சர்வேஷ், தனது அக்கா பிள்ளையின் காதுகுத்து வைபவத்திற்கு வந்திருந்தான். முன்பே அவனின் வரவே இதற்காக என திட்டமிடப்பட்டடிருந்தது.
நடனசபாபதி முத்துநாயகி தம்பதியின் மக்கள்.. ஸ்ரீதுர்கா வரலட்சுமி சர்வேஷ்வரன். நிறைவான குடும்பம். சபாபதி தன் நண்பரோடு சேர்ந்து பேப்பர் டீலர் ஷிப் எடுத்து தொழில் செய்துக் கொண்டிருந்தார்.
ஆனால், பிள்ளைகள் வளர்ந்து நிற்கும் நேரத்தில்.. தொழிலில் பிரச்சனை தொடங்கியது. கொடுக்கல் வாங்கலில் சிக்கல்.. கணக்குகளில் குளறுபடி என மெல்ல மெல்ல பிரச்சனை பங்குதாரர்கள் இருவருக்குள்ளும்.
சபாபதியின் பங்குதாரர்.. உன்னால்தான் எல்லாம் என சொல்லி.. ஒருநாள் இரவு.. தங்களிடம் இருந்த.. டன் கணக்கான பேப்பர்களை.. பாதிவிலைக்கு ஒரு பெரிய நிறுவனத்திற்கு தான் மட்டுமே முடிவெடுத்து விற்றுவிட்டு.. பணத்தோடு.. குடும்பத்தோடு எங்கோ சென்றுவிட்டார்.
சபாபதிக்கு நெருக்கடி அதிகமாகியது. தன் மச்சானின் யோசனைப்படி.. தன் பங்குதாரரின் மேல் போலீசில் கேஸ் கொடுத்தார். ஆனால், தீர்வு என்பதே கிடைக்கவில்லை.
அதன் தாக்கங்கள் தொடங்கியது.. ஆர்டர் எடுத்திருந்த கம்பெனிக்கு பேப்பர் கொடுக்க முடியாமல் போக.. அதற்குண்டான நஷ்ட்டம்.. முன்பே இருந்த கடன்.. என எல்லாம் சேர்ந்து திக்குமுக்காடி போனார். உதவினார்கள்.. நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும். ஆனால், எவ்வளவு முடியும்.
சபாபதி, பெரிதாக சொத்து என சேர்த்துக் கொள்ளவில்லை.. சென்னையின் முக்கிய இடத்தில் சொந்த வீடு.. சொந்தமாக குடோன்.. வாகனங்கள்.. என இருந்ததே தவிர.. பெரிய சொத்துகள் என இல்லை. மனைவியின் நகையை விற்று.. பாதி கடன் கட்டி சமாளித்தார். மூலபொருள் வாங்க காசில்லை.. வேலையாட்களுக்கு தேதி தவறிய சம்பளம்.. என தொழில் நொடிந்து போனது.. அடுத்த இரண்டு வருடத்தில்.
சபாபதி, தொழிலின் நிலையை உணர்ந்து.. தன் குடும்பத்தை முன்பே.. சென்னையிலிருந்து தூரமாக அனுப்பினார். தன் மாமியார் வீட்டில் மனைவி மகள்களை குடி வைத்தார். தன் மகனை தன் அக்கா வீட்டிற்கு அனுப்பினார் படிக்க.
சபாபதி.. வீட்டின் மேல் கடன் வாங்கியிருந்தார். வட்டி அதிகமானதால்.. ஆட்கள் வீட்டில் வந்து மிரட்ட தொடங்கினர், சென்னையில். அப்போதுதான் தன் மனைவி முத்துநாயகியின் அண்ணனிடம் தன் தொழிலை எடுத்துக் கொள்ள சொன்னார். ஆனால், அந்த தொகை கடனை முழுவதுமாக செலுத்த முடியாத அளவுதான் இருந்தது.
பிரமாண்டமாக இருந்த தொழில்.. இரண்டே வருடத்தில் அடங்கி போனது. வீட்டினை கடன் கொடுத்த ஆட்கள்.. அபகரிக்க நினைக்க. சபாபதி அப்போதும் போராடினார்.. வீட்டினை போகியத்திற்கு விட்டு.. அந்த தொகையில் கடனை கொடுக்க நினைத்து ஏற்பாடு செய்தார். ஆனால், பாவம்.. வட்டிக்கு மட்டுமே சரியாக இருந்தது.. அந்த தொகை. தொழில் என்பது யானை போல.. அது பிரமாண்டமாக இருக்கும். அது சுற்றி திரிந்தாலும்.. ஒரே இடத்தில் முடங்கி நின்றாலும்.. செலவு என்பது குறையவே குறையாது. யானை கட்டி தீனி போட ஒரு சாமர்த்தியம் வேண்டும்தான் போல. சபாபதி ஓய்ந்து போனார்.
