ஒருவரின் மீது வைக்கும் அன்பு, அவர்கள் சொற்பேச்சை கேட்டு நடக்கும் வரைதான்; அதை மீறி ஏதாவது செய்தால் இத்தனை ஆண்டுகள் வைத்திருந்த அன்பு கானல் நீராக மாறிவிடுமோ அப்படிப்பட்ட அன்பு தேவைதானா?
“ யாழி மேம்….. மேம்….” என்று கத்தியபடி தென்றல் யாழினி முன் கைகளை ஆட்டிக்கொண்டு இருக்க.
யாழினி “அ….” என்று கனவில் இருந்து விழிப்பது போல திணறிச் சுற்றிப் பார்த்தவள், அவள் முன் நின்று கொண்டிருந்த தென்றலை அப்பொழுதுதான் கவனித்தது போல் “ சொல்லுங்கள் தென்றல், என்ன வேணும்? “ என்று அவள் முகம் பார்க்க தென்றல் தயங்கி கொண்டே
“ லீவ் கேட்டனே மேம் நாளைக்குக் கோவிலுக்குப் போகணும்னு “ என்று தென்றல் சொன்னதை கேட்டு சுதாரித்த யாழினி
“ பிச்… என்ன தென்றல், லீவ்லாம் ஒன் வீக் முன்னாடி கேட்க மாட்டீங்களா நாளைக்குக் கிளாஸ் இருக்கு, அதோட நிறைய ஆர்டர் வேற முடிச்சி தரணும் இப்போ வந்து லீவ்னா.. எப்படி தென்றல்.” என்று கையில் இருந்த போனை டேபிளில் வைத்து விட்டு தென்றலைப் பார்க்க அவளோ என்ன சொல்ல என்று தெரியாமல் திரு திருவென முழித்தபடி
“ அது வந்து மேம்….” என்று இழுக்க அதில் சற்று கோபம் எட்டிப் பார்க்க,
யாழினி “ அப்படி என்ன அவசியம் உடனே லீவ் கேட்குற அளவு “ என்று குறள் உயர்த்தி பேச, அதில் மேலும் தயங்கிய தென்றல்
“அது மேம், அக்காவுக்கு நாளைக்கு கல்யாணம்..” என்று தென்றல் உண்மையை சொல்லிவிட, யாழினி “அக்கா மேரேஜ்னு ஒரு நாள் முன்னாடி வந்து சொல்றீங்க தென்றல், முன்னாடியே சொல்லியிருந்தா ஒன் வீக் லீவ் நானே தந்திருப்பேனே “
“அது மேம் எனக்கே நேத்து தான் தெரியும்.”
“என்னது…” என்று அதிர்ந்து யாழினி பார்க்க , தென்றல் சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு யாழினி அருகே சென்று மெல்லிய குரலில்
“ எங்க அக்கா லவ் பண்ணுற விஷயம் வீட்டுல தெரிஞ்சி அவளுக்கு வேற மாப்பிள்ளையை அவசரமா பார்க்கிறாங்க மேம், அதான் நாளைக்கு அவ லவ் பண்ணுற பையனோட வீட்டுல தெரியாம கல்யாணம் பண்ணி வைக்கப்போறோம்” என்று தென்றல் சொன்னதை கேட்டு கண்கள் மின்ன தென்றலை பார்த்த யாழினி பின் சுதாரித்தவளாக பழையபடி முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு “ உங்க வீட்ல ஏன் ஒத்துக்கல..”
