Manjal Kaattu Maina 9 1 9362 மஞ்சள் காட்டு மைனா 9 “படிக்கிற பிள்ளையை தொந்தரவு பண்ண கூடாது தேவா” என்றார் பசுபதி. “இப்போ நான் அவளை என்ன தொந்தரவு பண்ணிட்டேன்” என்று தேவா முகம் சிவக்க, “அப்புறம் எதுக்கு வளர்மதி டீச்சர் வந்து சண்டை போட்டுட்டு போறாங்க?” என்றார் தந்தை. தேவா முகம் திருப்பி எங்கோ பார்க்க, “என் மகன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை” என்றார் பசுபதி வருத்தத்துடன். “நான் சத்தியம் வைச்சப்புறமும் அந்த புள்ளைகிட்ட போய் பேச முயற்சி பண்ணியிருக்க?” “நீங்க தான் சத்தியம் வைச்சீங்க. நான் வைக்கலை“ “வேணாம் தேவா. அந்த பொண்ணை படிக்க விடு. ஆம்பிளை இல்லாத வீடு. நீ இப்படி பண்ணா அவங்களுக்கு தான் கெட்ட பேர்“ “ப்பா. இப்போ எதுக்கு ஏதேதோ பேசுறீங்க?” “இருக்கிறதை சொல்றேன் தேவா. நீ துளசி பொண்ணுகிட்ட பேச முயற்சி பண்ணா அந்த பொண்ணு பயப்படுது. இன்னைக்கு காலேஜும் போகலையாம். வளர்மதி டீச்சர் வந்து ரொம்ப பேசுறாங்க தம்பி“ எனக்கு பயந்துகிட்டு காலேஜ் போகலையா? அப்படி என்ன பண்ணிடுவேன் அவளை? மனதுக்குள் குமுறினான். “நீ கொஞ்ச நாள் நாமக்கல்க்கு போ தம்பி. உன் பாட்டி வீட்டுக்கு” பசுபதி சொல்ல, “ப்பா. என்னை என்ன நினைச்சீங்க? நான் சும்மா பேச மட்டும் தான் போனேன்“ “பொண்ணுக்கு பிடிக்கலைன்னா அது வேற மாதிரி தான் தம்பி தெரியும்“ தேவாவிற்கு கோபத்துடன், மனதும் வலித்தது. அவளின் பிறந்த நாளுக்காக செயின் கொடுத்து பிரச்சனை ஆகி நான்கு மாதம் ஆகிவிட்டது. நேற்று தான் துளசியை பார்க்க சென்றான். அதுக்கா இவ்வளவு? “என்ன தம்பி? கிளம்புறியா?” என்று தந்தை கேட்க, அதுவரை அமைதியாக இருந்த வைரவேல், “ண்ணா. நானும், தேவாவும் சென்னை போறோம்” என்றார். “நான் ஏன் எங்கேயும் போகணும்? போக மாட்டேன்” என்று தேவா மறுக்க, “உனக்கும் ஒரு மாற்றம் வேணும் தேவா. அங்க என் சீனியர் இருக்கார். அவரோட கொஞ்ச நாள் ஜுனியரா இருக்கலாம்” என்று வைரவேல் சொன்னார். “ஏன் இங்கேயே இருந்தா ஆகாதா? பிடிச்ச பொண்ணுகிட்ட விருப்பத்தை சொன்னதுக்கு எதோ என்னை பொறுக்கி மாதிரி ட்ரீட் பண்றீங்க?” என்று வெடித்தான். “தேவா என்ன பேசுற நீ? கொஞ்ச நாள் ஊரை விட்டு இருக்கிறதால ஒன்னும் ஆகிடாது. கிளம்பு. நாம போறோம். அவ்வளவு தான்” என்று வைரவேல் முடித்து கொண்டார். தேவா சாமான்யத்துக்கு ஊரை விட்டு கிளம்பவில்லை. துளசியை நேரில் பார்த்து சண்டை போட மனது பிராண்டி வைத்தது. ஆனால் மண்ணுக்குள் புதைந்து கிடப்பவளிடம் என்னவென்று சண்டை போடுவது? ஒருமாதிரி கடுப்புடனே சுற்றி கொண்டிருந்தான். வைரவேல், பசுபதி தான் விடாமல் அவனை சென்னைக்கு பேக் செய்தனர். துளசிக்கு