சுசிலாவும், பரமசிவமும் தாங்கள் ஜெய்யிடமே பணம் வாங்கி கீதாவிடம் குடுத்ததிற்கான காரணங்களை அடுக்க, மலைத்தார்கள் விஜயனும், ஜெய்யும்.
கீதா வாங்கிய பணமே கோடியை தாண்டியது. இதில் நகைகள் வேறு நூறு சவரனுக்கு மேலே. விஜயனுக்கு தலைசுற்றியது. சுஜியின் மேலும் கோபம் வந்தது. கேட்டா கொடுத்துகிட்டே இருந்தா இன்னும் இன்னும் கேக்கதானே ஆசைய தூண்டும். ஒரு தடவை எதிர்த்து இருந்தாகூட இவ்வளவு பணம் கீதாகிட்ட போயிருக்காது. இதை நேரடியாக சுஜியிடம் கேக்கவும் செய்தான். அதற்கு அவள்
“ஒவ்வொரு பொருளுக்கும், சர்வீஸுக்கும் ஒரு விலை உண்டுன்னு உங்களுக்கே தெரியும் மாமா. என்னோட நிம்மதிக்கு உங்க மனைவியும், உங்கள பெத்தவங்களும் வச்ச விலை இது. எனக்கு பணத்தை விட என் நிம்மதி, என் பிள்ளைகளின் நிம்மதி, அவங்களோட எதிர்காலம், எங்க குடும்பம் அமைதியா இருக்கறது, இதெல்லாம்தான் முக்கியமா இருந்துச்சு. பணத்தை என்னோட பார்ட் டைம் வேலையில சம்பாரிச்சிடுவேன். ஆனா நிம்மதி..?” கசப்புடன் சொல்ல,
யோகன் “விஜிப்பா உங்களுக்கு உங்க அப்பாம்மாவோட ஒரு பக்கம்தான் தெரியும். பிணந்தின்னி கழுகுகூட செத்த விலங்குகள மட்டுமே தின்னும். உசுரோட இருக்கிற உயிரினங்களை தொடாதாம். ஆனா இவங்க…? பெரியம்மா இங்கயா இருக்காங்க? பணம் வாங்கி குடுத்தாங்க சரி. ஆனா பேச்சி? சாப்பாடு வகைவகையா செய்ய சொல்வாங்க. அம்மா செய்வாங்க. ஆனா அம்மா சாப்பிட உட்காரும்போதுதான் கண்டபடி பேசுவாங்க. பல நாள் எல்லாத்தையும் செஞ்சி வச்சிட்டு அம்மா சாப்பிடாம பட்டினியா இருந்திருக்காங்க தெரியுமா? நானே பல தடவை பாத்திருக்கேன். நான் பாக்காத போது எத்தனை தடவையோ யாரு கண்டா? அவங்க சாப்பிடலன்னு தெரிஞ்சும் வேணுமுன்னே தண்ணி ஊத்துவாங்க, இல்லன்னா குப்பையில கொட்டுவாங்க.” என்றான் வெறுப்புடன்.
“ அப்பாக்கும் தெரியும் ஆனா பேசவே மாட்டாங்க. அம்மாகிட்ட கேட்டா அப்பா மேல இருக்க பாசத்துல பேசறாங்க அப்படீன்னு சமாதானம் செய்வாங்க. பாசமா? அது வேசம். அப்பா மேல பாசமுன்னா அவருக்கு பிடிச்சவங்கல இவங்களுக்கும் பிடிக்கனுமுன்னு இல்ல ஆனா மனுசங்களாவாச்சும் நடத்தனும் தானே. நாம் இவங்கள கஷ்டப்படுத்தினா நம்ம புள்ளயும் கஷ்டப்படுமேன்னு நெனப்பிருக்கும் இல்ல. கீதாமாவை சொல்லி இவங்க வஞ்சத்தை தீத்துகிட்டாங்க. அவங்க அங்கிருந்து ஞான திருஷ்டியிலா பாக்கறாங்க? இப்ப உங்ககிட்ட நடிக்கறாங்க நம்பாதிங்க. அப்பா புடவை வாங்கியது அம்மாவுக்கே தெரியாது. எங்க ரூம்ல புக் ஷெல்ப்ல உள்ள தள்ளி அம்மாக்கு தெரியகூடாது சர்ப்ரைஸா இருக்கனுமுன்னு வச்சிருந்தோம். அது எப்படி கீதாமாவுக்கு தெரிஞ்சது? அம்மா நகைசீட்டு போட்டு கவிக்கு ஒரு செயின் வாங்கினாங்க. அதை பாப்பா போட்டு பாக்குறதுக்குள்ள கப்பங்கட்டியாச்சி. இப்படி அடுக்கிக்கிட்டே போலாம். நீங்களும் நம்பி ஏமாந்து போவாதிங்க. இவங்க நூறு ரூபாய்க்கு நடிக்க சொன்னா ஆயிரம் ரூபாய்க்கு நம்மகிட்டயே நடிப்பாங்க.”
