சொர்க்கம் உன்னருகில் 14

   சுஜியும், ஜெய்யும் நகையை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமென சொல்லியும் விஜயன் நிலத்தை ஜெய் பேரில் மாற்றப்போவதாக சுசிலாவிடம் சொன்னான். சுஜி பேரில் டவுனில் இருக்கும் வீடும், ஜெய் பேருல நிலம் என விஜயன் முடிவாக சொல்லி ஜெய்யை தன்னுடன் கூட்டிச் சென்றான்.

     ஏற்கனவே சொல்லி பத்திரங்கள் தயாராக இருந்ததால் வீட்டை சுஜி பெயரில் மாற்றும் வேலை ஈசியா, சீக்கிரமே முடிந்தது. கண்ணன் அழைத்து வேலை முடிந்ததை சொன்னதும்,

    “ கண்ணா அப்பாவை பக்கத்துல அந்த********* பேங்க்கு கூட்டிட்டு போ. போயிட்டு போன் போட்டு அப்பாகிட்ட குடு.” என்றான் விஜயன்.

  மூவரும் பேங்க் செல்ல, அங்கேயும் விஜயனின் ஏற்பாட்டின் படி லாக்கரில் இருப்பதை எடுக்க பரமசிவம் செல்ல, பேங்க் ஆபீசர் ஒருவர்,

    “வாங்க சார். நீங்க காலையிலேயே வர்றேன்னு சொல்லிட்டு போனீங்க. இப்ப வந்திருக்கிங்க. சரி வாங்க. இந்த இடத்தில் எல்லாம் சைன் பண்ணுங்க. உங்க பாஸ் புக் குடுங்க.. உங்க நிரந்தர முகவரி சொல்லுங்க.” என வரிசையாக கேக்க அவர் சொன்னதை செய்தார். பரமசிவத்திற்கு  ஏற்கனவே இருக்கும் லாக்கரில் பொருளை வைக்க புதுசா என்ன இவ்வளவு பார்மாலிட்டீஸ்னு சந்தேகம் வர

    “கண்ணா என்னப்பா லாக்கர் திறந்து பொருள வைக்க எடுக்க இத்தனை பார்மாலிட்டீஸ் இவ்ளோ நாளா இல்லையே. இப்போ என்ன புதுசா கேக்கறாங்க?” என கேக்க

    “லாக்கரை க்ளோஸ் பண்ண இவ்வளவு பார்மாலிட்டீஸ் உண்டு. அதனால அமைதியா இன்னும் கொஞ்ச நேரம் இருங்க” விஜயன் வீடியோ காலில் சொல்ல அதிர்ந்தார் பரமசிவம்.

    விஜயன் எல்லா வகையிலும் தன்னை லாக் செய்ததை உணர்ந்தார். சுசிலா, கீதாவுடன் சேர்ந்து திட்டம் போட்டு ஜெய்யை கட்டம்கட்டி மட்டம்தட்டி தங்கள் அடிமை போல நடத்தியது திடீரென ஞாபகம் வந்தது. இப்போது தனக்கே இந்த நிலை..

    அக்கவுண்டை தங்கள் ஊரில் உள்ள பிராஞ்சிக்கு மாற்றும்படியும் லாக்கரை க்ளோஸ் பண்ணித்தரும்படியும் ஏற்கனவே விஜயன் மேனேஜருக்கு பரமசிவம் போலவே மனு குடுத்திருந்தான்.

    ஆப்பசைத்த குரங்கு போல மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் பரமசிவம் தவித்தார். அவர் இங்கே லாக்கர் வைத்திருப்பது சுசிலாவுக்கே தெரியாது… இதில் பூர்வீக வீட்டின் வாடகை, பென்ஷனில் மீதமிருக்கும் தொகை என பணமாகவும், சில சமயங்களில் நகையாக வாங்கியும் வைத்திருப்பார்.

