விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. இரவில் அடர்ந்திருந்த பனி மகள், தலைவனின் பார்வை பட்டால் உருகிக் கரைந்துவிடும் எண்ணத்தில்,காதலுடன் ஆதவனை எதிர்பார்த்திருக்க,இன்னும் சிறிது நேரத்தில் உதயமாகி விடுவான் சூரியத் காதலன். ஒவ்வொரு விடியலும்,தன்னுள் சில எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி, ஏதோ ஒன்றை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த அழகான விடியலில், மதுரையின் பிரதான சாலையில் இருந்த அந்த மிகப் பெரிய திருமண மண்டபமே கலைகட்டியிருந்தது.
திருமண வீட்டிற்குரிய பரபரப்பு கொஞ்சமும் குறையாமல், அங்குமிங்கும் மனிதத் தலைகள் நடமாடிக் கொண்டிருக்க, டிஜேவின் கைவண்ணத்தில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. முகூர்த்த நேரம் அதிகாலையிலேயே என்பதால் உறவினர்களும் வருகை தர ஆரம்பித்திருந்தனர்.
மணமேடை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும்,நவீன அலங்காரங்களிலும் ஜொலித்துக் கொண்டிருக்க.. பட்டுப் புடவை சரசரக்க அதையெல்லாம் மேற்பார்வை பார்த்துக் கொண்டு, ஐயருக்குத் தேவையானதை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் காதம்பரி.
“எல்லாம் முடிஞ்சதா? பந்தியை ஆரம்பிக்கலாமா?” என்றவர் அங்கிருந்த பொறுப்பாளரை கூப்பிட்டு,
“முகூர்த்த நேரம் ஆரம்பிக்க போகுது. நான் அங்க போகணும். இங்க வர்றவங்களை எந்த குறையுமில்லாம கவனிச்சு அனுப்பனும். யாரும் எந்த குறையும் சொல்லிடக் கூடாது. பந்தியில யாரு யாருக்கு என்னென்ன வேணும்னு கேட்டு வைக்க சொல்லுங்க..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்தார் அவரின் தம்பி பாலச்சந்திரன். மணமகனின் அப்பா.
“இதோ வர்றேன் பாலு..! எல்லாரும் அங்க இருந்தா இங்க யாரு பாக்குறது. கல்யாண வீட்ல சாப்பாடு தான் முக்கியம். ஒரு கல்யாணத்துல சாப்பாடு சரியில்லைன்னா காலத்துக்கும் அதைத்தான் பேசுவாங்க. வந்தவங்க வயிறு நிறையணும்.மனசும் நிறையணும். அவங்களை கவனிக்கிறதுல எந்த குறையும் வந்துடக் கூடாது. இந்த மனோகரன் எங்க ஆளையே காணோம்?” என்றார்.
“மனோ அங்க வரவேற்புல இருக்கான் ..! நீங்க வாங்க முதல்ல. வரவேற்புல நீங்க தானே இருக்கணும்.நம்ம சொந்த பந்தமெல்லாம் உங்களைத்தான் கேட்குறாக. ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்ல முடியலை. அண்ணி உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாங்க..!” என்றார் பாலச்சந்திரன்.
“அண்ணி” என்றதும் அவ்வளவு நேரம் முகத்தில் இருந்த டென்ஷன் எல்லாம் சற்று குறைந்தது அவருக்கு. ஆம்.! அவ்வளவு அன்பு, மனைவி மேல். மனைவி தான் அவருக்கு எல்லாமே. பெயர் காதம்பரி. குணத்திலும் அழகிலும் ஈடு சொல்ல முடியாத அன்பான பெண்மணி அவர்.
ராமச்சந்திரன்- காதம்பரி தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் மனோகரன். இளையவள் வேத வர்ஷினி.
மனோகரனுக்கு திருமணம் முடிந்து சந்தியா என்ற மனைவி இருக்கிறாள். மனோகரன் பெங்களூருவில் உள்ள பெரிய ஐடி கம்பெனியில், ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறான். மகள் வேதவர்ஷினி இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.
ராமச்சந்திரனின் உடன் பிறந்த தம்பிகள் இரண்டு பேர். ஒருவர் சிவச்சந்திரன், அவரின் மனைவி நீலாவதி. மற்றொருவர் பாலச்சந்திரன் அவரின் மனைவி மைதிலி.
சிவச்சந்திரன்- நீலாவதி தம்பதியினருக்கு கனிமொழி என்ற மகளும், கிரிதரன் என்ற மகனும் உள்ளனர். பாலச்சந்திரன்- மைதிலி தம்பதியினருக்கு சரண், அகரன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
பாலச்சந்திரன் மூத்த அண்ணன்கள் இருவருடனும் நட்புறவுடன் இருந்தார். ஆனால் சிவச்சந்திரனுக்கும், ராமச்சந்திரனுக்கும் ஒத்து வராமல் இருந்தது. சொத்துப் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் மூத்த அண்ணனை தன் எதிரியாகவே நினைத்துக் கொண்டார் சிவச்சந்திரன். அதில் முக்கியான பங்கு அவரின் மனைவி நீலாவதிக்குத் தான் சேரும். மகள் கனிமொழிக்கு படிப்பு கொஞ்சம் மக்கர் பண்ணியதால் ஒரு டிகிரியுடன், சொந்தத்திலேயே திருமணம் செய்து வைத்து விட்டனர். கிரிதரன் படித்து முடித்து விட்டான். அடுத்து என்ன செய்வதென்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.
பாலச்சந்திரனின் மகன்களில் சரண் மூத்தவன். சென்னையில் ஒரு புகழ்பெற்ற பெரிய பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளான். இளையவன் அகரன் இஞ்சினியரிங் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.