“ எங்க ரூமுல நாங்களே இல்லாதப்ப என்ன வேலை? ரூம கிளீன் பண்ண போனாங்களா? இப்படி இருக்க ஒரு தூசகூட அப்படி எடுத்து போடறது இல்ல. அப்புறம் எங்க பெட்ரூமுல என்ன வேல? எப்ப எது கிடைக்கும் பேக்பண்ணி எடுத்துட்டு போலமுன்னு அலையறாங்க” என மேலும் சொன்னான்.
நிலம் வாங்கும்போது தன் பெயரில்தான் சொத்து வாங்க வேண்டுமென கீதா பண்ணிய ஆர்ப்பாட்டங்களை நினைத்து பார்த்தான். “லோன் வாங்க என்னோட நகை கொடுத்தேன், பணங்கொடுத்தேன் என் பெயரில் வாங்குங்க” என அவள் செய்த அலப்பறைகள் தானாகவே கண்முன் தோன்றின. அடையாள அட்டைகளில் பெயர், முகவரியில் இருந்த வேறுபாடுகளினால் அவள் பெயரில் பதிவு செய்ய முடியாமல், விஜயனின் பெயரில் பதிவு செய்ததும் நல்லதுக்குதான் போல. கீதா பெயரில் வாங்கியிருந்தா ஜெய், சுஜிக்கு நாமம் தான்.
சுசிலா, பரமசிவத்திடம் திரும்பி “நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு ஒன்னுதான். சமமானவங்கதான். நீங்க ரெண்டு பேருமே எங்களுக்கு பொதுவானவங்க. அப்புறம் ஏன் ஒரு கண்ணுக்கு வெண்ணையும், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வச்சிங்க. ரெண்டு கண்ணும் நல்லாயிருந்தாதான் பார்வை நல்லாயிருக்கும். ஒரு கண்ணுல வலியிருந்தாலும் உங்களால பாக்கமுடியாது. இது ஏன் உங்களுக்கு புரியல.”
“உழைப்புக்கு ஏத்த ஊதியம் என்பது பொது விதிங்கிறது உங்களுக்கு தெரியாதா? நீங்க சும்மா உக்காந்து கிட்டே பென்ஷன் வாங்கறீங்கன்னு ராணியம்மாவோ, இல்ல எங்க சித்தப்பாவோ சொன்னா சரியா? ஆமாமுன்னு ஒத்துப்பிங்களா?”
“என்னோடது சுய தொழில் மாதிரி. என்ன பயிர் பண்ணணுமுன்னு நாந்தான் முடிவு செய்வேன். நா நினைச்சா வேலை செய்யலாம், நினைச்சா வேலைய விட்டுட்டு தூங்கலாம். நல்லது கெட்டதுக்கு யேன் இஷ்டம் போல போலாம். முடிஞ்சா வெள்ளாம வைக்கலாம். இல்லன்னா கரம்பா போட்டுட்டு அடுத்த போவத்துல பயிர் பண்ணலாம். வரிகட்ட தேவையில்ல”.
“ஆனா ஜெய், சுஜி அப்படியில்ல. லீவு பசங்களுக்குதான். பரிட்சை, கோச்சிங் கிளாஸ், பயிற்சின்னு சனி ஞாயிறு கூட பல சமயம் போற மாதிரி இருக்கு. லேட்டா போனா, பசங்க படிக்கலன்னா, பசங்க ஸ்கூல் வரலன்னாகூட இவங்கதான் பதில் சொல்லனும் உடம்பு முடியலன்னாகூட பல சமயம் லீவு கிடைக்காது. நல்ல நாளு பொல்லாத நாளுன்னு வீட்டுல இருக்கமுடியுதா? பாடம் முடிக்கனும், பசங்க படிக்கனும், பரிட்சை வைக்கனும், பசங்க அடிச்சிக்காம பாக்கனும், இப்படி எவ்வளவு பிரஷர் அவங்களுக்கு? பசங்கள கண்டிச்சா அடுத்த நாள் ஸ்கூலுக்கு வர மாட்டாங்க. கண்டிப்பா இல்லன்னா படிக்கமாட்டாங்க. வெளியில இருந்து பாக்கறவங்க அவங்களுக்கு என்ன? மாசம் பொறந்தா சம்பளமுன்னு சொல்லறாங்க நீங்களும் அதையே சொன்னா எப்படி?”