     ஜெய்யை துன்புறுத்த மூவரும் ஒன்று சேர்ந்தாலும், கீதா சுசிலா வழி தூரத்து சொந்தம். சுசிலா போலவே எடுத்தெறிந்து பேசும் குணம் கீதாவுக்கு உண்டு. அதனால சில சமயங்களில் பரமசிவத்துடன் கீதாவுக்கு உரசலும் வந்ததுண்டு. அந்த நிமிடம் தான் விரும்பியது நடக்க எதிரில் இருப்பவர் யார் என்பதை பார்க்காமல் வார்த்தைகளை விட்டுவிடுவாள். பரமசிவமும் கீதாவும் அடிக்கடி முட்டிக் கொள்வார்கள்.

   சுசிலா தன் கணவனிடம், “அவ கோவத்துல ஏதோ பேசிட்டா, விடுங்க நம்ம கீதா தானே சொன்னா. ரோட்ல போற யாராவதா சொன்னாங்க? அதையே புடிச்சிகிட்டு வேதாளமாட்டம் தொங்காம வேற வேலை இருந்தா பாருங்க. கீதா கத்தி களைச்சி போயிருப்பா. நான் காபி போட போறேன் உங்களுக்கு வேணுமா?” என எப்போதும் சமாதானம் செய்வார்.

    என்ன சொன்னாலும் பரமசிவத்தின் மனம் ஏற்றுக்கொள்ள வில்லை. இது நிலையானது கிடையாது. அளவுக்கு மீறி போறப்ப ஜெய்  சண்டை போட்டு வீட்டை விட்டு தங்களை துரத்தலாம். அப்போ கீதாவிடம் இருக்க முடியாது என உள்ளுணர்வு சொல்ல இந்த லாக்கரில் தனியே சேமிக்க தொடங்கினார்.

      பேயோடு ஆயினும் பிரிதல் அரிது என்ற கிராமத்து வழக்குக்கு ஏற்ப சுசிலாவின் பேச்சை கேட்டு நடக்க வேண்டியிருந்தது.. தனித்தியங்க முடியாது. நடத்தையையே கேள்விக்குறி ஆக்கிவிடுவர் இருவரும். அவர்கள் பேச்சை கேட்டதற்கு கை மேல் பலன் கிடைச்சிடுச்சி, பெருமூச்சு விட்டார் பரமசிவம்.

   அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக பணம், நகை இருந்தது லாக்கரில்.. லாக்கருக்கு கட்டியிருந்த டெபாசிட் பணமும் வந்தது.

   சுசிலா வீட்ல நடந்துகிட்டே இருந்தவர் “நான் பக்கத்து வீட்டுக்காரங்களை பாத்துட்டு வர்றேன் காயு” என்க, காயுவும் “போரடிக்குதா ம்மா? டீவி பாருங்க. நான் டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்.” என்க

    “ஏன்டி அவங்களோட சேந்து நீயும் என்ன அடக்க பாக்கறயா? நீ யாருடீ என்ன போககூடாதுன்னு சொல்ல? யேன் சொத்தே போகுதே என்ன பண்ண போறேன்னு நானே கவலையில் பேசாம இருந்தா மிரட்டி பாக்கறிங்களா? சொல்லி வைய்யி உன் ப்ரெண்டு அந்த கேடு கெட்டவகிட்ட என்னைய எதுத்துகிட்டு இங்க இருக்கமுடியாதுன்னு.“ என்று சண்டைக்கு வர பேச ஆரம்பிக்கும்போதே  காயு விஜயனுக்கு மிஸ்டு கால் கொடுத்திருக்க

