சொர்க்கம் உன்னருகில் 6

    சுஜியை எதிர்பாத்துக் கொண்டு ஆவலுடன் இருந்தனர் இருவரும். வரும் வரை பார்க்கலாம் என டீவி போட “அரசு ஆசிரியர்கள் பணியில் தொடர தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இரண்டாண்டுகள் அவகாசம். இல்லையெனில் முழு ஓய்வூதிய பலன்களுடன் ஓய்வு பெறலாம் உச்ச நீதிமன்றம் அதிரடி” என அண்மை செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

    பரமசிவம் “ சுசிலா இங்க பாரேன். இல்லாத ஆட்டம் ஆடினாளே உன் சின்ன மருமவ, இப்ப பரிட்சையில பாஸ் பண்ணா வேலக்கு வா. முடியலையா வீட்டுக்கு மொத்தமா போன்னு அடிச்சான்ல ஆப்பு. இதுக்கு தான் கொஞ்சமா ஆடனுமுன்னு சொல்றது.” என்க

   சுசிலாவோ “ ஏங்க அவ கிடக்கா விடுங்க ஜெய்யும் எழுதனுமா? அவனால முடியுமா? ஐய்யோ ஆண்டவா யேன் புள்ளைக்கு என்ன இது சோதனை? நீதான் துணையா இருந்து காப்பாத்தனும்” என்று வேண்டியபின்

     “மொத்தமா வீட்டுக்கு அப்படின்னா என்னங்க? வேலயும் இல்ல சம்பளமும் இல்ல அதானே?” அந்த நேரத்திலும் சந்தேகம் கேக்க

    “நான் கடைசி நாளு எல்லா புடி பணமும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தேன்ல அதமாறி உன் மருமவளும் இப்பவே வரப்போறா” என குதூகலித்தபடி

     “சுசி சக்கர தூக்கலா போட்டு ஒரு டீ குடேன், குடிக்கணும் போல இருக்கு” என்றார் பரமசிவம்.

     டீ வருவதற்குள் ஜெய்க்கு போன் போட்டார். “ என்ன ஜெய் இந்த கவர்மெண்ட் இப்படி பண்ணுது. இப்பதான் நியூஸ் பாத்தேன் பக்குனு ஆச்சி. நீயும் மருமவளும் எழுதனுமா? நீ ஏதோ பரிட்சை எழுதிதான வேலைக்கு போன? நீ எழுத தேவ இல்லதான?” என்று கேட்க பிரமித்தான் ஜெய்…எப்படி இப்படி நடிக்க முடியுது?

     வாட்ஸாப்பில் சுஜி அனுப்பிய மெசேஜை மறுபடியும் படித்தான். “நான் டெட் பாஸ் பண்ணிட்டேன்னு யாருக்கும் சொல்ல வேண்டாம். யார் யாரோட எண்ணம் எப்படின்னு தெரிய ஒரு சான்ஸ். ஸோ யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று அனுப்பியிருந்தாள்.

    சுஜியை தானே படுகுழிக்குள் தள்ளி விட்டது போல் ஒரு உணர்வு. அவளின் தார்மீக கோபம் புரிந்தது.

     பள்ளியிலும் எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தனர். இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் தேர்வு எழுதியாக வேண்டும் என்று தீர்ப்பு வந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

     சுஜியிடம் மனம் விட்டு பேசிட நினைத்தான். பேச முடியும். ஆனால் சுஜி பேசனுமே. சுஜி பேசி நான்கைந்து மாதங்கள் ஆனது. கேள்விகளுக்கு யோகன் மூலமாகவோ, கவி மூலமாகவோ பதில் வரும். ஆனாலும் பிடித்த உணவு, துவைத்து அயன் பண்ணின உடையென மற்ற வசதிகள் கிடைத்தன. கைகளை பற்றி ஓரிரு நிமிடங்கள் ஆறுதல் பெற கூட வழியில்லை. தவறு செய்தால் மட்டுமே முகம் பார்த்தல் என சுஜி வழங்கிய தண்டனை அதிகம் என எண்ணியிருந்தான். ஆனால் தன்னுடைய முட்டாள்தனத்தால் சுஜி தகுதியில்லாத மனிதர்களின் பேராசைக்கு பலியாகி வருவதை கண்டு மனம் பதைத்தான்.

