“என்னோட கிளையண்ட் அவங்க. பாதுகாப்பு ரொம்ப முக்கியம்”
“நாங்க கேஸை வேற ஒருத்தருக்கு கொடுத்துகிறோம். இல்லை நானே கூட வாதாடிக்கிறேன்” துளசி சொல்ல,
“என்ன சொன்ன? திரும்ப சொல்லு?” என்று பெண்ணை நெருங்கிவிட்டான் தேவா.
அவனின் ஆக்ரோஷத்தில் வளர்மதி சட்டென நகர்ந்துவிட, துளசி ஓர் அடி கூட நகராமல் அங்கேயே நின்றாள்.
“ச்சு. டேய் என்ன பண்ணிட்டிருக்க?” என்று பசுபதி மகன் கைப்பற்றி இழுக்க,
“ஹேய் உன்னை தான் கேட்கிறேன். சொன்னதை திரும்ப சொல்லு. சொல்லுடி”
“தேவா” என்று ஜெயலட்சுமி கோபம்கொண்டார்.
“நல்லா உன் மூளையில ஏத்திக்கோ. ஆஹ்ஹா உனக்கு தான் மூளையே இல்லையே. பரவாயில்லை. நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ. நாந்தான் உன் கேஸ் நடத்துவேன். வேற யாருக்கும் கொடுக்க முடியாது, நீயும் என்முன்னாடி நிக்க முடியாது. என்ன புரிஞ்சுதா? புரிஞ்சி இருக்கணும். பார்த்துக்கோ” என்று அவளின் நெற்றியில் ஒற்றை விரல் வைத்து குத்தினான்.
துளசி அவன் விரலை தட்டிவிட்டவள், “ம்மா. நாம கிளம்பலாம்” என்றாள்.
இதற்கு மேலும் அங்கு நின்று இதை பெரிதாக்குவதை பெண் விரும்பவில்லை.
“நீ கிளம்ப முடியாது. கேஸ் பத்தி நான் பேசணும்” என்றான்.
“வழி விட்டு நில்லுங்க”
“ப்பா. இவங்களுக்கும் சாப்பாடு சொல்லுங்க. டீச்சர் வாங்க உட்காருங்க” என்று வளர்மதி கைப்பற்றி சோபாவிற்கு அழைத்து சென்றான் தேவா.
வளர்மதிக்கு அவன் செயலில் தலை வலிக்க ஆரம்பித்தது. முரட்டு மாணவன், கடைசி வரை அப்படி தானோ? இன்னும் நாலு போட்டிருக்கலாமோ?
மகன் அதிகமாக நடந்து கொள்கிறான் என்பதை பசுபதி உணரத்தான் செய்தார். ஆனாலும் அந்தநேரம் ஏதும் பேசாமல் அவர்களுக்கும் உணவை ஆர்டர் கொடுத்தார்.
“எனக்கு வேணாம். நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று ஜெயலட்சுமி பர்ஸை எடுக்க,
“ம்மா. சாப்பிட்டு அக்காவோட கிளம்புங்க” என்று அவரின் கைப்பற்றி தனக்கு மறுபக்கம் அமர வைத்து கொண்டான் தேவா.
“ஒழுங்கா என்னை கிளம்ப விடு தேவா” என்று ஜெயலட்சுமி மகனை அடிக்குரலில் அதட்ட,
“இதே உங்க பையன் அடிபட்டு படுத்திருந்தா, இப்படித்தான் எனக்கெனன்னு விட்டுட்டு கிளம்பியிருப்பீங்களா? என்ன இருந்தாலும் அவர் உங்க கொழுந்தன் தானே” என்று மகன் கேட்டுவைத்தான்.
“டேய் எதுக்கு எதை பேசுற” ஜெயலட்சுமி கொழுந்தனை பார்த்து படபடத்தார்.
“ஆமா. அவருக்கு நாம தான் குடும்பம். நாம கோவிச்சுக்கிட்டு கிளம்பினா”
“எனக்கு அவர்மேல் என்னடா கோவம்?”
