Manjal Kaattu Maina 10 8816 மஞ்சள் காட்டு மைனா 10 “என்னடா சொல்ற?” என்று சுந்தரம் கேட்க, “ஆமாங்க சார். இப்போதான் தெரிஞ்சது. வைரவேலுக்கு பதிலா இன்னைக்கு தேவா சார் தான் ஆஜர் ஆக போறார்” என்றான் மற்றவன். அருணிடம் சொல்லி அதற்கான நடைமுறையை பார்க்க சொல்லி தேவா போனில் சொல்லியிருந்தான். தேவா கோர்ட்டுக்கு வருவதற்குள் அருண் அதற்கான வேலையில் இறங்கியிருக்க, விஷயம் சுந்தரம் காதுக்கு வந்தது. சுந்தரம் எதையோ யோசிக்க, “நமக்கு வாதாட மாட்டேன்னு சொல்லிட்டு துளசிக்கு ஆதரவா வாதாடா போறானா?” என்று சந்தோஷ் கோவமாக பேசினான். “சந்தோஷ். நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று சுந்தரம் மகனிடம் சொல்ல, “முடியாது. நான் இன்னைக்கு அந்த தேவாவை கேட்காம விட மாட்டேன். ரொம்ப நல்லவன் மாதிரி பேசினான். இப்போ என்னமோ துளசிக்காக நிற்கிறான். என்ன நினைச்சுட்டு இருக்கான் அவன்” என, “டேய். நீ அமைதியா இல்லை. உன்னை அவ்வளவு தான் பார்த்துக்கோ” என்றார் சுந்தரம் எரிச்சலுடன். சந்தோஷ் அவரின் எல்லா செயல்களுக்கும் முட்டு கட்டையாக வருவதில் அவருக்கு கோவம். “சார். இப்போ என்ன பண்ணலாம்?” என்று மற்றவர் கேட்க, “எதுவும் பண்ண வேண்டாம். தேவா தான் நம்ம எல்லா கேஸுக்கும் வக்கீல். நம்மளை பத்தி அவனுக்கு முழுசா தெரியும். பொறுத்திருந்து தான் பார்க்கணும்” என்றார் சுந்தரம். அவசரப்பட்டு எதுவும் செய்துவிட அவர் விரும்பவில்லை. அப்புறம் தேவா எப்படி திரும்பி நிற்பான் என்று அவருக்கு அனுமானம் உண்டு. இதெல்லாம் சந்தோஷுக்கு தெரியாது, அவனுக்கு துளசி மட்டுமே கண். தேவா கோர்ட்டுக்கு அவசரமாக வர, அருண் அவனை அழைத்து கொண்டு சென்றான். துளசி எண் வருவதற்கு முன் தேவா தயாராகிவிட, “என்ன சார் இந்த பக்கம்?” என்று சந்தோஷ் வந்தான். தேவா அவனுக்கு பின்னால் வந்த சுந்தரத்தை தீர்க்கமாக பார்த்து நிற்க, “சார் வணக்கம்” என்றார் சுந்தரம். தலையசைத்தவனுக்கு சுந்தரம் இந்த விபத்தை செய்திருப்பாரா என்று உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும். என் சித்தப்பான்னு தெரிஞ்சும் கை வைச்சிருந்தா இருக்கு இவனுங்களுக்கு? “சார். நீங்க தான் துளசிக்கு ஆஜர் ஆக போறீங்கன்னு சொல்றாங்க” என்று சந்தோஷ் கேட்க, “ஆமா” என்றான் தேவா. “அதெப்படி எனக்கு செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு துளசிக்கு மட்டும் வருவீங்களா?” “வருவேன்“ “சார்“ “என் சித்தப்பாக்காக நான் வருவேன் சந்தோஷ்“ “துளசி“ “ஷ்ஷ். துளசி பத்தி எனக்கு ஒன்னுமில்லை. என் சித்தப்பா கேஸ் இது. நான் எடுப்பேன்” என்று அவனை வெட்டினான். “சந்தோஷ். சார்கிட்ட என்ன பேசிட்டு இருக்க நீ? அமைதியா இரு” என்று மகனை அடக்கிய சுந்தரம், தேவாவின் பார்வையில் சுதாரித்தார். “நமக்காக நீங்க நிக்கலைன்னு அவனுக்கு