மகளுக்கென வரன் பார்த்திருந்தார் நம்பி. காலை உணவின் போது அம்மா, மகள், தர்மா என மூவருக்கும் பொதுவாக விவரம் சொன்னார்.
பாட்டிக்கு சரிதான் என்றே தோன்றியது. கனி தர்மாவை பார்த்தாள்.
“பார்க்க வர சொல்லலாம்னு இருக்கேன்” என்றார் நம்பி.
“அவசர பட வேணாம் மாமா, விசாரிச்சிட்டு சொல்றேன்” என தர்மா சொல்லவும், தள்ளி போடாமல் சீக்கிரம் செய் என சொல்லி முடித்துக் கொண்டார் நம்பி.
மாலையில் வந்து உன்னிடம் பேசுகிறேன் என கனியிடம் சொல்லி கிளம்பி விட்டான் தர்மா.
பையன் புகைப்படத்தில் பார்க்க நன்றாக இருப்பதாக பேத்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாட்டி.
“எனக்கு பிடிக்கல அப்பத்தா, சும்மான்னு இரு” என பாட்டியிடம் எரிச்சல் பட்டவள் அறைக்குள் அடைந்து விட்டாள்.
பேரனுக்கு அழைத்த பாட்டி, “இவ ஆள் சரியில்லை, அப்பப்ப யார்கிட்டேயோ குசுகுசுன்னு போன்ல பேசிட்டு இருப்பா, உன் மாமனுக்கு தெரிஞ்சா என்னாகுமோ, சாயந்தரம் கொஞ்சம் சீக்கிரமே வந்து என்னன்னு இவகிட்ட விசாரி” என்றார்.
“அவ ஃபிரெண்ட்ஸ் யார் கூடவும் பேசிட்டு இருப்பா அம்மாச்சி. கண்டிப்பா நேரத்தோடே வந்து அவகிட்ட பேசுறேன்” என தர்மாவும் சொல்லியிருந்தான்.
மாலையில் தர்மா வீடு வரவுமே மதியம் சரியாக உண்ணவில்லை பேத்தி என தெரிவித்தார் பாட்டி.
கனியின் அறைக்கு சென்றான் தர்மா. விழித்துக் கொண்டே படுத்திருந்தாள் அவள். அவனை கண்டதும் மெதுவாக எழுந்தமர்ந்தாள்.
“நான்தான் சொன்னேனே கனி, உன் விருப்பபடிதான் எல்லாம் நடக்கும். மாமாகிட்ட ஏதும் சொல்லணுமா?” எனக் கேட்டான் தர்மா.
கனி யாரையும் விரும்புகிறாள் என அவனுக்கு தோன்றியது.
தயக்கத்தோடு அவள் பார்த்திருக்க, சின்ன சிரிப்புடன், “வேற யாரையும் பிடிச்சிருக்கா கனி?” எனக் கேட்டான்.
இல்லை என அவள் மறுக்காமல் போகவுமே உறுதி படுத்தி விட்டான்.
“யாருன்னு சொல்லு” எனக் கேட்டான்.
அப்போதும் வாயை திறக்காதவளிடம் “தயங்காமல் சொல்லு” என சொல்லி அவளை பேச ஊக்கினான்.
அவனை நேராக பார்த்தவள் கை நீட்டி அவனுக்கு பின்னால் காட்டினாள். என்னவென திரும்பி பார்த்தான் தர்மா. ட்ரெஸிங் டேபிள் கண்ணாடி, அதில் அவனது முழு உருவமும் தெரிந்தது.
அவள் சொல்ல வருவது புரிந்தும் புரி படாமலும் உறுதி படுத்திக் கொள்ள அவன் அவள் பக்கமாக திரும்ப, அவனுக்கு பக்கத்தில் நின்றிருந்தாள் கனி.
“கனி…” அதிர்ச்சியோடு அழைத்தான்.
“எப்பன்னு எல்லாம் எனக்கு தெரியாது மாமா. கல்யாணம் பத்தியெல்லாம் யோசிச்சா நீ மட்டும்தான் நினைவுக்கு வர்ற. வேற யாரோடவும் நான் எப்படி மாமா இருப்பேன்?” எனக் கேட்டாள்.
உச்ச கட்ட அதிர்வில் இருந்தான் தர்மா. துளி கூட இப்படியொன்றை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
“என்னை கல்யாணம் பண்ணிக்க மாமா” என வாய் விட்டு கேட்டு விட்டாள்.
தர்மாவுக்கு என்ன எதிர் வினையாற்ற என தெரியவில்லை. கனி சொல்லும் கண்ணோட்டத்தில் ஒரு நாளும் அவளை கண்டிராதவன், எப்படி இவளுள் இப்படி எண்ணம் உதித்தது என திகைத்து போயிருந்தான். நெஞ்சுக்குள் ஒரு பதை பதைப்பு.
“கண்டதையும் பேசாத, அதெல்லாம் சரிபடாது. எனக்கு வேலையிருக்கு நான் வர்றேன்” என்றவன் நிற்காமல் சென்று விட்டான்.
