சுஜியின் போனில் அழைத்து புடவையுடன் மாமனார், மாமியாரை மறுநாள் காலையில் அனுப்பி வைக்கும்படி ஆணையிட்டு வைத்தவள் உடனே சுசிலாவுக்கு அழைக்க விஜயன் குரலை மாற்றி பேசும் செயலியை இயக்கி கீதாவுடன் சுசிலாவின் குரலில் பேசத் துவங்கினான்.
சுசிலாவின் குரலில் விஜயன், “ஹலோ கீதா”
“அத்த நீங்க என்ன மறந்துட்டீங்க. இல்லையினா இந்நேரம் பறந்து வந்திருப்பிங்க. நானும் பசங்களும் சாயங்காலம் டீ கூட குடிக்காம நீங்க எந்த பஸ்ஸில வர்றிங்கன்னு பாத்துகிட்டே இருந்தோம். போங்க நீங்க எங்கள ஏமாத்திட்டிங்க. பவன் வேற ஆயா கொண்டுவர்ற ஸ்நேக்ஸ் தான் நைட் சாப்பிடுவேன்னு ஒரே அடம். உங்கள பாக்காம அவன் தூங்குவானான்னும் தெரியல” என்று கீதா கதையளக்க
சுஜியை பார்த்துக் கொண்டே “இந்த சுஜி லேட்டா வந்தா கீதா, அதான் வர முடியல. அதில்லாம டீச்சருங்க எல்லாம் ஏதோ பரிட்சை எழுதனுமாமே?” என்க
“ஆமா அத்தை அவ எழுதனுமா? அவள படிக்க மட்டும் விட்டுடாதிங்க. தெனமும் ஏதாவது பலகாரம் செய்ய சொல்லுங்க. உங்களுக்கு பிடிச்ச கொழம்பா வைக்க சொல்லுங்க. வேலக்கி போற திமிருல உங்கள கேக்காம அவளே சமைப்பாளா? ஜெய்ய எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க பெத்து வளத்து அவ கையில தூக்கி கொடுத்திங்க. அதுக்கு அவ உங்கள தெனமும் பூச பண்ணி கும்பிட வேணாமா? எல்லாம் நீங்க குடுக்கற இடம்” என்று பேச
“ விஜயன் எங்கம்மா? இருந்தா போன குடு கீதா. ரெண்டு வார்த்தை பேசிக்கிறன்” என சுசிலா போல விஜயன் பேச
“ அவரென்ன உங்க செல்லப்பிள்ளை போல வேலைக்கா போறாரு, இந்நேரம் வீட்டுல இருக்க? எந்த வயலுல தண்ணீ கட்டிக்கிட்டு இருக்காரோ? தெரியல, மதியமும் சாப்பிட வரல. எங்க இன்னும் கொஞ்சம் பணம் இருந்தா ஆள் போட்டு பாத்துக்கலாம்.. எங்க அதுக்குதான் வழியில்லையே. சுஜி எப்படியும் அவ பையனுக்கு வேலை வாங்கி குடுத்துடுவா. அவ பையன் பொழச்சிக்குவான். பவனும், கவினும் தான் இப்படியே மண்ண கிளறிக்கிட்டே இருக்கனும் போல. உங்கள போல புத்திசாலிதனம் இருந்தும் உங்க பேரனுங்களுக்கு அதிஷ்டம் இல்ல என்ன செய்ய?” என்றாள் கீதா.
