இரவெல்லாம் தூங்காமல் அங்கும், இங்குமாக வளர்மதி உழன்று கொண்டிருக்க, “ம்மா” என்று தூக்க கண்களுடன் எழுந்து வந்தாள் துளசி.
“தண்ணீர் குடிக்க எழுந்தேன் துளசி. நீ போய் தூங்கு” என்று அவரின் அறைக்கு செல்ல போக,
“ம்மா. தண்ணீர் குடிச்சீங்களா?” என்று கேட்டாள் மகள்.
இல்லையே? வளர்மதி, “குடிச்சுகிறேன்” என,
துளசி அம்மாவிற்கு தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்தாள். அவரின் அறையிலே முழு பாட்டில் எப்போதும் இருக்கும். இன்றும் இருந்தது. மகள் திறந்திருந்த கதவு வழியே அதை கவனிக்கவே செய்தாள்.
“போதும் துளசி” என்று குடித்து கொடுக்க,
“நானும் உங்களோட படுக்கிறேன்ம்மா” என்று அவருடன் அறைக்கு வந்தாள்.
ஒருவேளை துளசி பக்கத்தில் இருந்தால் தூக்கம் வருமோ? “சரி வா” என்று மகளுடன் படுத்துகொண்டார்.
மணி இரவு இரண்டை நெருங்க, “ம்மா. என்னாச்சும்மா” என்று மகள் எழுந்தமர்ந்து விட்டாள்.
“என்னமோ தூக்கம் வரலை துளசி” என்று வளர்மதியும் அமர்ந்துவிட்டார்.
“இன்னைக்கு மட்டுமில்லை, இந்த ஒரு வாரமா நீங்க இப்படி தான் இருக்கீங்கம்மா”
மகளுக்கு தெரிந்ததில் பொய்யாக கூட மறுக்க இயலவில்லை.
வளர்மதி மிகவும் தன்மானம் பார்க்கும் பெண்மணி. வைராக்கியம் எந்தளவோ அதை விட அதிகம் சுயமரியாதை கொண்டவர்.
ஆனால் மருத்துவமனையில் வைத்து ஜெயலட்சுமி அவரிடம் நடந்து கொள்ளும் முறை அவரை மிகவும் சோதித்தது.
முதல் நாள் என்றில்லாமல், ஒவ்வொரு முறையும் அவர் பாராமுகம் காட்டுகிறார். அதற்காக வைரவேலை பார்க்காமல் இருக்க முடியாது.
அதனாலே மிகவும் இழுத்து பிடித்து தான் மகளுடன் மருத்துவமனை சென்று வருகிறார். வைரவேலின் ஜுனியர் துளசி என்ற முறையில் அவளும் அவரிடம் பேச விஷயங்கள் இருந்தது.
புதிதாக இரண்டு கேஸ் வந்திருக்க, அருண் உதவியுடன் துளசி தான் அதற்கான ஏற்பாட்டை கவனிக்கிறாள்.
“என்னால ஆஜர் ஆக முடியாத கேஸுக்கு நீதான் ஆஜர் ஆகணும் துளசி” என்று வைரவேல் சொல்லியிருக்க, பதட்டம் கொண்டாள் பெண்.
பணம் கொடுத்த ஏமாந்தவர்களுக்காக துளசி ஆஜர் ஆக வேண்டும். தேவாவிற்கு எதிர்த்து நிற்க வேண்டும். நல்லவேளை அந்த நீதிபதி விடுமுறையில் இருக்க, கூடுதல் நாட்கள் அந்த கேஸை பற்றி தெரிந்து கொள்ள கிடைத்தது.
பகல் பொழுதில் அதற்கான பாயிண்ட்ஸ் எடுக்க அமைதி கிட்டுவதில்லை. தேவாவின் சத்தம் கேட்டு கொண்டே இருக்கும். அவனின் கட்சிக்கார்களும் வந்து சென்ற வண்ணமே இருப்பர்.
இடையிடையே, “காபி வேணுமா?” என்று கேட்டு இவள் பார்க்க குடித்து, இவளை சீண்ட வேறு செய்வான்.
துளசி எடுத்து வைக்கும் பாயிண்ட்ஸை படித்து பார்த்து, “எல்லாம் தப்பு. இதை வைச்சு என்கிட்ட வாதாடினா என் கௌரவம் என்னாகிறது, ஒழுங்கா பாயிண்ட்ஸ் எடு” என்று அவளின் தலையில் வேறு கொட்டிவிட்டான்.
“நீங்க போன கேஸ்ல சொன்ன பாயிண்ட் தப்பு. நீங்க எனக்கு சொல்லாதீங்க” என்று துளசி சொல்லிவிட.
