நெஞ்சம்– 3

ஆதவன் வரும் முன் எழுந்து சென்று வயலைப் பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய தங்கப்பாண்டி வராந்தாவில் களைப்பாக அமர்ந்து கொண்டு முகத்தில் வடியும் வேர்வையை துண்டால் துடைத்தபடி

“ மீனாட்சி…..காப்பி எடுத்து வாம்மா…..” என்று சமையல் அறையை நோக்கி கத்தியவர்  கால்களை நீட்டி அந்த சோபாவில் தலை சாய்ந்தவர் கண்கள் அந்த வீட்டின் அழகை எப்போதும் போல ஒரு கர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

வீடு கட்டி ஒரு மூன்று வருடம் இருக்கும் நல்ல விசாலமான வீடு ஒவ்வொரு அறையையும் பார்த்து பார்த்து கட்டியிருந்தனர். இந்த வீட்டை கட்டுவதற்காக எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள்.

கைவிட்டு போன வீட்டை மீண்டும் போராடி வாங்கி கட்டியது. ஆம் கைவிட்டு போனது தான். இவர்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக பல நிலங்களை வைத்து ஊருக்கு வேலை கொடுத்து வந்த குடும்பம்.

அப்படி இருந்தவர்கள் இடம் இருந்து நிலம் சொத்து அனைத்தும் ஒவ்வொரு தலைமுறைக்கும் குறைந்து கொண்டே வந்தது கடைசியில் தங்கப்பாண்டி அப்பா விக்ரம பாண்டியிடம் வந்து சேர்ந்ததோ சிறிது நிலம் மற்றும் பரம்பரை வீடு மட்டுமே.

அதை வைத்து விவசாயம் செய்து பழைய படி அனைத்தையும் திருப்ப நினைத்த விக்ரம பாண்டிக்கு பலத்த இடியாக வறட்சி வந்து சேர்ந்தது. அதன் விளைவு பரம்பரை வீடும் கைவிட்டு போய் மனிதன் உடைந்து படுத்த படுக்கையானார்.

அவரின் இறுதி மூச்சு போகும் வரையுமே வீட்டைத் திருப்பி பெற வேண்டும் பழைய படி இந்த ஊரில் ஓங்கி நிற்க வேண்டும் என்று சொல்லியபடி இறந்து போனார் விக்ரம பாண்டி.

அவர் வார்த்தையை லட்சியமாக கொண்டு அயராது அண்ணன், தம்பி மற்றும் மாறன் என்று அனைவரும் சேர்ந்து உழைத்ததன் பலன் இந்த புது வீடு, மில், பல நிலங்கள் சிறு தொழில்கள் பால் பண்ணை என்று பல்கிப் பெருகி இருக்கிறது.

இவற்றை நினைத்தபடியே நிமிர்ந்து பார்த்த தங்கபாண்டி என்னும் காப்பி வராததில் எரிச்சல் அடைந்தவராக முன்பை விட சத்தமாக

“ மீனாட்சி …. காப்பி கேட்டு வர எவ்வளவு நேரம் ஆகுது…” என்று கத்திவிட்டு முகத்தை நன்றாக துடைத்து கொண்டு நிமிர்ந்தவர் முன் காப்பி தட்டு நீட்டப்பட அதை எடுத்தபடி “ எங்க போன மீனாட்சி ஏன் இவ்வளவு நேரம்” என்று நிமிர்ந்தவர் கையில் ஏதோ அசிங்கம் பட்டது போல அந்த காப்பியை தூக்கி எறிந்தவர்.

“ என்ன தைரியம் இருந்த வீட்டுக்குள்ள வந்ததும் இல்லாம உன் கையால காப்பி போட்டு நீட்டுற…” என்று முகம் பயங்கரமாக மாறி பேசியவரை பார்த்து அந்த பெண் பயந்து கை கால் உதற தலை குனிந்து ஒடுங்கி போய் நின்றாள்.

தங்கபாண்டி போட்ட சத்தத்தில் பின் புறம் இருந்து ஓடி வந்த மீனாட்சி அந்த பெண் நின்ற கோலத்தில் என்ன நடந்திருக்கும் என்று ஊகித்தவராக

“என்னங்க… நான் தான் இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னு வீட்டைத் துடைக்க சொன்ன..” என்று தயங்கி கொண்டே பேசியவரை பார்த்து முறைத்த தங்கபாண்டி “ வீட்டைத் துடைக்க சொல்ல நம்ம ஆளுங்க யாரும் உனக்கு கிடைக்கலையா..எத்தன பேரு நம்ம ஆளுங்கள்ல இங்க வேலை பாக்குறாங்க , அத விட்டு…” என்று அந்த பெண்ணை கேவலமாக பார்க்க, அந்த பெண் கூனி குறுகி போய் விட்டாள் அந்த பார்வையில்.

