நெஞ்சை கொய்தாள் வஞ்சி -8

அத்தியாயம் -8

அசந்து உறங்கிக் கொண்டிருந்த கனிஹாவின் கன்னத்தை தட்டி, அவளை எழுப்பி விட்டான் தர்மா. கண் விழித்தவள் குளித்து தயாராகி அமர்ந்திருந்த தர்மாவை பார்த்து அதிர்ந்து விட்டு நேரத்தை கண்டாள்.

நேரம் எட்டாகியிருக்க “இனிமே ரெடியாகி கீழ போக ஒம்போது மணிக்கு மேலாகிடும். எல்லாரும் என்ன நினைப்பாங்க? நீ எந்திரிச்சிப்பவே என்னையும் எழுப்பி விட்ருக்கலாம் மாமா” என குறையாக சொன்னாள்.

அவளை எழுப்பி தோளோடு அணைத்துக் கொண்டவன், “எதுக்கு டென்ஷன் ஆகுற?” என்றான்.

அவனிடமிருந்து விலகி விரிந்திருந்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டுக் கொண்டே, “உனக்கென்ன… உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க, உன்கிட்ட கேட்க வேண்டியதையும் சேர்த்து எங்கிட்டதான் கேட்பாங்க. பெரியம்மாவை கூட விடுங்க, அத்தை கோவமா ஏதாவது பேசிடுவாங்க” என்றாள்.

“நானும் உன் கூடத்தான் இருக்க போறேன். இப்பவும் உனக்கு பசிக்குமேன்னுதான் எழுப்பி விட்டேன், இல்லைனா தூங்கட்டும்னு விட்ருப்பேன்”

“தூக்கம்லாம் ஓடியே போச்சு மாமா”

“அப்படியா?” எனக் கேட்டு அவளை இழுத்தணைத்துக் கொண்டான்.

அவளும் அவனை அணைத்துக் கொண்டு, “கல்யாணமே வேணாம்னு சொன்ன என் மாம்ஸை எங்கேயாவது பார்த்தியா மாமா? உன் கண்ணுல பட்டா நைட்ல என்கிட்ட நடந்துகிட்டதுக்கெல்லாம் நியாயம் கேளு” என்றாள்.

“தப்பு செஞ்சாதான் நியாயம் கேட்கணும், சரியா நடந்தா அப்ரிஷியேட்தான் பண்ணணும். உனக்கு ஏதும் குறைன்னா சொல்லு, அதை வேணும்னா சொல்றேன். இன்னிக்கு நைட் குறையில்லாம உன் மாமன் கவனிச்சுப்பான்” என்றான்.

அவள் விலக நினைக்க, விடாதவன் அவளின் கூந்தலை அவிழ்த்து, கூந்தல் இழைகளுக்குள் விரல்களால் விளையாடிக் கொண்டே, அவளின் கழுத்து வளைவில் உதடுகளை உரச விட்டான்.

கனிஹா தர்மாவிடம் மயங்க, நேரமாகி விட்டது என்ற நினைப்பு ஒரு பக்கம் இருந்த போதும், மனைவியை விட்டு விலக முடியாமல் தவித்தான் அவன்.

“விடு மாமா” என சொல்லிக் கொண்டே விலகாமல் அவனோடு ஒன்றினாள் கனி.

“கனி…” என தாபமாக அழைத்துக் கொண்டே அவளுள் புதைய ஆரம்பித்தான் தர்மா. அவர்களின் நேரம் தித்திப்பாக நகர ஆரம்பித்தது.

தர்மாவும் கனிஹாவும் தயாராகி கீழே வந்த போது கனியின் அம்மா பக்க உறவுகள் ஊருக்கு செல்ல தயாராகி இவர்களுக்காக காத்திருந்தனர்.

வார இறுதியில் நடக்கவிருக்கும் விருந்தையும் முடித்துக் கொண்டு செல்லலாம் என்றான் தர்மா. இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறதே, வீட்டையும் பார்க்க வேண்டும், விருந்தன்று வருகிறோம் என சொல்லி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டனர்.

கனியின் தலையில் ஈரம் சொட்டிக் கொண்டிருக்க, வேலம்மாள் பாட்டி அவளுக்கு துவட்டி விட்டார்.

“அவ என்ன குழந்தையா ம்மா? விடு, சாப்பிட்டு போயி ஹேர் டிரையர் போட்டு காய வச்சுக்குவா” என்றார் தாமரை.

“இவ்ளோ ஈரத்துல இருந்தா என்னாகிறது? நீ சும்மாயிரு” என மகளை அதட்டிய பாட்டி, தன் பேத்திக்கு செய்யும் சேவையை நிறுத்தவில்லை.

தர்மா வந்தவுடன் தன்னை வந்து பார்க்கும் படி அம்மாவிடம் முன்னரே சொல்லியிருந்தார் நம்பி. அதை பாட்டி சொல்லவும், “நீ சாப்பிடு கனி” என சொல்லி நம்பியை தேடிக் கொண்டு சென்றான் தர்மா.

‘மாமா சாப்பிட்ட பிறகு சொல்லக்கூடாதா?’ என பாட்டியை கனி முறைக்க, “ஏன் அவனுக்கு பசிக்கலையாமா? கூப்பிட்ரீ அவனை” என அவளிடம் சொன்னார் தாமரை.

“அப்பாவை பார்க்க போகுது போல, இடைல நான் போய் பேசினா அப்பா திட்டுவாங்க அத்தை” என்றாள் கனி.

