ஜெய், விஜயன் இருவரும் வீடு வரும் வரை சுசிலா அழ, யோகன் திட்ட என நேரம் கடந்தது. பரமசிவத்திற்கு இதை எப்படி சரிசெய்வது என தலைசுற்றியது. இத்தனை நாள் ஜெய்யும், சுஜியும் சண்டையிட்டு கொள்வதை காண அவர்கள் காத்திருக்க, வெடி வேறிடத்தில் வெடிக்கும் என எதிர்பார்க்கவில்லை.
ஜெய் எப்படி அவனா ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கலாம் என்பதே அவன் காதலை மறுக்க பரமசிவம் தம்பதிக்கு காரணமானது. தாங்கள் சொன்ன வரன் நிர்மலாவை வேண்டாம் என சொன்னது அடுத்த காரணம்.
தரகர் கொண்டு வந்த, தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையிலிருந்த வரன்களைத் தாண்டி, படித்த ஏற்கனவே வேலையிலிருக்கும் பணக்கார பெண் சுஜியின் போட்டோ பார்த்ததும் ஜெய் எனக்கு பிடிச்சிருக்கு, இந்த பொண்ணையே பாத்துடுங்கன்னு சொன்னது அடுத்த காரணம்.
எங்கே படித்த, பணக்கார, வேலையிலிருக்கும் சுஜியை கட்டிக்கிட்டு ஜெய் தங்கள் கையை விட்டு சென்றுவிடுவானோ என அதை தட்டிக் கழிக்க முயற்சி செய்தும், முடியாமல் அவன் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்ட வேண்டியிருந்தது எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. இதெல்லாம் சேர்ந்து சுஜி தலையில் மிளகாய் அரைக்க முடிவு செய்தனர் மூவரும்.
“எங்க செலக்ஷன் சோடை போகுமா? எங்கபையன் வாழ்க்கை எப்படி இருக்கனுமுன்னு எங்களுக்கு தெரியாதா? நாங்க என்னென்ன கற்பனை பண்ணியிருந்தோம் தெரியுமா? எங்க கற்பனையில மண்ணள்ளி போட்டவ நல்லாயிருக்கலாமா? நாங்க வேண்டாமுன்னு சொல்லியும் இவள கட்டுன, இப்ப பாத்தியா உன் பொழப்பே வீணாபோச்சி அப்படின்னு சொல்லிக்காட்ட ஏற்பாடு பண்ணாம விட்டுடுவோமா நாங்க? நாங்கல்லாம் சகுனிக்கே சொல்லிக் குடுப்போமில்ல..” என விடாது கருப்பென தொடர்ந்து ஜெய்யுடன் இருந்து முடிந்தவரை நிம்மதி இழக்க செய்தனர்.
இப்போ விஜயன் என்ன செய்வானோ? கீதா, கவின், பவன விட்டு சாமியாரா போயிட்டா என்ன பண்ண? தலையை பிய்த்துக் கொண்டனர் இருவரும். இதைதானே இந்த குழப்பத்தைதான் எதிர்பார்த்தனர் விஜயனும், காயுவும். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எளிது.
விஜயன் வந்ததும் சுசிலா “நாங்க பண்ணது தப்புதான். எங்கள மன்னிச்சிடு விஜி. உன்ன வக்கத்தவன்னு நாங்க நினைக்கல. எங்களுக்கு புடிக்கலன்னு சொல்லியும் இவளதான் கட்டுவேன்னு உந்தம்பி ஒத்தகாலுல நின்னு கட்டிகிட்டான். அவங்க எங்கள மீறி எப்படி சந்தோசமா இருக்கலாமுன்னு பழிவாங்க இப்படி நடந்துகிட்டோம்.” என உளற ஜெய் சுஜியை பார்த்தான்.
அவள் யாரையும் கண்டுக்காம சமையலறைக்கு போயி எல்லோருக்கும் டீ போட்டு கொண்டிருந்தாள்.
“பாரு இவள.! இதுதான் என்னை இன்னும் வெறியேத்துது. என்னை கொஞ்சமாச்சும் மதிக்கிறாளா? நான் இவ்ளோ பேசறேன், ஏதாவது அவ மூஞ்சில தெரியுதா பாறேன். கண்ணு கலங்குதா? கண்டுக்காம அவ வேலைய பாக்கறா பாரு. அப்ப நானு யாரு அவளுக்கு?”என கத்த
“நான் யாருன்னு கேட்டு சொல்லுங்க மாமா? அத அவங்க சொன்னதுக்கு அப்புறம் நான் என்ன நெனச்சேன்னு சொல்றேன்.” என்றாள் சுஜி.