     வீட்டுக்கு போகவே பயமாயிருந்தது. ஆனால் போயாக வேண்டுமே. யோகனின் கோபத்தை தணிக்க ஏதேனும் செய்ய வேண்டும். எப்ப சான்ஸ் கிடைக்கும் கைய கால உடைக்கலாமுன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கான். யோசித்துக் கொண்டே வீடு வந்தால் மூவரையும் இன்னும் காணோம். தன் தாய் தந்தை மட்டும் ஆறேழு பையுடன் தயாராக இருந்தனர்.

     ஒரு வாரத்துக்கு, எங்க நாலு நாளைக்கு அண்ணன் வீட்ல தங்க, வீடே காலி பண்ணியது போல் இத்தனை பை. அடுத்த பிறப்பிலாவது இதுங்க பக்கம் தலைவச்சி படுக்ககூடாதுன்னு நெனச்சான் ஜெய்.

     “எங்கடா உன் வீட்டு மவராசி? பரிட்சை எழுதனுன்னு சொன்னத கேட்டு செத்துகித்து போயிடாளா? இன்னும் காணும். அவ வந்தாதான நாங்க கெளம்ப முடியும்? “ என சுசிலா விசத்தை கக்க

    “ அவ உத்தரவு தந்தா தான் போவிங்களா? நீங்க கெளம்புங்க. நானே சொல்லிக்கிறேன். ஆமா நாலு நாளைக்கு எதுக்கு இத்தனை பை? “ என சொல்லிய ஜெய் ஒரு பையை எடுத்து திறக்க சுஜிக்கு தான் வாங்கிய புடவை.

      “அம்மா.. இது சுஜிக்கு  கல்யாண நாளுக்கு நான் வாங்கினது. இத ஏன் எடுத்திங்க?” எனக் கேட்க

      “அவகிட்ட சொல்ல அவ என்ன மகாராணியா? போன உடனே கீதாவும் பசங்களும் ஆசையா பைய பாப்பாங்க. அதான் அவ தீனி வாங்கிட்டு வந்தா எடுத்துட்டு போக எதிர்பாத்துட்டு இருக்கேன். ஆமா இவளுக்கே வேல போக போகுது. இவளுக்கு கல்யாண நாள் ஒன்னுதாங் கொறச்சல். போடா” எனச் சொல்லி அப்புடவையை வாங்க வர ஜெய் தாயை முறைத்தான்.

     “கீதா பட்டுப்புடவை வேணுமுன்னு ஆசையா கேட்டாடா. இத போனுல காட்டவும் அவ்ளோ சந்தோசமா சிரிச்சா. குடுடா அதை “ என்க

     “இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல. ஜெய் அவன் பொண்டாட்டிக்கு எடுத்ததை யேன் பொண்டாட்டி கட்டினா சரி வருமா?“ சட்டென விஜயனின் குரல் கேட்க பதறி திரும்பினார் சுசிலா.

     “அவன் சுஜிக்கு குடுக்க வாங்குன புடவை சுஜி பாக்கறதுக்கு முன்னாடி எப்படி யேன் வீட்டு பேராசகாரி பாத்தா? பதில் சொல்லுமா?”

     “இங்க என்னதான்டா நடக்குது? ஏன் போன்காலை அட்டன் பண்ணது கூட தெரியாம இருக்க? சரி அதை அப்புறம் பாக்கலாம். இப்போ கதவை திற..” என்க

     “அண்ணா இங்க வந்திருக்கையா? “ என வேகமாகச் சென்று கதவை திறந்தான்.