படிப்பு முடிய இன்னும் இரு மாதங்கள் இருந்ததால், “அதுவரை தான் அங்கிருப்பேன்” என்று தேவா சொல்லியே தான் ஊரை விட்டு கிளம்பினான். வைரவேலும் அவனுக்காக சென்னையிலே இருந்தார். இடையில் “ஊருக்கு போய்ட்டு வரலாமா தேவா” என்று வைரவேல் கேட்டார். பசுபதியின் எச்சரிக்கையை மீறி, மகனின் நிலை அவரை அப்படி கேட்க வைத்தது. சில நேரம் கோவமாக இருந்தான். சில நேரம் அமைதியாக இருந்தான். தேவா என்றால் இவன் இல்லை என்று சொல்லுமளவு இருந்த மகனை அப்படியே விட சின்ன தந்தைக்கு மனது வரவில்லை. தேவாவோ, “இப்போ இல்லை சித்தப்பா. ஒரு வாரம் கழிச்சு போலாம்” என்றான். “ஏன் அப்போ என்ன?” “அவ படிப்பு முடியுது” என்றான். வைரவேல் கொஞ்சம் திகைத்து தான் போனார். இவன் என்ன இவ்வளவு தீவிரமா இருக்கான்? “ண்ணா. துளசி படிப்பு முடிஞ்சதும் நாம தேவாவுக்காக அவளை பொண்ணு கேட்க போகணும்” என்று அண்ணனுக்கு அழைத்து பேசினார் வைரவேல். “நல்லா கேட்ட போ. துளசிக்கு அடுத்த வாரம் கல்யாணம்” என்றார் பசுபதி. “என்னண்ணா சொல்றீங்க?” என்று வைரவேல் அதிர, “ஆமா வேலு. வளர்மதி டீச்சர் என்கிட்ட முதல்லே சொல்லிட்டாங்க. அவங்க நாத்தனார் மகனுக்கு தான் பொண்ணு கொடுக்கிறதுன்னு. அதனால தான் நான் அவனை ஊரை விட்டு கிளப்பினேன்“ “ண்ணா. என்னண்ணா இப்படி பண்ணிட்டீங்க“ “என்னடா? என்னை என்ன பண்ண சொல்ற? அவங்க பொண்ணை எங்க கொடுக்கிறதும் அவங்க விருப்பம்“ “நம்ம மகன் விருப்பத்தை நிறைவேத்தி வைக்கிறதும் நம்ம கடமை தான்ண்ணா“ “அந்த பொண்ணுக்கும் தேவா மேல விருப்பம் இருந்தா தான் அந்த பேச்சு“ “ண்ணா. தேவாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா சும்மா இருப்பானா?” “தெரியாத மாதிரி நீ தான் பார்த்துக்கணும்” என்று பசுபதி வைக்க, தேவாவிற்கு அன்றிரவே தெரிந்துவிட்டது. அருண் அழைத்து சொல்ல, நடு ராத்திரியே ஊருக்கு கிளம்பி நின்றான். “தேவா விடிஞ்சதும் போலாம்” என்று வைரவேல் சொன்னது எல்லாம் அவன் காதிலே ஏறவில்லை. சின்ன தந்தையும், மகனுமாக மறுநாள் ஊரில் இருந்தனர். தேவா நேராக வளர்மதி வீட்டுக்கு செல்ல போக, அங்குதான் பசுபதியும் தயாராக காத்திருந்தார். தேவா வீட்டிற்கு நுழைந்ததும் அவன் கண்ணில் பட்டது அந்த பத்திரிக்கை. “மணப்பெண் துளசி, மணமகன் சந்தோஷ்” என்று சத்தமாக படித்தான் தேவா. “தம்பி முதல்ல உட்காரு பேசலாம்” என்றார் பசுபதி. வளர்மதி டீச்சர் முன்பு சென்று நின்றான் தேவா. அவரும் அவனை எதிர்கொண்டு நிற்க, “ஏன் இப்படி பண்ணீங்க?” என்று அழுத்தமாக கேட்டான். “என் பொண்ணுக்கு எது நல்லதுன்னு தெரிஞ்சதால தான் இந்த கல்யாணம்” என்றார் அவரும் உறுதியாக. “என் மேல என்ன கோவம் உங்களுக்கு?” “உன்மேல