“அப்போ ஏன் கிளம்புறேன்னு நிக்கிறீங்க”
“தேவா என்கிட்ட உன் வேலையை காட்டாத”
“என்ன காட்டிட்டேன். என் சித்தப்பாக்கு நான் பேசினது ஒரு குற்றமா? ஓர் கொடியில ஒரு மலர் தான் பூக்கும்ன்னு அவர் தனியா நின்னுட்டார். அதுக்காக நீங்க கூட அவர்கிட்ட இப்படி நடந்துக்கலாமா?”
“டேய். டேய். நீ கொஞ்சம் வாயை மூடு” என்று வைரவேல் சங்கடமாக நெளிந்தவர், “அண்ணியை பத்தி எனக்கு தெரியும். அவன் ஏதோ சும்மா சொல்றான் அண்ணி” என்று முடித்துவிட, வளர்மதி, துளசிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
காதல் தோல்வியா? மாமா பாவம். துளசி வருத்தம் கொண்டாள்.
தேவா அவளை கண்டுகொண்டவன், ‘எனக்கும் தான் லவ் பெயிலியர் என்னை பார்த்து ஒரு நேரமாவது பாவம் பட்டிருப்பாளா?’ மனதுக்குள் பொரிந்து கொண்டான்.
“துளசி இங்க வாம்மா. தண்ணீர் கொடு” என்று வைரவேல் தனியே நின்றவளை தனக்கருகில் அழைத்து கொண்டார்.
“லட்சுமி வா நாம போய் டாக்டரை பார்த்துட்டு வந்துடலாம்” என்று மனைவியை அழைத்து கொண்டு சென்றார் பசுபதி.
வைரவேல் இப்போது சுதந்திரமாக, “உன் அண்ணன் ஏன் இப்படி பண்றான்மா?” என்று வளர்மதியிடம் கேட்டார்.
“எனக்கும் தெரியலைண்ணா” என்ற வளர்மதிக்கு அளவில்லா வேதனை.
கோவம் கொண்டு அவரை இரண்டில் ஒன்று பார்க்கும் வளர்மதி தான் எல்லோருக்கும் பழக்கம். ஆனால் இப்போது என்னவென்றால் வேதனையில் சுருங்கி கொள்பவரை எவ்வாறு தனியே விட முடியும்?
தேவாவிற்கு வளர்மதி தான் முன்னுக்கு நின்றார். வந்ததில் இருந்து மிகவும் அமைதியாக, அவரின் இயல்பிற்கு வேறுபட்டு நடந்து கொள்கிறார். ஜெயலட்சுமி செயல் எல்லாம் அவருக்கு தூசி போன்று தான். சாதாரணமாக சமாளிக்க கூடியவர், திணறி நிற்கிறார். ஏன்? அப்படியென்ன நடந்துவிட்டது?
“மண்ணுக்குள்ள புதைஞ்சு போறவங்களே நிமிர்ந்து நிக்கும் போது உங்களுக்கு என்ன? அந்தளவு எல்லாம் இங்க ஒன்னும் நடந்துடலை” என்றான் தேவா.
என்னை ஏன் இழுக்கனும்? துளசி அவனை கோவமாக பார்க்க, “இன்னா லுக். உன் மாமாக்கு மெடிசின் பார்த்து கொடு” என்று அவளை அதிகாரம் செய்தான்.
மாட்டேன் என்று மறுக்க முடியாது. அதற்காக அவன் அதிகாரம் செய்வதை ஏற்று கொள்வதும் கடுப்பு.
“துளசி. நர்ஸ் பார்த்து கொடுப்பாங்க. நீ உட்காருமா” என்றார் வைரவேல்.
“சாரி மாமா. எங்களால தான் உங்களுக்கு சிரமம். ரெஸ்ட் எடுக்க வேண்டிய நேரத்துல இது எல்லாம்” என்று மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினாள் துளசி.