சோழவந்தானை ஒட்டியுள்ள ஒரு விவசாய கிராமம் தான் இவர்களின் ஊர். மணப்பெண் கீர்த்தனா சென்னையை சேர்ந்தவள் என்பதால் அனைவருக்கும் வந்து போக ஏதுவாக திருமணத்தை மதுரை மண்டபத்தில் வைத்திருந்தனர்.
சரண் வெட்ஸ் கீர்த்தனா என்று பெயரைத் தாங்கியிருந்த அந்த அலங்கார பலகையை அலங்கரித்து இருந்தது பல வண்ண பூக்கள். அங்கே மணமகள் அறையில் பாவமாய் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா. அவளும் என்ன தான் செய்வாள் பாவம்.? அதிகாலை மூன்று மணிக்கே எழுப்பி, அலங்காரம் என்ற பெயரில் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தனர். தூக்கம் சரியாக இல்லாததால் கூடுதலாக தலைவலி வேறு. அவளின் முகத்தையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த கோதைப் பாட்டியை பாவமாய் பார்த்தாள்.
“என்ன ஆத்தா? சோர்ந்து போய் தெரியற? கல்யாண பொண்ணு சிரிச்ச முகமா இருக்க வேண்டாமா ?” என்றார் வாஞ்சையுடன்.
“ரொம்ப டயர்டா இருக்கு பாட்டி.தூக்கமா வருது ! என்னை யாரும் சரியா தூங்கவே விடலை ” என்றாள் கீர்த்தனா சிணுங்கலுடன்.
“யாத்தே! அங்க என் பேரன் எப்படா தாலியைக் கட்டுவோம்னு தூங்காமத் திரியறான். நீ என்னவோ தூக்கம் வருதுன்னு சொல்றவ? புதுப் பொண்ணு பேசுற பேச்சா? எங்க காலத்துல எல்லாம்..” என்று ஆரம்பிக்க இருந்தவரை தடுத்தது அந்த குரல்.
“உங்க காலத்துல எல்லாம்…!!” என்று பல்லைக் கடித்தபடி வந்தாள் வேத வர்ஷினி. அவளைப் பார்த்து முகம் மலர்ந்தார் கோதை.
இளம் மஞ்சள் நிறத்தில் பட்டுப்பாவடையும், மேற்சட்டையும், தளிர் இலை சிவப்பு நிறத்தில் கற்கள் பதித்திருந்த தாவணியும்,காதில் தொங்கிய அந்த பெரிய குடை ஜிமிக்கியும், கழுத்தில் அணிந்திருந்த அந்த ஆண்டிக் வகை ஒற்றை ஆரமும்,இடையில் இருந்த ஒட்டியாணமும், தாவணியின் நிறத்தில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களும் அவளைப் பேரழகியாகக் காட்டிக் கொண்டிருந்தது.
“எம் பேத்தி எம்புட்டு அழகு! “ என்று பேத்தியை ரசித்துக் கொண்டிருக்க,
“இங்க உக்கார்ந்து என்ன அப்பத்தா பண்ணிட்டு இருக்கீக? இதுல அண்ணியை வேற பேசியே டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீக? உனக்கு பேசணும்னா உம்ம மூணு மருமகள்களையும் கூப்பிட்டு வச்சு பேச வேண்டியது தானே?” என்று சிலுப்பியவள்,
“உங்க காலம் மாதிரியா இப்போ? மேக்கப்ல ஆரம்பிச்சு சேரி ட்ரேப்பிங் வரை எவ்வளவு வேலை இருக்கு. அவ்வளவு ஈசியா சொல்றிக? “ என்று படபடவென பேச ஆரம்பித்து விட்டாள்.
அவர் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,
“அப்பத்தா..!!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவரை உசுப்பினாள்.
“என்னைய மாதிரியே எம்புட்டு அழகா இருக்கடி..! எம் மருமவட்ட சொல்லி சுத்திப் போட சொல்லணும் என் பேத்திக்கு..” என்றார் கோதை, அவள் கன்னங்களை வாஞ்சையாய் தடவியவாறு.
“அப்படியா சொல்ற அப்பத்தா..? நான் அழகுதான்.. எனக்கே தெரியும்”என்று மலர்ந்தவள்,
“நான் என்ன இல்லாததையா சொன்னேன். நான் அம்புட்டு அழகுன்னு உன் தாத்தா சொல்லிட்டே இருப்பார்..” என்றார் அழகியலுடன்.
“உசுரோட இல்லாதவர் சாட்சி சொல்ல வர மாட்டார்ன்னு அள்ளி வீசிட்டு இருக்க நீ. உன்னைய அப்பறம் கவனிச்சுக்கிறேன்..” என்றபடி கீர்த்தனாவிடம் திரும்பினாள் வேத வர்ஷினி.
“அண்ணி உங்களுக்கு சூடா ஒரு டீ கொண்டு வரவா? தலை வலிக்குதுன்னு சொன்னிங்க. லிப்ஸ்டிக் அப்ளை பண்றதுக்கு முன்னமே குடிச்சுக்கங்க. ரொம்ப டயர்டா தெரியரிங்க..நீங்க இப்படி இருந்தா எங்க அப்பத்தா மாதிரி யாராவது எதையாவது கேட்டுட்டே இருப்பாங்க ” என்றாள் அக்கறையாக. கீர்த்தனாவை சுற்றி இருந்த அவளின் தோழிகள் பட்டாளம் அனைவரும் வேதாவையே சுவாரஸ்யமாக பார்த்திருந்தனர். கீர்த்தனாவின் அம்மா கூட,