“இவ எனக்கு யாருமில்ல. யேன் மவன யேங்கிட்ட இருந்து பிரிச்ச மானங்கெட்டவ. மான ரோசமிருந்தா இங்க இருப்பாளா? கல்யாணமான ரெண்டாவது நாளே நான் இவ சோத்துல ஊத்துன தண்ணீய பாத்து பின்னங்காலு பொடனில அடிக்க ஓடியிருக்க மாட்டா?” என சுசிலா கோபமா கத்த
“இவங்களுக்கு யாராகவுமே இல்லாத நானு எதுக்கு இவங்களுக்கு, இவங்க வார்த்தைக்கு மரியாதை காட்டனும்? எனக்கு மான, ரோசம் இருக்கறதாலதான் பதினேழு வருசமா இவங்கள பாத்துக்கிறேன். “இன்னா செய்தாரை ஒறுத்தல்” இப்ப புரியுமுன்னு நினைக்கிறேன்.” சுஜி கூலாக சொல்ல
“டேய் அவ சொல்றத கேட்டியா? அப்ப நான் என்ன பிச்சைக்காரியா? ஒன்னுமில்லாம நான் இங்க இருக்கனா?” என பேச்சை திசை திருப்ப
“உங்க மனசல இருக்கறது தான் வாயில வருது. அப்ப மட்டுமில்ல எப்பவுமே நீங்க அதுதான். அதனால தான இன்ஸ்டால்மெண்ட்ல ஜெய்ய வித்துட்டு இருக்கிங்க. வித்து காசு, நகைன்னு வாங்கிட்டிங்க. இப்போ எப்படி நீங்க வித்த பொருளு உங்க சொந்தமாகும்? ஜெய் மொத்தமா சுஜிக்குதான். என்ன கொஞ்சம் காஸ்ட்லீதான் சுஜி. இவ்வளோ வொர்த் இல்ல…. வாங்கறதுக்கு ஒத்துகிட்ட….. இல்லன்னா ரிட்டர்ன் பண்ணிடலாம்….அப்பவே நீ ரிட்டர்ன் பண்ணியிருந்தா அவங்களே அவனோட வாழ்ந்திருப்பாங்க, இல்ல கீதாகிட்டயே வாழ சொல்லியிருப்பாங்க அப்படிதானம்மா? அவன் எப்படி நீங்க சொன்ன பொண்ணுகூட இல்லாம வேற பொண்ணுகூட வாழலாம்?” என விஜயன் சொல்ல
சுசிலா அதிர்ச்சியுடன் பாக்க “விஜி ஏதோ ஒரு வேகத்தில சுஜியை அவ சொன்னா நீ இப்படி அவள கேவலமா பேசுற. அவ உன் அம்மா. அதுக்கு மரியாதை குடு” பரமசிவம் சொல்ல,
“நான் என்ன பண்ணட்டும்? எங்க பாட்டி சொல்லிக்குடுத்த நல்லதவிட நான் பாத்து வளந்த உங்கள போல தான் பேச வருது. உங்க மகன், உங்க வளர்ப்பு வேற எப்படி பேசனும்? உங்க பொண்டாட்டி பேசினது கேட்டு காதுல தேன் பாஞ்சிச்சா? நா பேசினது வெந்நீ ஊத்துன மாறி இருந்துச்சா? பொண்ணு பாக்க ஆரம்பிச்சது நீங்க. தரகர வரசொன்னது நீங்க. பொண்ணும் உங்களுக்கு பிடிச்சாப் போதுமுன்னா கல்யாணம் உங்களுக்கா? அவனுக்கா? உங்களுக்கு பிடிக்குது, பிடிக்கல வாழப் போறவன் அவன் அவனுக்கு பிடிச்சா பத்தாதா?”
இதெல்லாம் ஒரு காரணமுன்னு பதினேழு வருஷமா அந்த புள்ளைய கொற சொல்லிகிட்டே இருக்குறப்போ வரைமுறை எல்லாம் தெரிஞ்சிதா? கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே சோத்துல தண்ணீ ஊத்துனேன்னு என்ன பெத்தவ சொன்னது கேட்டிங்கல்ல? ஏம்மா சுஜி அப்பவே நீ வரதட்சணை கொடுமைன்னு கேஸ் குடுத்திருந்தா இன்னைக்கு இந்த தகுதியில்லாத பேச்செல்லாம் கேக்க வேண்டியிருக்காதே. உனக்கும் நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கும். இவங்க பாத்த பொண்ணு இவங்கள சாணி அள்ள வச்சிருக்கும். இவங்களும் காந்தி காட்டுன குரங்குங்க பொம்மை மாதிரி ரெண்டு மருமகளுங்ககிட்டையும் வாய் பொத்தி வாழ்ந்திருப்பாங்க.” என சொல்ல தங்கள் எதிர்காலம் விஜயனின் வார்த்தைகளில் தெரிந்தது.
