அத்தையை சமாதானம் செய்து, நாளை நடக்கவிருக்கும் விருந்துக்கு அழைத்து செல்லவென புதுக்கோட்டை வீட்டுக்கு வந்திருந்தாள் கனிஹா.
பேரன் வரவில்லையா என விசாரித்தார் அன்னலக்ஷ்மி பாட்டி. தர்மாதான் கனியை காரில் அழைத்து வந்தான், வாசலிலேயே இவளை இறக்கி விட்டு கிளம்பும் போது சொல் என கூறி சென்றிருந்தான்.
பாட்டியை வருந்த செய்ய மனமில்லாமல் தன்னை கூப்பிட வரும் போது வருவான் என சொல்லி வைத்தாள்.
இன்னும் புது மணப் பெண்ணுக்கான அடையாளங்களோடு பூரித்த முகமாக இருந்த கனியை கட்டியணைத்துக் கொண்ட நிதிலா, “போன வாரம் பார்த்த கனி எங்க போனா?” எனக் கேட்டாள்.
“கிண்டல் செய்றியா, விடு என்னை, ஒரு ஃபோன் கூட பண்ணல நீ” என செல்லக் கோவத்தோடு விலகினாள் கனி.
நிதிலாவுக்கு தேர்வுகள் தொடங்கியிருந்தன. நாளை விருந்துக்கு கூட அவளால் வர முடியாது என்பதை சொன்னவள், “எக்ஸாம்ஸ்ன்னு முன்னாடியே உன்கிட்ட சொன்னேன், நீதான் ஒரு விஷ் கூட பண்ணல” என குறையாக சொன்னாள் நிதிலா.
நிஜமாகவே கனி மறந்துதான் போயிருந்தாள். திடீரென கனியை மூணாறு அழைத்து சென்று விட்டான் தர்மா. அவனை தவிர வேறெந்த சிந்தனையும் வராமல் கடந்திருந்தன அங்கிருந்த நாட்கள். நேற்றுதான் திரும்பியிருந்தனர்.
கண்களை சுருக்கிக் கொண்டு மன்னிப்பு கேட்ட கனி, தேர்வு எப்படி எழுதினாய் என விசாரித்துக் கொண்டிருக்க, அஜய் வந்தான்.
“எப்படியிருக்க அஜய்?” என அவனிடமும் நலம் விசாரித்தாள் கனி.
அவன் விட்டேற்றியாக தலையாட்ட, “வாயை திறந்து பேசினா முத்து உதிர்ந்து போயிடுமா உனக்கு?” என விளையாட்டாக கேட்டாள் கனி.
“என்ன பேசணும்? உன் வீட்லேருந்து வந்த அன்னிலிருந்து என் அம்மா சரியே இல்லை. நடந்தத கேள்வி பட்டேன். எங்கம்மாவை நிம்மதியாவே இருக்க விட மாட்டாரா உன் ஹஸ்பண்ட்? அவரால எங்க சுதந்திரம், நிம்மதி எல்லாமே போச்சு. என் படிப்பு முடியட்டும், உங்க மூஞ்செல்லாம் பார்க்க முடியாத அளவுக்கு எங்கேயாவது தூரமா போயிடுறோம் நாங்க” என பட படத்தான் அஜய்.
கனியின் முகம் சுண்டிப் போக, இவளிடம் ஏன் இப்படி பேசுகிறாய் என கடிந்து கொண்டாள் நிதிலா.
“இனிமே இவங்கதானே அந்த ஸாருக்கு சப்போர்ட், இங்க சொன்னா அங்கே போய் சேருமே” என்ற அஜய் அறைக்கு சென்று விட்டான்.
நாளை அஜய்யும் வரப் போவதில்லை என்பது அவனது நடத்தையின் மூலமாகவே அறிந்து கொண்ட கனி வருத்தமாக நிதிலாவை பார்த்தாள்.
“அவன் கெடக்குறான், அண்ணா முன்னாடி அப்படியே பம்முவான். நாளைக்கு அம்மாவும் அப்பத்தாவும் வருவாங்க. நான் வந்து போகணும்னா அரை நாள் ஆகிடும், எப்படி படிப்பேன்? அதான் வரலை. எனக்கு கரெக்ட்டா எல்லாம் பேக் பண்ணி அனுப்பிடு” என்றாள் நிதிலா.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க தாமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தார் தாமரை. கனியை கண்டதும் புன்னகைத்து நலம் விசாரித்தார். அவள் அழைக்கும் முன்னரே நாளை காலையில் வந்து விடுகிறேன் என அவரே சொன்னார்.
“அவனுக்காக இல்லாட்டியும் உன்னை பார்க்கணுமே நான். எல்லாரும் வந்திடுறோம்” என அவர் சொல்லும் போதே, தன்னால் வர இயலாது என்பதை காரணத்துடன் சொன்னாள் நிதிலா.
அங்கு ஏதாவது ஒரு அறையில் உட்கார்ந்து படி, சாப்பிடும் போது மட்டும் வெளியில் வந்தால் போதும், உன் அண்ணன் தேடுவான், அவன் விஷயத்தில் எதையும் ஒதுக்காதே என தாமரை எடுத்து சொல்லவும் அவர் மகளும் சரியென ஒத்துக் கொண்டாள். அப்படியே அஜய் பற்றியும் போட்டுக் கொடுத்தாள்.
