ஹைட்ராபாத்.. மத்திய அரசு பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம்.
மணி காலை 7:20.. வர்ஷினி “ம்மா… நான் கிளம்பறேன்” என்றாள் அமைதியான குரலில்.
அன்னை விஜயா “ம்.. பதினோரு மணியாகுமா” என்றார் கேள்வியாக பெண்ணை பார்த்து.
வர்ஷினி சட்டென திரும்பி பார்த்தாள் அதே கேள்வியான பார்வையோடு.. பின் அன்னையின் எண்ணம் புரிய, லேசான புன்னகையோடு.. “ம்.. கண்டிப்பா வந்திடும்.. வந்திருக்கும்.. நான் ஆபீஸ் போய் செக் பண்ணிட்டு சொல்லிடுவேன்..” என்றாள் புன்னகை மாறாமல்.
அன்னை “ஆம் வைடிங்.. “ என்றார். மகளும் புன்னகையோடு கிளம்பினாள்.
இவர்கள் குவார்ட்டர்ஸ் முகப்பில், இவளின் ஆபீஸ் கேப் வரும். எனவே, அந்த தூரம் ஒரு கிலோமீட்டர் இருக்கும்.. பக்கத்துவீட்டு தோழியோடு.. வண்டியில் சென்றிடுவாள் வர்ஷினி.
வாசல் வந்த வர்ஷினி பக்கத்துவீடு சென்றாள்.. “மச்சி.. வா வா..” என சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல.. அவளின் தோழி ஷர்மி எதையோ தேடிக் கொண்டே “மச்சி கீ எடுத்து.. வண்டியை வெளியே எடு” என்றாள்.
வர்ஷினியும் அப்படியே செய்ய.. அவளின் மச்சி வெளியே வந்து “உமர்.. காசு அனுப்பிட்டான்.. எப்போ போலாம் பர்சேஸ்க்கு..” என்றாள்.
வர்ஷினி “அஹ.. உமர் ப்ரோ நீ கிரேட்” என ஒரு சல்யூட் வைத்தாள் இங்கிருந்தே.
ஷர்மி “ம்.. எனக்கு வை சல்யூட்டினை.. அவங்கிட்டேயிருந்து நான்தான் காசினை வாங்கினேன்..” என்றாள் பெருமைபொங்க..
வர்ஷினி செல்ல கோவத்தோடு “நீ ஏன் வாங்கின.. உமர் வந்து எனக்கு பர்சேஸ் பண்றேன்னு சொன்னான்.. இன்னும் நிறைய வாங்கியிருப்பேன்.. அதுக்குள்ள” என சொல்லிக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தாள் வர்ஷினி.. இருவரும் பனிமூடிய அந்த காலை நேரத்தில்.. பேசிக் கொண்டே கிளம்பினர்.
சற்று தூரத்தில் எதிரே வந்தார் சிவகுமார் சைக்கிளில்.. வர்ஷினியின் தந்தை. மூன்றுமாதம் ஆகிறது பணி ஒய்வுபெற்று. ஆனால், இளமையாக துடிப்பாக இப்போதும்.. தனக்கென ஒரு அணியை சேர்த்துக் கொண்டு.. சைக்கிளிங் டரக்கிங்க்.. என பிசியாக இருக்கிறார்.
இப்போது மகளை பார்த்ததும் சைக்கிளினை செலுத்திக் கொண்டே.. கையசைத்து “குட் மோர்னிங் டா” என்றார்.
பெண்ணவளும் “பை ப்பா” என சொல்லி கையினை அசைத்து கிளம்பினாள்.
சிவகுமார் ஏரோட்ரம்மில் செக்க்யூரிட்டி ஆபீஸர். மத்திய அரசு பணி. பணி நிரந்தரம் பெற்று.. ஹைதராபாத் வந்து சேர்ந்தார். அதற்கு முன்வரை மும்பையில் பணியில் இருந்தார். பணி நிரந்தரம் ஆகவும்.. குவார்ட்டர்ஸ் கிடைக்கவும்.. குடும்பத்தோடு இங்கே வந்துவிட்டார். அதன்பின் பிறந்தவள்தான் கமலவர்ஷினி. சென்னைதான் சொந்தஊர்.