“அடுத்த தலைமுறைய சிறப்பா உருவாக்கற இவங்களுக்கு இந்த சம்பளமே கம்மி. ஆனா கீதா மாதிரியான ஒன்னத்துக்கும் உதவாத ஜென்மங்கதான் அவங்கள பாத்து பொறாமை படுதுங்க.”
“அப்பா ஜெய்க்கு நீங்களே நியாயத்தை சொல்லுங்க. என்ன பண்ணலாம்? உங்க பணத்தை விடுங்க. அதுக்கு வேற ஐடியா வச்சிருக்கேன். சுஜிகிட்ட வாங்கின பணம், நகைக்கு வழி சொல்லுங்க?” என்றான் விஜயன்.
“ மாசாமாசம் வாங்கினது போக அரியர் வந்தப்போ கூட கேட்டு வாங்கியிருக்கிங்க? ஏம்மா அவனையும் சுமந்து வலிச்சிதானே பெத்தீங்க? தவிட்டுக்கு வாங்கிட்டு வந்தேன்னு ஊருல பாட்டிங்க சொல்வாங்களே அதுபோல எங்கிருந்தாவது வாங்கிட்டு வந்திங்களா?”
“இத்தனை வருசமா நீயும் வருமானத்தை கொடுக்கல, நாங்களும் கேக்கல. அதுல இப்போ எவ்வளவு இருக்கு? செலவுக்கு நாங்க கொடுத்துட்டோம். அதனால வருமானம் அப்படியே இருக்குமே?” என்றார் பரமசிவம்,
“பேங்க்ல ஒரு அறுபத்தஞ்சு லட்சம் இருக்கு. அதுல நகையை பேங்க்ல இருந்து மீட்டு குடுத்திடலாம். ஆனா அதுல ஜெய்க்கும் பங்கிருக்கே என்ன செய்ய?” என்றவன்
“நீங்க இன்னும் ஒரு வாரம், பத்துநாளு கீதாகிட்ட பேசாதீங்க. பேசினா காரியமே கெட்டுச்சி. உங்க போனும் யேங்கிட்டையே இருக்கட்டும். சரி செய்ய என்ன பண்ணலாமுன்னு யோசிங்க. நானும் யோசிக்கிறேன். இப்ப எல்லாரும் தூங்க போங்க. காலையில பாத்துக்கலாம்.” என சுஜி, ஜெய், யோகன், கவியை அனுப்பினான்.
“இப்போ சொல்லுங்கம்மா என்ன விசயம்?“ என்க
“சுஜி எது சொன்னாலும் ஏத்துக்கும். ஆனா உன் பொண்டாட்டிய எப்படி சமாளிப்ப விஜி? ஜெயன் மகேஷுகிட்ட லவ் பண்றேன்னு சொல்லும்போது கீதா கேட்டுட்டா. அந்த பொண்ணு காலேஜ்ல இவங்கூட படிச்ச புள்ளன்னு நெனச்சி காலேஜ் போயி படிச்ச எந்த புள்ளையையும் கட்ட கூடாதுன்னு ஒரே ஆட்டமா ஆடிப்புட்டா. சரி நான் அவள கட்டல. ஆனா பொண்ணு எனக்கு புடிச்சாதான் கட்டிப்பேன்னு சொல்லிட்டான். அப்புறம் புரோக்கர் கொண்டுவந்ததுல இருந்துதான் இந்தபுள்ள போட்டோ பாத்துட்டு எங்ககிட்ட ஒரே சண்ட. யேன் மனசுக்கு புடிச்சவள பாக்காமகூட வேணாமுன்னு சொன்னீங்க. நான் சரின்னு விட்டுட்டு வந்தேனே, இப்ப இந்த புள்ளய புடிச்சிருக்கு இத கட்டி வைங்கன்னு இவனொரு பக்கம், யேன் சொந்தத்துல என்னமாறி சாணி அள்ளறவளைதான் கட்டிவைப்பேன்னு அவ ஒருபக்கம் நாங்க படாத பாடுபட்டோம் இவங்கல்யாணத்துல“
“ஏதேதோ சொல்லி சமாளிச்சி கல்யாணத்தை பண்ணிவிட்டோமில்ல, இவன் சுஜிகிட்ட உண்மையை சொல்லனுமில்ல. இவன் சொல்லாம இருக்கான்னு தெரிஞ்சிகிட்டு அப்பப்போ பணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பிச்சா. சுஜிமேல உசுரா வேற இருந்தானா, அதான் அவன் வாழ்க்கைய கீதா கெடுத்து விடுவாளோன்னு பயந்து அவ சொன்னபடி நடக்கறமாறி ஆயிடுச்சு” என்றார் சுசிலா.