மகனை அப்போதே அழைத்த தாமரை நன்றாக திட்டி கனியிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். நாளை நீயும் வந்துதான் ஆக வேண்டும் என தீமானமாக சொல்லி விட்டார்.
கனியை முறைத்துக் கொண்டே அறைக்கு சென்றான் அஜய். தாமரை மகனை கவனித்திருக்கவில்லை, அவன் முறைப்பை பற்றி சொல்ல நிதிலா வாயெடுக்க, கனி தடுத்து விட்டாள். அனைவரும் ஒரே குடும்பம், சின்ன சின்ன விஷயங்களை பெரிது படுத்த வேண்டாம் என நினைத்தாள்.
நிதிலா கனியுடன் கதையடித்துக் கொண்டிருக்க, “நாளைக்கு வர முடியாதுன்னு சொல்லுவ, இப்ப படிக்காம பேசிட்டு இருப்பியா?” என அதட்டினார் தாமரை.
கனியை பாவமாக பார்த்துக் கொண்டே படிக்க சென்று விட்டாள் நிதிலா.
அன்று தர்மாவை திட்டி பேசி விட்டு வந்ததிலிருந்து தாமரைக்கு மனமே சரியில்லை. சாப்பிட கூட விடாமல் வெளியே போகும் படி செய்து விட்டோமே என்று அன்றிலிருந்து அவனது நினைவுதான்.
இப்போதும் கனியை அழைத்து வந்தவன் வீட்டுக்குள் வந்திருக்கவில்லை என தெரிய வரவும் அவரை மீறி அவரின் கண்கள் கலங்கிப் போயின. கனியிடம் முகத்தை காட்டாமல் திருப்பிக் கொண்டாலும் அவள் கண்டு கொண்டாள்.
தள்ளி வந்து கணவனுக்கு அழைத்த கனி, அவனை பாட்டி தேடுவதையும் அவனை பற்றி விசாரித்த அத்தை அழுததையும் சொன்னாள். அவன் ம் போட்டுக் கொள்ள, “கதையா மாமா சொல்லிட்டு இருக்கேன்? நீ உடனே இங்க வா, உன் மூஞ்சிய காட்டிட்டு போவியாம்” என்றாள்.
“கல்யாணத்துக்கு அப்புறம் உன் அதிகாரம் ரொம்பவே தூள் பறக்குது, வீட்டுக்குள்ளலாம் வர முடியாது, அப்பத்தாவை வெளில அழைச்சிட்டு வா” என்றான் தர்மா.
“வீட்டுக்கு வெளியிலயா நிக்குற நீ?” எனக் கேட்டுக் கொண்டே வெளியில் ஓடிச் சென்றாள் கனி.
பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்து விட்டான் தர்மா. இன்னும் சற்று நேரம் கனி இருக்கட்டும் எனதான் அமைதியாக வெளியிலேயே காத்திருந்தான்.
காருக்கு பக்கத்தில் அவள் செல்லவும் கண்ணாடியை இறக்கி விட்டவன், “அப்பத்தா எங்க?” என அவளுக்கு பின்னால் தேடினான்.
“ரொம்ப பண்ணாத மாமா, அத்தை கூட உன்னை பார்க்க நினைக்கிறாங்க போல, வா” என்றாள்.
அவன் முகம் திருப்பிக் கொள்ள, “நிதிலா ஏதோ உன்கிட்ட சொல்லணும்னு சொன்னா, வந்து என்னன்னு கேட்டுட்டு போ” என்றாள்.
“அவகிட்ட ஃபோன் பண்ணி கேட்டுக்கிறேன்” என சொல்லி நக்கலாக சிரித்தான்.
“ஃபோன்ல சொல்ல மாட்டாளாம் அவ, வர்றியா என்ன நீ” முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு கனி சொல்ல, தங்கைக்கு ஏதும் பிரச்சனையோ என சந்தேகத்துடன் வீட்டுக்கு வந்தான் தர்மா.
ஆனாலும் உள்ளே வராமல் வெளியில் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டவன் பாட்டியையும் தங்கையையும் தன்னிடம் அழைத்து வர சொன்னான். அவர்களிடம் தர்மா வந்ததை சொன்ன கனி, தன் அத்தையிடம் சென்று விட்டாள்.
சமையல் செய்யும் பெண் மாலையே இரவுக்கானதை சமைத்து விட்டு சென்று விடுவாள். தாமரை வந்த பிறகு டீ, காபி ஸ்னாக்ஸ் இப்படி சின்ன வேலைகள் மட்டும்தான் இருக்கும். தர்மா வந்து விட்டான் என அறிந்ததும் வேகமாக தன் கையாலேயே அவனுக்கென பன்னீர் புலாவ் சமைக்க ஆரம்பித்தார் தாமரை.
“நீங்க செஞ்சு முடிக்கிற வரை மாமா வெயிட் பண்ணுமா தெரியாது அத்தை, எதுக்கு சிரம படுறீங்க?” எனக் கேட்டாள் கனி.