சிவகுமார் வீடு வந்தார்.. அவரின் மனையாள் “என்னங்க.. ஊரிலிருந்து போன்.. உங்க போன் எங்க.. எடுத்துட்டு போங்கன்னு சொல்லியிருக்கேன்.. ஏன் இப்படி பண்றீங்க..” என கணவனை திட்ட தொடங்கிவிட்டார்.
சிவகுமார் “அம்மாடி டென்ஷன் ஆகாதா.. இதோ பேசிடுறேன்.. நீ டிபன் எடுத்து வை சாப்பிடலாம்” என்றபடி போனினை ஆராயச் சென்றார்.
அடுத்த இருபது நிமிடத்தில் போன் பேசி குளித்து முடித்து வந்தார்.
சாமி படங்களுக்கு முன் நின்றுக் கொண்டு.. கோளறு பதிகம் பாடிக் கொண்டே பூ வைத்து பூஜை செய்தார்.
விஜயா போனில் பேசிக் கொண்டிருந்தார்.. தன் நாத்தனாரிடம்.
சிவகுமார் உணவு மேசைக்கு வந்து அமர்ந்தார்.. விஜயாவும் எழுந்து கணவருக்கு உணவு பரிமாறினார். சிவகுமார் சென்னை வீட்டினை பராமரித்துக் கொண்டிருந்தார்.. அதன் அழைப்புதான் வந்தது காலையில், அதனை பேசி முடித்து அதன் விவரங்களை மனையாளிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தார்.
சிவகுமாருக்கு சென்னை செல்ல வேண்டும் என விருப்பம்.. சொந்தங்கள் எல்லாம் அங்கேதான். வேலை என இங்கே இருந்தாகிற்று.. இனி நம் மக்கள் நம் மண் என இருக்க வேண்டும் என எண்ணம். அத்தோடு, வர்ஷினியின் திருமணம். அதற்காகவும் அங்கே செல்ல எண்ணுகிறார். சொந்தத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்.. மற்ற இரண்டு பிள்ளைகளும்தான்.. தூரமாக இருக்கிறார்கள்.. இவளாவது அருகில் இருக்கட்டும் என எண்ணம். அதனால், மகளின் வேலையை அங்கே மாற்ற சொல்லிக் கொண்டிருக்கிறார்.. கடந்த ஆறுமாதமாக, தான் ஒய்வு பெறுவதற்கு முன்பிருந்தே. வர்ஷினிக்கு இன்னமும் சென்னையில் வேலை கிடைக்கவில்லை.
சிவகுமார் விஜயா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். முதல் பெண் மதுவர்ஷினி.. திருமணம் முடித்து கனடாவில் இருக்கிறாள். இரண்டாவது மகன் ஹரிதர்ஷன் MBA முடித்து.. மும்பையில் உள்ள பெரிய பேங்க்கில் வேலை. இருவரும் காதல் திருமணமே. பெரிதாக மறுப்பு சொல்ல காரணம் ஏதுமில்லை. இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் இனிதாகவே முடிந்தது. நன்றாக இருக்கிறார்கள்.
மாலையில் ஏழு மணிக்கு வர்ஷினி வீடு வந்தாள். அன்னையின் முகம் சோர்ந்து இருந்தது. வர்ஷினி “ம்மா.. “ என்றாள் ராகமாக.
வர்ஷினி அமைதியானாள். அப்படியே சோபாவில் தலை சாய்த்துக் கொண்டாள். காலையில் சொன்னது போல.. சென்னையில் வேலை அமையவில்லை அவளுக்கு. மென்பொருள் நிறுவத்தில் டீம் லீட்’டாக இருக்கிறாள். புனே பெங்களூர் என வேறு இடங்களில் வேலை கிடைக்கிறது.. சென்னையில் மட்டும் அமையவில்லை அவளுக்கு. வருத்தமாகத்தான் இருக்கிறது அவளுக்கும், என்ன செய்ய.. என அன்னையின் சலித்த முகமும் இன்னமும் வாடவைக்க.. சோர்ந்து போனாள் பெண்.
வர்ஷினியும் எழுந்து தன்னறைக்கு சென்றுவிட்டாள். சிவகுமார் கிளப்பில் நண்பர்களோடு உரையாடிவிட்டு வீடு வந்தார்.