    “என்னம்மா சத்தம் பெருசா வருது. காயு கண்ணங்கிட்ட போன் போட்டு உங்க ப்ரெண்டு ராகினி ஹஸ்பண்ட் போலிஸ்ல இருக்காரே அவர்கிட்ட சுஜி குடும்பத்துக்கு பாதுகாப்பு வேணுமுன்னு சுஜியோட போய் புகார் கொடுத்துட்டு வரச்சொல்லுமா. இப்படி ஆதாரத்தோட மாட்டியும் திமிர் அடங்கலியா? ஒழுங்கா இருந்தா நீங்க வாங்கினது மட்டும் கணக்கு போட்டு கொடுப்பேன். ஓவரா குதிச்சிங்க வீடு, நிலம் எல்லாத்தையும் எதாவது ரவுடி பயலுக்கு அடிமாட்டு விலைக்கு வித்து பணத்த ஜெய்க்கு குடுத்துட்டு உங்க எல்லோரையும் நடுத்தெருவில நிக்க வச்சிட்டு சாமியாரா போயிடுவேன், பாத்துக்கோ, நாங்க வரும்வரைக்கும் அமைதியா போயி டீவி பாரு. கேமராவில பாத்துகிட்டுதான் இருக்கேன்னு” வீடியோ காலில் சொல்ல பெட்டிப்பாம்பா அடங்கி உட்கார்ந்தார்.

    வேலை முடிந்து எல்லாரும் வீடு வந்தனர். “ஜெய் அப்பாம்மா திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணி வை. நாளைக்கு நம்ம குலதெய்வ கோவிலுல அபிஷேகம் சொல்லியிருக்கேன். காலையில கிளம்பி போயி இவங்க லக்கேஜ வச்சிட்டு கோயில் போலாம்” என்றான் விஜயன்.

    “கோயிலுக்கு போறோமுன்னு இப்ப சொல்லற. இந்த ஆட்டக்காரி இன்னும் வீட்ட சுத்தம் பண்ணல. எப்படிப்பா கோயிலுக்கு போகறது? அதுவுமில்லாம கோயிலுக்கு போன உடனே திரும்பி வர எதுக்கு எங்க பொருளை பேக் பண்ணணும்? போயிட்டு இங்கதானே வரனும்?” சுசிலா கேக்க

    “இங்க இனிமேல என்ன வேலை? நீங்க வந்த வேலை ஆகலன்னு கீதா உங்கள கூட்டிட்டு வர சொல்லிட்டா” என விஜயன் சொல்லி முடிக்கும் முன்

    “இவள ஜெய்க்கு கட்டி வச்சிட்டா நாங்க அங்க உன்கூட இருக்கக்கூடாதுனு அப்பவே சொல்லிட்டா கீதா. அதனால நாங்க இங்கியே இருக்கோம்” என்ற சுசிலா

    “உன்னோடவே கடைசிகாலத்த கழிச்சிடலாமுன்னு ஆசையா இருந்த எனக்கு அப்ப எப்படி வலிச்சிருக்கும்? அந்த வலிய இந்த குடியகெடுத்தவள அனுபவிக்க வைக்கல நான் எங்கப்பனுக்கே பொறக்கல.” என்க

   “உன் சொந்தத்த அத்துவிட்டது சுஜி இல்ல, கீதாதான். அவளுக்கு தெரியும் இதுதான் நடக்கபோகுதுன்னு அதான் உசாரா உன்ன தட்டிக்கழிச்சி விட்டுட்டா. எது எப்படி இருந்தாலும் என்னையும் நீங்கதான் பெத்தீங்க. என்னைய எல்லாரும் அப்பம்மாவை பாத்துக்க துப்பில்லாம தம்பி வீட்ல விட்டிருக்கான் சாட பேசறாங்க. போனவாரம் ஒரு நியாயம் பேச போன எடத்துல ‘நீ என்ன ஒழுங்குன்னு என்னைய  சொல்ல வந்துட்டன்னு’ ஒருத்தன் கைநீட்டி பேசிட்டான். இதுக்கு மேலயும் இங்க  உங்கள விட்டு வச்சி ஊருல மானங்கெட முடியாது. பதினஞ்சி வருசத்துக்கு மேல இவன் பாத்துட்டான். நானென்ன வக்கத்தவனா? பெத்தவங்கள பாக்க முடியாம போக? எடுத்து வைங்க. இனிமே இங்க உங்க செல்ல பேரன், பேத்திய இப்போ மாதிரியே பாசமா பாக்க வந்தாலும் என்கூடவே வந்து என் முன்னாடியே பேசிட்டு என்னோடவே திரும்ப நம்ம வீட்டுக்கு வந்திடனும்.” என விஜயன் அடுக்க சுசிலாவை பரிதாபமாக பார்த்தார் பரமசிவம்.