“கீதா என்னம்மா அதிஷ்டம் இல்லன்னு சொல்ற? நம்ம குலதெய்வ கோவில்ல பொங்க வச்சி ரொம்ப நாளு ஆவுது. நாம போயி செஞ்சிட்டு வருவமா? அங்க போயிட்டு வந்தா நல்லதாவே நடக்கும் …. நீ போலாமுன்னு சொன்னா ஏற்பாடு செய்ய விஜயன் கிட்ட சொல்றேன் “ என சுசிலா குரலில் விஜயன் அடிச்சி விட
“அத்த,போலாம்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனா நகையெல்லாம் உங்க மகன் வாங்கி பேங்க்ல வச்சிட்டாரு. வரும்போது ஒரு பெரிய ஆரமும் நெக்லஸும் அந்த கடங்காரிக்கிட்ட வாங்கிட்டு வாங்க. ஆமா இப்ப கொஞ்ச நாளா நீங்க காசு நகைன்னு தனியா எடுத்துகிட்டு வர்றதில்லையே ஏன்? அவ ரூம பூட்டிட்டு போயிடறாளா? புதையல பூதம் காக்கறது மாறி இவ யாருக்கு காப்பாத்திகிட்டு வரா? இவ பையன், புள்ளைக்கு இவகிட்ட இருக்கறது பத்தாதா?” என விசமாய் வார்த்தைகளை கக்க,
விஜயன்( சுசிலாவின் குரலில்) “கீதா நான் சுஜிகிட்ட இருந்து வாங்கி குடுத்த நகையை தான பேங்க்ல வச்சிருக்கு? உன்னோட நகை இருக்குமே அதை போடுமா. பரிட்சை முடிஞ்சதும் நாம அத வச்சே நிறைய நகை அவங்கிட்ட வாங்கிடலாம். அவ எல்லாத்தையும் பேங்க்ல வச்சி ஒரு பிளாட் வாங்கிட்டா. கொஞ்ச நாள்ல அத திருப்பியதும் நாம வாங்கிக்கலாம்” என சொல்ல,
“அங்கியே உங்கள விட்டு வச்சிருக்கறது எதுக்கு? இப்படி ஏதும் நடந்திடகூடாதுனு தான். போங்கத்த அவ வாங்கி போட்டுட்டு அப்புறம் ஜெய்ய அம்போன்னு விட்டுட்டு போயிட்டா என்ன பண்ணமுடியும்? அதுக்கு தான் யேன்கிட்ட கொடுத்தா நா பத்திரமா வச்சி நாளைக்கு ஜெய்யிக்கு குடுப்பேன். சரி அதெதுக்கு அந்த நிலத்தை என் பேருல மாத்தி எழுத சொல்லுங்க. நகை வேணாம். இடமா கொடுக்க சொல்லுங்க.” என்றாள்.
“அந்த அடாவடி காயத்ரியும், இவளும் சேந்து வாங்கியிருக்காங்க. அதனால விஜயன் பேருல எழுத சொல்லவா? காயத்ரிகிட்ட நம்மால பேச முடியாது. விஜி பேர சொன்னாதான் அமைதியா இருப்பா. உன் பேருல எழுதினா என்ன? விஜி பேருல எழுதினா என்ன?” என்க
“அத்த அவரு அவன் பணம் எனக்கெதுக்கு அப்படின்னு குதர்க்கமா பேசுவாரு.சரி நீங்க அங்க முயற்சி பண்ணுங்க. நா இங்க உங்க மகன வழிக்கு கொண்டுவர பாக்கறேன்.”
“அப்புறம் யேன் நகை எல்லாம் பழசாகி அறுந்து போச்சி அத்த… அத பத்த வைக்கலாமுன்னா இப்ப அத மாறி யாரு போடறா? அதனால யேன் தங்கச்சி கிட்ட வச்சிக்கன்னு குடுத்துட்டேன் அவ பொண்ணுக்கு நாம நகை போடனமுல்ல அதுக்கு நீயே மாத்தி எடுத்துக்கன்னு சொல்லிட்டேன். உங்க காசிலாவது ஒரு பத்து பவுனுல ஆரமும், நெக்லஸும் வாங்கி குடுங்கத்த. உங்க மருமக நகை போட்டுட்டு ஒரு விஷேசத்துக்கு போனா மருமகள நல்லா வச்சிருக்காங்கன்னு உங்கள ஊருல எல்லாரும் பெருமையா பேசுவாங்க. அதனால நீங்களாவது எனக்கு நகை வாங்கிகுடுங்க.” என்றாள் நைஸாக.