இரவு உணவு மூவரும் ஒன்றாக அமர்ந்தனர். மூவருக்கும் வருத்தம். அடுத்த ஒருமாதத்தில் சென்னைக்கு கிளம்பலாம் என திட்டமிடுகின்றனர். ஆனால், நடக்கவில்லையே என எண்ணம்.
தர்ஷன் வீடியோ காலில் அழைத்தான்.. வார இறுதி என்பதால் நேரமாக வீடு வந்திருந்தான்.. தன் இரண்டு வயது மகனை மடியில் அமர்த்திக் கொண்டு.. அன்னையின் செல்லுக்கு அழைத்தான்.
தர்ஷன் மனைவி ஐஸ்வர்யார் மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டே பேச தொடங்கினாள்.
வர்ஷினி உணவு உண்டு முடித்து எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
விஜயா.. பேரனை பார்த்ததில் அப்படியே கணவரோடு அமர்ந்துக் கொண்டார் பேசுவதற்கு.
தந்தை, சென்னை வீட்டின் வேலை பற்றி மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.. அப்படியே பேரனின் பேச்சு வந்தது.. இப்போது ஐஸ்வர்யா “என்ன வரிஷினியை காணோம்..” என அழைக்க.
விஜயா “வர்ஷினி..” என போனினை கிட்செனுக்கு எடுத்து சென்றார்.. வர்ஷினி “ஐஸ்..” என சலிப்பாக பேச.
அதிலேயே ஐஸ்வர்யா புரிந்துக் கொண்டாள்.. வேலை கிடைக்கவில்லை என.. அதை கேட்கவும் செய்தாள் “என்ன இதுவும்.. ஓகே ஆகலையா” என்றாள்.
வர்ஷினி “ம்” என உதடுபிதுகினாள்.
தர்ஷன் “ம்.. கிடைக்கும்.. பார்த்துக்கலாம்.. என் பிரென்ட் இருக்கான் பேசி பார்க்கிறேன்” என்றான்.
வர்ஷினி “ அதெல்லாம் வேண்டாம் அண்ணா..” என்றாள்.
தர்ஷன் போனினை மனையாளிடம் கொடுத்துவிட்டான்.
ஐஸ்வர்யாதான் பேசிக் கொண்டிருந்தாள் நீண்ட நேரம்.
மறுநாள் எப்போதும் போல விடிந்தது. வேலையும் தொடங்கியது.
இரண்டுவாரம் ஓடிற்று..
உமர் இன்று வெளிநாட்டிலிருந்து அதிகாலையில் வந்துவிட்டான்.. அவனின் திருமணத்தினை முன்னிட்டு. அடுத்த பதினைந்து நாளில் அவனின் திருமணம். ஷர்மி இன்று நேரமாக கிளம்பி வண்டியோடு வர்ஷினி வீட்டின் முன் நின்றிருந்தாள். ஹாரன்.. வேறு அலறுகிறது.
புன்னகையோடு விஜயா வெளியே வந்தார்.. “ஷர்மி சீக்கிரம் வந்துட்ட.. உமர் வந்துட்டானா..” என்றார்.
ஷர்மி “ம்.. ஆன்ட்டி, லேட் நைட் வந்துட்டான்.. அம்மா சொன்னாங்களா” என்றாள்.
“ஆமாம் டா.. உன் வீட்டுக்காரார் எப்போ வருகிறார்.. நீ எத்தனைநாள் லீவ் போட்டிருக்க” என வினவினார்.
இப்போது வர்ஷினி வந்தாள்.. ஷர்மி “டூ டேஸ்ல வராங்க ஆன்ட்டி” என்றாள் சந்தோஷமாக.
வர்ஷினி “உமர் எப்போ வராங்க” என்றாள்.. தன் தோழியின் பின்னால் அமர்ந்துக் கொண்டே.. கேட்டாள்.
வர்ஷினிக்கு முகமே வாடி போனது.. “இல்ல.. அவன் ஷாபிராவை பார்த்ததும் மாறிட்டான். எனக்குதான் யாருமே இல்லை இப்போ. ச்சு.. இருந்தாலும் விடமாட்டேன்.. என்னை பார்த்துட்டுதான் அவன் ஷா வை பார்க்கணும்.. இரு போன் பண்றேன்” என்றாள் ஆவேசமாக.