பேச வந்தவன் உடனே வெளியில் சென்று விட்டான், பேத்தி அழுது கொண்டிருக்கிறாள், என்ன சமாச்சாரம் என தெரியவில்லையே என பாட்டிக்கு பயமாகிப் போனது.
பேரனுக்கே அழைத்து கேட்டார்.
“பயப்படலாம் ஒன்னும் இல்லை, அவளுக்கு இப்போ கல்யாணம் வேணாமாம், அதான்” என சொல்லி சமாளித்தான் தர்மா. பாட்டி முழுதாக நம்பவில்லை என்ற போதும் பேத்தியின் உண்மை மனநிலையையும் அவரால் கணிக்க முடியவில்லை.
தன் மாமன் உடனே சமமதிக்க போவதில்லை என கனிக்கு நன்றாக தெரியும். அதை அவனே சொல்லும் போது தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்பாவின் கண்டிப்பில் பாட்டி மட்டுமே துணையாக ஆதரவாக இருக்க வளர்ந்தவள் கனி. இவள் அத்தையின் வீட்டுக்கு செல்லும் நேரமெல்லாம் நிதிலாவுடன்தான் கழியும், தர்மா அத்தனை பழக்கமில்லை.
ஆகவே தன் வீட்டுக்கே தர்மா வரவும் ஆரம்பத்தில் அவனது வரவு அவளிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
நாட்கள் செல்ல செல்ல அவனாகவேதான் கனியிடம் பழக ஆரம்பித்தான். மாமன் மகள் என வாஞ்சையாக அவன் பழக, அந்த வஞ்சிக்கு அவனது அன்பும் அக்கறையும் பாலையில் கிடைத்த உயிர் நீராகிப் போனது.
விடுதிக்கு சென்ற பிறகுதான் தனிமையை அதிகம் உணர ஆரம்பித்தாள். அம்மா இல்லையே என்ற ஏக்கமும் ஆட்டிப் படைத்தது. வீட்டுக்கே வந்து விடுகிறேன் என பாட்டியிடம் சொல்லி அழவும், சென்னைக்கு வந்து நின்றான் தர்மா.
கனியை சமாதானம் செய்து வெளியில் அழைத்து சென்று அவளை அங்கே இருக்க வைத்தான். முதல் வருடம் பயிலும் போது அடிக்கடி வருவான். அதன் பின் எப்போதாவது என்றாலும் அவளுக்கு தேவை எனும் போது சரியாக வந்து நிற்பான்.
என்னவென்றாலும் அவனிடமே சொல்லி பழகி விட்டாள் கனிஹா. அவளின் மனம் கோணாமல் அவனும் அவளுக்கான எல்லாவற்றையும் நடத்தி கொடுப்பான். அவனருகாமையில் மட்டுமே தான் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்து கொண்டாள்.
தர்மா காதல் தோல்வியில் திருமணத்தை வேண்டாம் என தவிர்த்து விட்டான். இரண்டு வருடங்களுக்கு முன்னரே கல்யாணம் செய்து கொள் என அவனை கட்டாயம் செய்தார் நம்பி. நீங்கள் வாழ்க்கை துணை இல்லாமல் தனியாக இருக்கும் போது என்னாலும் இருக்க முடியும் என சொல்லி விட்டான்.
யாருடைய வற்புறுத்தலும் அவனிடம் எடுபடவில்லை. பழைய காதலை மறக்க இவனுக்கு இன்னும் காலம் தேவை படுகிறது போல என நம்பியும் விட்டு விட்டார்.
ஆசை நிறைவேறாமல் மாமா வேதனை பட்டு கொண்டே இருக்கிறாரே, அவரை என்னால்தான் சரி செய்ய முடியும் என உறுதியாக நம்பினாள் கனிஹா.
தானும் நன்றாக இருக்க வேண்டும் மாமாவும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நாங்கள் இருவரும் வாழ்வில் இணைந்தால்தான் சாத்தியப்படும் என்றே நினைத்தாள். நாட்கள் போக போக தர்மாவுடன் சேர்த்து வாழப் போகும் வாழ்க்கை பற்றிய கனவுகளும் விரியத் தொடங்கி விட்டன.
ஆனால் தன் மனதை தர்மாவிடம் சொல்ல பயம், தயக்கம். மனதிற்குள்ளேயே வைத்திருந்தாள். இதற்கு மேலும் காலம் தாழ்த்த முடியாது என்பதால்தான் இன்று சொல்லி விட்டாள்.
மீண்டும் ஃபேக்டரி வந்து விட்டான் தர்மா. எதிலேயுமே கவனம் வைக்க முடியாமல் கனி சொன்ன விஷயம் பாடு படுத்திக் கொண்டிருந்தது. இரவு வீட்டுக்கு செல்லவும் தயக்கம், கனியை எப்படி எதிர்கொள்ள என்றே அவனுக்கு தெரியவில்லை.
