பிரதாப் “வர்ஷினி.. அஹ.. இங்க பார் சர்வேஷ் வந்ததிலிருந்து உன்னைத்தான் கேட்டுகிட்டு இருக்கான்..” என்றான்.

வர்ஷினி விழிவிரித்துக் கொண்டே மெதுவாக நடந்து வந்தாள்.. அவளின் தந்தை வண்டி சாவியை வாங்கிக் கொண்டு.. “எல்லோரும் சாப்பிட வாங்கப்பா” என சொல்லிக் கொண்டே உள்ளே நடந்தார்.

சர்வேஷ் புன்னகையை மறந்து கண்கள் விரித்து அவளை பார்த்தான்..  அவனின் இதயம் அதிவேகமாக துடித்தது.. வளர்ந்த பெண்.. முழு மங்கை.. அழகாக சுருல்முடிகள் தோளினை தழுவ.. வெண்மேக நிறத்தில் உடை.. வெள்ளிநிலவென அவள் நிறம்.. நெற்றியில் சின்ன சிவப்புநிற பொட்டு.. அஹ.. எத்தனை பாந்தம்.. அவள் நடக்க நடக்க.. அசையும் அந்த பிங்க் வண்ண பெரிய தோடுகள்.. சர்வேஷ்ஷின் இமைகள் தன்வேலையை செய்யவேயில்லை அடுத்த அடுத்த நிமிடங்களில்.

ராக்கேஷ் “வர்ஷினி ஏஞ்சல்.. எப்படி இருக்க..” என்றான்.

வர்ஷினி ‘ஏஞ்சல்’ என்ற அழைப்பில்.. சர்வேஷினை பார்த்தாள் கடைகண்ணால். எவ்வளவு கவனமாக இருந்தும் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. நெற்றி லேசாக வேர்த்தது பெண்ணுக்கு.

சர்வேஷ்ஷும் கொஞ்சம் உயிபெற்றான்.. அவளின் பார்வையில்.. ‘நம்ம எங்கையோ இருக்கோம் போலிருக்கே அவளுக்குள்’ என பரபரப்பானான்.

இவளின் சீனியர்ஸ் இவர்கள் எல்லோரும்.. அதனால் ஒரு ஆனந்தம் அவர்களுக்கு. ராக்கேஷ் இயல்பாக வந்து ஹக் செய்துக் கொண்டான்.. பெண்ணவளை. 

வர்ஷினி “ஹாய் ராகேஷ்.. ஹாய்” என்றாள் சர்வேஷ் ராக்கேஷ் இருவரையும் பார்த்து. 

சர்வேஷ் பதில் சொல்லவில்லை.. ராக்கேஷ் “எப்படி இருக்கம்மா.. என்ன பண்ற” என தொடங்கினான்.

இந்தர் “வாடா.. உட்காரலாம்” என்றான்.

ஐவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.. வர்ஷினி தான் வேலை செய்யும் கம்பெனி பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.. ராக்கேஷ் விவரங்கள் கேட்டுக் கொண்டிருந்தான். சர்வேஷ் அவளின் எதிரில் அமர்ந்துக் கொண்டான்.. ஏதும் கேட்கவில்லை அவளையே பார்த்திருந்தான்.

பிரதாப் “எவ்வளவு பொறுப்பு..” என்றான், வர்ஷினியை பார்த்து.

இந்தர் “டிபன் பாக்ஸ் திறக்க தெரியாது.. தலைமுடியை கட்டத் தெரியாது.. ஏன் தமிழே சரியாக பேச தெரியாது” என்றான் கிண்டல் குரலில்.

பிரதாப் “இப்போ பாரேன்..” என்றான்.

ராக்கேஷ் “எங்களை எல்லாம் நினைப்பியா.. எப்போவாது” என்றான்.

வர்ஷினி தயங்கி தயங்கி புன்னகைத்தாள்.

பிரதாப் “நாம செய்த அளபறைக்கு.. அவ இப்போ நம்மகிட்ட நின்னு பேசுவதே பெரிது” என்றான்.

இந்தர் “வேற பெண்ணா இருந்தால்.. இந்த நேரத்தில் நம்மை துரத்தி துரத்தி அடித்திருக்கும்..” என்றான்.

வர்ஷினி “இந்தர் ப்ரோ.. அப்படி எல்லாம் இல்லை.. நீங்க எல்லாம்தானே எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தீங்க..” என்றாள் தயங்கிய குரலில்.. பின் “என்ன.. டார்ச்சர் பண்ணிட்டீங்க” என்றாள் தன் மனதிலிருப்பதை மறையாது, புன்னகையோடு.