   உள்ளே வந்த விஜயன், “ அம்மா நாங்கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுமா? ஜெய் இந்த பையை எல்லாம் எடுத்து கொட்டு பாக்கலாம். நான் எவ்ளோ வொர்த்துன்னு? ம்ம்ம் எடுத்து கொட்டு. யேன் பொண்டாட்டிய நானே வச்சிக்கவா இல்ல சுஜி புருஷன்கிட்ட அனுப்பவான்னு தெரிஞ்சிக்கிறேன்? “ என்றான் விஜயன்.

     “டேய் நா உன் அம்மா. எங்கிட்டயே இப்படி பேசற. பேச ஒரு வரமுற இல்லயா?” என சுசிலா சண்டைக்கு வர,

       “நீ கொஞ்சம் முன்னாடி பேசுனத கேட்டேன். அதான் அதே மாறி பேச வருது. நான் என்ன செய்யட்டும்? உன் புத்திதான வரும்.” என்று பேசியவாரு பைகளை ஒவ்வொன்றாக கொட்ட புடவைகள், பாத்திரங்கள், வீட்டிலிருந்த ஸ்நேக்ஸ், மளிகை பொருட்கள், சோப்பு ஷாம்பு, தங்களுக்கான மருந்து மாத்திரைகள் என  அவற்றினுள் இருந்தன.

     “ஏம்மா ஷாம்பு சோப்புகூட வாங்க முடியாத வக்கத்தவனா நானு? ஜெய் திரும்பி இங்க வர்றப்போ இத்தனை பையில என்ன வரும்? ரெண்டு பிஸ்கட் பாக்கெட்டாவது வருமா? சரி இத விடுங்க. இவ்வளவும் இங்கிருந்து போனா அப்ப அங்க அவ யேங்கிட்ட வாங்கற பணத்துக்கு என்ன கணக்கு? “விஜயன் கேட்க

       பரமசிவம் “என்ன ஒரேடியா எங்கள மிரட்டுற? நாள பின்ன உன் பசங்களுக்கும் ஜெய் பையனுக்கும் ஏற்றத்தாழ்வு வரக்கூடாதுன்னு தான் இவ்வளவையும் பண்றோம். கீதா தான் இப்படி பண்ணலாமுன்னு ஜெய் கல்யாணத்தப்பவே சொல்லுச்சி. எங்களுக்கும் சரியா பட்டுச்சி” என்றார்.

     “அப்படியா சரி யோசிப்போம். நீங்க எடுத்ததை எடுத்த இடத்துல கொண்டு போய் வைங்க.  என்னைய மீறி எதாவது செஞ்சிங்க அவ்வளவுதான்.” என்ற விஜயன் “எங்கடா சுஜியும் பசங்களும் இன்னும் வரல? விஜிப்பான்னு ரெண்டு பேரும் இப்போ கூப்பிடுறதில்லை. சரியா பேசறதுமில்லை. நாங்கூட ஏதோ மிரட்டி பேசிட்டேன், அதான்னு நினைச்சேன். இதுக ரெண்டும் அவளோட சேந்து விசமாயிடுச்சிங்க. இவங்க போன் எங்க ஜெய்? மொதல்ல அதை எடு” என்க சுசிலா கொண்டு வந்து கொடுக்க தூக்கி சுவற்றில் அடிக்க சென்றவன் “இது புதுசா இருக்கு “ என்க

     சுசிலா “ கீதா போனு வாங்கி ஆறு மாசமாச்சி. அவ தங்கச்சி புது போனு வாங்கிட்டாளாம். மூஞ்சே செத்து போச்சி கீதாவுக்கு அத கேட்டு. அதனால இத அவளுக்கு குடுக்க ஜெய்கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன்” என்றார்.

