நெஞ்சை கொய்தாள் வஞ்சி -7

அத்தியாயம் -7

தர்மா, கனிஹா இருவரின் திருமணமும் வெகு பிரமாதமாக நடந்திருந்தது. அன்று மாலையே வரவேற்பு. தொழிற் துறையினர், அரசியல் கட்சியினர் என வந்தவர்களை கண்டு மிரண்டு விட்டாள் கனி.

“எல்லாரும் கல்யாணத்துக்கு வந்திருக்க கெஸ்ட், சாதாரணமா இரு” என சொல்லி அவளை இயல்பாக்கினான் தர்மா.

தன் ஆசை மாமனை கல்யாணம் கட்டிக் கொண்டோம் என அடிக்கடி மனதில் பதிய வைத்துக் கொண்டாள் கனி.

மணமக்கள் மண்டபத்தை விட்டு வீடு வந்து சேரவே நள்ளிரவு பனிரெண்டு மணியாகி விட்டது. கனிஹாவுக்கு ஆடை மாற்றக் கூட சக்தியில்லை, அப்படியே படுத்து விட்டாள்.

திருமணத்துக்கு முதல் நாளிரவு சரியான உறக்கமில்லை. இன்றும் பகலில் கொஞ்சம் கூட ஓய்வு கிடைக்கவில்லை. ஒப்பனையெல்லாம் செய்து கொண்டு சரியாக சாப்பிட்டிருக்கவும் இல்லை. இப்போது சோர்வில் கிறங்கிப் போயிருந்தாள்.

நிதிலா மற்றும் அஜய்யோடு அன்னலக்ஷ்மி பாட்டி அவரது வீட்டுக்கு சென்று விட்டார். தாமரை மட்டும்தான் இங்கு வந்திருந்தார். வேலம்மாள் பாட்டிக்கு படி ஏற  கடினமாக இருந்தாலும் பேத்தியை காண கனியின் அறைக்கு வந்து விட்டார்.

ஆடையை மாற்றிக் கொள், கொஞ்சம் இலகுவாக இருக்கும் என மருமகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை.

கனியால் எழக் கூட முடியவில்லை, ஆகவே, “முடியலை அத்தை” என முனகினாள்.

எலுமிச்சை சாறை நீட்டி பருக சொல்லிக் கொண்டிருந்தார் கனியின் பெரியம்மா. கனியின் அம்மா பக்கத்து உறவுகள்  வேறு சிலரும் இருந்தனர். அவர்களும், சாப்பிடு, முகம் கழுவிக் கொண்டால் சரியாகும், மருத்துவரை அழைக்கலாம் என ஆளுக்கொன்றாக பேசிக் கொண்டிருந்தனர்.

மகளுக்கு முடியவில்லை என காண வந்த நம்பியோ, “இவ்ளோ பேர் சொல்லிட்டு இருக்கோம், எந்திரிச்சு இதை குடிச்சிட்டு படுக்க என்ன உனக்கு?” என அதட்டல் போட்டார்.

மிரண்டு போய் பட்டென எழுந்த கனி, அடுத்த நொடியே முடியாமல் படுத்து விட்டாள்.

இரவு சடங்கு நாளைதான் நடக்க இருக்கிறது. ஆகவே தர்மா அவனது அறையில் இருந்தான். ஆடை மாற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். கனியின் அறையில் கூட்டத்தை கண்டு விட்டு அங்கே சென்றான்.

ஏதோ சோர்வில் இருக்கிறாள், உறங்கினால் சரியாகி விடுவாள் எனதான் நினைத்திருந்தான். இந்தளவுக்கு முடியவில்லை என இப்போதுதான் அவனுக்கு தெரிந்தது.

“மல்லுகட்டி அந்த ஜூசை கொடுங்க, சரியாகிடுவா” என நம்பி சொல்ல, கனியின் பெரியம்மா அப்படியே செய்யப் போனார்.

“கொஞ்சம் இருங்க, நானே குடிச்சிக்கிறேன்” என்ற கனி கண்களை மூடிக் கொண்டாள்.

எங்கே குடிக்க முடியாமல் வாந்தி செய்து அப்பா திட்டுவாரோ என்ற பயத்தில் அவளுக்கு லேசாக வியர்க்கத் தொடங்கியது.

“அவளை விடுங்க, எல்லாரும் தூங்க போங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றான் தர்மா.

அவனிடம் என்ன சொல்வதென மற்றவர்கள் தயங்க, “இன்னிக்கு நீங்க கூட இருக்க வேணாம் தம்பி” என்றார் கனியின் பெரியம்மா.

“எல்லாம் எனக்கு தெரியும், அவளை  ஃபிரீயா விடுங்க” என அழுத்தமாக சொன்னான் தர்மா.