“அது நம்ம கமலத்துக்கு உடம்பு சரியில்லையா அதான் இன்னைக்கு மட்டும் தான்ங்க இவள கூப்டன் “ என்று அவர் தங்க பாண்டியின் கோபத்தை தணிக்க வழியின்றி திணற,  அப்போது தங்க பாண்டி

“ அவ வரலன்னா நீ தொடைக்க வேண்டியது தான அத விட்டுட்டு கண்டத கொண்டு ச்சீ…” என்று முகத்தை திருப்பினார் தங்க பாண்டி.

அப்போது மாடியில் இருந்து மாறன் இவற்றை பார்த்தபடி இறங்கி வருவதை பார்த்த தங்க பாண்டியின் கோபம் போன இடம் தெரியாமல் முகம் மலர்ந்தவராக “ என்ன தம்பி வெள்ளெனவே கிளம்பிட்ட…” என்று இனிக்க இனிக்க பேசியவர் உடனே திரும்பி அவர் மனைவி மீனாட்சியை பார்த்து

“போய் சீக்கிரம் காப்பி போட்டு எடுத்தா..” என்று அதட்டி விட்டு மாறன் புறம் திரும்பி “ தூரமா போகனுமா தம்பி” என்று பாசமாக பேசியவரை பார்த்தபடி சோபாவில் அமர்ந்த மாறன்

“ நம்ம ஊர் ஸ்கூல் பிரின்சிபல்ல பாக்க போறன் பெரியப்பா “ என்று பேசியபடி கையில் நேரத்தை பார்த்தவனின் அருகே அமர்ந்த தங்க பாண்டி

“ தம்பி நான் கூட உன் கிட்ட இத பத்தி பேசனும்னு இருந்தேன் இப்போ தான் நினைவு வருது… நீ என்ன பன்ற ஸ்கூலுக்கு கட்டித் தர போற பில்டிங்கு உங்க தாத்தா பேர வைக்க சொல்லிடு அப்போ தான் யாரு கெட்டு கொடுத்ததுன்னு இந்த ஊருக்கு தெரியவரும் இல்லன இவனுங்க மறந்துடுவானுங்க “

என்று மீசையை முறுக்கியவரை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்க, அந்நேரம் பார்த்து மாறனின் அப்பா வீர பாண்டி கீழே இறங்கி வந்து மாறனுக்கு மறுமுனையில் அமர்ந்தபடி

“ என்ன தம்பி தூறமா போறிங்களா” என்று கேட்க அதற்கு மாறன் வாயை திறக்கும் முன் தங்க பாண்டி “ அது வீரா தம்பி பள்ளி கூடத்துக்கு அந்த பில்டிங் கட்டி தர விஷயமா போறாங்க”

“ஓ.. சரி பாத்து போய்டு வாங்க தம்பி “ என்று வீர பாண்டி புன்னகை முகமாக செல்லவும் மீனாட்சி காப்பி எடுத்துக்கொண்டு வந்தார்.

மீனாட்சி அங்கே இருந்த வீர பாண்டியை எதிர்பார்க்காதவர் ஒரு நிமிடம் யாருக்குக் கொடுக்க காப்பியை என்று அவர் எடுத்து வந்த இரண்டு கப்பையும் பார்த்து கொண்டு இருக்க,

“ என்ன மீனாட்சி காப்பிய கையில வச்சிட்டு முழிச்சிட்டு இருக்க” என்று தங்க பாண்டி அதட்டவும் அதில் மேலும் பயந்த மீனாட்சி

 “ இதோங்க…” என்று காப்பியை தங்க பாண்டிக்கு நீட்ட, அவர் தட்டில் இருந்த இரண்டு காப்பிக் கப்பை பார்த்து விட்டு பல்லை கடித்தபடி “ வீரா முழிச்சு வருவான்னு தெரியாதா மீனாட்சி அவனுக்கு எங்க காப்பி “ என்று உறுமவும், உடனே வீர பாண்டி

“ மதனி வள்ளி எங்க நீங்க மட்டுமா தனியா வேலை பாக்குறீங்க”  என்று பேச்சை மாற்ற

“அது வந்து கொழுந்தன்…, இன்னைக்கு வெள்ளி… அதான் ராமர் கோவிலுக்கு விளக்கு போட போய்ருக்கா வள்ளி” என்று தயங்கி தயங்கி சொல்லிவிட, அதை கேட்டு கோபமான வீர பாண்டி