“அது எங்க அக்கா லவ் பண்ணின பையன் வேற ஆளுங்க அதான் ஒத்துக்கல”
“ஒ…” என்று ஏதோ யோசித்த யாழினி “ எல்லாம் ரெடி பண்ணிடீங்களா, மேரேஜ்க்கு எதவது ஹெல்ப் வேணும்னா சொல்லு தென்றல் நான் ஹெல்ப் பண்ணுறேன் “
“இல்ல மேம்..எல்லாம் ரெடி பண்ணிட்டோம் பையன் சைட் ஒகே மேம் சோ அவங்களே எல்லாம் பார்த்துக்குறன்னு சொல்லிடாங்க “ என்று தென்றல் சிரிக்க, அவள் முகத்தில் இருந்த சிரிப்பு யாழினி முகத்திலும் ஒட்டிக்கொள்ள சிரித்த முகமாக
“ எத்தன நாள் வேணுமோ லீவ் எடுத்துக்கோ அன்ட், உனக்கு வீட்டுல எதவது பிரச்சன பண்ணா எனக்கு ஒரு கால் பண்ணு நான் பார்த்துக்கிறேன் ஓ.கே..” என்று யாழினி சொன்னதை கேட்டு வேகமாக தலையாட்டிய தென்றல் மகிழ்ச்சியாக
“ தேங்க்யூ மேம்… அப்போ நான் போய்ட்டு வரேன் “ என்று அவள் சென்றதும் கண்களை இறுக மூடி சேரில் சாய்ந்த யாழினி
“ தென்றல் மாதிரி என் அக்கா கூட நானும் சண்டை போடாம இருந்திருக்கலாம் “ என்று முனங்கியபடி ஒரு பெருமூச்சு ஒன்றை விட்ட படி போனை எடுத்துப் பார்த்தாள், பெயரில்லாமல் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்க அந்த நம்பரை வெறித்து பார்த்துவிட்டு அதை திரையில் இருந்து தள்ளிவிட்டு நேரத்தை பார்க்க அது இரண்டு என்று காட்டவும் போனை அங்கேயே போட்டுவிட்டு எழுந்து வெளியே சென்று அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
அங்கு வயது வித்தியாசங்களுடன் பெண்கள் பலர் அமர்ந்திருந்தனர் அனைவரும் யாழினியை பார்த்துவிட்டு எழுந்து நிற்க அனைவரையும் அமர வைத்தவள் போர்ட் அருகே சென்று
“ இன்னைக்கு நான் உங்களுக்கு டுவல் டைப்பா ஸ்டிச்சஸ் போடுறத பத்தி தான் சொல்லித்தர போறேன் …” என்று எழுத தொடங்கினாள்.
இவள் யாழினி வயது இருபத்தொன்று பி.காம். படித்திருக்கிறாள். பொட்டிக் (Boutique) ஒன்று நடத்தி வருகிறாள் அதோடு ஆரிவர்க் பிளவுஸ் தைப்பது போன்ற வகுப்பும் சேர்த்து எடுக்கிறாள்.
இரண்டு மணி நேரம் க்ளாஸ் எடுத்து முடித்தவள் அனைவரையும் அனுப்பிவிட்டபின் கீழே இறங்கிச் சென்று அங்கிருந்து துணியை தைத்துக்கொண்டு இருந்த லாவண்யா அருகில் சென்று
“ அக்கா தென்றல் நாளைக்கு வர மாட்டா அவ முடிக்க வேண்டிய துணியை எல்லாம் ஆளுக்கு ஒன்னா எல்லாருக்கும் பிரிச்சி கொடுத்துடுங்க அக்கா, எனக்கும் எடுத்து வைங்க நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் “ என்று சொல்லிவிட்டு செல்லப்போனவளின் கையை பிடித்து நிறுத்திய லாவண்யா
“ என்ன ம்மா இது ஏற்கெனவே உனக்கு நிறைய துணி இருக்கு ம்மா முடிக்க, இதுல இதுவும் சேர்ந்தா என்னம்மா…..”
“அக்கா….நான் பார்த்துக்கிறேன் க்கா நீங்க எடுத்து மட்டும் வையுங்க..” என்று சிரித்த முகமாக செல்லும் யாழினியை பாவமாக பார்த்தவர் அவர் வேலையை பார்க்க தொடங்கிவிட்டார்.
இங்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த யாழினி மூளைக்குள் அந்த தொலைபேசி அழைப்பு தான் ஓடிக்கொண்டிருக்க “ என்னவா இருக்கும்…” என்று யோசித்தபடியே பள்ளிக்கு வந்து சேர்ந்தாள்.
பள்ளியைப் பார்த்ததும் மற்றது மறந்து போக சிரித்த முகமாக கேட்டை தாண்டி எட்டி பார்க்க அங்கே நிறைய பிள்ளைகள் மிக மகிழ்ச்சியாக இந்த உலகை மறந்து விளையாடி கொண்டு இருந்தனர். யாழினியோ ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே கண்களை சுழலவிட்டபடி நடந்து சென்றாள்.
அப்போது “அம்மா……” என்று சத்தத்தோடு இவளை பின்னிருந்து அவனின் சின்ன கைகளை வைத்து அணைக்க யாழினி “ மொழி…..” என்று சிரித்தபடி திரும்பி அவனை அணைத்தாள்.
“ ஏன் ம்மா இன்னைக்கு இவ்ளோ லேட்… நான் வெளியவே பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா…” என்று யாழினி முகம் பார்த்து உதட்டை பிதுக்கியபடி அழகாக பேசினான் ஐந்து வயதே நிரம்பிய மொழி என்று அழைக்கப்படும் செம்மொழி.