கோவம் சார். அதான் இப்படி பேசிட்டு இருக்கான்“ “கோவமா? சார். நாங்க ஒன்னும் உங்களுக்கு மட்டுமே இந்த தொழிலை செய்யலை. எங்களோட எல்லா கிளையண்டை போல தான் நீங்களும். கொஞ்சம் உங்க மகனுக்கு சொல்லுங்க” என்றான் அருண். “சொல்றேன் சார்“ “தேவா நாம போலாம்” என்று அருண் அவனை அழைத்து கொண்டு சென்றான். “என்னமோ சரியில்லைடா” என்று தேவா சொல்ல. “உன் சித்தப்பா விஷயம் இவங்க தான் பண்ணியிருப்பாங்கடா” என்றான் அருண். “ம்ஹூம். அதுவும் தான். ஆனா” என்று புருவத்தை சுருக்கினான். சுந்தரம் மரியாதையாக பேசினாலும், அதில் ஏதோ ஓர் எள்ளல். ‘அப்படி என்ன பண்ண போறார்?’ “துளசி வந்துட்டா தேவா” என்று அருண் சொல்ல, “ம்ம்” என்றான். “ப்பா. யார் கார்ல வரா துளசி?” என்று சந்தோஷ் கேட்டான். “அது பசுபதி அய்யா கார் மாதிரி இருக்கு” என்று ஒருவன் சொல்ல, “அந்தளவு போயிடுச்சா. ப்பா. விட கூடாதுப்பா. அவளை இந்த வக்கீலை யாரையும் விட கூடாது“ “சந்தோஷ். நீ முதல்ல உன்னை அடக்கு. எங்க வைச்சு என்ன பேசிட்டிருக்க” என்று சுந்தரம் கோபம்கொண்டார். இவர்கள் எண்ணும் அழைத்துவிட, வைரவேலுக்கு பதில் தேவா ஆஜர் ஆனான். எதிர்பக்கம், “கணேசனுக்கு பதில் நான்” என்று வேறொருவர் ஆஜர் ஆனார். தேவா திரும்பி அருணை பார்க்க, “தெரியல” என்றான் அவன். வழக்கு ஆரம்பித்தது. முதலில் பேச ஆரம்பித்த புது வழக்கறிஞர், “துளசிக்கு முதல்ல இருந்தே சந்தோஷ் கூட வாழ விருப்பமில்லை” என்றார். “அதுக்கு காரணம் அவங்களுக்கு வேற ஒருத்தர் மீது காதல்” என்றார் அவர். துளசி இதை எதிர்பார்க்காமல் திகைக்க, தேவாவிற்கு இது தெரியும் என்பதால் பெண் பக்கம் திரும்பாமல் நின்றான். “இதுதான் உண்மை. சந்தோஷ் மேல அவங்க வைக்கிற குற்ற சாட்டும் அதனால தான்” என்று அவர் சொல்ல, “அப்போ சந்தோஷுக்கு வேற ஒரு பெண்ணுடன் பழக்கம் இல்லைன்னு சொல்றீங்களா?” என்று நீதிபதி கேட்டார். “நாங்க அதை மறுக்கலை. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தது, இப்போ இல்லைன்னு தான் சொல்றோம்“ “அப்புறம் ஏன் சார் அத்தனை முறை அந்த பொண்ணை போய் உங்க கட்சிக்காரர் பார்த்துட்டு வந்தார்” என்று நீதிபதி விசாரிக்க, “குழந்தை இருக்கு மை லார்ட். அவரோட குழந்தையை பார்க்க போனார். அந்த பொண்ணை இல்லை” என்றவர், “துளசி பற்றி நான் சொன்னதுக்கு சாட்சி இருக்கு. அவங்க தாய் மாமா தான்” என்று வளர்மதியின் அண்ணனை நீதிபதிக்கு முன்னால் நிறுத்தினார். தேவா அதிர்ந்து துளசியை பார்க்க, அவள் கோவமாக தேவாவை தான் பார்த்திருந்தாள். வளர்மதியின் அண்ணன் தங்கை மகள் திரும்பாமல், “உங்க பேர் என்ன, உறவு என்ன என்ற பொதுவான கேள்விகளுக்கு பிறகு, சொல்லுங்க சார்” என, “துளசி, சந்தோஷ் தம்பி கல்யாணத்துக்கும் ஒரு வாரம் இருந்தப்போ, நான் ஒரு வேலையா வளர்மதி வீட்டுக்கு போனேன். அங்க ஒரு பையன் துளசியை