   முன்பே பரமசிவம் “ஓவரா பேசாத. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை இருக்கும்.” என்றிருந்தார்.

சுசிலாவோ ஜெய் நியாயம் கேட்டா சண்டை போட்டு இன்னும் இன்னும் நிறைய  வாங்கிக்கலாம். நாமளும் கீதாவும் பந்தாவா இருக்கலாமுன்னு கண்டபடி பேச

 இப்ப அது அவருக்கே திரும்பிடுச்சி. இனி கீதாகிட்ட என்ன கஷ்டப் படபோறாங்களோ?

    அழுதுகொண்டே கிளம்பினார் சுசிலா. “அப்பா புதுசா கல்யாணம் பண்ணி புகுந்த வீடு போற பொண்ணு  போல அம்மா அழுதுகிட்டே வர்றாங்க. நீங்கதான் நானிருக்கேன் ராசாத்தின்னு கண்ணீர துடைக்கனும். அப்பவும் உங்கம்மா  பேச்சை கேட்டு சுசிம்மாவை கண்டுக்கலன்னு சொல்லியிருக்காங்க. இப்பவும் அமைதியா வர்றிங்க”ன்னு விஜயன் வெடி வைக்க பரமசிவம் பதறிப் போனார்.

    புயல் எப்போது வேண்டுமானலும் அவர் பக்கம் திரும்பலாம்.

   விஜயன் இங்கிருந்தே போன் மூலம் கீதாவின் பிறந்த வீட்டினரையும், தங்கை வீட்டையும் கோவில் பூஜைக்கு அழைத்திருந்தான்…

     அவன் அழைப்பதை கண்டு சுஜியின் வழி சொந்தங்கள் வந்தால் அவர்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தலாம் என சுசிலா திட்டம் தீட்ட, பரமசிவமோ எதாவது செய்து குடுத்த சொத்துக்களை திரும்ப பெற முடியமா என யோசித்தபடி இருக்க, விஜயனோ  ஏதோ நிலம் ஒன்றை ஜெய் பெயரில் வாங்கி கிரயம் செய்ததுபோல செய்தியை மகேஷை கொண்டு பரவச் செய்திருந்தான்.

     கீதாவும் போன் வேலை செய்யாததால் எதையும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

    கவினும், பவனும்  வீடு வர கவின் போனில் இருந்து ஜெயனுக்கு கால் செய்தாள்.

   “ சொல்லு கவின், எப்படி இருக்க? எப்போ வீட்டுக்கு வந்த?” ஜெய் கேக்க

    “என்னடா கேக்கற? யேன் பையன் எப்போ வீட்டுக்கு வந்தா உனக்கு என்ன? பணம் அனுப்ப முடியாதுன்னு சொன்னியாம்?”

  “அவனுக்கு அனுப்ப இல்லாத பணத்தை இல்லாமையே பண்ணுட்டுமா? எங்க அவ? இப்படி ஒரு புருஷன வச்சிகிட்டே இந்த ஆட்டம் போடறாளா?  ரெண்டு கோடி பணம் போட்டு நீ நிலம் வாங்கியிருக்கன்னு இங்க பேசிக்கிறாங்க.”

   “ஏதுடா இவ்வளவு பணம்? உன் மாமனா கொடுத்தானா? இல்ல யேங்கிட்ட மறைச்சி வச்சிருந்திங்களா ரெண்டு பேரும்? என கீதா கத்த

  “ஆமா மாமனாரு  தான் குடுத்தாரு. ஆனா என் மாமனாரு இல்ல. என் பொண்டாட்டியோட மாமனார். எனக்கு இங்க பெட்டி கட்ற வேலை நிறைய இருக்கு. நாளைக்கு கோவிலுல நேரா பேசிக்கலாம்”ன்னு ஜெய் போனை கட் செய்தான்.