“ஓஹ் என் பாயிண்ட்ஸ் தப்பு சொல்ற அளவு வந்துட்டியா? நீயே கத்துக்குட்டி. வந்துட்டா என்கிட்ட. ஹேய். வாய பேசாம பாயிண்ட் எடு” என்று டேபிளுக்கு சென்றவன்,
எது தப்புனு சொல்றா? என்று உடனே அதை பார்த்து கொண்டான்.
“அருண்” என்று அழைத்து “என்னடா இது? நல்லவேளை எதிர்ல இருக்கிறவனுக்கு அந்தளவு கூறு இல்லை. இல்லைன்னா அவ்வளவு தான். இனி ஒண்ணுக்கு இரண்டு முறை பார்த்துட்டு என்கிட்ட கொடு” என்று நண்பனை மென்குரலில் கடிந்து கொண்டான்.
துளசி இவர்கள் பக்கம் திரும்பி பார்க்க, “மச்சான் டீ குடிக்க போலாமா?” என்றான் சத்தமாக.
“ஏன் மச்சான் பேசாம துளசியை நம்ம பக்கம் இழுத்துக்கலாமா? நிறைய படிச்சு பார்த்து நோட்ஸ் எடுக்கிறாடா” என்று அருண் கேட்க,
“பாயிண்ட்ஸ் எல்லாம் நல்லாத்தான் எடுக்கிறா? அதுக்காக எல்லாம் அவளை சேர்த்துக்க முடியாது. திமிர் பிடிச்சவடா மச்சான்” என்றான் தேவா.
“என்கிட்ட எல்லாம் எப்போவும் போல தான் இருக்கா”
“நீ தேவா இல்லை. அதனால அவளை உனக்கு தெரியலை” என்று பல்லை கடித்து கொண்டான்.
அவனின் தொந்தரவாலே துளசி இரவு வீட்டில் வைத்து தான் நோட்ஸ் எடுக்கிறாள். அதனால தான் வளர்மதி தூக்கம் இல்லாமல் தவிப்பதும் மகளுக்கு தெரிந்தது.
“சொல்லுங்கம்மா.ஏன் தூக்கம் வரல” என்று அம்மாவின் கை பற்றினாள் மகள்.
“ஏன் அன்னைக்கு திடீர்ன்னு அப்பா பத்தி பேசின?”
துளசி மௌனம் காத்தாள். என்ன சொன்னாலும் அம்மாவிற்கு வேதனை உண்டாகும்.
“நான் உன்னை நல்லா பார்த்துக்கலையா?”
“ம்மா. என்னம்மா? அப்பா இருந்திருந்தா அன்னைக்கு நம்மளை கூட்டிட்டு வந்திருப்பார். அவங்க நமக்கு செய்ய வேண்டாம் தோணுச்சு அவ்வளவு தான்”
“நான் அவசரபட்டுட்டேன் துளசி. சந்தோஷுக்கு உன்னை கொடுத்திருக்க கூடாது. அந்த ஒரு தப்பை மட்டும் நான் பண்ணாமல் இருந்திருந்தால் இன்னைக்கு நமக்கு இதெல்லாம் நடக்காது”
“ம்மா”
“உன் அப்பா இருந்திருந்தா நிச்சயம் சந்தோஷ் உன் வாழ்க்கையிலே வந்திருக்க மாட்டான். அவங்க வேண்டாம்ன்னு அவர் தள்ளி வைச்சதை நான் கவனத்துல எடுத்துக்காம போயிட்டேன். ஆழமா சிந்திச்சிருக்கணும். அதுக்கான தண்டனை நீ அனுபவிக்கிற. அப்பா என்னை மன்னிக்க மாட்டார் இல்லை”
“ம்மா” என்று பெண் கலங்கிவிட,
“அவரோட செல்லப்பொண்ணு நீ. எனக்கு தெரியும் அவருக்கு என்மேல நிறைய கோவம் இருக்கும்”
“அப்பா உங்க மேல எல்லாம் கோவப்பட வாய்ப்பே இல்லைம்மா” என்றாள் மகள் உறுதியாக.
“ம்ஹூம். உன் விஷயத்துல அதிகமா வரும். என்னால அவரை உணர முடியலை துளசி. அவர் என்னைவிட்டு ரொம்ப தள்ளி போயிட்டது போல” என்று அப்படியே நிறுத்தி கொண்டவருக்கு கண்ணீர் இறங்கிவிட்டது.