“சுஜிக்கு என்ன வழி?” என விஜயன் கேக்க
“ ஏம்பா விஜி, வீட்டுல இருக்க கீதாவே இவ்வளவு வெவரமா இருக்கா? இந்த சுஜி ஏன் இப்படி வெள்ளந்தியா இருக்கா?” என பரமசிவம் வருத்தமாக கேக்க
“சுஜி சொன்னது கவனிக்கலயா? அவ நிம்மதியா இருக்க உங்களுக்கு படி அளந்திருக்கா. ஒரு பொண்ணு அவ வீட்ல நிம்மதியா இருக்க பணத்தை கொடுத்திருக்கா. நீங்க நல்ல மகனாவும் இல்லை, எங்களுக்கு நல்ல அப்பாவாகவும் இல்லை, ஏன்னா எனக்கு அந்த பிசாசை நீங்கதான் சொந்தம் விட்டு போககூடாதுனு கட்டி வச்சிங்க, நல்ல மாமனாராவும் இல்ல. உங்க வாழ்க்கையே மிகப்பெரிய தோல்விதான்.” என விஜயன் சொல்ல பரமசிவம் தலைகுனிந்தார்.
“எனக்கு பாகமா பிரிஞ்ச வீடு இங்க இருக்கில்ல. அத பெருசா நினைக்காததால உங்கம்மா யாருகிட்டயும் அத பத்தி பேசமாட்டா. அதுல வர்ற வாடகை பணத்தை எப்பவும் நகையா வாங்கி யேன் லாக்கர்ல வைப்பேன். நான் குடுத்த பென்ஷன் பணம், உங்கம்மா நகையெல்லாம் கீதாக்கு குடுத்ததா இருந்துட்டு போகுது. யேன் லாக்கரில் இருக்கும் நகையையும், அந்த வீட்டையும் சுஜிக்கு கொடுத்துடறேன். எங்க பங்கு சரி. நீ என்ன செய்யபோற?” என பரமசிவம் கேக்க,
“ஆமாம் அந்த வீட்ட நான் மறந்தது பரவாயில்ல. இல்லன்னா அதுவும் போயிருக்கும்.” என்ற சுசிலா கேள்வியாக விஜயனை பாக்க,
“நான் என்ன பண்ண போறேன்னு யோசிச்சு சொல்லறேன். கிட்டத்தட்ட ரெண்டு கோடி பணத்துக்கு நா எங்க போவேன்? படுத்தா தூக்கம் வருமா தெரியல. யேன் வம்சம் தலைக்க ஏதாவது செஞ்சிதான் ஆகனும். பணம் கொடுக்கும்போது கஷ்டமா இருந்திருக்கும். அந்த நாடி பாக்கறவர் சொன்னாரு உன்தம்பிகூட இருக்கறதனால நீங்க உசுரோட இருக்கீங்கன்னு.” என்ற விஜயன்,
சுஜியிடம் கீதா பேசியதை ரெக்கார்டு செய்திருக்க அதை போட்டு காட்டினான். கிழம் அந்த வார்த்தை சுசிலாவை தாக்கியது. அவர் அவரது மாமியாரை சொன்னது போலவே கீதா சொல்லியிருந்தாள்.
வாழ்க்கை ஒரு பூமரங். செய்தது திரும்பி நம்மிடமே வரும். சுசிலாவுக்கு புரிந்தது. தான் தன் கணவன் வீட்டினரிடம் நடந்தது போலவே கீதா தங்களிடம் நடப்பது புரிந்தது.
விஜயன் சிரித்தபடி “என்னை கூட திட்டுவ. ஆனா அவள நீ திட்டமாட்ட. இப்போ சாபமே குடுக்கற. ஒரு வேல சூரியன் மேற்குல உதிக்கிதோ?” என்றவன் நக்கலாக,
“சின்ன பையனுக்கு இருக்க அறிவு கூட அனுபவசாலியான என்னிடம் இருக்காதுன்னு நினைக்கறியாமா? போதும் உன் நாடகம் எல்லாம். உன்னிடம் இவ்வளவு தெளிவா பேசறேனே, இதிலிருந்து தெரியலயா? இதுக்கு தீர்வு கிடைக்கிற வரைக்கும் உன் ஆச மருமவள பாக்கவோ, பேசவோ முடியாது. அவ ஊருலயே இல்ல. அவள ஆல் இந்தியா டூர் அனுப்பியிருக்கேன்.. நான் நெனச்சது முடிஞ்சதும் அவ வருவா. ஏதாவது செய்யனுமுன்னு நெனச்சாகூட எங்க இருக்காங்களோ அங்கயே அவள விட்டுட்டு அவ பொருள மட்டும் எடுத்துட்டு வர சொல்லிடுவேன் பாத்து நடந்துக்க. நாளைக்கு நெறய வேலை இருக்கு. போங்க” மிரட்டினான்.