ஆமாம். இனி விஜயன் இவர்களை ஜெய்யிடம் விட்டு வைக்க மாட்டான். அவனோட கூட்டிட்டு போயிடுவான். விஜயனிடம் ஒரு பழக்கம் உண்டு. தவறு செய்தால் அதை மறக்கும்வரை அவனது வார்த்தைகள் குத்தீட்டியாய் உயிரை குறைக்கும். மன்னிக்கவும் மாட்டான். அவர்களை அதன்பின் நம்பவும் மாட்டான். இதற்காகவே கீதா விஜயனிடம் பதமாய் பம்மியபடி நடப்பாள்.
ஜெய்யும், சுஜியும் கூட இதனாலே இதைப்பற்றி இதுவரைக்கும் விஜயனிடம் சொல்லவில்லை.
“நான் சொல்றபடி செய்யறதுன்னா சரி. இல்லன்னா உங்க ஆச மருமவ அங்க டெல்லி பக்கத்துல ஏதோ கோயிலுக்கு போயிருக்கோமுன்னு கொஞ்சம் முன்னாடி சொன்னா. அங்கயே அவள விட்டுட்டு வர சொல்லிடுவேன். யாரும் தேடாம கிளம்பி வர வைச்சிடுவேன். மொழியும் தெரியாம பணமும் இல்லாம அவ என்ன பண்ணுவா? ஐய்யோ பாவம்.” என்றான் ஆனந்தமாக.
“டேய் ஜெய், சுஜிகிட்ட இஞ்சி டீ போட்டுட்டு வர சொல்லு. குடிச்சி ரொம்ப வருசம் ஆகுது. விடுதலை,.. விடுதலை…. எப்படியும் பணமா, கீதாவான்னு கேள்வி வந்தா என்ன பெத்த மவராசி பணக்கட்டதான் எடுப்பா. இந்த கீதாவோட இம்சையில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்க போகுது. இதயேன் முன்னாடியே பண்ணாம போனேன்?” விஜயன் பேச பேச பரமசிவம் வாயடைத்து நின்றார்.
கீதாவுடன் மகன் சந்தோசமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் விஜயனின் தற்போதைய உற்சாகம் அவரை அதிர்ச்சியில் தள்ளியது. தனக்கும், சுசிலாவிற்கும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருந்தாலும் சுசிலா சோகமாக உட்கார்ந்து இருந்தாலே மனம் தாங்காது. ஆனா எங்கோ, எல்லாவற்றையும் இழந்து அவள் படப்போகும் கஷ்டங்கள் தெரிந்தும், விஜயனைப் போல் ஒருவன் சந்தோஷமா இருந்தா…
.. எப்படி? மனம் பதறியது.
ஜெயனுக்கு தண்டனையா? கீதாவிற்கு பாதுகாப்பா? பரமசிவம் யோசித்தார். கீதா பக்கம் மனம் சாய்ந்தது.
“ விஜயா நீ சொன்னதெல்லாம் செய்யறேன். கீதாவை பத்திரமா கூட்டிட்டு வர சொல்லு…..சுசிலா இனி நீ எதுவும் பேசகூடாது” என அவர் சொல்ல,
“எதை சொல்லக்கூடாது, யோகன் வயிற்றிலிருக்கும் போது படியில எண்ணெய் ஊத்தினதையா? இல்ல சுஜியோட தாலிக்கொடி மாடல்ல நீங்க வாங்கி வச்சி ஏமாத்த நினைச்ச நகைய பத்தியா? பரிட்சையில பாஸ் பண்ண விடக்கூடாது. வேலைக்கு போறதை நிறுத்தனும் அப்படின்னு ப்ளான் பண்ணதையா? எதை சொல்லக்கூடாது? அப்ப இன்னும் என்னவெல்லாம் பண்ணிங்க?” என விஜயன் கேக்க
திருடனுக்கு தேள் கொட்டியது போலானது இருவருக்கும்.
“சுஜிக்கு தெரியாம அவ பீரோவில் இருந்து பணம், நகைன்னு நிறைய எடுத்திருக்கேன். அதெல்லாம் இரு கொண்டு வர்றேன். அதைதான் சொல்லாதன்னு உங்கப்பா சொன்னாரு. சொன்னா இனிமே எது காணாமல் போனாலும் எல்லோரும் நான் எடுத்ததா சந்தேக படுவாங்கன்னு சொல்ல வேணாமுன்னு சொன்னாரு.” என சொல்லிக்கிட்டே போயி ஒரு பையை எடுத்து வந்து தர விஜயன் அசந்து போனான்.