காதலிக்கிறேன்னு பிரச்சனை பண்ணிட்டிருந்தான்” என்றார் அவர். “அந்த பையன் எந்த ஊர்“ “அதே ஊர் தான் சார்“ “அப்புறம் என்னாச்சு“ “வளர்மதி பொண்ணை கொடுக்க மாட்டேன்னு சொல்லியும், அந்த பையன் கேட்கலை. எனக்கு துளசி வேணும்ன்னு ரொம்ப கோவமா சண்டை போட்டான்“ “உங்க தங்கச்சிக்கு அந்த பையன் கேட்டதுல இஷ்டம் இல்லை. அப்படி தானே“ “ஆமா. அவளுக்கு சந்தோஷுக்கு கொடுக்கணும்ன்னு தான் ஆசை“ “துளசியை காதலிச்ச பையன் அமைதியா போயிட்டானா?” “ஆமா. எனக்கு உன்னை பிடிக்கலைன்னு துளசி சொல்லவும், அந்த பையன் கடைசியா கெஞ்சி கேட்டு கிளம்பிட்டான்“ “துளசி அம்மாக்காக அவங்க காதலை விட்டு கொடுத்துட்டாங்களா?” “இல்லை துளசிக்கு அந்த பையன் மேல காதல் இல்லை“ “உங்களுக்கு எப்படி தெரியும் சார். அவங்க அந்த பையனை காதலிக்கலை சொன்னாங்களா“ “பிடிக்கலை. வேணாம்ன்னு தான் சொன்னா“ “மை லார்ட். அவங்க காதலிக்கலை சொல்லலை. வேணாம்ன்னு தான் சொல்லியிருக்காங்க. அம்மாக்காக காதலை விட்டு கொடுத்துட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பையனை மறக்க முடியாம கஷ்டப்பட்டிருக்காங்க. அதனால தான் அவங்க சந்தோஷோட ஒரு நாள் கூட கணவன், மனைவியா வாழலை“ “எஸ். துளசி இன்னும் மிஸ் துளசியா தான் இருக்காங்க. அவங்களுக்குள்ள தாம்பத்தியமே நடக்கலை“ “முதல் இரவுல சந்தோஷை தொட கூட விடாம பிரச்சனை பண்ணியிருக்காங்க. கத்தி கலாட்டா பண்ணி, ரூம்ல இருந்த பொருளை எல்லாம் உடைச்சு, சந்தோஷை தாக்கி ரொம்ப வெறித்தனமா நடந்திருக்காங்க. அதுக்கு சாட்சி சந்தோஷோட குடும்ப டாக்டர். அவர் தான் மறுநாள் துளசிக்கு வைத்தியம் பார்த்திருக்கார்” என்று அவரையும் கூண்டில் ஏற்றி சாட்சி சொல்ல வைத்தனர். தேவா வேகமாக நடக்கும் எல்லாவற்றையும் கிரகிக்க முயன்று கொண்டிருந்தான். துளசி மிகவும் அமைதியாகவே இருந்தாள். அதுவேறு தேவாவிற்கு குடைச்சலை கொடுத்தது. பெண்ணை அடிக்கடி திரும்பி பார்த்தான். அவள் முதலில் தேவாவை கோவமாக பார்த்ததோடு சரி. அதன் பின் எங்கோ பார்வையை பதித்திருந்தாள். நீதிபதி அடுத்து தேவாவை பேச சொல்ல, அவன் வழக்கிற்கு புதிது என்று நேரம் வாங்கி கொண்டான். வழக்கை மற்றொரு நாளிற்கு தள்ளி வைத்தனர். சுந்தரம், சந்தோஷ் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்க, அவர்களின் வழக்கறிஞருக்கு கை கொடுத்து கொண்டிருந்தனர். “துளசி” என்று அவளின் தாய் மாமா பெண்ணிடம் பேச வர, நிமிர்ந்து அவரை ஒரே பார்வை தான் பார்த்தாள். அதிலே அவர் அமைதியாக நின்றுவிட, “என்னம்மா மருமகளே” என்று சுந்தரம் வந்தார். தேவா இவர்களை கவனித்து அருகில் செல்ல, “தேவா சார். எங்க வக்கீல் பின்னிட்டார் இல்லை” என்றார். “ஆமா. ரொம்ப நல்லா பேசினார்” என்றான் தேவா. “இவரை உங்களுக்கு தெரியுமா தேவா சார்” என்று துளசியின் தாய் மாமாவை காட்ட, “தெரியாம எப்படி? நல்லா