சபாபதி தொழிலின்றி.. வீடின்றி.. வழக்கு நடத்த காசின்றி.. உண்பதற்கு மனதின்றி.. ரயில்வே வழி தடத்தில் தன் தலையை கொடுத்து உயிரிழந்தார்.
முன்பே சிதறியிருந்த குடும்பம்.. சிதைந்து போனது. திருச்சிதான் முத்துநாயகியின் ஊர். அங்கேதான் சபாபதியின் இறுதி காரியங்கள் நடந்தது. சர்வேஷ்க்கு தந்தையின் இறப்பு.. தற்கொலை.. என தெரிய, அதன் காரணங்கள் என கேட்க கேட்க.. உடைந்து போனான். தந்தையை நல்லவிதமாக வழியனுப்ப கூட முடியவில்லை. பதினாறு வயதில்.. வரக்கூடாத சோகம்.. பெற்றவனின் இழப்பு. அதில் நிறைய பயந்து போனான். இனி கடன் கேட்டு எல்லோரும் எங்களைத்தான் தொந்திரவு செய்வார்களா.. அம்மா என்ன செய்வாங்க.. பதட்டம் பற்றிக் கொண்டது, ஆண்மகனை.
சர்வேஷ், படிக்க போகமாட்டேன் என அடம்பிடித்தான். துர்காதான் மூத்தவள்.. இறுதி வருடம் படிப்பும் முடிந்துவிடும் இன்னமும் மூன்று மாதத்தில் என்ற நிலையில்.. தம்பிக்கு ஆறுதல் சொல்லி.. படிப்பை தவிர மற்ற எதுவும் நம் குடும்பத்திற்கு உதவாது என எடுத்து சொல்லி.. ஹைதரபாத் அனுப்பி வைத்தாள்.
எல்லோரும் சர்வேஷினை தேற்றிவிடும் சாக்கில் தேறி மீண்டுக் கொண்டனர். முத்துநாயகி, அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு தைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.. அதுவே தொடர்ந்தது. துர்கா, கல்லூரி சென்றாள். வரலட்சுமி, கல்லூரி முதல் வருடம்.
துர்காவிற்கு அடுத்த மூன்றுமாதத்தில் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அஹ.. குடும்பமே கதி மோட்ஷம் அடைந்தது.
சபாபதிக்கு கடன் கொடுத்தவர்களும், கடனை கேட்க தொடங்கினர். முத்துநாயகியின் பெற்றோர் திருச்சியில் இருந்த தங்களின் வீட்டினை விற்று.. மகளுக்கு பாதிபங்கு கொடுத்தனர். அதில் கடன்களை அடைத்தனர். ஆனாலும், சென்னை வீட்டினை விற்கதான் வேண்டியிருந்தது.
தன் மகன் குமாரவேல் கூப்பிட்டு வரதா பெற்றோர்.. பேத்திக்காக சென்னை வந்தனர். முத்துநாயகி.. இரண்டு பெரியவர்கள்.. துர்கா.. என எல்லோருமாக குமாரவேல் வீட்டின் அருகேயே குடி வந்தனர். கடனில்லா வாழ்க்கையும்.. பயமில்லாமல் சுவாசிப்பதும்.. நிறைவை தந்தது முத்துநாயகிக்கு. வீடு விற்றதின் மிச்ச சொச்ச பணத்தினை பத்திரப்படுத்தினார். மகளின் வருமானத்தில் அடுத்த மகளின் படிப்பு செலவு, வீட்டு செலவு.. என சமாளித்தார். தானும் தையலை விடாமல் செய்தார்.
அடுத்த இரண்டு வருடத்தில் வரலக்ஷ்மியும் படிப்பு முடித்து வேலை பார்க்க தொடங்கினாள். வயது மூப்பு காரணமாக பெரிய ஜீவன்கள் இருவரும் இறையடி சேர்ந்தனர்.
மகன் சர்வேஷ் படித்து முடித்து வந்தான். வேலை சென்னையில் என்றாக.. சர்வேஷ் வந்தான்.. நீண்ட வருடங்கள் கழித்து. மகன் வந்ததில் நிரம்ப சந்தோஷம், முத்துநாயகிக்கு.