“பிச், இவ ஒருத்தி இன்னும் கோவில் குலம்னு சுத்திட்டு இருக்கா போனா பொன்னு…” என்று எதோ சொல்ல போக, வீர பாண்டி சொல்ல வருவதை கணித்த மாறன் வேகமாக சோபாவை விட்டு எழுந்து நின்றபடி

“எனக்கு டைம் ஆச்சு பெரியம்மா, நானு வெளிய காப்பி குடிச்சிக்கிறேன், நீங்க அந்த கப்ப அப்பா கிட்ட கொடுத்துருங்க….” என்று சொல்லிவிட்டு இவர்கள் பக்கம் திரும்பி “ நான் போயிட்டு வர்றேன்…” என்று சொல்லியவன் வாசலை நோக்கி சென்றுவிட்டான்.

வெளியே வந்தவன் அவன் ஜீப்பை எடுத்துக்கொண்டு கோபமான முகத்துடன் அவன் நண்பன் விக்ரமன் வீட்டை நோக்கிச் சென்றான்.

இங்கே விக்ரமன் வீட்டில், கண்ணாடி முன் துண்டுடன் நின்று கொண்டிருந்த விக்ரமன் “ இது போட்ட நல்லா இருக்குமா…இல்ல இத போடாவா…” என்று கலர் கலர் சட்டைகளை அவன் மீது வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது அவன் பின்னே இருந்து “ நீ கையில வச்சிருக்கத விட நீ போட்டுருக்க ட்ரெஸ் செம்மையா இருக்கு, அதோட வா ஊரே உன்ன தான் பார்க்கும்” என்று மாறன் சிரிக்க, அவன் சிரிப்பில் முறைத்த விக்ரமன்

“ஏன்டா ஊர்ல இருக்க கிழடு கட்டையெல்லாம் என்ன வச்சி போட்டு தள்ள பாக்குறியாடா “ என்று கையில் இருந்த துணியை மாறன் முகத்தில் எறிய, அதை முகத்தில் படாமல் கேட்ச் பிடித்த மாறன்,

“பின்ன சீக்கிரமா கிளம்பி வாடான்னு சொன்னா, இங்க கண்ணாடி முன்னாடி நின்னு என்னை பார் என் அழகை பார் காட்டிட்டு நிக்குற”

“அது மாறா… ஸ்கூல்க்கு போகனும்னு சொன்னியேடா…” என்று அவன் இழுக்க, மாறன் “ அதுக்கு இப்படி எல்லா துணியையும் பரப்பி வச்சிட்டு இருப்பியாடா “ என்று கட்டிலை காட்ட விக்ரமன்

“அங்க ஸ்கூல்ல டீச்சர்லாம் இருப்பாங்க மாறா அதான் அழகா கிளம்பலாமேன்னு… “ என்று தலை குனிந்து காலால் கோலம் போட, அதை பார்த்து மாறன்  “உவக் ….உவக்…” என்று வாந்தி எடுப்பது போல் செய்தவன் “அந்த கருமத்த மட்டும் படாத பக்கி பாக்க முடியல” மாறன் செயலை பார்த்த விக்ரமன்

“எத்தன மாசம் மாற…ட்ரீட் எப்போ…” என்று பல்லை காட்ட, “ நமுத்து அடக்கம் பண்ணி புதச்சதயெல்லாம் தோண்டி எடுக்காதடா விக்கி என்னால முடியல” என்று மாறன் பல்லை கடிக்க, அப்போது வெளியில் இருந்து “ தம்பி காபி போட்டாச்சி வாங்க ..” என்று விக்ரமனின் தாய் ராஜாத்தி அழைக்கவும்

“இதோ வந்துட்டேன்மா…” என்று குரல் கொடுத்தபடி மாறன் கட்டிலில் இருந்த ஆகாய நீல நிறச் சட்டையை எடுத்து விக்ரமன் மீது எறிந்தவனாக

“இதைப் போட்டுட்டு சீக்கிரமா வாடா… “ என்று சொல்லி சென்றுவிட்டான். வெளியே சென்ற மாறனை பார்த்த விக்ரமன் “ ம்ம்ம் இது நமக்கு கரைட்டா இருக்கும்” என்று அந்த சட்டையை போட தொடங்கினான்.