    உடனே சுசிலா போன் அடிக்க, குரல் மாற்றும் செயலியை ஆன் செய்து வைத்திருந்த விஜயன் சுசிலா போல பேச துவங்கினான்.

   “கீதா உன் போன் எங்க? நேத்து காலையில இருந்து போன் அடிச்சிக்கிட்டு இருக்கேன். போனே போகல” என்க

    “அத்த அந்த போன் வேலை செய்யல. அது பழசாயிடுச்சி. அதான் உங்கிட்ட புது போன் வாங்கிக்கிட்டு வரச் சொன்னேன். வாங்கியாச்சா? இப்ப புதுசா ஒன்னு வந்திருக்காம். பக்கத்து வீட்டுக்கு பால்கரக்க வருவானே ஒருத்தன் அவன் அதை வச்சிருக்கான்.ஒரு ஒன்னரை லட்சம் தானாம் அதை வாங்கி குடுக்கச்சொல்லுங்க அத்த. முந்தாநாள் சொன்னேனே பச்சை கல் ஆரமும், நொக்லஸும் அதுவும் வாங்கிட்டீங்கதான? வாங்கியிருப்பிங்க எனக்கு தெரியும்.” என கொஞ்ச

    “ஏம்மா கீதா போன் ஒன்னரை லட்சம், நகை பத்து லட்சம் இவ்வளவு பணத்துக்கு திடீரென என்ன வழி? ஏது இவ்வளவு பணம்?” என கேக்க

    “என்ன அத்த இப்படி கேக்கறீங்க? ஏன் அவள அடமானம் வைக்க சொல்லுங்க? நீங்க பையன பெத்து நல்லா வளத்து வச்சா வளைச்சி போட்டு கட்டிக்கிட்டா இல்ல, அவ நகைய குடுக்க சொல்லுங்க. இல்ல என்னமோ பண்றாங்க? நமக்கு போனும், நகையும் வாங்க முடியாமையா கேட்டோம்? நம்ம பையன அவ மொட்டை அடிச்சட்டு போயிட்டா என்ன பண்ண? அதுக்கு நாம இப்படி அவன் சொத்த பத்திரப்படுத்தி வைக்கிறோம்”

    “ஐய்யோ அத்த இந்த வாரத்துல உங்க செல்ல மவன், இந்த ஏமாளி, முட்டாபயல மயக்கி நிலம் ஒன்னு இங்க வாங்கி கிரயம் பண்ணியிருக்கா அந்த விளங்காதவ. உங்களுக்கு தெரியுமா? நம்ம ஊருக்கே வந்து நம்மகிட்ட சொல்லாம செஞ்சிருக்காங்க. இவருக்கு வேற தெரிஞ்சா மனசொடஞ்சி போயிடுவாரு. என் தம்பி இல்ல என் மகன்னு சொல்லிக்கிட்டு அலையற மனுசனுக்கு மாரடைப்பு கூட வந்தாலும் வந்துடும் சொல்லாம செஞ்சது தெரிஞ்சா. அதனால நீங்க இந்த விசயத்தை பக்குவமா சொல்லி நம்ம பேருல மாத்தி விட்டுடுங்க “ என்றாள்.

  சுசிலாவோ ஆவென விஜயன் அவரின் குரலில் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தார். ஜெய்யும், விஜயனும் ஸ்பீக்கரில் போட்டே பேச கீதாவின் ஆளுக்கு தகுந்ததுபோல பேசும் திறமையை கண்டு வியந்து போனார்கள்.

நாளை கோவிலில் என்ன நடக்கப் போகிறது? விஜயனே நடக்கும் விசயங்களுக்கு காரணம் என கீதாவுக்கு தெரியவந்தால் என்னவாகும்? காத்திருப்போம் தோழிகளே.