ஷர்மி புன்னகைத்தாள்.
வர்ஷினி அவனுக்கு அழைத்தாள், ஆனால் உமர் அழைப்பினை ஏற்கவில்லை. ஆவேசம் எல்லாம்.. அடங்கி போகிற்று. நட்பு எப்போதும் காதலின் முன் தோற்றே போகும்.. போல உமர் அழைப்பினை ஏற்கவேயில்லை.
வர்ஷினிக்கு இந்த பேச்சு என்னமோ போலிருக்க.. பதில் சொல்லாமல் அமைதியானாள்.
இருவரும் வண்டியை எப்போதும் நிறுத்தும் கடையில் நிறுத்திவிட்டு.. தங்களின் அலுவலகம் செல்ல கேப்பிற்கு காத்திருந்தனர்.
வர்ஷினிக்கு என்னமோ மனதே சரியில்லை. எதையோ எண்ணி குழப்பிக் கொண்டாள். தாய் தந்தையின் ஆசையான சென்னை வேலையும் கிடைக்கவில்லை.. நண்பர்களும் யாரும் தனக்கென இல்லாதது போல எண்ணம்.. சோர்ந்த முகத்தோடு வேலையை தொடங்கினாள் இப்போது.
தலைவலி.. மதியமும் சரியாக உண்ணவில்லை வர்ஷினி, தன் டீம்மோடு சின்ன மீட்டிங்.. அதில் கவனம் வைத்திருந்தாள். வேலை என்றால் வர்ஷினி தன்னை முழுவதும் கொடுத்திடுவாள்.. அதனால் உமர் அழைத்ததையும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் கவனமானாள்.
இரவு வீடு வந்துதான்.. உமர் அழைப்பினை நினைவில் கொண்டாள், பெண். திரும்ப அழைப்பதா வேண்டாமா என எண்ணிக் கொண்டிருக்க.. உமர் வந்தான்.. இப்போது அவளை தேடி நேராக வீட்டிற்கு.
சிவகுமார் விஜயா இருவரும் ஹாலில் அமர்ந்திருக்க.. இருவரும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர்.
விஜயா குடிப்பதற்கு பாதாம் பால் கொடுத்தார். பின்னர் தம் மகளை அழைத்தார்.
வர்ஷினி அமைதியான புன்னகையோடு வந்தாள் “உமர் ப்ரோ..” என தொடங்கி பேசினாள். முறையான நலம் விசாரிப்பு தொடங்கி.. வேலை பற்றி பேசி.. “எப்படி இருக்கா ஷா.. பார்த்துட்டு வந்தியா..” என்றாள்.
உமர் மற்ற எல்லாவற்றுக்கும் நிதானமாக பதில் சொல்லியவனின் முகம்.. இப்போது புன்னகையை பூசிக் கொண்டது. “ம்..” என்றான்.
வர்ஷினி “ஏன் ப்ரோ.. லீவ் போட்டுட்டு போக முடியுமா.. உன் மாமனாரா கம்பெனி நடத்துகிறார்” என்றாள்.. அருகில் அன்னை தந்தை இருப்பதால்.. மரியாதையாக புன்னகையோடு பேசினாள்.
உமரும் “உனக்கு என்ன.. லீவ் போடலாமில்ல.. எல்லா லீவ்’வினையும் சேர்த்து வைத்து என்ன பண்ணபோற” என சொல்லி.. ரகசிய குரலில் “இன்னமும் சிங்கிள் தானே.. என்ன வேலை.. உனக்கு” என்றான் கிண்டலாக.
வர்ஷினி “உமர்ர்… கடுபேத்தாத.. வந்ததும் உன் வருங்காளா பொண்டாட்டிய பார்த்து சொள்ளுவிட்டுட்டு.. அவளுக்கு வாங்கிட்டு வந்ததெல்லாம் கொடுத்துட்டு.. மிச்சம் இருக்கிற டைமில் என்னை பார்க்க வந்துட்டு.. நான் லீவ் போட்டுட்டு போய் உன் வருங்கால பொண்டாட்டிக்கு ஷாப்பிங் போகலைன்னு கேட்க்கிற.. கொஞ்சம் கூட.. கொஞ்சம் கூட..” என திக்கினாள். வார்த்தைகளை கோர்க்க வர்ஷினிக்கு எப்போதும் தெரியாது.. திணறுவாள். அந்த நேரமெல்லாம்.. அவளின் முகபாவனையை ரசிக்க.. அதனை கிண்டல் செய்ய.. என முன்பு ஒரு கூட்டமே இருக்கும். இப்போது அந்த கூட்டத்தில் யாருமில்லை. உமர் மட்டுமே மிச்சமிருக்கிறான்.. இவளோடு பேசிக் கொண்டு.