அடுத்த அடுத்த வருடத்தில் இரு மகள்களின் திருமணத்தையும் முடித்தார் முத்துநாயகி. சர்வேஷ், பொறுப்பாக அக்காக்களின் திருமணத்தில் முன் நின்றான்.. லோன் வாங்கி திருமணத்தினை நடத்தினான். மேலும் அக்காக்கள் இருவரும் சிறுக சிறுக சேர்த்திருந்தனர். கைமீறாத செலவுகளோடு சமாளித்தனர் அந்த திருமணங்களை. சபாபதி அவர்களுக்கு துணை நின்றார். அக்காக்களின் கையிலிருந்து.. சர்வேஷ் பொறுப்புகளை தான் வாங்கிக் கொண்டான்.
இப்போது, தனது முதல் அக்கா.. துர்காவின் மகன் காதுகுத்தும் வைபவம். திருமணமாகி நீண்ட வருடங்கள் சென்று இப்போதுதான் அவளுக்கு குழந்தை பிறந்திருக்க.. ‘கண்டிப்பாக, நீ வந்தால்தான் விழா’ என.. சொல்லியிருந்தாள் துர்கா.
துர்காவின் கணவர் ஊர்.. ஆத்தூர். அவர்கள் தோட்டத்திலேயே குலதெய்வம் இருக்க.. அங்கேயே சொந்தங்களை அழைத்து விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.
தாய்மாமனாக முறைமைகளை சிறப்பாக செய்திருந்தான் சர்வேஷ். அன்னைக்கு நிரம்ப சந்தோஷம்.. ஊர் மெச்சியது.
அன்று இரவு.. மாமாக்கள் அவர்கள் பங்காளிகளோடு பார்ட்டி செய்துவிட்டு.. அங்கேயே தங்கிவிட்டு. மறுநாள் மதியம்தான் அன்னையோடு சென்னை வந்து சேர்ந்தான், சர்வேஷ்.
!@!@!@!@!@!@!@!@!@!
வர்ஷினிக்கு, மூன்றுநாட்கள் காலவகாசம் இருந்தது.. வேலையில் சேருவதற்கு. அதனால் சென்னையை சுற்றி பார்க்கலாம்.. அப்படியே ரூட் தெரிந்துக் கொள்ளலாம் என அவளும் அவளின் தந்தையும் முடிவு செய்திருந்தனர்.
இவர்கள் இருப்பது வேளச்சேரி. வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர், முதலில் விநாயகரை வணங்கிவிட்டு.. வர்ஷினி காரேடுக்க.. தந்தை பொறுமையாக அமர்ந்து பேசிக் கொண்டே வந்தார்.. “நம்ம தெரு முனையில் முன்பெல்லாம் காய்கறி சந்தை இருக்கும் வர்ஷி.. இப்போவெல்லாம் சூப்பர்மார்கெட் போக வேண்டி இருக்கு.. நான் சொல்றது இருபத்தியேழு வருஷம் முன்னாடி..” என தொடங்கி நிறைய கதைகள் சொல்லிக் கொண்டே வந்தார்.
வர்ஷினி பொறுமையாக இதெல்லாம் கேட்டுக் கொண்டே.. தனது அலுவகலம் இருக்கும் சாலை வந்து.. தன் அலுவலகம் பார்த்துக் கொண்டாள்.
தந்தை “ஏன்ம்மா.. ஆபீஸ் நல்லா இருக்குல்ல” என்றார்..
மகளும் தலையசைத்தாள்.. எதிர்புறமிருந்த ஒரு குறுக்குசாலையில் காரினை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
தந்தை “அத்தையின் பேத்தி பிறந்தநாள் நாளைக்கு.. அந்த குழந்தைக்கு, போகும் போது ஒரு ட்ரெஸ் எடுத்துட்டு போயிடுவோம். எத்தனை வருஷமாச்சு தெரியுமா.. இப்படி சின்ன சின்ன விசேஷத்திற்கு எல்லாம் வந்து போகி..” என்றார்.
“கண்டிப்பா ஷாப்பிங் போறோம் ப்பா..” என்றாள், மகள் சந்தோஷமாக.
தந்தை பழைய கணக்குப்படி ‘திநகர் போகலாம்’ என்க.
மகளோ ‘நிறைய இடம் இருக்குப்பா வழியில்’ என சொல்லி பெரிய மால் ஒன்றுக்கு சென்றாள். பொறுமையாக சுற்றி பார்த்துவிட்டு.. தனக்கும் தேவையான உடைகளை வாங்கிக் கொண்டு.. குழந்தைக்கும் உடை எடுத்தாள்.