மொழியின் கன்னத்தை கிள்ளி “ என் அழகு செல்லம்.. “ என்று கொஞ்சியவள் “ அது கொஞ்சம் வேலைடா” என்று பேசியபடி அவன் அணிந்திருந்த பையை வாங்கியவள் ஸ்கூட்டியில் மாட்டிவிட்டு அவனை முன்னே நிற்க வைத்துவிட்டு அவள் பொட்டிக் நோக்கி சென்றாள்.
ஸ்கூட்டில் நின்று கொண்டிருந்த மொழி “ வேகமாகப் போ ம்மா… அந்த வண்டி நமக்கு முன்னாடி போகுது பாரு… “ என்று குதித்தபடியே வந்தான்.
மொழிக்கு இப்படி வண்டியில் வேகமாக செல்வது என்றால் அவ்வளவு இஷ்டம் ஆனால் யாழினி ஒரு நாளும் வேகமாக செல்ல மாட்டாள் நேரமாகிச் சென்றாள் கூட செல்வாளே தவிர வேகமாக செல்ல மாட்டாள் எப்போதும் இருபதை தாண்டாமல் உருட்டிக்கொண்டு தான் செல்வாள் இன்றும் எப்போதும் போல உருட்டியபடி பொட்டிக் வந்து சேர்ந்தாள்.
வண்டியை நிறுத்தியதும் வேகமாக இறங்கிய மொழி “ நான் நாளையிலிருந்து மாமா கூட கார்லயே ஸ்கூலுக்கு போறேன் உன் கூட வரல போம்மா…” என்று எப்போதும் சொல்லும் டயலாக்கை மாறாமல் கூறிவிட்டு பொட்டிக்குள் ஓடிவிட்டான்.
யாழினி அவனை கண்டு கொள்ளாமல் வண்டியை லாக் செய்துவிட்டு உள்ளே செல்ல அங்கே மொழி கவுண்டரில் ஏறி அமர்ந்துகொண்டு சூடாக இருந்த வாழைக்காய் பஜ்ஜியை ஊதிச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க அதை பார்த்த யாழினி,
“மொழி கை கழுவினாயாடா….” என்று அதட்ட அதற்கு தலையை மட்டும் “ ம்ம்ம்….” என்று ஆட்டிக்கொண்டு கால்களை ஆட்டியபடி உண்டவனை பார்த்து “ காலை ஆட்டாதேடா…” என்று கடிந்து விட்டு லாவண்யாவிடம் திரும்பி “ தென்றல் துணி எங்க அக்கா…” என்று கேட்க, அதற்கு அவர்
“ இதோ இருக்கு ம்மா…” என்று எடுத்து கொடுக்க அதற்குள் அங்கிருந்த தென்றல், சயத், மது மூவரும் மொழியிடம் விளையாடத் தொடங்க அவர்களை பார்த்த யாழினி “ என் பையன் எங்கயும் போக மாட்டான் முதல்ல போய் வேலையைப் பாருங்க மூனு பேரும் ஆர்டர் நிறையா இருக்கு “ என்று அதட்டி விட்டு மொழி அருகே செல்ல மொழி “ ஏன்…திட்டுற..ம்மா” என்று வாயில் பஜ்ஜியை தள்ளிய படி கேட்க
“ மொழி சாப்பிட்டு முடிச்சிட்டு பேசு “ என்று மீண்டும் யாழினி அதட்ட அதை கேட்டு வேகமாக பஜ்ஜியை சப்பிட்டவன்
“ ஏன்… அக்காங்கல திட்டுற என் கூட தான விளையாடுறாங்க. “ என்று யாழினி ஷாலில் கையையும் வாயையும் துடைத்து கொண்டே பேச, அவன் செயலில் சிரித்தவளாக “ நீங்க வெட்டி ஆபிசர் விளையாடலாம் ஆனா அவங்க அப்படியாடா.. சீக்கிரம் வேலை முடிச்சா தான வீட்டுக்கு போக முடியும் “ என்று பேசியபடி அவனை தூக்கிக்கொண்டு கைகளை தண்ணீரால் கழுவி விட்டாள். பின் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வீட்டுக்கு சென்றாள்.