அதில் ரூபாய் நோட்டுகள் உண்டியலில் இருப்பதுபோல சுருட்டி போடப்பட்டிருந்தன. அள்ள அள்ள வந்துகிட்டே இருந்துச்சி. விஜயனும் ஜெய்யும் 100,200,500 என பிரித்தெடுத்தனர்.
“விஜிப்பா இந்த நாடகமெல்லாம் நீங்களே பாருங்க. நானும் கவியும் போய் தூங்கறோம்” என யோகனும், கவியும் அறைக்கு சென்றனர்.
“ சுஜி இதெல்லாம் உன்னுடையது. எடுத்து வைம்மா.” என விஜயன் அதனுள் இருந்த சிறு பையை தர சுஜி வாங்கி கீழே கொட்டினாள்.
ஜெய்யும், விஜயனும் அதை திரும்பி பார்க்க அதனுள் தோடுகள், மோதிரங்கள் தங்க காசுகள் என அதுவே நிறைய இருந்தன.
ஜெய் சுஜியிடம் வந்தவன், “ சாரி சுஜி. இது எனக்கு முன்னமே தெரியும். உனக்கும் இது தெரியும். ஆனாலும் அவங்கள விட்டுக்குடுக்க முடியல. அதான் எதும் பேசாம உன் பீரோவை பூட்டி வைக்க சொன்னேன்” என்க
“நல்ல மரியாதை கிடைச்சது உனக்கு. இப்ப எதுக்கு அவகிட்ட மன்னிப்பு கேக்கற? இதுல எனக்கு உரிமை இல்லயா? யேன் வீடு இது. இதுல இருக்கிற எல்லாமும் எனக்கு உரிமையானது. அதனால நான் எடுத்து வச்சேன் இதிலென்ன தப்பு?” சுசிலா சொல்ல,
“இந்த தோடு சுஜி அம்மாவுது. அவங்க என்ன நினைப்பாங்க உன்னப்பத்தி?…. அப்பவே அவங்க உன்ன கையும் களவுமா பிடிச்சிருக்கனும்…மொத உன்னோட எண்ணத்தை மாத்து. இது சுஜி வீடு. உன் வீடில்ல. உன் வீடு ஊருல பூட்டி கிடக்குது. நீ இருந்தா அது உன்னது ஆயிடுமா? இதை கீதாகிட்ட உன்னால பேச முடியுமா?” என்ற விஜயன் பிரித்த பணத்தை எண்ணி வைத்தவன்,
“உங்க பீரோ திறந்திருக்கா? என சுசிலாவை கேக்க
“திறந்து இருக்கு. எதுக்கு கேக்கற?” என சுசிலா கேக்க
“ ஜெய் இத பாத்துக்க. ஒரு கட்ட எடுத்து மடியில வச்சாலும் வச்சிக்குவாங்க. நடக்கறப்போ கால ஊணி பாத்து நட. என்ன ஊத்தியிருக்குமுன்னு தெரியாது பாரு.” என்றவன் அந்த பீரோவிலிருந்த எல்லா பைகளையும், பணம் மற்றும் நகைகளையும் எடுத்து வந்தான்.
“அது எல்லாம் என்னுது.” என சுசிலா பிடுங்க வர
“இது சுஜி வீடு. இங்க இருக்கிறது எல்லாம் சுஜியோடது. இப்பதாம்மா சொன்ன. வீடு யாரோடதோ, பொருட்களும் அவரோடதே.” என்றவன்
“இது அப்பாவுக்கும் தெரியாத பணமா?” என்றவன் பணத்தை ஒரு பையிலும், நகைகளை ஒரு கவரிலும் வைத்து எடுத்துக் கொண்டு போய் சுஜியிடம் அவள் பீரோவில் வைத்து பூட்டி சாவி கொடுக்கச் சொன்னான்.
“அப்பா இதுக்கு உங்ககிட்ட டூப்ளிகேட் சாவி இருக்குமே கொடுங்க” கேட்டதும் வந்த சாவிக்கொத்தை பார்த்து அதிர்ந்தனர் ஜெய்யும், சுஜியும்.
சுஜிக்கு காயு வீட்டில் ஒரு பீரோ உண்டென தெரிந்த அன்று தான் பேசிய பேச்சை நினைத்து வருந்தினான் ஜெய். எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருந்திருக்கிறாள்.