     “ டேய் ஜெய் வா வெளியில போயிட்டு வரலாம்.” இருவரும் வண்டியில் ஏறி சிறிது தூரம் வந்தபின்

    “இந்த போனுல வாய்ஸ் மாத்திற ஆப்சன் இருக்கா ஜெய்?” விஜயன் கேட்க

     “நித்திலன் இதுமாதிரி ஒன்ன வாங்கினான் அவன கேட்டா தெரியும்” ஜெய் சொல்ல

    “காயு பையனையா சொல்ற? லீவுக்கு வந்திருக்காங்களா வாலுங்க ரெண்டும்? “

    “சுஜியும் பிள்ளைகளும் அங்கதான் போயிருப்பாங்க. இரு பங்குகிட்ட கேக்கறேன்” என சொல்லி காயுவின் கணவனுக்கு அழைத்து பேசினான்.

   “அங்கதான் இருக்காங்க.வா போலாம் “ இருவரும் காயு வீடு செல்ல, விஜயனுக்கு சுஜி, காயு இருவரையும் எதிர்கொள்ள சிறிது பயம்.

    “வாங்க சார் வசூல் ராணியம்மா வரலியா? “ என்று காயு வரவேற்க

    “வாங்க மாமா” வென மூன்று குரல்கள் வேறு யார் சுஜி, நிலா நித்து தான்.

  “வாங்கண்ணா, வாங்க பங்கு” என காயுவின் கணவர் வரவேற்க,

  பட்டென ஒன்னு போட்டாள் காயு. “பங்கு பங்குன்னு சொல்லிதான் அவரு பொண்டாட்டி புள்ளங்கள தவிர மத்த எல்லாத்தையும் பங்கு குடுத்துக்கிட்டு இருக்காரு. பேர சொல்லி கூப்பிடுங்க.” எனச் சொல்ல

    “உத்தரவு மகாராணி” ன்னு அவர் தலைவணங்க எல்லோரும் சிரித்தனர்.

    விஜயன் பாவமாக காயுவை பார்க்க, “என்ன லுக்கு இது? இவங்க ரெண்டு பேரும் தான் உங்களுக்காக பாத்தாங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாதா?“ என வேகமாக காயு கேட்க

    “ஆத்தா காளியம்மா கொஞ்சம் மலையிறங்கு. அவங்க உள்ள வரட்டும். கதவை சாத்திகிட்டு அடி பின்னிடலாம். இப்ப போயி குடிக்க தண்ணீ கொண்டு வா” என காயுவின் கணவர் கண்ணன் சொல்ல,

    “சாரி, சாரி வாங்கண்ணா உள்ள வாங்க. ஆனா வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பாத்து போங்கன்னு அப்படியே திரும்பி போகாம இவளுக்கு ஒரு நல்ல வழிய காட்டிட்டு போங்க.” என்றாள் காயு.

   அதற்குள் சொம்பில் தண்ணீருடன் கவி வந்தாள். வந்தவள் தன் பெரியப்பனை பார்க்காமல் தண்ணீரை நீட்ட யாரும் வாங்காததால் நிமிர்ந்து விஜயனை பார்த்தாள்.

     “கவீ “ என்க  “விஜிப்பா நாங்க இங்க இருந்தா உங்களுக்கு தொந்தரவா இருக்கா? சொல்லுங்க விஜிப்பா. அம்மாவை டிரான்ஸ்பர் வாங்க சொல்லி நாங்க வேற எங்கியாவது போயிடறதா? ஜெய் அப்பா இன்னும் உங்க குடும்பமா? நாங்கதான அவர் குடும்பம்? சம்பாதிக்கறது இவங்க ஆனா செலவு பண்றது மட்டும் அவங்க மூணு பேரும்…

ச்சே அவங்கள எல்லாம் நினைக்கறது கூட பாவம்” என்று கவி கூற

     விஜயனுக்கு முச்சந்தியில் எல்லோரும் பார்க்க அடி வாங்கிய உணர்வு.

