தொழிற்சாலை ஊழியர் ஒருவரது மகள் அவளது வீட்டுக்கு தெரியாமல் அவளின் காதலனுடன் ஊரை விட்டு சென்று விட்டாள். அந்தப் பையன் நல்லவன் இல்லை, கெட்ட பழக்கங்கள் மற்றும் சகவாசம் உள்ளவன். தனது ஆட்கள் வைத்து அவர்களை கண்டுபிடித்து, அந்தப் பெண்ணை மீட்டு வீட்டில் விட்டு வர நேரமாகி விட்டது என அவளுக்கு விளக்கம் சொன்னான்.

சுவாரஷ்யமாக கேட்டிருந்தவள் “வீட்டுக்கு வர ஓகே சொல்லுச்சா அந்தப் பொண்ணு?” என விசாரித்தாள்.

“எங்க கனி, கண் மூடித்தனமா அவனை நம்பிட்டு வர மாட்டேன்னு அழுது ஒரே ஆர்ப்பாட்டம். பேசியெல்லாம் புரிய வைக்க முடியுமா? கட்டாயம் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு போனாலும் என்னவும் பண்ணிக்கும், அவன் தகிடு தத்தம் எல்லாம் ஆதாரத்தோடு அந்த பொண்ணுக்கு காட்டவும்தான் வந்துச்சு” என சொல்லிக் கொண்டே குளியலறை சென்றான்.

அவன் ஆடை மாற்றிக் கொண்டு வரவும், “அந்த பையன் எங்க இப்போ?” எனக் கேட்டாள் கனி.

“இருக்கான் இருக்கான்” என மட்டும் சொன்னான்.

“எங்க இருக்கான் மாமா?”

“அந்த கதையை விடேன். நீ ஃபோன் பண்ணியிருந்தா சொல்லிருப்பேன், தூங்கிட்டிருப்பியோன்னு நினைச்சேன். தேடினியா என்னை?” எனக் கேட்டுக் கொண்டே அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

“ஏதாவது முக்கியமான வேலையா போயிருப்பேன்னு நினைச்சேன். ஆனா மத்த எல்லாரும் தேடினாங்க” என்றாள்.

“உன் கூட எப்படி வாழ போறேன்னு எல்லாருக்கும் பயம்” என்றான்.

“எனக்கு இல்லை மாமா”

“என்ன?”

“பயம், உம்மேல எனக்கு பயம் இல்லை” என அவள் சொல்லி முடிக்கும் முன், அவனது அணைப்பில் இருந்தாள்.

“என்ன மாமா?” திட்டுகிட்டு போய் கேட்டாள்.

ஒரு விரலால் அவளது கன்னத்தின் மென்மையை அளவிட்டுக் கொண்டே,  “பயமில்லைனு சொன்ன?” எனக் கேட்டான்.

“என்னை… உனக்கு…” தடுமாறினாள்.

“தெளிவா பேசு” என்றவன் நெற்றியில் புரண்ட அவளது குழல்களை விரலால் சுற்றினான்.

“மாமா பொண்ணா மட்டும்தான் என்னை பார்க்க முடியுதுன்னு முன்னாடி சொன்னியே…” எனக் கேட்டாள்.

“அது சொல்லி நாளாகுது கனி. அப்படியே இல்லை இப்போ நான்? நீ சொல்லு, இன்னிக்கு வேணாமா?” எனக் கேட்டான்.

பதிலே சொல்லாமல் அவனது மார்பில் ஒண்டிக் கொண்டாள்.

“காலைல சாப்பிடும் போது உன்னை பத்தி எல்லாம் எனக்கு தெரியும்னு சொன்ன? தெரியாத விஷயம் கூட இருக்கே, உன்கிட்டேருந்து நான் மட்டும் தெரிஞ்சுக்க வேண்டியது”

“இப்படிலாம் பேசுவியா நீ? இன்னிக்கு நீ வீட்டுக்கு வருவியான்னு கூட எனக்கு தெரியாது, நான் இதுக்கெல்லாம் பிரிப்பேர்டாவே இல்லை”

“எதுக்கெல்லாம்?” என அவன் கேட்கவும் அவனது புறங்கையில் வலிக்க கிள்ளினாள்.

தன்னை கிள்ளிய அவளது விரல்களை பிடித்து வருடிக் கொண்டே, “இப்படி ரெடியாகி உட்கார்ந்திருக்க, என்ன நினைச்சு தயாரான?” எனக் கேட்டான்.

தர்மாவின் இம்மாதிரியான பேச்சையெல்லாம் நம்ப இயலாமல் இன்னும் திகைத்தாள்.

“இவ்ளோ கனமான பட்டு புடவையும் நகையும் எதுக்கு உன்னை போட வச்சாங்கன்னு கடுப்பா இருக்கு? என்ன சம்பிரதாயமோ?” என கேட்டுக் கொண்டே அவளது கழுத்தில் கிடந்த கனமான ஹாரத்தை கழட்டினான்.

நெக்லஸ் ஒன்றின் கொக்கி நெருங்கியிருக்க பற்களால் கொக்கியை விலக்கி விட்டான்.