“நல்லா திட்டுவாரு. இனிமே அவன் மேல உனக்குத்தான் எல்லா உரிமையும். அடம் புடிச்சு அவனை கட்டிக்கிட்டது பெரிய விஷயமில்லை. திமிறிகிட்டு திரியுற சண்டியரை அடக்கி வை, இவன் அடங்கினா உங்கப்பாவும் அடங்கிப் போவாரு. எல்லாம் உன் கைலதான் இருக்கு, போ கூப்பிட்டு வா அவனை” கட்டளையாக சொன்னார் தாமரை.

நம்பி யாருடனும் பேசிக் கொண்டிருக்கையில் வேறு யாரும் இடையிட்டால் அறவே பிடிக்காது. யார் என்ன என பார்க்காமல் பேசி விடுவார். ‘இந்த நாளை கெடுக்காமல் விட மாட்டேன் என நினைத்து விட்டார் போல அத்தை’ என நினைத்துக் கொண்டே  அப்பாவின் அறைக்கு சென்றாள் கனி.

‘அவளை எதற்கு அனுப்பி வைத்தாய்?’ என வேலம்மாள் கடிந்த போதும், “நீதான் என் பேச்சை கேட்கல. அவளாவது சரியா நடக்கட்டும். என் புள்ள வாழ்க்கைக்காக இல்லை, உன் பேத்தி வாழ்க்கை நல்லாருக்கணும்னு நினைச்சீனா அமைதியா இரு சொல்லிட்டேன்” என எச்சரிக்கை போலவே சொல்லி விட்டார் தாமரை.

நம்பியின் அறைக் கதவு முழுதும் அடைக்க படாமல் பாதி திறந்தே இருந்தது. ஆதலால் அதிக தயக்கம் இல்லாமல் கதவை நன்றாக திறந்து எட்டிப் பார்த்தாள் கனி.

தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்த நம்பியும் தர்மாவும் வாயிலை பார்த்தனர்.

“என்ன கனி?” என தர்மா கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “என்ன வேணும் உனக்கு, எதுக்கு இங்க வந்த?” என அதட்டினார் நம்பி.

“மாமா இன்னும் சாப்பிடல ப்பா, அதான்” என்றாள் கனி.

“வருவான் போ” என சிடு சிடுத்தார் தர்மா.

தன் கணவனை முறைப்பாக பார்த்துக் கொண்டே சென்று விட்டாள் அவள்.

“எம்மேல உள்ள கோவத்தை அவகிட்ட காட்டுறீங்களா மாமா? ஏன் இப்படி பேசி அனுப்புனீங்க அவளை?” என அதிருப்தியாக கேட்டான் தர்மா.

“உனக்கு தேவையில்லாத வேலைதானே அது? முந்தா நாள்தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, அதுக்குள்ள எதுக்குடா இப்படி பண்ணின? கனி மேல அக்கறை இருந்தா ஒழுங்கா வீட்ல இருக்கணும் நீ” என அவனிடமும் கோவப்பட்டார் அவர்.

தன் செயலை நியாய படுத்தி அவரிடம் பேசிக் கொண்டிருந்தான் தர்மா.

பசி வயிற்றை கிள்ள, சாப்பிட கூட விடாமல் அத்தை கட்டளை போடுவதும் அப்பா கோவம் கொள்வதும் அனைத்திற்கும் மேலாக தர்மா தன் அப்பா பேசியதை வேடிக்கை பார்த்ததுமாக இருக்க மனதிற்குள் பொருமினாள் கனி.

“அவன் வரலையா? உன் அத்தை கோவ பட போறாடி?” என்றார் பாட்டி.

“அவருக்கு பசிச்சா வர போறார். இன்னும் அரை நிமிஷத்துக்குள்ள ஏதாவது நான் சாப்பிடலைனா மயக்கம் போட்ருவேன் அப்பத்தா” என சொல்லிக் கொண்டே தனக்கு தானே பரிமாறிக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள் கனி.

தாமரைக்கு ஒரு அழைப்பு வந்திருக்க, மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார். அத்தை வருவதற்குள் சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று விட வேண்டும் என நினைத்து வேகமாக சாப்பிட்டாள் கனி.

“எங்கடி அவனை?” என கோவமாக கேட்டுக் கொண்டே வந்து நின்றார் தாமரை.

“அப்பாவோட ரூம்ல அத்தை, ஏதோ முக்கியமா பேசிட்டு இருக்காங்க” என கனி சொல்ல, கொஞ்சமும் கோவம் குறையாமல் அங்கே சென்றார் தாமரை.

“அவ போயி அவனை திட்டி அழைச்சிட்டு வருவா, நீ சாப்பிடு தங்கம்” என்ற பாட்டி, பேத்திக்கு சூடாக இன்னும் இரண்டு இட்லிகளை எடுத்து வைத்தார்.

கனி சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் தாமரை சத்தமாக பேசுவது போலிருந்தது. பயந்து போன இருவரும் நம்பியின் அறைக்கு விரைந்தனர்.

தர்மாவின் கன்னத்தில் தாமரை அறைய, கன்னத்தை தாங்கிப் பிடித்துக்கொண்ட தர்மா தன் அம்மாவை கோவமாக பார்த்தான்.

“என்ன செய்யுற நீ!” என தங்கையிடம் கோவப்பட்டார் நம்பி.

“நீ பேசாத அண்ணா, எல்லாம் உன்னாலதான். இவன் யாரு போலீசா ஜட்ஜா இல்லை கடவுளா? அந்த பையன் இன்னும் அரை மணி நேரத்துல அவன் வீட்டுக்கு போய் சேரலைனா நானே ஸ்டேஷன் போயி இவன் பேர்ல கம்ப்ளைண்ட் கொடுத்திடுவேன்” என ஆவேசமாக சொன்னார் தாமரை.