     காயு தட்டுகளில் வடை, அதிரசம், கேசரி என கொண்டுவர, “ காயு வடை சுஜி போட்டதா? “ என விஜயன் கேட்க

   “ஆமாண்ணா. வடைய பாத்ததும் சொல்றிங்க எப்படி?  எங்க நான் வந்து கோபமா பேசிடுவனோன்னு உங்க பொண்ணு நைஸா பேசி உங்கள காப்பாத்தி விட்டுட்டு போறா. எல்லாரும் உங்களுக்காக பாக்கறாங்க. ஆணோ பெண்ணோ வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்கிறது தப்பில்லையா? சொல்லுங்க. வரவு செலவு பாக்கற மனுசனுக்கு புதுசு புதுசா நகை பாத்திரம்  பண்டம் புடவைன்னு வந்தா என்ன நடக்குதுன்னு கவனிக்கறதில்லையா? “ என காயு கேட்டாள்.

       “ தப்புதான் என்னை நாலு அடிகூட அடிச்சிடு. இந்த சிக்கலை தீர்க்க உன் ஐடியாவை சொல்லு” என்ற விஜயனை யோசனையுடன் பார்த்தாள்.

       “அண்ணா இந்த மூணு மாசமா நான்-வெஜ் வாராவாரம் சாப்பிட்டீங்களா? “ என காயு கேக்க

      “கீதா விரதமுன்னு கறி சமைக்கலம்மா” என்ற விஜயனையும், ஜெய்யையும் முறைத்த காயு பல்லைகடித்துக் கொண்டே “கீதா விரதம் இல்ல. கீதா கொழுந்தனாரு வீட்டுல தான் விரதம்., மௌன விரதம். இங்கத்தி கறி கடைக்காரன் விரதம். ஆனா உங்க ஊரு பெரிய ஊருன்னு சுசிலா பெருமை பேசுமே! அங்க எல்லா கறிக்கடையும் மூடிட்டாங்களா? ஐய்யோ பாவம். இந்த கொடுமைய எங்க போயி சொல்றது? பெத்த ஊரு பெரிய ஊருல ஒரு நிலையான கறிக்கடை போடக்கூட ஆளில்லையே…” என காயு புலம்ப

   விஜயன் தன் தம்பியிடம் “காயு சொல்லறது உண்மையா? ஒவ்வொரு வாரமும் நீதான் சிக்கன், மட்டன், மீனு, நண்டுன்னு வாங்கிகிட்டு வந்தியா? ஆனா நீ அங்க சாப்பிட்டு நான் பாத்ததில்லையே? “ என்றவன்

     ஜெய் கிளம்பியபின் கீதாவின் வழக்கமான டைலாக் “இவ்ளோ சம்பளம் வாங்கறாங்க. ஆனா கறி திங்க வாரம் தவறாம இங்க வர்றான். வயித்துக்கு சாப்பிடாம மிச்சம் பிடிச்சி கோட்டையையா பிடிக்க போறாங்க?” என்பது தான்.

    தோண்ட தோண்ட பிணங்கள் என்பது போல ஒவ்வொருவரும் சொல்ல சொல்ல விஜயன் தளர்ந்து அமர்ந்தான். “ காயு அவ பக்காவா பிளான் பண்ணி, வச்சி செஞ்சிருக்கா எங்க எல்லோரையும், இவகிட்ட இருந்து நாங்க மீள முடியுமா? அப்பா பென்சன் பணமும் அவகிட்ட தானிருக்கும். ஜெய் இப்போதைக்கு அவங்கள அங்க அனுப்பாத.. சுஜிமா நீ பரிட்சைக்கு படிக்கறேன்னு ஒரு வாரம் லீவ போட்டுட்டு வீட்ல இரு. அதுக்குள்ள நான் இதை அடிவரை கண்டுபிடிச்சிடுறேன்”  என்ற விஜயனின் கருத்தை அனைவரும் ஏற்றனர்

   சுஜி ஏன் பிளாக் மெயில் பற்றி கேக்கவில்லை? நகை விவகாரம் என்னானது? எல்லோரும் பேசும் போதெல்லாம் சுஜி மௌனமாக இருப்பதேன்?விடை காண காத்திருப்போம் தோழிகளே