ஆனால் போய்தானே ஆக வேண்டும், என்னவென மாமா கேட்டால் என்ன பதில் சொல்வான்?
நான்கு நாட்களாக கனியை தவிர்க்க என்றே காலையில் முன்நேரமாகவே கிளம்பி இரவில் தாமதமாக வீடு வந்து கொண்டிருந்தான். மனம் நிதானம் கொள்ளவும்தான் அவளிடம் இது பற்றி எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.
வீட்டிற்குள் வைத்து பேச வேண்டாம் என நினைத்து கனியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். ஒரே வீட்டில் இருந்தாலும் நான்கு நாட்களுக்கு பின் இன்றுதான் சந்திக்கிறார்கள்.
உற்சாகம் ஏதும் இல்லாமல் வாடிப் போய் காணப்பட்டாள் கனி. காதலின் உணர்வுகள், அது நிறைவேறாத போது ஏற்படுகிற துன்பம் என எல்லாம் அறிந்தவன் ஆகிற்றே தர்மா. எதற்காக இவளும் இப்படி வேதனையில் சிக்கிக் கொள்கிறாள் என அவளுக்காக கவலை கொண்டான்.
“உன் அத்தை சொன்ன மாதிரி ஏதாச்சும் மேல படிக்கிறியா கனி?” எனக் கேட்டு பேச்சை ஆரம்பித்தான்.
“சும்மா சும்மா என்னை வீட்டை விட்டு தொரத்தி விடுறதிலேயே குறியா இருக்காதீங்க, நான் இந்த ஊரை விட்டு, இந்த வீட்டை விட்டு எங்கேயும் போறதா இல்லை மாமா” என உறுதி நிறைந்த குரலில் சொன்னாள்.
என்னென்ன பேச வேண்டும் என நிறைய யோசித்துக் கொண்டுதான் வந்தான். ஆனால் இப்போதோ சின்ன பெண்ணை ஏமாற்றுவது போல எப்படி பேச என தடுமாறினான்.
“நான் சொன்னது யோசிச்சீங்களா மாமா?” என அவளே கேட்டாள்.
அது சரியாக வராது என ஐந்து நிமிடங்களுக்கு தம் கட்டி பேசினான். தன் நிலையில் அவளும் உறுதியாக நின்றாள்.
“புத்தி கெட்டு போச்சா உனக்கு?” என கோவமாக கேட்டான்.
கண்கள் கலங்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“உனக்கு விவரம் போதாது கனி, நான் காட்டுற அன்பை தப்பா எடுத்துக்கிட்ட போல, உன்னை அந்த மாதிரிலாம் நினைச்சதே இல்லை” என அவளுக்கு புரிய வைக்க நினைத்து சொன்னான்.
“உன்னை புரியாம எல்லாம் இல்லை மாமா, இது என் எண்ணம். நான் ஆசை பட்டத நடத்தி தர்றேன்னு நீயும் சொன்ன”
“நீ இப்படி கிறுக்கு தனமா ஆசை வச்சிருப்பேன்னு எனக்கு தெரியாதே” என வேகமாக சொன்னவன், “நல்லா யோசிச்சா இந்த எண்ணம் சரி கிடையாதுன்னு உனக்கும் புரியும் கனி. மாமா சொன்னா கேட்டுப்பதானே? இப்படிலாம் இனிமே பேசக்கூடாது, நீ இப்படி சொன்னது யாருக்கும் தெரிய வேணாம்” என நிதானமாக சொன்னான்.
“என் மனசு மாறாது மாமா”
“எனக்கு விருப்பம் இருக்க வேணாமா கனி?” கடுமையாக கேட்டான் தர்மா.
“என்னை பிடிக்காதா மாமா?” குரல் உடைய கேட்டாள்.
“அது வேற மாதிரி பிடித்தம் கனி. இப்ப மட்டுமில்லை எப்பவும் உன் மேல அன்பிருக்கும், உன்னை பிடிக்கும். ஆனா நீ நினைக்கிறது நடக்காது”
“அப்ப என்னை இப்படியே விட்ரு மாமா. மனசுல உன்னை வச்சு வாழ்ந்திட்டு இருக்கிற என்னை வேற வாழ்க்கை வாழ சொல்லியெல்லாம் கம்பெல் பண்ணக்கூடாது. எனக்கு கல்யாணம் வேணாம்”
“அதுசரி, கடைசி வரை ஒத்தையாவே இருப்பியா?”
“ஏன் நீ இல்லை?”
“நானும் நீயும் ஒன்னு கிடையாது”
“ஆனா எல்லாருக்கும் ஃபீலிங்ஸ் இருக்கும் மாமா. கட்டாய படுத்தி உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். உன்னை தவிர யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” என தன் மனதை அவனுக்கு துல்லியமாக விளக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
இப்படியான ஒரு சங்கடத்தில், அவஸ்தையில் சிக்கிக் கொள்வோம் என நினைத்திராத தர்மா, கனியின் மனதை எப்படி மாற்றுவது என தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.