தயாராகி ஹால் வந்தார் தாமரை. மாமியாரிடம், “சாப்பிட்டு டேப்லெட்ஸ் எல்லாம் மறக்காம போட்ருங்க” என்றார். கனியிடம் “சாப்பிட்டு போ” என சொல்லி வெளியில் வந்தார்.

அம்மாவின் பாதங்கள் பார்வையில் விழ, கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலின் ஆட்டத்தை நிறுத்தினான் தர்மா.

தன் பக்கவாட்டில் இருந்த மகனை பாராமல் நேராக நின்றிருந்த தாமரை, “உங்கப்பா மாதிரி ஆபத்தை எல்லாம் வரிஞ்சு கட்டிக்கிட்டு சேர்த்துக்காம, கடைசி வரைக்கும் கட்டினவ கூட இருப்பேங்கிற வைராக்கியம் இருந்தா மட்டும் அவளை கல்யாணம் பண்ணு. இல்லைனா… போயிடு எங்கேயாவது, அவ நல்லாருக்கட்டும்” என சொல்லி வேகமாக நடந்து விட்டார்.

முகத்தில் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் ஊஞ்சலை மீண்டும் ஆட்டுவித்தான் தர்மா.

கனி வந்து நின்றாள். “அத்தை பேசினதுக்காக வருத்த படாத மாமா” என்றாள்.

“என்ன குழி மேடுன்னு நீ பாட்டுக்கும் அடிச்சி விடுற? என்ன நினைச்சிட்டு பேசுற? நான் இப்படித்தான், நான் விரும்பினாலும் விரும்பாட்டாலும் என்னை மாத்திக்க முடியாது” என்றான்.

“பசிக்கலையா மாமா? உன் கூடத்தான் சேர்ந்து சாப்பிடுவேன்னு உன் அப்பத்தா  வெயிட் பண்ணிட்டு இருக்காங்க”

“நான் என்ன கேட்டா நீ என்ன சொல்ற?”

“சாப்பிட வா மாமா” என சொல்லி அவள் உள்ளே செல்ல, பேரனின் பெயரை சொல்லி சத்தமாக அழைத்தார் பாட்டி.

‘இவளை என்ன செய்யன்னே தெரியலை’ என அலுத்துக் கொண்டேதான் சாப்பிட சென்றான்.

சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பும் போது தனக்கு ஆடைகள் எடுக்க வேண்டும் என்றாள் கனி. அன்று பெரிதான வேலைகள் இல்லாததால் தர்மாவும்  கடைக்கு அழைத்து சென்றான்.

கனியை ஆடை எடுக்க சொல்லி விட்டு கடையில் ஒரு ஓரமாக அமர்ந்து விட்டான் தர்மா. தன் குழந்தையை வீட்டில் விட்டு தனியாக  அந்தக் கடைக்கு வந்திருந்தாள் மஹா.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மஹா சங்கடத்தோடு புன்னகை செய்ய, பதிலுக்கு புன்னகைத்து விட்டு கைப்பேசி பார்ப்பது போல பாவனை செய்ய ஆரம்பித்து விட்டான்.

தயக்கத்தோடு அவன் பக்கத்தில் வந்தமர்ந்தவள், “எப்படி இருக்கீங்க தர்மா?” என விசாரித்தாள்.

அவளே வந்து பேசுவாள் என அவன் நினைத்திருக்கவில்லை. ஆச்சர்யத்தோடு அவளை ஏறிட்டான்.

“இப்ப போய் ஸாரி கேட்டு என்னாக போகுது? என் நிலை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், நீங்க நல்லாருக்கணும்னு தான் அன்னிக்கு உங்களை வேணாம்னு சொன்னேன்” என்றாள் மஹா.

“உம்மேல எந்த கோவமும் இல்லை, பழசெல்லாம் வேணாம், நான் உன்கிட்ட விளக்கம்லாம் கேட்கல மஹா” என்றான்.

அவனது புரிதலுக்கு நன்றி சொல்லும் விதமாக புன்னகைத்தாள்.