வேகமாக துடைத்து கொண்டவர், “நீ தூங்கு. நாளைக்கு உன் கேஸ் இருக்கு” என்றார்.
“ம்மா. இதுல உங்க தப்பு மட்டுமே இல்லை. எனக்கும் சரிபங்கு இருக்கு, அப்பா கோவப்பட்டா முதல்ல என்மேல தான் கோவப்படணும். அவர் பொண்டாட்டியை ரொம்பவே மாத்தி வைச்சிருக்கேன்” என்றவள்,
“நாம நாளைக்கு சீக்கிரம் எழுந்து யோகா பண்ணனும்” என்றாள் துளசி.
அவரிடம் தெரியும் மாற்றம் அவளை சஞ்சலப்படுத்தியது. உடலால் பலவீனமாக இருக்கிறாரா? இல்லை மனதால் பலவீனமாக இருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
வளர்மதி, சரியென இருவரும் அமைதியாக படுத்துகொண்டனர். விடிந்தும், விடியாமலும் இருவரும் எழுந்து, யோகா செய்தனர்.
வீட்டின் பின் புறம் சிறிது நேரம் நடந்தனர். பொதுவான பேச்சுடன் காலை உணவு முடித்து கோர்ட்டுக்கு வர, தேவா தயாராக இருந்தான்.
வைரவேல் போனில் அழைத்து பேச, “என் அண்ணன் இன்னைக்கு வர மாட்டார்” என்றார் வளர்மதி.
“சந்தோஷ் அப்பாகிட்ட வட்டிக்கு பணம் வங்கியிருப்பார் போல. அதைவைச்சு தான் சாட்சி சொல்ல கூட்டிட்டு வந்திருக்காங்க” என,
“நாங்களும் அப்படித்தான் நினைச்சோம். அவர் வந்தாலும் பிரச்சனையில்லை. பார்த்துக்கலாம்” என்றான் தேவா.
வழக்கும் ஆரம்பித்தது. இன்றும் திரும்ப துளசியை குற்றம் சாட்டினார் எதிர் தரப்பு வழக்கறிஞர்.
“வேற ஒருத்தரை காதலிச்சுட்டு, என் கட்சிக்காரர் மேல அபாண்டமா குத்தம் சொல்றாங்க” என்று பேசினார்.
தேவா பேச எழுந்தான். “கல்யாணத்துக்கு முன்னாடி சந்தோஷ் வேற ஒரு பெண்ணுடன் வாழ்ந்து குழந்தை பெத்துக்கிட்டது தப்பு இல்லை. ஆனா துளசி காதலிச்சா தப்பா?” என்று கேட்டான்.
“துளசி அப்படி யாரையும் காதலிக்கலைன்றது வேற விஷயம், யாரோ ஒருவர் விருப்பத்தை சொன்னா அதுக்கான பழி துளசியை சேருமா?”
“அவங்க தாய் மாமாவே அவங்க காதலிச்சாங்கன்னு சொன்னார்” என்று நீதிபதி சொல்ல,
“அப்புறம் ஏன் சந்தோஷை கட்டிக்கணும்? துளசியோட அம்மா ஒன்னும் காதலுக்கு எதிரி இல்லை. அவங்களே காதல் கல்யாணம் தான்” என்றான் தேவா.
“மை லார்ட் துளசிக்கு நடக்கிறது நம்ம சமூகத்துக்கு ஒன்னும் புதுசு இல்லை. ஒரு பொண்ணை அடிக்கணும்ன்னா அவ கேரக்டர்ல கை வைச்சிடனும். தானா அடங்கிடுவா. அப்புறம் என்ன நாம ஈஸியா ஜெயிச்சுட்டு போயிடலாம். அப்படித்தானே சார்?” என்று எதிர் வழக்கறிஞரை கேட்டான் தேவா.
“போன முறை சந்தோஷ் குழந்தையை பார்க்க தான் அத்தனை முறை வெளிநாடு போனார்ன்னு சொன்னார். இப்போ நான் கேட்கிறேன் குழந்தை மேல அவ்வளவு அக்கறை இருந்தா, குழந்தையை இவரே எடுத்துட்டு வந்து வளர்த்திருக்கலாமே?”
“துளசிகிட்ட உண்மையை சொல்லியிருக்கலாமே? ஏன் மறைச்சு கல்யாணம் பண்ணனும்? அந்த ஏமாந்த பொண்ணு ஏன் துளசிக்கு போன் பண்ணி பேசணும்?” என்று அந்த பெண் பேசியது, அனுப்பிய ஆதாரங்கள் அனைத்தையும் நீதிபதி முன் சமர்பித்தான்.