உமர் இப்போது “அஹ.. என்ன என்ன சொல்லு.. எப்போதும் போல நீ வளரவேயில்லை” என அவளின் தலையில் கைவைத்து.. அதனை அசைத்தான் நண்பன்.
வர்ஷினி “சரி சொல்லு ப்ரோ.. கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது.” என்றாள் சீரியஸ்சான குரலில்.
உமர்.. நொடி நேரம் அவளை உற்று பார்த்து “ம்.. எல்லோருக்கும் ஆகிடுச்சி. சர்வேஷ்க்கு ஆரு வருஷம் முன்பே கல்யாணம் ஆகிடுச்சி.. அவனுக்குதான் முதலில் ஆச்சு. அப்படியே பிரதாப்.. ராக்கேஷ்.. நம்ம கருப்பு.. பிள்ளை எல்லாம் செகண்ட் ஸ்டான்டாட் படிக்குது..” என்றான்.
வர்ஷினி “ம்.. ஒகே.. காலையில் எனக்கு வேலை இருக்கு..” என எழுந்தாள்.
உமர் “அடியேய்.. ஷா.. வெளியே போலாம்ன்னு சொன்னா.. உன்னை கூட்டிட்டு போய்தான் அவள் வீட்டில் அவளை கூட்டிட்டு போகனும்.. அவளுக்கு மிட்நைட் அவுட் போகணுமாம்.. அதுக்குதான் வந்தேன் உன்னை பார்க்க.. வா.. கிளம்பு வர்ஷி.. ப்ளீஸ்..” என்றான் திடமான குரலில் கொஞ்சிக் கொண்டே.
வர்ஷினி “டேய்.. என்ன டா நினைச்சிட்டு இருக்க.. இங்கிருந்து இருபது கிலோ மீட்டார் போகனும்.. என்னால் ஆகாது டா.. ஆளைவிடு. வீகென்ட் என்றால் கூட ஒகே.. இதென்ன இப்போ கூப்பிடுற.. எனக்கு வேலையிருக்கு.. சாரி” என்றாள்.
வர்ஷினி மீண்டும் சமாதானம் சொன்னாள். உமர் அமைதியாகவே இருந்தான்.
வர்ஷினி ஷாபிராவிற்கு அழைத்துவிட்டாள். உமர் பற்றி சொல்லி அவனிடம் போனினை கொடுத்தாள். உமர் ஷாபிரா இருவருக்கும் நான்குமாதம் ஆகிறது நிச்சயம் ஆகி. நிச்சயத்தின் போது பத்துநாட்கள் விடுமுறையில் வந்தான் உமர். அதன்பிறகு இப்போதுதான் வருகிறான். போனில் பேசி பேசி என காதல் ததும்பிதான் நிற்கிறது. ஷாபிராவை அவர்கள் வீட்டில் தனியே அனுப்பமாட்டார்கள்.. அதனால் தோழியிடம் வந்து நிற்கிறான்.
அடுத்த இரண்டுநாளும் நகர்ந்தது. ஷர்மி இந்த வெள்ளியன்று வேலைக்கு வரவில்லை.. அவளின் கணவர் வந்துவிட்டார் அதனால், அவள் விடுமுறை. வர்ஷிணியின் தந்தைதான் வர்ஷினியை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டார்.
வர்ஷினி சொன்னது போலவே இரவு உமர் ஷாபிராவோடு மிட்நைட் அவுட்டிங் சென்றாள். ஒரு பேக்கேரியில் அமர்ந்துக் கொண்டாள் வர்ஷினி. அவர்கள் இருவரும் கைகோர்த்துக் கொண்டு நடைபாதையில் நடந்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.
வர்ஷினி, உமர் சொன்னது போல தனிமையில்தான் இருக்கிறாள்.. காரணம் அவனில்லை.. அவளை பொறுத்தவரை.