“உன் லைஃப்ல என்ன பிரச்சனை மஹா? எல்லாம் தெரிஞ்சுதானே உன் ஹஸ்பண்ட் உன்னை கல்யாணம் பண்ணியிருக்கார்? கல்யாணத்துக்கு முன்னாடியே உன் ரிலேட்டிவ்தானே?”

“என்னை நினைச்சுகிட்டுத்தான் இன்னும் நீங்க இப்படி இருக்கீங்கன்னு அவர் நினைக்கிறார். வருஷங்கள் ஓடிப் போயும் கல்யாணம் பண்ணிக்காம உன் நினைப்புலேயே இருக்காருன்னா அப்படி என்ன பழக்கம் உங்களுக்குள்ளன்னு கேட்டுகிட்டே இருந்தா… என் பொறுமைய இழுத்து பிடிக்க முடியலை, கிளம்பி வந்திட்டேன்” என்றாள்.

“உன் ஹஸ்பண்ட்டுக்கு நல்ல புத்தி இருக்கா இல்லையா?” என சற்றே கோவமாக கேட்டான் தர்மா.

“எதனால நீங்க கல்யாணம் பண்ணிக்கலைன்னு நிஜமான காரணம் உங்களுக்குத்தான் தெரியும். ஆனா நமக்கு இடைல நடந்த விஷயம் ஒன்னும் ரகசியம் இல்லை, ஊர் உலகத்துக்கே தெரியும். எல்லாருமே என்னை நினைச்சுகிட்டுத்தான்…”அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே “மஹா!” என கண்டனமாக அழைத்தான்.

“உண்மை மூஞ்சுல அடிக்கிற மாதிரிதான் இருக்கும், ஆனா மாத்த முடியாது. எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறாங்க. எம்புருஷனும் அப்படித்தான் நினைக்கிறார், ஏன் எனக்கே அந்த சந்தேகம் இருக்கு” என்றாள் மஹா.

“எம்மேல நம்பிக்கை வைக்காத ஒரு பொண்ணை அதுவும் இன்னொருத்தன் மனைவியை இன்னும் நான் நினைச்சிட்டு இருப்பேன்னு நினைக்கிறியா?” கோவத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.

இதுவரையிலும் மஹாவை நேரில் பார்த்தது இல்லை கனி. தர்மாவின் அருகில் அமர்ந்திருப்பது இன்னாரென அறியாமல் அவனிடம் சென்றவள், “ஆச்சு மாமா, கிளம்பலாமா?” எனக் கேட்டாள்.

கனியை மஹாவிடம் சுட்டிக் காட்டியவன் “இவதான் நான் கட்டிக்க போற பொண்ணு, எம் மாமன் பொண்ணு” என்றான்.

கனியை பார்த்தாள் மஹா. குழப்பமாக இருந்த கனி, மஹாவிடமிருந்து தன் மாமனிடம் பார்வையை மாற்றினாள்.

“ஊர் உலகமே எதிர்த்து வந்தாலும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேங்கிற வார்த்தையிலேருந்து என்னிக்கும் பின்வாங்க மாட்ட. எங்களுக்கு கல்யாணமே நடக்கலைனாலும் என்னை புருஷனா நினைச்சு வாழறவ. தர்மா மொத்தமா இவளுக்குத்தான், நீ நல்லா இருக்கணும்ங்கிற எண்ணம்தானே ஒழிய உன் எண்ணம் இல்லை எனக்குள்ள. போ போய் உன் அதிமேதாவி புருஷன்கிட்ட போய் இதை சொல்லு! ஒழுங்கா உன் வாழ்க்கைய வாழற வழியை பாரு” பட படவென பொரிந்தான் தர்மா.

திகைத்துப் போன கனிஹா, “மாமா…” என அழைத்தாள்.

சுற்றிலும் பார்த்தவன் தன் நெற்றிப் பொட்டை அழுத்திக் கொண்டான்.

கனியை பார்த்து சிநேகிதமாக புன்னகைத்த மஹா, தர்மாவை தயக்கத்தோடு பார்த்தாள். மஹா தன்னை பார்ப்பது தெரிந்தும் அவளை பாராமலேயே இருந்தான்.