தெரியும்” என்றான் தேவா. “மறந்திருப்பீங்களோன்னு நினைச்சேன்“ “எப்படி மறப்பேன் சார்? ஆனா இவரால என்ன பிரயோஜனம்ன்னு தான் தெரியலை“ “என்ன சார் இன்னைக்கு கேஸ் நடந்ததை பார்த்துமா தெரியலை சொல்றீங்க“ “ப்பா. நம்ம தேவா சார் ரொம்ப மூளைக்காரர்ன்னு நினைச்சிட்டு இருந்தோம். அப்படி இல்லை போலவே” என்றான் சந்தோஷ் நக்கலாக. “துளசி. நீ யார்கிட்ட போனாலும், கடைசில என்கிட்ட தான் வந்தாகணும்” என்று மனைவியிடம் வேறு மார்தட்டினான். துளசிக்கு அவன் குரலே மிகுந்த அருவெறுப்பை கொடுக்க, முகம் சுளித்து தள்ளி நின்றாள். தேவாவிற்கு அருகில் பெண் வந்துவிட, “துளசி. என்ன? புருஷன் நான் நிக்கிறேன், என்னை பார்க்க கூட செய்யாம தள்ளி போற. இங்க வா, என்னோட வந்து நில்லு” என்று துளசிக்கு அருகில் செல்ல, “சார்” என்றான் அருண் கோவமாக. “எங்க நிக்கிறீங்களோ அங்கேயே நில்லுங்க. துளசிகிட்ட வர கூடாது” அருண் சொல்ல, “நீ யாருடா என்னை தள்ளி நிக்க சொல்ல, அவ என் பொண்டாட்டி” என்றான் சந்தோஷ். “கோர்ட்டுக்கு வந்தப்போவே அது எல்லாம் முடிஞ்சு போச்சு. கிளம்புங்க போங்க” “அட போறோம் இரு தம்பி. நம்ம தேவா சார்கிட்ட பேசிட்டு கிளம்பிடுறோம்” என்ற சுந்தரம், “அடுத்த வாய்தால துளசியோட தாய் மாமா, அந்த பையன் யாருன்னு அடையாளம் காட்ட போறார். அது தான் துளசி வேணும்ன்னு பிரச்சனை பண்ண பையன்” என, “நல்லது காட்டுங்க. யார் வேணாம்ன்னு சொன்னா” அருண் பேச, “நீங்க தான் பேசுறீங்க, தேவா சாரும், என் மருமகளும் வாயே திறக்க மாட்டேங்கிறாங்களே“ “ப்பா. எப்படி வாய் திறப்பாங்க. பெரிய ஆப்பா இல்லை வைச்சிருக்கோம். என்ன துளசி பயந்துட்டியா?” என்று சந்தோஷ் அவளை வம்பிழுக்க, “நான் ஏன் பயப்படணும்?” என்றாள் அவள் நன்றாக நிமிர்ந்து நின்றபடி. “பார்றா தோரணையை! என்ன துளசி கோர்ட்ல தூங்கிட்டியா என்ன? அங்க நடந்த எதையும் நீ கேட்கலை“ “நல்லா கேட்டேன். ஆனா அதுல பயப்பட என்ன இருக்குன்னு தான் தெரியலை“ “துளசி. எதுக்குடி என் கண்ணை பார்த்து பேசுற? குனிஞ்சு நில்லு. இப்படி என்முன்னாடி நிக்க கூடாது சொல்லிட்டேன்” என்று சந்தோஷ் வெறுப்பாக சொன்னான். ஏனோ துளசி இப்படி இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. தன்னை கண்டால் நடுங்கும் பெண் தான் அவனுக்கு இஷ்டம். “யம்மா மருமகளே. பயத்துல புத்தி ஏதும் பிசகிடுச்சா என்ன? ஏன் பயப்படணும் கேட்கிற? அடுத்த வாய்தால உன் காதல் கதையை எடுத்து விடவா? உன்னை காதலிச்ச பையனை பத்தி ஜட்ஜ் முன்னாடி சொல்லவா?” “சொல்லிக்கோங்க, அதனால எனக்கு ஒன்னுமில்லை“ “ஏய் என்னடி. இவன் இருக்க தைரியமா?” சந்தோஷ் குதிக்க, “ஆமா. அப்படித்தான்“ தேவா அதிர்ந்து பெண்ணை அப்படியா என்று பார்க்க, “உங்களால தானே இதெல்லாம் நடக்குது. நீங்க தான் இதை சரி பண்ணனும்” என்றாள் தேவாவிடம். உத்தரவே தான் அது. “என்ன, நீ ஒருபக்கம், இந்தாள் இன்னொரு பக்கம்னு என்னை மிரட்டுறீங்களா? இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்” என்று தேவா திமிராக சொல்ல, “உங்களை அசர வைக்க எனக்கொண்ணும் ஆசை இல்லை“ “அதானே. உனக்கு ஆசை இருந்திருந்தா, நீ ஏன் இப்படி நிக்க போற?” “அதிகமா பேசாதீங்க. உங்களை வைச்சு தானே என் கேரக்டரை ஸ்பாயில் பண்ண பார்க்கிறாங்க“ “இவங்க பெரிய வெண்ணெய்ங்க. ஸ்பாயில் பண்ணிட்டாலும்“ “தேவா சார். என்ன வார்த்தை எல்லை மீறுது” என்று சுந்தரம் குதிக்க, “பின்ன. உங்க ஓட்டை, உடைசல் எல்லாம் எனக்கு தெரியும். என்னையே மிரட்டி பார்க்க நினைக்கிறீங்க? உங்க அறிவை நினைச்சு எனக்கு சிலிர்க்காதா?” எதை சொல்ல கூடாது என்று சுந்தரம் நினைத்தாரோ, அதையே தேவா சொல்லி வைக்க மனிதர் பல்லை கடித்து தன்னை சமாளித்து கொண்டவர், “என்னை எப்படி காப்பாத்திக்கணும்னு எனக்கு தெரியும் சார். நீங்க இதுல இருந்து வெளியே வரணும்ன்னா நாம பேசணும். நேரம் குறிச்சு நீங்களே சொல்லுங்க. மீட் பண்ணலாம்” என்று மகனை அழைக்க, அவனோ துளசியை வெறித்து கொண்டிருந்தான். “சந்தோஷ்“ “ப்பா. இவ தேவாகிட்ட எப்படி பேசுறான்னு பார்த்தீங்களா? ஏய் உங்களுக்குள்ள என்ன போகுது? இரண்டு பேரும் சேர்ந்து என்னை ஏமாத்தலாம்ன்னு நினைச்சீங்க, அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று மிரட்ட, “அட. உங்க மகனை இழுத்துட்டு போங்க சார். கவுன்சிலிங் கொடுங்கன்னா சுதந்திரமா அலைய விட்டுட்டு இருக்கீங்க” “டேய் என்னை பார்த்தா உனக்கு பைத்தியம் மாதிரி இருக்கா” என்று தேவா மீது பாய பார்த்த சந்தோஷை, “அறிவுகெட்டவனே. கோர்ட்ல வைச்சு என்ன பண்ற. வாடா” என்று இழுத்து கொண்டு சென்றார் சுந்தரம். “எனதருமை கட்சிக்காரரே” என்று தேவா அழைக்க, “யாரை கூப்பிடுறார்” என்று துளசி முன்னும், பின்னும் பார்க்க, “உங்களை தான் அம்மணி. நீங்க தானே என் கட்சிக்காரர்” என்றான் தேவா. துளசி கண்கள் சுருக்கி இவனை பார்க்க, “இன்னா லுக். நான்தான் இனி உனக்கு வழக்கறிஞர். இனி நான் சொல்றதை தான் நீ கேட்கணும்“ “வைரவேல் மாமா சரியாகிற வரைக்கும் தான் நீங்க“ “அப்படி நான் சொன்னேனா? முதல்ல எனக்கு இஷ்டம் இல்லை தான். ஆனா இப்போ உன்னை ஏன் விடணும்ன்னு தோணுது“ “என்ன“ “உன்னை ஆட்டிவைக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கே“ “பகல் கனவு கணாதீங்க“ “அப்போ ராத்திரி கனவு பலிக்குமா?” “என்கிட்ட இப்படி எல்லாம் பேசக்கூடாது” என்று எச்சரித்தாள் துளசி. “அப்படித்தான் பேசுவேன் எனதருமை கட்சிக்காரரே“ “ச்சே“ “ச்சீ. போங்கன்னு சொல்ல வேண்டிய வயசுல ச்சேன்னு சுத்திட்டு இருக்கா” என்று தேவா முனகியவன், “உனக்காக கார் வெயிட்டிங். கிளம்பு போ” என்றான். துளசி அவனை முறைத்துவிட்டு காருக்கு செல்ல, தேவா விரல்கள் தன்னை போல் நெஞ்சை தடவியது.