ஃபேக்டரியில் இருந்த தர்மா மனைவியை அலட்சியம் செய்ய முடியாமல் ஏற்றான். “நான் சின்ன குழந்தை இல்லை கனி, ஏன் சும்மா கால் பண்ற?” என்றான்.
அப்பா தன் முன்னால் நிற்க அமைதியாக ஹால் சென்றாள் கனி.
“என்ன கால் பண்ணிட்டு அமைதியா இருக்க, லைன்ல இருக்கியா?” எனக் கேட்டான் தர்மா.
“எங்க மாமா சும்மா சும்மா உனக்கு கால் பண்ணினேன்? காலைல ரெண்டு தடவ கூப்பிட்டேன், எடுத்தியா நீ? அப்புறம் இப்பதான் கால் பண்றேன். ஆளாளுக்கு சண்டை போட்டுக்கிட்டு மூஞ்சு தூக்கிக்கிறீங்க, வீட்ட விட்டு வெளில போறீங்க, என்னை பத்தி யாரும் நினைக்க மாட்டீங்களா? இப்ப வீட்டுக்கு வர்றியா என்ன?” என சத்தம் போட்டாள் கனி.
இத்தனை களேபரத்திலும் அவளின் உரிமையான கோவத்தில் அவனுக்கு புன்னகை பூக்க, வெளியிலிருந்து மகள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த நம்பி உள்ளே எட்டிப் பார்த்து விட்டு மீண்டும் சாதாரணமாக அமர்ந்தார்.
“உன்னையெல்லாம் கேட்க ஆள் இல்லாம போச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் போதாது மாமா, பொறுப்பா இருக்க வேணாமா? எங்க போற என்ன ஏதுன்னு எனக்கு கூட சொல்லாம போவியா நீ?”
“இப்பதானே சொல்ற? சரி இந்நேரத்துக்கு அங்க என்ன வேலை? கிளம்பி வா, உடனே வரணும்” கணவனுக்கு கட்டளை இட்டாள்.
“உடனேனா ஏரோபிளேன் வச்சா வர முடியும்?”
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. வந்து சேரு அப்புறம் பேசிக்கிறேன்” என சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
நம்பி வெளி வராண்டவில் அமர்ந்து அருகிலிருந்த தன் வளர்ப்பு நாயை தடவி விட்டுக் கொண்டிருந்தார். மருமகன் எப்போது வருவான் என அடிக்கடி வாயிலை பார்த்துக் கொள்ள தவறவில்லை.
அப்பாவை சாப்பிட அழைத்த கனி அவரின் மறுப்பான தலையசைப்பில் மேலே ஒன்றும் சொல்லாமல் ஹாலிலேயே அமர்ந்து விட்டாள்.
‘முந்தாநாள் கல்யாணம் முடிந்த வீடு போலவா இருக்கிறது?’ என புலம்பிக் கொண்டிருந்தார் பாட்டி.
வீடு வந்த தர்மா மாமனை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றான்.
மகளின் பேச்சை கேட்டு அவன் வந்து விட்டதிலும் தன்னிடம் முகம் திருப்பி செல்லும் அவனது கோவத்திலும் சின்ன சிரிப்பு மலர, வெளியிலேயே அமர்ந்திருந்தார் நம்பி.
தர்மா அறைக்கு செல்ல, தன்னை கண்டு கொள்ளாமல் அவன் சென்றதில் கோவம் கொண்டு அங்கேயே இருந்தாள் கனி.
“நீ பேசித்தான வந்திருக்கான், போ போயி அவனை கவனி” என்றார் பாட்டி.
“என்னத்த கவனிக்க நான்? நீ சும்மான்னு இரு” என்றாள் கனி.
“எல்லாம் சொல்லி தருவாங்களா உனக்கு? போடி அவன்கிட்டன்னா” என பாட்டி அதட்ட, அவரை திட்டி முணு முணுத்துக் கொண்டே அறைக்கு சென்றாள்.
படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தவன் அவளை கண்டதும், “ஏன் உடனே வர மாட்டியா?” எனக் கேட்டான்.
“என்ன ஓவரா மிரட்டுற மாமா? நீ செய்ற வேலைக்கு உடனே ஓடி வரணுமா?”