விஜயன் அசந்து போனான். இவ இருபது பவுன தங்கச்சிக்கி கொடுத்துட்டாளாம்? எல்லா வழிகளிலும் தன் பெற்றோரை அவள் சொல்வதை போல நடக்க செய்யும் தேன் தடவிய வார்த்தை ஜாலத்தை கண்டு வியந்தான்.
சுஜியும் யோகனும் கீழே செல்ல, “யோகா அப்பாவை மேலே வரச்சொல்லு. அடுத்த அழைப்பு உங்கப்பாவுக்கு தான்”, சொல்லி முடிக்குமுன் விஜயன் போன் அடித்தது.
“மூச்சிவிட்டு பேசுமா கீதா. யேன் கூட்டாளி ஒருத்தன் டவுனுல இருக்கான். அவனுக்கு ஒரு பிரச்சனை. அத பாக்க, பாத்து தீக்க வந்தா நேரம் போனதே தெரியல. பிரச்சனையோட அடியும் தெரியல, தளவும் தெரியல. குழம்பி போயி உக்காந்திருக்கேன்.” என்றான் விஜயன் சூசகமாக.
“என்னங்க பிரச்சனை? யேங்கிட்ட சொல்லுங்க, நான் ஐடியா சொல்றேன்.” என கீதா சொல்ல,
“யேங்கூட்டாளியும் அவன் அண்ணணும் ஒன்னா ஒரு தொழில் பண்ணாங்க. இவன் ஓடியடி வேல செஞ்சி நல்லா சம்பாதிச்சி குடுத்திருக்கான். கணக்கே கேக்கல. அண்ணன் குடும்பம் சொத்தா அவங்க பேருல வாங்கிட்டே இருந்துருக்காங்க. இப்ப இவனுக்கு தெரிஞ்சி கேட்டா இல்லன்னு ஏமாத்தறாங்க. என்ன செய்யன்னு தெரியல?” பதமாய் போட்டு வாங்கினான்
“நீங்க எத்தனை பேர் போயிருக்கீங்க?”
“என்னோட சேத்து ஏழு பேரு இங்க இருக்கோம். ஏங் கேக்கற?” என அவன் கேக்க
“ஏழு பேரு இருக்கீங்க ஏன் பயப்படறீங்க? கணக்கு கேளுங்க. இல்லையின்னா மிரட்டி எழுதி வாங்குங்க. தனித்தனியா பிரிச்சி அடச்சி வச்சி மிரட்டுங்க. அவங்களுக்கு ரொம்ப வேண்டியவங்க முன்னாடி அவங்கள அவமானப்படுத்துவோம்ன்னு மிரட்டுங்க. அவங்க ரகசியம் ஏதேனும் தெரிஞ்சா அத வச்சி ப்ளாக் மெயில பண்ணி எழுத சொல்லுங்க.” என வரிசையாக சொல்ல
“எம்மா ஐடியா ராணி. நான் இந்த ஐடியாவை ட்ரை பண்ணிட்டு அடுத்த ஐடியா கேக்கறேன். நா வர ரெண்டு மூணு நாளு ஆவலாம் நீ பாத்து பத்திரமா இரு.“ என்றான் ஒரு முடிவோடு.
சுஜியிடம் ஒரு மாதிரி பேசியதால் அப்புடவையை அவள் தொடக்கூட மாட்டாள். கீதாவின் திட்டமே இது தான். எமோஷனல் ப்ளாக்மெயில். ஆனா சுஜி அதை எல்லாம் தூசி போல ஊதிவிட்டுடுவான்னு பாவம் அவளுக்கு தெரியல.