சாயங்காலம் போக்குவரத்தைக் கடந்து ஸ்கூட்டி ஒரு அமைதியான தெருவுக்குள் சென்று அந்த பெரிய கேட்டின் முன்னால் வந்து நின்றது இவளைப் பார்த்ததும் அந்த கேட்டை காவலாளி திறந்துவிட ஸ்கூட்டியை உள்ளே ஓட்டிச் சென்று அதன் இடத்தில் நிறுத்த அடுத்த நிமிடம் மொழி ஸ்கூட்டியை விட்டு இறங்கி உள்ளே “ பாட்டி நான் கிளம்பிட்டேன் ….” என்று உள்ளே பறந்து தான் சென்றான்.
அவன் பின்னே சென்ற யாழினி உள்ளே ஹாலில் ஷூ மற்றும் ஷாக்ஸை திசைக்கு ஒன்றாக சிதறி இருக்க, அதை கைகளில் எடுத்தபடி உள்ளே செல்ல அங்கே சோபாவில் மொழி ஒய்யாரமாக அவன் பாட்டி மடியில் அமர்ந்திருக்க இருவரும் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சியில் ஓடும் கார்ட்டூனை கண் இமைக்காமல் ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தபடி யாழினி உள்ளே சென்றுவிட்டாள்.
இப்படி இவர்கள் இருவரும் சேர்ந்து டிவியை பார்த்துக்கொண்டு இருக்க அப்போது
“ என்னம்மா மொழிக்கூட சேர்ந்து நீங்களும் டிவில கார்டுன் பார்க்கிறீங்க..” என்று குரல் கேட்கவும் அமுதா உஷரானவராக வேகமாக மடியில் இருந்த மொழியை கீழே இறக்கி விட்டு
“ கண்ணா… இப்படி டிவி பார்க்க கூடாது ஸ்கூல் முடிஞ்சி வந்ததும் வீட்டுப்பாடம் முடிச்சிட்டு தான் டிவி பாக்கணும்…” என்று அறிவுரை சொல்வது போல செய்ய
“ ஏமாத்தாதிங்க ம்மா நான் எல்லாம் பார்த்துட்டேன் நீங்களும் சேர்ந்து கார்டூன் பார்க்கிறத, யாழி சொன்னப்ப கூட நம்பல ஆனா இப்போ நேர்லயே பாத்துட்டன் …என்னம்மா இது “ என்று தூணில் சாய்ந்தபடி த்ருவ் கேட்டான்.
அப்போது கையில் டீக்கோப்பைகளுடன் வந்த யாழினி
“ இப்போ நம்புறீங்களா.. அண்ணா நான் சொல்லும் போது கூட விளையாடாத யாழின்னு சொல்லிட்டு போனீங்களா, இப்போ நீங்களே கண்ணால பாருங்க “ என்று டீயை நீட்ட அதை எடுத்துக்கொண்ட த்ருவ்
“ நான் கூட நீ ஏதோ கிண்டலுக்கு சொல்றன்னு தான் நினைச்ச ம்மா…ஆனா, என்னம்மா இது சின்னப் பிள்ளை மாதிரி “ என்று அமுதாவை பார்த்து கேட்க, அமுதா
“என்னடா சின்ன பிள்ளை, கார்ட்டூன் சின்ன பிள்ளைங்க தான் பார்க்கணும்னு சட்டம் ஏதாவது இருக்காடா “ என்று முறைத்தபடி பேசியவரிடம் டீயை நீட்டியபடி யாழினி
“ உங்கள பார்க்க கூடாதுன்னு யாரும் சொல்லல ம்மா சின்ன பையன வச்சிட்டு பார்க்காதீங்கன்னு தான் சொல்றோம் “ என்று மொழிக்கு பாலை குடிக்க தட்டை நீட்ட அந்த வாண்டோ அம்மா இங்கே பார்க்க வில்லை என்றதும் பாலை எடுக்காமல் யாழினிக்கு வைத்து இருந்த டீ கப்பை எடுக்க போக யாழினி அவன் கையில் ஒரு அடியை பட் என்று போட்டு விட்டு பாலை எடுத்து கொடுத்த படி அவன் அருகே அமர்ந்தாள்.