“அட மன்னிப்பு எல்லாம் எதுக்கும்மா? நம்ம பிரச்சனையை நாம பார்க்காம” என்று வைரவேல் சொல்ல.
“சித்தப்பா. வர மன்னிப்பை ஏன் விடணும்? அப்படியே என்கிட்டேயும் கேட்க சொல்லுங்க. முக்கியமா அந்த எமோஷன் முகத்தில இருக்கணும்” என்றான் தேவா.
“நான் ஏன் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்? சொல்ல போனால் இன்னைக்கு கோர்ட்ல நடந்ததுக்கு நீங்க தான் என்கிட்ட சாரி கேட்டிருக்கணும்”
“அடிங்க. நான் எதுக்கு சாரி கேட்கணும்?” என்று தேவா பாய்ந்துவிட,
“பின்ன உங்களை வைச்சு தானே என் கேரக்டரை”
“அடச்சீ நிறுத்து. சும்மா கேரக்டர்ன்னே சொல்லிட்டிருக்க. இவங்க டிசிபிலின் சர்டிபிகேட் வைச்சு நீ என்ன கிழிக்க போற?”
“நான் என்னமோ கிழிச்சுகிறேன். ஆனா உங்களால தான் எனக்கு இந்த பேச்சு”
“வாங்கிக்கோ. என்னால வர எதுவும் உனக்கு வேண்டியது தான்”
துளசி முகம் சுளித்து, “இல்லை வேண்டாதது தான்” என்றாள்.
“என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற நீ. கிளம்புற வரைக்கும் வாய் திறந்திடாத” என்று எச்சரித்தான்.
“துளசி நீயாமா இது?” என்று வைரவேல் கேட்டேவிட்டார்.
வளர்மதியும், அவரும் இவ்வளவு நேரம் துளசியை தான் ஆச்சரியத்துடன் பார்த்திருந்தார்கள்.
தேவாவை கண்டால் ஒளிந்து கொள்ளும் பெண்ணல்லவா இவள்!
“என்ன மாமா?” என்று பெண் புரியாமல் பார்க்க,
“இல்லை. தேவாகிட்ட இப்படி?” என்று அவர் இருவரையும் பார்க்க,
“இத்தனை வருஷம் என்னை கண்டாலே பம்மிக்கிட்டு இருந்தவ, இப்போ எல்லாம் என்னமா என்மேல் பாயுறா தெரியுமா மிஸ்?” என்று வளர்மதியிடமும் சொன்னான்.
“ஆமா. பயப்படுற அளவு எல்லாம் நீங்க இல்லைன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு. அதனால பேசுறேன். அதுக்காக பாயுறேன்னு எல்லாம் அதிகமா சொல்ல வேண்டியதில்லை” துளசி கடுப்பாக சொன்னாள்.
“ஆஹ்ன் பேனா நிப் வைச்சு குத்திட்டு நான் அதிகமா சொல்றேனா?”
“அந்த பொறுக்கியோட சேர்ந்து வாழுன்னு சொன்னா அப்படித்தான் செய்வேன். நீங்க ஏன் என் விஷயத்துல தலையிடுறீங்க?”
“துளசி. என்ன துளசி” என்று வளர்மதி மகளை கண்டிப்புடன் பார்த்தார்.
“பேசட்டும் விடும்மா. பார்க்க நல்லா இருக்கு இல்லை” என்றார் வைரவேல்.
“சித்தப்பா”
“நீ சொல்லும்மா என் மகன் நல்லவன்னு எப்படி புரிஞ்சது?”
“சந்தோஷ்” என்றாள் பெண் கசப்பாக.
“நான் பயப்பட வேண்டிய ஆள் அவனை மாதிரி இருக்கிறவங்க தான். அதுக்காக இவர் நல்லவர்ன்னு எல்லாம் இல்லை. பயப்பட மட்டும் அவசியம் இல்லை. அவ்வளவு தான்”