ரூமை விட்டு வெளியே வந்து சோபாவில் அமர்ந்த மாறன் முன் ராஜாத்தி கடுங்காப்பியில் பொட்டுக் கடலை போட்டு நீட்ட அதை ஒரு சிரிப்புடன் வாங்கியவன் ஒரு வாய் குடித்து பார்க்க கருப்பட்டி சுவையுடன் கடுங்காப்பி மிக அருமையாக இருக்க

“ எப்பவும் போல சூப்பர்ம்மா…..” என்று பாராட்டிய படி குடித்தான் மாறன். மாறனுக்கு கடுங்காப்பி மிகவும் பிடிக்கும் அதுவும் பொட்டு கடலை போட்டு என்றால் அவ்வளவு இஷ்டம் இதை சிறுவயதில் ஒரு முறை விக்ரமுடன் இங்கு வந்த பொழுது சொன்னது, அதை இப்போது வரை நினைவு வைத்து இன்று வரை மாறன் வந்து காப்பி என்று கேட்டாலே இதை தான் போட்டு கொடுப்பார் ராஜாத்தி.

இதை எண்ணியபடி மாறன் மகிழ்ச்சியாக காப்பி குடித்து கொண்டு இருக்க அப்போது ராஜாத்தி அவன் அருகே அமர்ந்தபடி “ பள்ளிக்கூடத்துக்கா தம்பி போறீங்க..” என்று கேட்க, அதற்கு மாறனும்

“ ஆமா ம்மா..நம்ம ஊர் பள்ளிக்கூடத்துக்கு நிறைய பசங்க வராங்களாம் அதுனால இடம் பத்தலன்னு சொன்னாங்க அதான் ஒரு சின்ன உதவி செய்யலாம்னு”

“ஓ.. சந்தோஷம் ப்பா.. பிள்ளைங்க பாவம் நல்ல வசதியா கட்டி கொடுங்க ப்பா…”

“சரிம்மா..நீங்க சொல்லிடிங்கல செஞ்சிடலாம்” என்று மாறன் சிரித்த படி காப்பியை ரசித்து குடித்து கொண்டிருக்க, ராஜாத்தி

“ அப்புறம் தம்பி வீட்டில்ல பொண்ணு ஏதாவது பார்க்கிறார்களா தம்பி உனக்கு..” என்று சொல்லியதை கேட்டு மாறனுக்கு புறைஏற, இருமியவனின் தலையில் தட்டிவிட்ட ராஜாத்தி “ பார்த்து தம்பி “ என்று சொல்ல, உடனே மாறன் முதலில் என்ன சொல்ல என்று முழித்து பின்

“ அது ம்மா.. என் தங்கச்சி மஞ்சு இருக்கால ம்மா அவ இப்போ தான் காலேஜ் இரண்டாவது வருஷம் படிக்கிற அவளுக்கு முடிச்ச பிறகு தான் எனக்கு பண்ணுவாங்க “ என்று சமாளிக்க, அதை கேட்ட ராஜாத்தி தீவிரமாக யோசிக்க தொடங்கினார்.

அவர் முகம் பார்த்த மாறன் “ என்ன ஆச்சி ம்மா..என்ன யோசிக்கிறீங்க”

“அது வந்து தம்பி உனக்கே தெரியும் எங்க கல்யாணம் முடிஞ்சி அஞ்சு வருஷம் கழிச்சி பிறந்தவன், எங்களுக்கு ஒரே பையனா வேற போயிட்டான் அதான் சீக்கிரமாவே அவன் கல்யாணத்த பார்த்துடுவோம்ன்னு பார்த்தா அவன் என்னென்னமோ உளறுறான்”

“உளறுறானா.., அப்படி என்ன சொல்றான்”

“ அது தம்பி அண்ணா இருக்கும் போது நான் எப்படி கல்யாணம் பண்ணுறதுன்னு கேக்குறான் தம்பி “ என்று ராஜாத்தி சொன்னதை கேட்டு குழம்பிய மாறன்

“என்ன அண்ணாவா… யார ம்மா அண்ணன்னு சொல்றான்”

“அட உன்னை தான் தம்பி அண்ணான்னு சொல்றான் ஏதோ உறவு முறையில நீ அவனுக்கு அண்ணா வருவியாமே, அதான் உன் கல்யாணம் முடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம் ன்னு சொல்லிட்டான்” ராஜாத்தி சொன்னதை கேட்டு அதிர்ந்த மாறன் அப்படியே அமர்ந்து இருக்க சரியாக அப்போது தான் விக்ரமன் உடல் முழுக்க செண்டை அள்ளி தெளித்து கொண்டு வெளியே வந்தான்.