நான் ஏன் கோவப்பட போறேன். நீ நல்லவன் தான் தேவா“ “நல்லவன் சொன்னா உங்க பொண்ணை விட்டுடுவேன்னு நினைக்கிறீங்களா” வார்த்தைகள் சட்டென வெடித்தது. எங்கே துளசியை இழந்து விடுவோமா? என்று உள்ளுக்குள் அவ்வளவு நடுங்கினான் தேவா. கைகள் காட்டி விடும் நடுக்கத்தை மறைக்க, பேக்கெட்டில் கை விட்டு இறுக்கமாக நின்றான். “தேவா. பொறுமையா பேசு” என்று வைரவேல் மகன் தோள் பற்றினார். “முடியாது சித்தப்பா. என்னை அந்த பக்கம் ஊரை விட்டு அனுப்பிட்டு, இவங்க இந்த பக்கம் அவளுக்கு கல்யாணம் பண்ண பார்க்கிறாங்க. அல்பத்தனமா இல்லை இது” என்றுவிட, “தேவா பார்த்து பேசு” என்று எச்சரித்தார் வளர்மதி. “இருக்கிறதை தான் சொன்னேன்“ “நீ என்னடா சொல்றது? என் பொண்ணை எங்க கட்டி கொடுக்கிறதும் என்னோட இஷ்டம்“ “பெத்து வளர்ந்துட்டா அவ என்ன உங்களுக்கு அடிமையா?” “அப்படின்னு என் பொண்ணு சொன்னாளா? அவளுக்கு தெரியும் எது நல்லது, எது கெட்டதுன்னு“ “அப்போ நான் கெட்டவனா உங்களுக்கு? அதனால தான் அவளை எனக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்களா?” “நீ நல்லவனா இருந்தாலும், கெட்டவனா இருந்தாலும் எங்களுக்கு ஒன்னுமில்லை தேவா. துளசி கண்டிப்பா உனக்கு இல்லை“ “அதை நீங்க சொல்லாதீங்க” கத்திவிட்டான் தேவா. “என்ன இங்க சத்தம்? ஏய் யாருப்பா நீ?” என்று வளர்மதியின் சின்ன அண்ணன் வந்தார். “ண்ணா” என்று வளர்மதி அதிர்ந்தார். பசுபதிக்கும் புதிய ஆளை பார்த்து சங்கடம் தான். ஆனால் தேவாவிற்கு அப்படி ஒன்றுமில்லை. “வளர்மதி யாரு இவங்க எல்லாம்? இங்க ஏன் வந்து சத்தம் போட்டுட்டு இருக்காங்க” என்று தங்கையிடம் கேட்க. “ண்ணா. அது ஒன்னுமில்லை. நீங்க வாங்க. உட்காருங்க” என்றார் வளர்மதி. “என்ன ஒன்னுமில்லை. அந்த பையன் நிக்கிற தோரணையே சரியில்லை. இந்தா தம்பி யாரு நீ?” என்று தேவாவிடம் மீண்டும் கேட்டார். “நான் யாரா இருந்தா உங்களுக்கென்ன?” என்று தேவா பேச, “தேவா. பொறுமையா இரு” என்று மகனை அதட்டினார் பசுபதி. “இது வேற விஷயம்ப்பா. வளர்மதி நாங்க கிளம்புறோம்மா” என்று அவர் எழுந்து கொண்டு தேவாவின் கை பற்றி அழைத்து செல்ல பார்க்க, “ப்பா. விடுங்க என்னை” என்று அவர் கையை வலுவாக உதறினான் தேவா. “தேவா. நாளைக்கு பேசலாம், வா” என்று மகனின் கையை திரும்ப பிடிக்க, “ப்பா. எனக்கு பேசியாகணும்” என்று கால்களை நன்றாக ஊன்றி நின்றான் தேவா. “சூழ்நிலை சரியில்லை தேவா புரிஞ்சுக்கோடா” என்று வைரவேலும் மகனிடம் மெல்ல சொல்ல. “எனக்கு இங்க வாழ்க்கையே போக போகுது. நீங்க சூழ்நிலை பத்தி பேசிட்டு இருக்கீங்க” என்று வெடித்தான். “தேவா, ச்சு” என்று வளர்மதிய மன்னிப்பாக பார்த்தார் பசுபதி.