சுசிலா, பரமசிவம் இருவருக்கும் தூக்கிவாரி போட்டது. ஜெய், விஜயன் இருவரும் சில வருடங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தனர், பரமசிவத்தின் பென்ஷன் பணத்தை சேர்த்து வைத்து பிள்ளைகள் நால்வருக்கும் ஒரே அமைப்பில் நான்கு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம். அவரவர் திருமணத்தின் போது தாத்தா, பாட்டியின் பரிசாக அவர்களுக்கு குடுக்கலாம் என.
அவர்களும் சரியென ஏற்றுக்கொள்ள கீதா அவர்களை திசைதிருப்பி பணத்தை தாங்களே வாங்கி வட்டிக்கு விட்டு சீக்கிரம் இருமடங்காக ஆக்குவதாக சொல்லி பணத்தை வாங்க வைத்தாள்.
பாதி பணத்தை பேங்க் ஆர்டீயில போடலாமுன்னு விஜயன் சொல்ல, சுஜி ஹசிங் போர்டு பிளாட்டுகளை புக் செய்ய வைத்து மாதாமாதம் அதற்கு பணம் போவது போல செய்ய சொல்லியிருந்தாள். விஜயனும் சுஜி சம்பள பணத்தை தன் மனைவி பிடுங்கி கொள்வது போல தோன்றியதால் பிளாட்டுகளை சுஜி பெயரிலேயே புக் செய்து பணம் கட்டி வந்தான்.
அதுபோகவே மாதம் இருபதாயிரத்திற்கு மேலே கைக்கு வந்தது. பேங்க் அக்கவுண்டை விஜயன் நிர்வாகம் செய்து வருவதால் விஜயனால் அதை எளிதாக கட்ட முடிந்தது. அவர்கள் மூவருக்கும் பென்ஷன் எவ்வளவு என தெரியாததால் இதுவரை பிளாட்கள் விசயம் ரகசியமாகவே இருந்தது.
இப்போது யோகன் பென்ஷன் என்றதும் இருவருக்கும் “எங்கே உங்களிடம் ஒவ்வொரு மாதமும் இருபதாயிரம் கொடுத்தேனே. ரெண்டு ரூபாய் வட்டின்னா கூட இப்ப நாப்பது, அம்பது லட்சம் இருக்கும். கொடுங்க” எனக் கேட்டா என்ன செய்யன்னு பதட்டமானது.
“ஏங்க உங்களுக்கே முழங்கால் வலி. படி எப்படி ஏறுவீங்க? ஜெய் போயிட்டு வரட்டும். என்ன பேசினாங்கன்னு கேட்டா சொல்லிட்டு போறான். நீ போடா ஜெய். உங்கப்பனுக்கு என்ன வேல?” என்று சுசிலா பேச சுஜியும், யோகனும் அவர்களின் பதட்டத்தையும், பயத்தையும் பார்க்காதது போல பார்த்திருந்தனர்.
ஜெய் மேலே வர, விஜயன் “ உனக்கென்ன பிரச்சனை? ஆளாளுக்கு என்னை போட்டு பந்துபோல உதைக்கறாங்க. நீ வாய திறக்கமாட்டேங்கற. உன்ன பத்தி மட்டுமே நினைக்காத நானும் பாவந்தான்டா. நீ தப்பிக்க வழியில்ல. மகேஷ், காயு, யோகன், கவின்னு சுஜி படை பெருசு.” என்க
“உன்ன விட்டுட்ட. நீ இல்லயா. நீ அவள உன் பொண்ணாதான் பாக்கற. அவளுக்கு அடுத்துதான் கவியே.. அதுமட்டுமில்ல உனக்கு நான் வேற சுஜி வேறில்லைன்னு எனக்கு நல்லா தெரியும். இப்ப என்ன தெரியனும்? “ ஜெய் கேக்க
ஜெய்யின் போன் அலற யெஸ் அலறியது. ஜெய் திரும்பி அண்ணன் முகம் பார்க்க, “ பேசு. நீ பேசினா என் கேள்விக்கு பதில் கிடைச்சாலும் கிடைக்கும்.” ஜெய் போன ஆன் பண்ணி ஸ்பீக்கரில் போட,
“டேய் என்னங்கடா இன்னைக்கு எல்லாரும் போன் எடுக்க இவ்வளவு நேரமாகுது. ஏதாவது பிளான் போடறீங்களா? தொலச்சிடுவேன். ஆமா என்ன பொண்டாட்டி பேருல பிளாட்டு வாங்கியிருக்கையாம். யாரை கேட்டு வாங்கின? ஒழுங்கா யேன் பேருக்கு மாத்திதர. இல்லயினா நீ காலேஜில லவ் பண்ண விசயத்தை கண் காது மூக்கு வச்சி உன் அழகு பொண்டாட்டி கிட்ட சொல்லிடுவேன்.”
