“அங்க டின்னர் எப்பவோ ரெடியாகிடுச்சு. இது உனக்காக மட்டும் அவங்களே ஆசையா பண்ணினாங்க. எல்லாம் சரியா இருந்திருந்தா நாம அங்க அவங்க கூடத்தானே மாமா இருந்திருப்போம்? அஜய் நிதி எல்லாம் உன் பொறுப்புல இருந்திருப்பாங்க, சின்ன வயசுல ஹஸ்பண்ட் இல்லாம கஷ்ட பட்டவங்க இந்த வயசுல மூத்த பையன் பொறுப்புல எல்லாத்தையும் விட்டுட்டு அக்கடான்னு வீட்ல இருக்கலாம். அதை கூட அவங்க ஆசை படல. நீ நல்லாருக்கணும்னுதானே நினைக்கிறாங்க மாமா?”
“நான் நல்லாத்தான் இருக்கேன்”
“அப்ப சாப்பிடு” கடுப்பாக சொன்னாள்.
“சாப்பிடதான் போறேன்” என்றவன் உணவு மேசையில் இருந்த உணவை பரிமாறிக் கொள்ள போனான்.
அதற்கு அனுமதிக்காமல் இன்னொரு வாய் உணவை வற்புறுத்தி அவனுக்கு ஊட்டினாள். முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டுதான் உணவை விழுங்கினான்.
“வலிக்க வலிக்க உன்னை பெத்தவங்க மாமா, என்ன சொல்லவும் அவங்களுக்கு உரிமை இருக்கு. நீ செய்றதும் அப்படித்தான இருக்கு?” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, எழுந்து விட்டான்.
“இந்தா முந்திக்கிட்டு வந்திடுச்சு கோவம்! உட்காரு மாமா” என சொல்லி இடக் கையால் அவனை இழுத்து அமர வைத்தாள்.
“நொய் நொய்னு ஏதாவது சொன்னா எப்படி சாப்பிட முடியும்?” என எரிச்சலாக கேட்டான்.
“நான் எதுவும் பேசல, ஒழுங்கா சாப்பிடு” என அவள் சொல்ல, அடுத்த வாய் உணவை அடம் செய்யாமல் வாங்கிக் கொண்டான்.
பாதி சாப்பிட்டு முடித்தவன், “எனக்கு போதும், புலாவ் நல்லாருக்கு நீயும் சாப்பிட்டு பாரு” என்றான்.
“உனக்குத்தான் அதெல்லாம் பிரச்சனை எனக்கில்லை” என குறும்பாக அவள் சொல்ல, அப்படியா என்பது போல மோகனமாக சிரித்தான் தர்மா.
“நாளைக்கு வேலை நிறைய இருக்கும் மாமா, இப்ப சீக்கிரம் தூங்கினாதான் நாளைக்கு சுறு சுறுப்பா இருக்க முடியும். என்ன?” என்றாள்.
“பத்து நிமிஷம் என் டைம், அப்புறமும் தூங்கலாம்னு நீ சொன்னா எனக்கு சம்மதம்தான்” என்றான்.
என்னென்ன செய்வான் என அவளின் கற்பனையில் ஓட அப்போதே முகம் சிவந்து விட்டது.
குரலை செருமிக் கொண்டவன், “ரூம் வரைக்கும் என்னை நல்லவனா இருக்க விடு கனி” என்றான்.
அதன் பின் கனியிடம் பேச்சே இல்லை. சாப்பிட்டு முடித்து மாடியேறி சென்றனர். கடைசி படி முடியும் போதே ஒற்றைக் கையால் அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.
“சொல்லிட்டு செய்ய மாட்டியா மாமா? இப்படி தூக்குறது பயமா இருக்கு, இறக்கி விடு, விழுந்து வச்சா நாளைக்கு விருந்து சாப்பிட முடியாது உன்னால”
“நாளைக்கு விருந்து யாருக்கு வேணும்? என் விருந்து என் தோள்ல இருக்கு” என சொல்லிக் கொண்டே அறைக்கு நடந்தான். வாகாக அவனது கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டாள் கனி.
அடுத்த நாள் காலையிலேயே விருந்தினர்கள் வர ஆரம்பித்து விட்டனர்.
கனியின் அறைதான் தர்மாவின் அறையை விட பெரிது என்பதால் அதையே தங்களுக்கான அறையாக மாற்றிக் கொண்டிருந்தனர் இருவரும். ஆகவே தங்கையை தன் அறையில் இருந்து படிக்க சொல்லி விட்டான் தர்மா.
அஜய்யை கண்டதும் அன்பாக இரண்டு வார்த்தைகள் பேசினார் நம்பி. கடமையாக பேசி விட்டு நகர்ந்து சென்று விட்டான் அவன்.
வீட்டின் பக்கவாட்டு பகுதியில் நீளமான பந்தல் போடப் பட்டு பந்திக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பின் பக்கத்தில் அந்தப் பகுதியின் பிரபலமான பாய் ஒருவர் தன் குழுவினருடன் அசைவ விருந்து தயார் செய்து கொண்டிருந்தார்.
வீட்டின் முன் பகுதியில் கிடந்த இருக்கைகளை சொந்தக் கார ஆண்களும் வீட்டின் உள்ளே பெண்களும் என மனிதர்களால் நிறைந்து போயிருந்தது அவ்விடம்.
எண்ணெய் வைத்து குளித்து விட்டு புதிய ஆடை அணிந்து மலர்ந்த முகத்தோடு காணப் பட்டனர் தர்மாவும் கனியும்.
விருந்து தொடங்க சில நிமிடங்களே இருக்க, போலீஸ் வந்தது.
பணி மாற்றம் பெற்று புதிதாக வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் வினோத்குமாரை இறுகிய முகத்துடன் பார்த்தார் நம்பி.
தர்மாவின் பிடியில் இருந்து விடுவிக்க பட்ட பையனை நேற்றிலிருந்து காணவில்லையாம். அவனது பெற்றோர் தர்மா மீது சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்திருக்கிறார்கள்.
தர்மாவிடமிருந்து விடுபட்டு வெளி வந்த போதே தன்னை அடைத்து வைத்திருந்தது தர்மாதான் என தெளிவாக அந்தப் பையன் அவனது பெற்றோரிடமும் நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறான். அவனை தொடர்ந்து தர்மாவின் ஆட்கள் வந்ததற்கான ஆதாரம் இருக்கிறதாம்.
விசாரணைக்காக தர்மாவை அழைத்து செல்ல வேண்டும் என்றான் வினோத்குமார்.
இதற்கும் தர்மாவுக்கும் சம்பந்தம் இல்லை, இன்று வீட்டில் விஷேஷம், மதியத்திற்கு மேல் அவனே ஸ்டேஷன் வருவான் என்றார் நம்பி.
வினோத் கேட்பதாக இல்லை, இப்போது வரவில்லை என்றால் கையில் விலங்கிட்டு அழைத்து செல்வேன் என மிரட்டினான்.
பின் பக்கத்தில் இருந்த தர்மாவின் காதுக்கு விஷயம் போனதும் முன்பக்கம் விரைந்தான் அவன்.
நம்பிக்கும் வினோத்துக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. தர்மா யாருக்கோ அழைத்து பேசினான். வினோத்துக்கு எஸ் பி யிடமிருந்து அழைப்பு வந்தது.
‘தர்மாவே மதியத்திற்கு மேல் வருவான், உடனே அங்கிருந்து செல்’ என உத்தரவு வரவும் சரியென சொல்லி கைப்பேசியை வைத்த வினோத் காட்டமாக நம்பியை பார்த்தான்.
“ஸார் ஸார்… இதெல்லாம் நிறைய நாங்க பார்த்திட்டோம், கிளம்புங்க” என்றான் தர்மா.
தர்மாவை வன்மமாக பார்த்த வினோத் மற்ற காவலர்களோடு அங்கிருந்து சென்று விட்டான்.
நம்பியும் தர்மாவும் ஒருவரையொருவர் அர்த்தமாக பார்த்துக் கொண்டனர்.
“பார்த்துக்கலாம் மாமா, பந்தி ஆரம்பிக்கலாம் வாங்க நீங்க” என்றான் தர்மா.
“என்னென்னவோ சொல்றாங்களே, நம்ம தம்பி ஏதும் செய்திடலையே?” என கனியிடம் விசாரித்தார் அவளின் பெரியம்மா.
அதே கேள்விதான் மற்ற உறவினர்கள் மனதிலும். யாருக்கும் கேட்க தைரியம் இல்லை.
தன் நண்பனின் இறப்புக்கு காரணம் என நம்பி பழி தீர்த்துக் கொண்ட ஆளின் மகன்தான் இந்த இன்ஸ்பெக்டர் என ஆசைத்தம்பி கோபுவிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதை கேட்ட கனி தர்மாவை தேடிக் கொண்டு சென்றாள்.
தாமரைக்கோ நெஞ்சத்தில் ஒருவித பதட்டம்.
பந்தியை மேற்பார்வை செய்து கொண்டிருந்த கணவனை இழுத்துக் கொண்டு தள்ளி சென்றாள் கனி.
“என்னன்னு சொல்லாம என்ன கனி இது?” என கடிந்தான் தர்மா.
“அந்த பையனுக்கு என்னாச்சு நீ ஏதும் செய்யலதானே?” பயத்தோடு கேட்டாள் கனி.
அவன் கண்டனமாக பார்க்க, “அந்த இன்ஸ்பெக்டர் யாரு?” எனக் கேட்டாள்.
“யாருன்னா என்ன கேள்வி இது? அவன் இன்ஸ்பெக்டர் அவ்ளோதான்” என்றான் தர்மா.
“மாமா!”
“விருந்து நடக்கிறப்போ வந்தவங்கள கவனிக்கணும், வா அங்கு வந்து நில்லு” என சொல்லி தர்மா நடக்க, யோசனையோடு அங்கேயே நின்றாள் கனி.
“உன் மாமன் ஒன்னும் கொலைகாரன் இல்லை. இந்த இன்ஸ்பெக்டர் எவனா இருந்தாலும் என்னை எதுவும் பண்ண முடியாது. ஒழுங்கா வா” என தர்மா அதட்டவும் அவனுடன் சேர்ந்து நடந்தாள் கனி.