எல்லோரும் சர்வேஷினை பார்த்துவிட்டு ஷன நேரம் அமைதியாகினர். சர்வேஷ் அலட்டிக் கொள்ளவேயில்லை.. அப்படியேதான் அமர்ந்திருந்தான்.

வர்ஷினிதான் அவர்களின் அமைதி உணர்ந்து “அஹ.. எல்லோரும் நல்லா இருக்கீங்கல்ல.. உமர் எல்லோருக்கும் பாமிலி வந்துடுச்சி சொன்னான்.. உங்கள் எல்லோரையும் பார்த்தது ஹாப்பி..” என்றாள், எழுந்துக் கொண்டே.

ராக்கேஷ் “ஹேய்.. இரு.. இன்னமும் நிறைய பேசணும்.. இரு..” என்றான்.

இப்போது பிரதாப்பின் மனையாள் வந்தார் இவர்களை தேடி. வர்ஷினி அவர்களை பார்த்து புன்னகைத்து “சாப்பிட்டீங்களா” என்றாள்.

அவரும் “இல்லை.. எங்க உங்களை காணோம்.. நானும் உங்க அண்ணியும்தான் பேசிட்டு இருந்தோம். எங்க போய்ட்டீங்க” என விசாரித்தார்.

வர்ஷினியும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சர்வேஷ் பார்வையில் மட்டும் மாற்றமேயில்லை.. வர்ஷினி.. வர்ஷினி.. வர்ஷினி.. அவள் மேல்தான் பார்வை கவனம் என எல்லாம்.. அவளின் மேல்தான் இருந்தது சர்வேஷ்க்கு.

ராக்கேஷ் அதை கவனித்து.. அவனின் கையை சத்தமில்லாம் கிள்ளி “என்ன” என்றான்.

சர்வேஷ் அனிச்சையாக திரும்பினாலும் உடனே பார்வையை மாற்றி வர்ஷினின் பேச்சினை கவனித்தான்.

இப்போது வர்ஷினி “பசிக்குது.. நான் ஷர்மியை போய் பார்க்கணும்.. அவளோட சாப்பிடனும்.. நீங்களும் வரீங்களா” என்றாள்.

இதை கேட்ட பிரதாப் “அஹ.. ஸ்கூல் டேஸ் வர்ஷி இது” என்றான்.

சர்வேஷ் “வாங்கடா.. உமரை போய் பார்ப்போம்” என்றான்.. வர்ஷினியிடம் பார்வையை பதித்து.

பிரதாப் “நாம ஏற்கனவே” என தொடங்க..

ராக்கேஷ் வர்ஷனி கையை பிடித்துக் கொண்டான்.. சர்வேஷ் முறைத்தான் பிரதாப்’பினை.. வர்ஷினிக்கு வேறு வழியில்லை அவர்களோடுதான் நடக்கவேண்டி இருந்தது.

உமர் மேடையை விட்டு இறங்கியிருந்தான்.. வரவேற்பு முடிந்திருந்தது.. ஆனாலும், எல்லோரோடும் பேசிக் கொண்டே இருந்தனர் புது மணமக்கள். நண்பர்கள் இப்போது அவர்களை நோக்கி வந்தனர்.

நண்பர்கள் கை கொடுத்து கட்டி தழுவி வாழ்த்தினர் மீண்டும்.. முன்பே இதெல்லாம் நடந்துவிட்டது ஆனாலும் திரும்ப நடந்தது.. புகைப்படங்கள் எடுத்தனர் இயல்பாக. வர்ஷினி தள்ளி போக.. முதலில் ஏதும் சொல்லவில்லை நண்பர்கள்.. நான்கு புகைப்படம் எடுத்ததும்.. உமர் ராக்கேஷ் என எல்லோரும் “வர்ஷி வா.. வா..” என அவளை நடுவில் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இப்போது புகைப்படம் எடுப்பவரிடம் தன் போனினை கொடுத்துதான் சர்வேஷ்.. மீண்டும்  புகைப்படம் எடுத்துக் கொண்டது, இந்த கூட்டம்.

பின் உமர், வர்ஷினி தன் மனையாளோடு மட்டும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

புதுமண தம்பதிகளும் உண்பதற்கு வர.. எல்லோருமாக உண்பதற்கு அமர்ந்தனர்.. வர்ஷினிக்கு ஷர்மி தன்னை திட்டுவாள் என தோன்ற.. “நான் ஷர்மியோடு சாப்பிடுறேன்” என்றாள்.

பிரதாப் மனைவி “வர்ஷினி என்ன இது சின்ன பிள்ளைமாதிரி..” என்றார்.