அவனது கை, முகம், மீசை, மூச்சுக்காற்று என எல்லாம் சேர்ந்து கொண்டு அவளின் பின்னங்கழுத்தை உரசியதில், “மாமா…” என சிணுங்கினாள்.

“யோசிச்சு பார்த்தா இப்பதான் ஒரு உண்மை புரியுது” என சொல்லிக் கொண்டே அந்த நெக்லசையும் கழட்டினான்.

“என்ன?” என குழப்பமாக கேட்டாள்.

“இதையெல்லாம் கழட்டுற சாக்குல புது பொண்ணுக்கும் பையனுக்கும் கூச்சம் விலகி போகும்னு யோசிச்சுதான் இவ்ளோ அலங்காரம் செஞ்சு விடுறாங்கன்னு நினைக்கிறேன்” என்றான்.

“நீ ஏன் இப்படிலாம் பேசுற, தள்ளி போ” என சொன்னாலும் அவனை விட்டு விலகவில்லை அவள்.

“பொறுமை இல்லாதவன் என்ன பண்ணுவான்? அப்புறம் காலைல உடைஞ்சு போன நகையை எல்லாம் உருக்கிதான் ஒன்னு சேர்த்தாகணும்”

“ஹையோ போதும்!” சத்தமில்லாமல் அலறினாள் கனி.

“எல்லாரும் போட்டு விடும் போது அலறியிருக்கணும் இப்படி” என்றவன் அவனது வேலையில் கவனமாக இருந்தான்.

“என்கிட்ட யாரும் பெர்மிஸன் கேட்கலை, அவங்க பாட்டுக்கும் ரெடியாக்கி விட்டுட்டாங்க” என அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். ம் போட்டு கேட்டுக் கொண்டே அவளது தலையிலிருந்த மல்லியின் வாசத்தை உள் இழுத்தான்.

“என்ன செய்ற மாமா நீ?” என சிணுங்கினாள்.

“சும்மா சும்மா சிணுங்காத, என்ன செஞ்சாங்க? இன்னும் எதுவும் செய்ய ஆரம்பிக்கல” என்றவன் பொறுமையாக அவளின் சிகைப் பூவை அகற்றினான்.

அவள் அவனை செல்லமாக முறைக்க, குறும்பாக சிரித்தான்.

“என்னை தெரிஞ்சுக்க ஆசைன்னு சொன்னதானே? உன் ஆசையை என்னிக்காவது நிறைவேத்தாம இருந்திருக்கேனா?” எனக் கேட்டு அவளின் இதழ்களை நெருங்கினான்.

முகத்தை பின்னுக்கு இழுத்துக் கொண்டவள், “எனக்கொன்னும் இதெல்லாம் ஆசையில்லை” என ரோஷமாக சொன்னாள்.

“அப்படியா? இருக்கட்டும். எனக்கு ஆசை” என்றவன் அவளது முகத்தை இழுத்து முத்தமிடப் போனான். அவள் விலகியதில் இதழ் முத்தம் இடறி காதோரத்தில் விழுந்தது.

அவன் விலகிய போது, முகத்தை குனிந்து கொண்டு உர் என இருந்தாள்.

“கண்டதையும் யோசிக்க கூடாது. கோயிலுக்கு போய்ட்டு வந்து நீ பேசினது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. நீ மட்டும்தான் எனக்குன்னு புரிஞ்சுக்க கனி”

“அதுக்காகத்தான் இன்னிக்கு இப்படி நடக்குறியா மாமா?” கண்டனமாக கேட்டாள்.

“ரூமுக்குள்ள வர்ற வரைக்கும் எதுவும் நினைக்கல நான். உன் பக்கத்துல தானா இப்படி நடக்குது கனி, எனக்கே இது ஆச்சர்யம்தான். ஏன் எப்படின்னு ஆராய்ச்சி பண்ணியா பார்க்க முடியும்? பொண்டாட்டி மேல புருஷனுக்கு வர்ற ஃபீலிங்ஸ் கனி. இதுக்கு மேலயும் நீ முறைச்சா எப்படி நான் விளக்குவேன்? சரி விடு, தூங்கு நீ” என சொல்லி விலகினான்.

“ஸாரி…” என சின்னக் குரலில் சொன்னவள் அவனது கையை பற்றினாள்.

மனைவியை அணைத்த தர்மா விளக்கையும் அணைத்தான். அவளது கையை பிடித்துக்கொண்டு அதில் முத்தங்கள் வைத்துக்கொண்டே, அவளின் பயம் நீங்கும் படி பேசினான்.

மனம் உந்தித் தள்ள கனியே அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். தன் முகத்தை வாகாக அவளுக்கு காண்பித்து கண்களால் செய்தி சொன்னான். அவள் மறுப்பாக தலையசைக்க அவனே அவளை நெருங்கினான்.

இதழ்களின் நெருக்கம் தயக்கங்களை மறையச் செய்திருக்க, இரு தேகங்களும் பின்னிப் படர்ந்தன. இருவருக்கும் இடையே இடமில்லாமல் சிக்கித் திணறிய அவர்களின் மூச்சுக் காற்று, மோக மழையை பொழிய ஆரம்பித்தது.