அன்று விடுமுறை தினமாதலால் வீடு சோம்பலாய் விழித்தது. எப்போதும் இருக்கும் சப்தங்கள் இல்லை. எப்போதும் என்ன சப்தங்கள் இருக்குமென்றால் ஸ்ராவணி எழவே மாட்டாள். பாப்பா எந்திருங்க என்று அவளை எழ வைப்பதற்குள் நிலா ஒரு வழியாகிவிடுவாள். சமையலையும் பார்த்து அவளையும் பார்த்து நிச்சயம் ஓய்ந்து தான் போக வேண்டும்.

பாப்பா ஆச்சா என்று கத்திக் கொண்டே இருக்க வேண்டும், எழுவதில் இருந்து, காலை கடன்களை கழிப்பதில் இருந்து, பல் தேய்ப்பது வரை அவ்வளவு நேரமெடுப்பாள், பின் குளிக்க வைக்க அவ்வளவு போராட்டம். அதையும் விட உணவுண்ண அதையும் விட போராட்டம்.

அண்ணன்கள் சத்தமிட்டால் சற்று வேகமாய் நடக்கும், ஆனால் சத்தமிட விட மாட்டாள். அப்பா இருந்தாலும் சத்தமிட மாட்டான். அவள் அம்மாவின் செல்லம் என்று அவனுக்கு தெரியும். பாப்பா என்ற சத்தம் அவன் கொடுத்தாலே என் பொண்ணு எனக்கு பார்த்துக்க தெரியும் என்ற பார்வை நிலாவிடம் இருந்து அடுத்த நொடி அவனை நோக்கி பாயும்.

அதையும் மீறி அவன் சொல்லலாம், ஆனால் மகளிடம் நீ அப்பா பேச்சை கேட்காதே என்று சொல்லிவிடுவாளோ என்ற பயம் அவனை செயல் பட வைக்காது.

வெகு செல்லம், காலையில் அவள் பள்ளி கிளம்பும்வரை அவள் பின்னே மட்டுமே சுற்றிக் கொண்டிருப்பாள்.

மகன்கள் அம்மாவிற்கு தெரியாமல் ஸ்ராவணியை அதட்டிக் கொண்டிருப்பர். அது சற்று வேலை செய்யும்.

தமிழ்செல்வன் விழித்து விட்டவன் எழாமல் அப்படியே படுத்திருந்தான். இன்னும் மக்கள் மூவரும் எழவில்லை. சமையலறையில் பாத்திரங்களின் ஒலி கேட்க, நிலா அங்கிருக்கிறாள் என்று புரிந்தது. பால் காய்ச்சி கொண்டிருப்பாள்.

இவன் ஹாலில் உறங்குவதால் அவன் எழும்வரை, வேலைக்கு உதவிக்கு இருப்பவர் யாரும் வீட்டினுள் நுழைய மாட்டர். பின் வாயிலில் ஒரு கதவு இருக்கும், அதன் வழியாக உள்ளே வருவர்.

அம்மணி அரிசி ஆட்டிட்டீங்களா நான் தான் வந்துருவேன் இன்னைக்கு ன்னு சொன்னனல்லோ

அதற்கு எந்த பதிலும் நிலாவிடமிருந்து இல்லை

அங்கபாருங்க காசு வெச்சிருக்கேன், கடைக்கு போய் இதெல்லாம் வாங்கிட்டு வந்துருங்க என்று கோழி கறி, ஆட்டு கறி இரண்டும் எவ்வளவு தேவை என்று லிஸ்ட் கொடுத்தாள்.

மகன்கள் இருவரின் உணவில் உடற்பயிற்சியில் விளையாட்டு பயிற்சியில் தற்காப்பு கலையில் மிகுந்த கவனம் செலுத்துவாள்.

ஞாயிறு விடுமறை தினத்தில் அவளாய் எதுவும் சொல்ல மாட்டாள். நேரம் கழித்து எழுந்து செய்வார்கள் அவ்வளவே. மற்றபடி பயிற்சியை நிறுத்தவெல்லாம் மாட்டார்கள்.

வாழ்க்கை எப்படியோ அவளை வஞ்சித்ததோ இல்லை நிந்தித்ததோ… ஆனால் அவளுக்கு கிடைத்த வரம் அவளின் மகன்கள். அம்மாவின் முகத்தை கண்களை பார்த்தே புரிந்து நடப்பார்கள். அவளின் எண்ணத்தை சொல்லும் வாய் மொழியாய் சொல்லும் அவசியமே இருக்காது.

தமிழ்செல்வன் மெதுவாக எழுந்து அப்போது தான் அமர்ந்தான். அது அவளின் கண்களில் பட காபியை கொண்டு வந்து டைனிங் டேபிள் மேல் வைத்து சென்றாள்.

அவன் வீட்டில் இருக்கும் போது என்ன தேவையோ வந்துவிடும். அவன் கேட்கும் அவசியமே இருக்காது.

எழுந்தவன், தன்னை சுத்தப்படுத்தி வந்து அமர்ந்து அந்த காபியை பருகி முடிக்க, அம்மா என்ற ஸ்ராவணி யின் கத்தல் கேட்டது, அவளுக்கு எழுந்ததும் அம்மா வேண்டும்.

நிலா ஏதோ வேலையாய் இருக்க, வர்றேன் பாப்பா என்ற அவளின் குரல் கேட்க, இவன் எழுந்து ரூமின் உள் சென்றவன், அம்மா வேலையா இருக்கா கண்ணு, நீ எழுந்துரு, போ பாத்ரூம் போயிட்டு முகம் கழுவிட்டு வா என்று சொல்ல

எல்லோரிடமும் அடம் பிடிக்கும் ஸ்ராவணி, அப்பா சொன்னதும் எழுந்து அவளே அவளின் வேலையை செய்து கொள்ள சென்றாள்.

பின் குளியலறை கதவை திறந்து வந்தவள், ஸ்ராவணி ரெடி என்று முகம் கழுவி நீரோடு நிற்க

அவன் அங்கிருந்த துவாலையை கொடுத்து முகம் துடை என்றான். அவளும் அப்படியே செய்ய, போ சாமி கும்பிட்டு திருநீறு வெச்சு அம்மா கிட்ட போ என்றான்

அவன் சொன்னபடி செய்து அம்மாவிடம் சென்று நிற்க

மா உன் பட்டு குட்டி ரெடி என்றபடி அம்மாவை ஓடி சென்று அணைத்துக் கொள்ள

குளிக்காம ரெடி யா என்று நிலா புன்னகைக்க

தோ சாமி கும்பிட்டு திருநீறு வெச்சிட்டேன் என்றாள் மலர்ச்சியுடன்