வெளியே வந்த விக்ரமனின் கையைப் பிடித்த மாறன் “ நாங்க கிளம்பறோம் ம்மா..நேரம் ஆகிடுச்சி “ என்று வெளியே இழுத்துக்கொண்டு நடக்க, விக்ரமன் “ டேய்…மாறா நான் இன்னும் காப்பி குடிக்கலடா…” என்று விக்ரமன் கதறக் கதற வெளியே இழுத்து வந்துவிட, விக்ரமன்

“ டேய் மாறா காப்பி குடிக்காலனா எனக்கு தலை வலிக்கும்டா…” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பேச, மாறன்

“நல்லா வலிக்கட்டும்… தலை வலிச்சி தலை வெடிக்கட்டும் “

“ அட பாவி மாறா நான் உன் நண்பன்டா….”

“அ…விளக்கெண்ணெ.., நண்பனா நண்பன், அம்மா கிட்ட என்னடா சொன்ன” என்று இடிப்பில் கைவைத்து மாறன் கேட்க, விக்ரமன்

“அம்மா கிட்டயா….” என்று தாடி தடவி யோசித்தவன் “ மதியம் மீன் வாங்கி குழம்பு வைக்க சொன்னடா….சூப்பரா இருக்கும் நீயும் வரியா சாப்பிட” என்று சொன்னவனின் தலையில் ‘நங்’ என்று கொட்டு வைத்த மாறன்

“தீனிமாடு…தீனிமாடு…நான் எதை கேக்குறேன் நீ எதை சொல்றடா..” என்று மீண்டும் அவன் தலையில் கொட்ட, பாவமாக முகத்தை வைத்து தலையை தேய்த்தபடி விக்ரமன்

“டேய் வளர்ற பிள்ளைய தலைல கொட்டாதடா…என்னன்னு தெளிவா சொல்லு “

“யார கேட்டு அம்மா கிட்ட என் கல்யாணத்துக்கு அப்புறம் தான் உனக்குன்னு சொன்ன “ என்று மாறன் எகுற, அதை கேட்டு திரு திருவென விழித்த விக்ரமன்

“அது வந்து மாறா… ஒரு வகையில நீ எனக்கு அண்ணன் முறை தானடா வருவ, அதுவும் இல்லாம நீ வேற என்ன விட பெரியவன் அதான் உனக்கு அப்பறம் நான் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் “ அதை கேட்டு கோபத்தில் விக்ரமனின் கழுத்தை நெறித்த மாறன்

“எதோ வருஷ கணக்குல பெரியவன் மாதிரி சொல்ற எருமை பத்து நாள் வித்தியாசத்துக்கு என்ன அண்ணணா மாத்தி உனக்கு முன்னாடி கல்யாணம் பண்ண பிளான் போடுற “ என்று விக்ரமனை போட்டு அடிக்க, விக்ரமன்

“டேய்…மாறா..வலிக்குதுடா….” என்று கத்தியும் அவன் காதில் வாங்காமல் “வீட்டுல கல்யாணம் பண்ணிக்கோ ன்னு டார்சர் பண்ணுறாங்கன்னு தான் நானே அங்க இங்கன்னு ஓடி தப்பிச்சிட்டு இருக்க இதுல நீ வேற ஏத்தி விடுறியா “ என்று மாறன் கத்த, விக்ரமன்

“ ஐ…மாறா.. யூடு ப்ரூடஸ்” என்று சிரித்தவனை பார்த்து கடுப்பான மாறன் குனிந்து கல்லை எடுக்கப் போக அதற்குள் விக்ரமன் அங்கு சென்ற ஒருவரின் பைக்கில் ஏறிக்கொண்டு “ ஸ்கூல்ல பாக்கலாம் மாறா…டாட்டா…..” என்று கை அசைத்தபடி செல்பவனை பார்த்து

“டேய்…நில்லு…விக்கி….” என்று கத்தியது அவன் காதில் விழவே இல்லை.

பின் மாறன் தலையில் அடித்து கொண்டு  ஜீப்பில் ஏறி அமர்ந்தான். அப்போது அவன் போன் சினுங்க, யார் என்று எடுத்து பார்த்தவனின் முகத்தில் புன்னகை பூவாய் மலர்ந்தது.  போனை அட்டெண்ட் செய்து காதில் வைக்க மறு பக்கம் இருந்து “ அப்பா…..” என்று சத்தம் கேட்க, மாறன் “ மொழி செல்லம்….” என்று பேச தொடங்கினான்.