“சரி வராத போ” என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டான். அவனருகில் வந்தமர்ந்தவள், “எப்படி கச கசன்னு இருக்க பாரு? ரெஃப்ரெஷ் ஆகு மாமா” என்றாள்.
“ஆமாம், நீ கட்டி பிடிச்சு உருண்டது வீணா போச்சு நான் குளிச்சு சுத்த பத்தமா வர்றதுக்கு” கடுப்பாக சொன்னான்.
“நான் சுத்தமாதான் இருக்கேன் நீ என்ன பண்ணுனியாம்?” என அவள் கேட்கவும், வேகமாக எழுந்தமர்ந்தான்.
“வேகத்த பாரு!” என சொல்லிக் கொண்டே முகத்தை பின்னுக்கு இழுத்தாள்.
“குளிச்சிட்டு வந்து அந்த மூஞ்ச என்ன பண்றேன்னு பாரு” என சொல்லிக் கொண்டே குளியலறை சென்றான்.
குளித்து வந்தவன் அமைதியாக ஆடை மாற்றிக் கொள்ள, அவனை முறைத்தே இருந்தாள்.
“வா நீயும் ரெண்டு அடியை போடு” என கிண்டலாக சொன்னான்.
“அத்தை உன்னை அடிச்சதில அவங்க கைதான் வலிச்சிருக்கும் பாவம். நானெல்லாம் அந்த ரிஸ்க் எடுக்க மாட்டேன்” என்றாள்.
“அப்ப உங்கத்தை என்னை அடிச்சதில உனக்கு ரொம்ப சந்தோசம்?” காலையில் அம்மா அடித்த தன் கன்னத்தை தடவிக் கொண்டே கேட்டான்.
அதெப்படி அவளுக்கு வருத்தம் இல்லாமல் போகும்? ஆனால் அத்தையின் ஆதங்கத்தையும் கவலையையும் தவறென சொல்ல முடியாதே. சுணங்கிய முகத்தோடு அவனை பார்த்து வருத்தமாக சிரித்தாள்.
காலையில் நடந்தது பற்றி பேச கனிக்கு பயமும் தயக்கமும். தர்மாவுக்கு அதை பற்றி பேசவே பிடிக்கவில்லை. ஆகவே, வேறு பேசிக் கொண்டே சாப்பிட கீழே வந்து விட்டனர். இன்னும் மாமா சாப்பிடவில்லை என்பதை கேட்டறிந்து கொண்டு அவரை கூப்பிட்டு வரச் சொன்னான் தர்மா.
தான் ஏற்கனவே கூப்பிட்டு அவர் மறுத்து விட்டதை சொன்னவள் அவனையே அழைத்து வரச் சொன்னாள்.
அவர் மீது கோவத்தில் இருந்தவன், “நீ போய் கூப்பிடு, என்ன சொல்றார்னு பார்க்கிறேன்” என வம்படியாக அவளையே அனுப்பி வைத்தான்.
தயக்கத்தோடு வெளியில் சென்றவள் அங்கிருந்த தூணை பற்றிக் கொண்டு, “சாப்பிட வாங்கப்பா” என்றாள்.
தலையசைத்து மகளை தன்னிடம் வரச் சொன்னார். மெதுவாக நடந்து அவரிடம் சென்று நின்றாள்.
மகளின் முகத்தை காணாமல் நாயின் தலையை தடவி விட்டுக் கொண்டே, “அவன் மனசுல நிறைய காயம் இருக்கு. நீதான் அவனை பார்த்துக்கணும்” என்றார்.
மகளின் மனதில் என்ன இருக்கிறது என துளியும் அக்கறை இல்லை, தங்கை மகன் என்றால் இதயத்தையும் அறுத்து கொடுப்பார் என அப்பாவை மனதிற்குள்ளாகவே வசை பாடினாள் கனி.
“என்ன சரியா?” எனக் கேட்டார். சரியென தலையாட்டினாள்.
“உன் அத்தைகாரிய விட உனக்கு இவன்தான் முக்கியம் புரிஞ்சுதா? உன் அப்பத்தா நினைச்சிட்டிருக்கு உன்னை இவன் கைல புடிச்சு கொடுத்திட்டதா, இவனைத்தான் உன் கைல புடிச்சு கொடுத்திருக்கேன். தாமரை சொல்றத எல்லாம் கேட்கணும்னு இல்லை, இவனை வச்சுத்தான் உனக்கு எல்லாம்… ஹ்ம்ம்?”