“ஆமா ஏன் அவ யேங்கிட்ட பேச மாட்டாளா? அவ வாழ்க்கையே யேங்கையில இருக்கு. என்ன மதிக்க மாட்டாளா? இருக்கட்டும். பாத்துக்கிறேன் அவளா? நானான்னு? அந்த பச்ச கல்லு ஆரமும் நெக்லஸும் அதகூட பேங்குல வச்சிட்டிங்களா? நீ வாங்கின புடவைக்கு அதுதான் மேச்சிங்கா இருக்கும். உங்காத்தாகாரி நகை வாங்க உன்ன கூப்பிட்டா பச்சகல்லு செட் வாங்கிட்டு வா. என்ன நான் சொன்னது உன் மரமண்டையில ஏறுச்சா? உங்கப்பன் இருபதாயிரத்த குடுத்து என்ன ஏமாத்த பாக்குறான். இருக்கு அவனுக்கும். அதுக்கு தான் இப்படி அப்பப்போ செலவு வைக்கிறேன். ஏன் இதெல்லாம் சொல்றேன்னு பாக்கறியா? நான் இத யாருகிட்ட சொல்லி பெருமைபட? அதான் உங்கிட்டயே சொல்றேன். உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாதில்ல. கேக்க மட்டுந்தான் முடியும். யாரு உன்ன நம்புவாங்க?” என்றாள் கீதா ஆணவமாக.
ஜெய் மௌனமாக இருக்க “என்ன பயம்விட்டு போச்சா? தோ இப்பவே அவளுக்கு போன் பண்றேன் இரு.. ஏன்டா ஏன்? ஒருத்திய நல்லவளா இருக்க விடவே மாட்டிங்களா? “ என்க ஜெய் சட்டென கட் செய்து ஸ்விச் ஆப் செய்தான்..
“பேன பெருச்சாளியா வளத்திவிட்டுட்டு இப்ப அது தொல்ல தாங்கலன்னு வீட்ட கொளுத்த போறீயா? விஷயத்தை யேங்கிட்ட அப்பவே சொல்லியிருந்தா இவ்வளவு கஷ்டம் இல்லை. இது சின்ன செடியா இருந்தப்ப விட்டுட்ட. இப்ப மரமா வளந்து நிக்கிது. பாத்துக்கலாம் விடு. ஆனா நான் என்ன பண்ணிணாலும் நீ குறுக்க பேசாம நான் சொல்லறத மட்டும் கேக்கனும். சரியா?” என விஜயன் கேட்க
ஜெய்” அண்ணா தலைக்கு மேல வெள்ளம் வந்தாச்சி. இனி மேல சாண் போன என்ன முழம் போனா என்ன? நீ சொல்லறத நான் கேக்கறேன்.” என்றான்.
ஜெய்க்கு மீட்சி கிடைக்குமா? சுஜியின் பணம் அவளுக்கே கிடைக்குமா? சுசிலா, பரமசிவம் திருந்துவார்களா? விஜயனின் அடுத்தகட்ட திட்டம் என்ன? ஓரிரு நாட்கள் காத்திருப்போம் தோழிகளே.