் கீர்த்தனா.

“எல்லாம் சேர்ந்து என்னை ஓட்டுறிங்களா? பாவமேன்னு உங்களுக்கு சமைச்சு போட்டேன்ல எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்” என்றாள்.

“ஹேய் அப்படி இல்லை கீர்த்து..! என் பொண்டாட்டி சுடு தண்ணி வச்சா கூட அவ்வளவு நல்லா இருக்கும்” என்றான் சரண்.

“உனக்கு முத்திடுச்சு அண்ணா. உங்க பொண்டாட்டி வைக்கிற குழம்பே சுடுதண்ணி மாதிரி தான் இருக்கும். சோதனை ஓட்டத்துக்கு நாங்க தான் கிடைச்சோமா? ஒழுங்கா எங்களுக்கு பக்கத்துல வேற வீடு பாரு. இந்த ஹாஸ்ட்டல்ல எல்லாம் என்னால குப்பை கொட்ட முடியாது.நானும் வேதா கூடத்தான் இருப்பேன்” என்றான்.

“டேய் விளையாடுறியா? உங்களை எப்படி தனியா விட முடியும்?” என்று சரண் எகிற,

“ஏன்? பக்கத்துல இருக்குற ரகு அண்ணா வீடு மாடி போர்ஷன் காலியா தான இருக்கு. நாங்க அங்க தங்கிக்கிறோம். நாங்களே சமைச்சு சாப்பிட்டுக்கிறோம்..” என்றான்.

அவன் விளையாட்டாய் பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்த சரண், அருகில் இருக்கும் காலி போர்ஷன் வரை சொல்லவும், அதிர்ந்தான்.

“இப்ப என்னடா திடீர்னு?” என்றான்.

“அடேய் கூமுட்ட அண்ணா. வாத்தியார்னு தான் பேரு. கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா? உனக்கு கல்யாணம் ஆகி நாலு மாசம் தான் ஆகுது. நீ உன்னோட வாழ்க்கையைப் பாரு. உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்.” என்று அழுத்திக் கூற,

“அந்த ஈர வெங்காயமெல்லாம் எனக்கும் தெரியும்.” என்றான் சரண்.

“எனக்கும் அகரன் சொல்றது கூட ஓகே தான் அண்ணா. ஹாஸ்ட்டல் போறதுக்கு இந்த ஐடியா பெட்டர். பக்கம்னா பிரச்சனையில்லையே” என்றாள்.

“பக்கம்னா பக்கத்து வீடு தான்” என்றான் அகரன்.

“அப்பறம் என்னண்ணா?” என்றாள். அவர்கள் இருவரையும் யோசனையுடன் பார்த்தவன்,

எனக்கு யோசிக்க டைம் வேணும். யோசிச்சுட்டு சொல்றேன். அதுவுமில்லாம ரகு வாடகைக்கு விடுற ஐடியால இருக்கானான்னு தெரியலை. என்றான் சரண்.

ரகுவை அவள் ஒன்றிரண்டு முறை பார்த்திருந்தாலும், அருகில் சென்று பார்த்து பேசி பழக்கமில்லை. ரகு என்கிறவனின் முகத்தையே யோசனை இடுக்குகளில் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது அவளுக்கு.