“இப்போ ஏம்ப்பா இப்படிலாம் சொல்றீங்க?”
“தோணிச்சு, சொல்றேன். தர்மா சாப்பிட்டானா?”
“நீங்க வர்றதுக்காக காத்திட்டு இருக்கு”
“அவன் என்ன ஆடா மாடா அது இதுன்னு பேசுற. மரியாதையா பேசி பழகு” என சொல்லிக் கொண்டே எழுந்தார்.
பழக்கத்தையெல்லாம் எப்படி மாற்றுவதாம்? இவர் சொன்னால் அப்படியே கேட்டு நடக்க வேண்டுமா? என மௌனமாக அப்பாவை தாளித்தவள் வெளியே தலையை நன்றாக ஆட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.
சாப்பிடும் போது மாமனும் மருமகனும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. முன்னரே சாப்பிட்டிருந்த பாட்டி, எட்டி பார்த்து விட்டு உறங்க சென்று விட்டார்.
தங்கள் அறைக்கு வரவும் அப்பா சொன்னதையெல்லாம் கணவனிடம் சொன்னாள் கனி.
“எது உன் கைல என்னை புடிச்சு கொடுத்திருக்காரா? இருந்தாலும் அவருக்கு நக்கல்தான்” என்றான் தர்மா.
“எங்கம்மாக்கு எம்மேல பாசம் இல்லைனு தெரியுமா உனக்கு? இல்லாமதான் காலைல எனக்கு அறை விட்டுச்சா?” எனக் கேட்டான்.
அடி விழுந்த அவனது கன்னத்தை தொட்டு தடவிப் பார்த்தவள், “அந்த பையனை அனுப்பியாச்சா மாமா?” என விசாரித்தாள்.
“அவன் போய் தொலைஞ்சிட்டான். காலைலிருந்து ஒரே டென்ஷன். உன் மாமனை நல்லா கவனிப்பியாம்” என்றான்.
“என் கால்ஸ் அட்டெண்ட் பண்ணாத மாமாவை என்னத்த கவனிக்க? நான் கூப்பிடலைனா வந்திருக்க கூட மாட்ட. பேசாம தூங்கு மாமா” என்றவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான்.
“உன்கிட்ட கூப்பிடாம அப்படியே விட்ருக்கணும் நீ, எதுக்கு கூப்பிட்ட?” என அவன் கேட்க, அவனிடமிருந்து இறங்கிக் கொள்ள துள்ளினாள்.
“முந்தாநாள் முன்னாடி வரைக்கும் எதை நினைச்சுகிட்டு வீடு வந்தியாம்? ஒத்த கால்ல நின்னு நான்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், என்னமோ இவரு ஆசையா கட்டிக்கிட்ட மாதிரி பேச்சை பாரு”
“முந்தாநாள் வரைக்கும் நான் வாழ்ந்தது வாழ்க்கையா? சத்தியமா உன்னை தேடித்தான் வந்திருக்கேன். யாரும் என்னை புரிஞ்சுக்காத இந்த உலகத்துல இப்ப நீ மட்டும்தான் எனக்கு ஆதாரம் கனி”
“ஹையோ போதும், ரெண்டு திட்டு கூட திட்டிக்க. ஃபீலிங்கா எல்லாம் பேசாத மாமா. உனக்கு செட் ஆகல” என்றவளை படுக்கையில் விட்டு, தானும் அவள் பக்கத்தில் சரிந்தான்.
எதுவும் வம்பு செய்யாமல் கணவனுக்கு இணங்கி நடந்தாள் கனி.
இன்பத்தில் திளைத்து களைத்து உறங்கி விட்டான் அவன்.
தர்மாவின் அம்மாவாக தாமரைக்கு என்ன கவலையோ அதே கவலையை அவனது மனைவியாக தானும் ஏந்திக் கொண்ட கனி, தன் ஆறுதலுக்காக கணவனின் கை வளைவில் புதைந்து கொண்டாள்.