தாமரையும், “ஆமாம், நாம போவோம் வாங்க” என சொல்லி மற்றவர்களை அழைத்து சென்று விட்டார்.

சில நிமிடங்கள் அவளை அப்படியே படுத்திருக்க விட்டான். பின் அவனும் அவளை எழுப்ப பார்க்க, “தலை நிமித்த முடியலை மாமா,  ரெண்டு பக்கமும் என்னை யாரோ கட்டி இழுக்கிற மாதிரியே இருக்கு” என சொல்லி எழ மறுத்தாள்.

“பிரஷர் லோ ஆகிடுச்சு போல கனி” என்றவன் அவளை தூக்கி எழுப்பி அமர்த்தி தன் தோளில் சாய்த்துக் கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக எலுமிச்சை சாறை அவளுக்கு புகட்டினான்.

முழுதும் பருகியவள் அவன் மீதே சாய்ந்து கண்களை மூடியிருந்தாள். தெளிவாகி விட்டது போல உணரவும்தான் கண்களை திறந்தாள். அவன் மீது சாய்ந்திருப்பதை உணர்ந்தவளுக்கு பட படப்பானது.

சற்றே தலை உயர்த்தி அவனை பார்த்தாள்.

“பரவாயில்லையா இப்போ?” எனக் கேட்டான்.

தாடியை முழுதும் எடுக்காமல் திருமணத்துக்காக ட்ரிம் செய்திருந்தான். அவனது முகத்தை இத்தனை நெருக்கத்தில் அவள் கண்டதில்லை.

“ஏய் என்ன, மயக்கம் சரியாச்சா?” எனக் கேட்டான்.

“ம்ம்…”

“மெதுவா ட்ரெஸ் மாத்திட்டு வந்து படு” என அவன் சொல்லவும் எழுந்து கொண்டாள். இப்போது அவளால் நேராக நிற்க முடிந்தது.

“ரூம் கதவை லாக் பண்ணாத, சும்மா சாத்திக்க. நான் வெளிலதான் இருக்கேன்” என சொல்லி வெளியேற போனான்.

அத்தையை அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொண்டாள்.

“அவங்க ஏன், யாரும் உன்னை தொந்தரவு செய்ய வேணாம்னு நானே கஷ்டப்பட்டு எல்லாரையும் அனுப்பி வச்சேன், இப்ப உங்க அத்தையை கூப்பிட்டா ஒவ்வொருத்தரா உன்னை தேடிகிட்டு வருவாங்க”

“அதில்ல மாமா…” எப்படி சொல்லவென தயங்கியவள் தன் கை, முதுகில் எதுவரை செல்கிறது என சோதித்து பார்த்தாள். லெஹங்கா பிளவுஸின் கொக்கிகள் பின் பக்கத்திலிருந்தன.

அவளையே பார்த்திருந்தவன், புரிந்தவனாக அவளிடம் வந்து அவளை திரும்பி நிற்க வைத்தான்.

“மாமா…” என அவள் அதிர்ந்து அழைக்க, “திரும்ப மயக்கம் வருதா?” என கேட்ட வேகத்தில் அவளுக்கான உதவியை செய்து தன்னை பார்க்க அவளை திருப்பினான்.

இன்னும் அதிர்விலேயே இருந்தவள் இமைக்காமல் அவனை பார்த்தாள்.

“ட்ரெஸ் மாத்திட்டு கூப்பிடு” என சாதாரணமாக சொல்லி வெளியேறி விட்டான் தர்மா.

கால் மணி நேரம் சென்று அவள் கதவை திறக்க, உள்ளே வந்தவன் வேகமாக கதவை அடைத்தான்.

“மாமா…” மீண்டும் அதிர்ந்தாள் அவள்.

“நான் இல்லைனா வேற யாரும் உன் துணைக்கு வந்து படுப்பாங்க. யாரும் உன்னை ஃபிரீயா தூங்க விடுவாங்கன்னு நம்பிக்கை இல்லை எனக்கு. படு” என்றான்.

அதற்குள் அவனுக்கு பாட்டியிடமிருந்து அழைப்பு வந்து விட்டது. கனி எப்படி இருக்கிறாள் என விசாரித்து அறிந்து கொண்டவர், கனியின் பெரியம்மா அவளுக்கு துணைக்கு வருவார், நீ வெளியேறு என்றார்.

“எல்லாம் எனக்கு தெரியும் அம்மாச்சி, நான் இவ கூட இருந்துக்கிறேன், பேசாம தூங்குங்க எல்லாரும்” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்.

கனி படுத்துக் கொள்ளவும் விளக்கை அணைத்து அவனும் படுத்து விட்டான்.

அமைதியாக சில நிமிடங்கள் சென்றதும், “கல்யாண நாள் எக்ஸைட்மெண்ட்டே ஃபீல் பண்ண முடியாம போயிடுச்சு மாமா” என்றாள் கனி.