“நீ இங்க இருக்க, புருசனோட ரூமுக்குள்ள போயி கதவ சாத்திகிட்டா, அவளுக்கு நீ சப்போர்ட் பண்ற. கீதாதான்டா உன் பொண்டாட்டி. கீதா உனக்காக தான் இவ்வளவும் செய்யறா. நீ அவள புரிஞ்சிக்கவேயில்ல.” என சுசிலா பசப்ப,
“இதுதான் நீ ! அப்புறம் இதுவரைக்கும் எதுக்கு அந்த உருட்டு உருட்டுன? உனக்கு ஜெய் மேல பாசமே இல்லன்னு யோகன் சொன்னது சரி. பாசமிருக்கிற மாதிரி நடிக்காத. நீ நடிக்கறன்னு இன்னைக்கு பிறந்த குழந்தைகூட கண்டுபிடிச்சிடும். ச்சே உங்களுக்கு போயி பிள்ளைகளா பிறந்தோம் பாருங்க.”
உங்க பாவம் யேன் தலையில. என் பாவமூட்ட யேன் பிள்ளைங்க தலையில. அவங்க வாழ்க்கை எப்படி போனா உங்களுக்கென்ன? அவனுக்கு நீங்க பாத்த பொண்ணவிட அவனுக்கு புடிச்ச பொண்ண கட்டிக்கிட்டான் அத உங்களால ஏத்துக்க முடியல. நீங்க பாத்த பொண்ண கட்டி குடுமிபிடி சண்ட நடந்து உங்கள பஞ்சாயத்துக்கும், கோர்ட்டுக்கும் இழுக்காம இருக்கானே, அதுக்கே நீங்க சந்தோசபடனும். உங்க மகன் சந்தோசமா இருக்கனுமுன்னு நெனச்சிருந்தா ‘படிச்சவனா கட்டி ஊரு ஊரா, நாடுவிட்டு நாடு சுத்தனுமுன்னு கனவு கண்டவள’ எனக்கு கட்டி வச்சு யேன் சங்க அறுத்திருப்பிங்களா? இதுல அவன் கொஞ்சம் நல்லா இருக்கறதும் பிடிக்கல. நல்ல குடும்பமுடா சாமி. அந்த ஜோஸியகாரர் சொன்னதுபோல சன்னியாசம் வாங்கிட்டு இமய மலைக்கு போயி யேன் பாவத்த தொலக்கிறேன். நாளைக்கு காலையில வரைக்கும் பொறுத்துக்க நான் அந்த பிசாசை கட்டினதுக்கு காவிகட்டி சன்யாசம் வாங்கறதையும் பாத்து சந்தோசப்பட்டுக்க.” எனக் கோபமாக சொல்லி வெளியேற, விஜயனின் போன் அடித்தது.
“ஆமாங்க ஐயா. இங்க செஞ்ச பாவத்துக்கு யாரும் விமோசனம் தேடறமாதிரி தெரியல. இதுவரைக்கும் இத கண்டுக்காம இருந்த பாவத்தையாவது நான் கழுவனும். இங்க என்ன பெத்தவகிட்ட சொல்லிட்டுதான் வர்றேன். தேட மாட்டாங்க. அனாதை பிணம் ஏதாவது கிடைச்சாகூட என்னை பெத்தவங்களும், யேன் பொண்டாட்டியும் நான்தான்னு சொல்லி இன்சூரன்ஸ் பணத்தை கூட வாங்கிப்பாங்க. அவங்களுக்கு நானெல்லாம் தேவையில்லை. பணமிருந்தால் போதும். நீங்க நான் கிளம்ப தேவையானதை செய்யுங்க.” என்று கூறி வேகமாக வெளியேறினான்.
சுசிலாவும், பரமசிவமும் அதிர்ச்சியில் இருக்க சொல்லாமல் கூட வீதியில் இறங்கி நடந்தான் விஜயன்.
மிஷன் சுசிலா சக்ஸஸ் ஆகுமா? கீதாவுடன் மீண்டும் கூட்டு சேருவார்களா? சுஜிக்கு உண்மை தெரிய வருமா? அறிந்து கொள்ள காத்திருப்போம் ஓரிரு நாட்கள்