இவர்களுக்கு இடையில் தான் என்ன பேச எனத் தெரியாமல் நின்றிருந்தாள் கனி.

எழுந்து கொண்ட மஹா, “உங்க கல்யாணத்துக்கு வர முடியலைன்னா கூட நடக்கிற அன்னிக்கு ரொம்ப சந்தோஷ படுவேன்” என  கனியிடம் சொன்னாள்.

ஒப்புக்கு சிரித்து வைத்தாள் கனி. அவளை மெலிதாக அணைத்து விலகிய மஹா, “ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க” என சொல்லி கடையில் ஏதும் வாங்காமலேயே சென்று விட்டாள்.

காரில் செல்லும் போது தர்மா மிகவும் அமைதியாக இருந்தான்.

“அவதான் மஹாவா மாமா?” எனக் கேட்டாள் கனி.

அவன் ஆம் என்பதாக தலையாட்டினான்.

“அவளை வெறுப்பேத்ததான் அப்படி சொன்னியா மாமா?”

வேகமாக அவள் பக்கமாக திரும்பியவன், “அவளை வெறுப்பேத்த உன்னை கூட வச்சுகிட்டே அப்படி சொல்வேனா? கட்டிக்க கட்டிக்கன்னு உயிரை வாங்கிட்டு இப்ப இப்படி கேட்பியா?” எனக் கேட்டான்.

“அப்ப நிஜமாதான் சொன்னியா மாமா?” உண்மையாகவே அவளால் நம்ப முடியவில்லை.

“வீட்டுக்கு போய் பேசலாம்” என அவன் சொல்ல, ஒரு வித பரிதவிப்போடே அந்தப் பயணத்தை கடந்தாள் கனி.

காரிலிருந்து இறங்கிக் கொண்டவர்கள் வீட்டிற்குள் செல்லவில்லை. முன்பக்க தோட்டத்தில் அவன் தேங்கி விட, அவளும் அவனது முகம் பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று விட்டாள்.

“கடைல மஹா முன்னாடி வச்சு அப்படி சொல்லணும்னு நினைக்கல கனி. ரெண்டு நாள் போனதும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன சாதக பாதகம் வரும்னு உன்கிட்ட தெளிவா எடுத்து சொல்லித்தான் என் சம்மதத்தை சொல்ல நினைச்சேன். அவ முன்னாடியே வச்சு சொல்ல வேண்டியதா போச்சு, வருத்தமா உனக்கு?” எனக் கேட்டான்.

மனம் உயரப் பறக்க, இல்லை என தலையசைத்தாள்.

“இன்னும் என் கண்ணுக்கு மாமா பொண்ணா மட்டும்தான் தெரியுற கனி. வார்த்தையால பொண்டாட்டின்னு சொல்லிட்டேன், அப்படிலாம் பார்க்க முடியுமான்னு தெரியலை, நான் சொல்ல வர்றது…” என அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

“நல்லா புரியுது மாமா, எனக்கு உன் கூட இருந்தா மட்டும் போதும் மாமா” அவனை முடிக்க விடாமல் முந்திக் கொண்டு சொன்னாள் கனி.

“மாற காலம் எடுக்கும், ஆனா மாறிக்குவேன். அதுவரைக்கும்…” என்றவனை  மேலும் பேச விடாமல் அவனது கையை பற்றிக் கொண்டாள்.

“கல்யாணம் பண்ணிக்க மாமா, நீ மாறு மாறாம போ, அது பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லை” என்றாள்.

“அவசரம்தான் எல்லாத்திலேயும். என் கனி நல்லா சந்தோஷமா வாழணும், வெயிட் பண்ணு”

“என்னை கல்யாணம் பண்ணைக்கலாம்னு நீ எடுத்த முடிவிலேருந்து எப்போ மாறிப் போவியோன்னு பயந்திட்டே இருக்க முடியாது என்னால. நான் அப்பத்தாகிட்ட சொல்றேன்” என சொல்லி நிற்காமல் உள்ளே ஓடிச் சென்று விட்டாள் கனி.

தன் தாய்மாமனுக்கு அழைத்த தர்மா, தன் திருமணத்துக்கு தேதி பார்க்க சொன்னான்.