த்ருவ் அமுதா அருகே இருந்த சோபாவில் அமர்ந்தபடி “ பொண்ணுங்க சீரியல் தான பாப்பாங்க நீங்க என்ன கார்டூன் பாக்கிறிங்க ம்மா…” என்று டீயை குடித்தபடி த்ருவ் கேட்க, அதற்கு அமுதா
“ வர வர சீரியல் நல்லா இல்லடா.. எல்லாம் ஒரே மாதிரி இருக்கு அதான் இதுக்கு மாறிட்டேன்டா, நீ கூட ட்ரை பண்ணுடா நிறைய கார்ட்டூன் இருக்கு ஜாக்கி சான், சின்சான், டோரிமொன், சொட்டா பீம், ஓங்றி…” என்று அவர்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போக த்ரூவ்
“ அம்மா போதும் போதும் இவ்வளவு கார்டுன்னா நீங்க பார்க்கிறீங்க, நான் ஒரு நாள் கூட நீங்க கார்ட்டூன் பாக்குறத பார்த்தது இல்லையே ம்மா….”
“உக்கும்… நீ காலையில போனா நைட் தானடா வருவ அப்புறம் எப்படி உனக்கு தெரியும் இன்னைக்கு தான் எதோ அதிசயமா சீக்கிரம் வந்துட்ட “ என்று டியை அவர் குடிக்க அப்போது தான் த்ரூவிற்கு அவன் எதற்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்தோம் என்று நினைவு வர யாழினியை பார்த்து
“ டீ குடிச்சிட்டியா யாழி, உன் கூட கொஞ்சம் பேசனும் “ என்று யாழினியை பார்க்க அவள் புருவம் சுருங்க எதோ யோசித்தவள் உடனே
“இதோ குடிச்சிட்டேன் அண்ணா..” என்று வேகமாக எழுந்து நிற்க,
த்ரூவ் “ இதோ வந்துரன்..ம்மா..” என்று சொல்லிவிட்டு அவன் அலுவலக அறைக்கு அழைத்து சென்றவன் அங்கிருந்த சேரில் அமர்ந்தபடி எதிரில் இருந்த சேரை காட்டி
“ யாழி உக்காரும்மா…” என்று அவளை அமர வைத்தபின் “ கால் ஏதாவது வந்துச்சாம்மா….” என்று கேட்க, அதற்கு யாழினி
“ம்ம்ம்…ண்ணா எட்டு மிஸ்டு கால்” என்று போனை பார்த்தபடி பேச “ அட்டன் பண்ணிறுக்கலாமே “ என்று கேட்டது தான் தாமதம் வெடுக்கென்று த்ரூவை நிமிர்ந்து பார்க்க அந்த பார்வையிலேயே அனைத்தும் புரிந்தவனாக பெருமூச்சு ஒன்று விட்ட படி
“ எனக்கும் கால் வந்துச்சு ம்மா.. உங்க..” என்று எதோ சொல்ல வந்தவன் யாழினியின் தீ பார்வையில் ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு குரலை செராமிக் கொண்டு
“ சித்ரா அவங்களுக்கு ஹார்ட் அட்டாக்காம் ஐசியூ-வில் வச்சிருக்காங்கலாம், சர்ஜரி பண்றதுக்கு முன்னாடி உன்ன பார்க்கணும்னு சொல்றாங்க “ என்று சொல்லிவிட்டு யாழினி முகம் பார்க்க அவள் முகம் வெறுமையாக இருந்ததே தவிர எந்த ஒரு மாற்றமும் இல்லை அதை பார்த்த த்ரூவ்
“ என்ன பண்ண ம்மா “ என்று யாழினியிடமே கேட்க, யாழினி “ என்ன பண்ணண்ணா…? பணம் எதவது வேணும்னா கேட்டு சொல்லுங்க தறேன் என் கடமை அதோட முடிஞ்சது ண்ணா…” என்று எழுந்தவள் “
மறக்காம பணத்தைப் பத்தி மட்டும் கேட்டுச் சொல்லுங்க அண்ணா.. கீழே மொழி தேடுவான் நான் போயிட்டு வரேன் “ என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றவள் விறு விறு என அவள் அறை நோக்கி சென்றவள் கதவை மூடி தாழ் போட்ட மறுகணம் மடங்கித் தரையில் அமர்ந்தவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென கொட்ட அதை துடைக்க கூட தெம்பில்லாமல் வாய் மூடி மௌனமாக அழத் தொடங்கினாள்.
யாழினிக்கு தகுதியில்லாதவர்களுக்காக வரும் இந்த அழுகை பிடிக்கவில்லை அவர்களுக்காக உருகும் இந்த மனதைப் பிடிக்கவில்லை இப்படி அவர்களுக்காக வருந்தும் அவளையே அவளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் நிலையை எண்ணி உருகும் மனதை இழுத்துப் பிடித்து உருகாதே என்று இறுக்கமாக இறுக்கிய பின் அவள் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரும் நின்று போனது