உமர் “அவ சிலநேரம் நெஞ்ச நக்கிடுவா..” என கலாய்த்தவன், வர்ஷினியிடம் திரும்பி “ஹேய், அவ சாப்பிட்டுருப்பா.. எங்க போற.. இதுதான் கடைசி பந்தி.. மணி பாரு” என்றான்.

வர்ஷினி “இல்ல, அவ என்னைவிட்டு சாப்பிடமாட்டா” என திரும்பி செல்ல எத்தனிக்க..

ஷாபிரா “நீ வா வர்ஷி சாப்பிடு வா, எனக்கு கம்பெனி கொடு.. ஷர்மி முன்னாடியே சாப்பிட்டிருப்பா” என்றாள்.

வர்ஷினி தன் போனெடுத்து தோழிக்கு அழைத்துக் கொண்டே நின்றாள்.

உமர் “வர்ஷி, அவ வீட்டுக்கு போயிருக்கா டா..” என்றான்.

இப்போது வர்ஷினியின் அழைப்பினை ஏற்று ஷர்மி பேசினாள். “வீட்டுக்கு வந்துட்டேன்.. அண்ணன் அண்ணியை ரிசீவ் பண்ணனுமில்ல.. நீ சாப்பிடு” என சொல்லி பேசி முடித்தாள்.

வர்ஷினி புன்னகையோடு “சாரி..” என சொல்லி ஷாபிராவின் அருகே அமர்ந்தாள்.

உமர் நண்பர்களின் பேச்சில் கலந்தான்.

உண்டு முடித்து.. உமர் வீட்டாரிடம் விடைபெற்றுக் கொண்டு பிரதாப் குடும்பம் கிளம்பியது. 

ராக்கேஷ் சர்வேஷ் இருவரும் ரூம் எடுத்திருந்தனர்.. நாளை இங்கேயே தங்குவதாக ஏற்பாடு. இந்தர் இப்போது இவர்களோடு தங்குவதாக ஏற்பாடாகியது.

வர்ஷினி புன்னகையோடு பிரதாப் குடும்பத்தை வழியனுப்பிவிட்டு.. தானும் விடைபெற எண்ணினாள்.

சர்வேஷ், ராக்கேஷ்ஷிடம் “டேய் அவ நம்பர் வாங்கு டா” என்றான்.

ராக்கேஷ் முறைத்தாலும் வர்ஷினியை நிறுத்தினான்.

வர்ஷினி திரும்பினாள்.. 

ராக்கேஷ் “வர்ஷி நம்பர் சொல்லு” என சொல்லிக் கொண்டே தன் போனினை எடுத்தான்.

வர்ஷினி என்ன செய்வது என தெரியாமல் திணறினாள்..

ராக்கேஷ் வர்ஷினியை பார்க்க வர்ஷினி ராக்கேஷை பார்க்க.. சர்வேஷ் “வர்ஷினி நம்பர் சொல்லு” என்றான் தன் போனேடுத்துக் கொண்டு.

வர்ஷினிக்கு கடகடவென தன்னையும் அறியாமல் தன் எண்ணை அவனிடம் ஒப்புவித்தாள்.

சர்வேஷ் “நாளைக்கு போன் பண்றேன்.. வா, கொஞ்சம் பேசணும்” என்றான்.

வர்ஷினி “இல்ல ஆபீஸ் இருக்கு..” என்றாள்.

“லீவ் போடு.. பேசனும்” என்றான்.

வர்ஷினி “என்ன இன்னும் என்னை சின்ன பிள்ளைன்னு மிரட்டுறீங்களா..” என்றவள் ஏதும் பேச முடியாமல் தன் தந்தையை தேடி நடந்தாள்.. ஓடினாளோ.

வர்ஷினி தன் அன்னை அண்ணன் அண்ணி எல்லோரும் கிளம்பியது அறிந்து தந்தையிடம் வந்தாள் “அப்பா, நீங்க வர லேட் ஆகுமா.. நான் கிளம்பனும்.. நாளை ஆபீஸ்” என்றாள்.

தந்தை சாமான்களை எல்லாம் மற்றவர்களோடு சேர்ந்து ஏரகட்டிக் கொண்டிருந்தார்.. “பத்து நிமிஷம் இரு போலாம்” என்றார்.

நண்பர்கள் சர்வேஷினை முறைத்தனர்.

இந்தர் “ஏன் டா அவளை பயப்படுத்தர” என்றான்.

ராக்கேஷ் “நான் சொல்லிக் கொண்டு வரேன் கிளம்பலாம்” என்றான்.

அப்படியே ராக்கேஷ் வந்தான் வர்ஷினியிடம். அவள் அவளின் தந்தை என இருவரிடமும் விடைபெற்று கிளம்பினான்.