சொர்க்கம் உன்னருகில் 3

     “ வேண்டுதலா? எப்போ எதுக்கு வச்சிங்க? ஜெய் கல்யாணம் நல்லபடியா நடக்கனுமுன்னு வேண்டுதல் வச்சிங்களா? “ என்ற ஜெய்யின் அண்ணன் விஜயனின் கேள்விக்கு

      “ஜெய் கல்யாணம் எப்படியும் நடந்துடுமுன்னுதான் எனக்கு தெரியுமே, அப்புறம் அதுக்கு எதுக்கு வேண்டுதல்? நான் உங்க கல்யாணத்துக்கு வச்ச வேண்டுதல். உங்க கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலிருந்து ஏதாவது ஒரு தடங்கல் வந்துகிட்டே இருந்தது. ஜோஸியகாரன் வேற குழந்தை பாக்கியம் லேட்டா தான் கிடைக்கும் அதனால குலதெய்வத்துக்கிட்ட வேண்டுதல் வைங்கன்னு சொன்னான். அதான் அபிஷேகம் பண்ணி அன்னதானம் செய்யறேன்னு வேண்டிக்கிட்டேன். அடுத்த வாரம் நேர்த்திகடன பண்ணிடலாம். “ என்றார் சுசிலா.

     விஜயன், “அம்மா எங்களுக்கு நேந்துகிட்டதை நாங்க செஞ்சாதான் சரி. சுஜி சம்பள பணத்துல பண்ணலாம் அப்படின்னு சொல்லறது தப்பு. என்னைக்கி செய்யலாம்ன்னு சொல்லுங்க நான் முன்பதிவு பண்ணி அட்வான்ஸ் கட்டிட்டு வரேன்” என்க

      “என்னடா குடுக்க மாட்டேன்னு புது மருமக சொல்லிட்டாளா? அவ வந்துதான் இத பண்ணணுமுன்னு எழுதி வைச்சிட்டான் அந்த ஆண்டவன். அன்னதானத்தை கீதா கையாலதான் கொடுக்கறேன்னு வேண்டியிருக்கேன். நாளைக்கு பணத்தை வாங்கி ஆகவேண்டியத பாரு. ஏம்மா சுஜி சீட்டுக்கு அஞ்சாயிரம் போக மீதி எவ்வளவு பணமிருக்கும்? கோவில் செலவுக்கு போதுமா?” என்று சுசிலா சுஜியை பார்க்க, சுஜியோ ஜெய்யை பார்த்துக்கொண்டே “ இன்னும் ஒரு அஞ்சு இருக்குங்க அத்தை “என்றாள்.

     சுஜி வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும் போதே சம்பளத்தை வங்கியில் வரவு வைக்கும் முறை வழக்கத்தில் இருந்தது. அவள் சம்பளத்தை அப்பாவிடம் கொடுக்க அவர் உன் அக்கவுண்ட்ல இருக்கட்டும். கல்யாணத்திற்கு நகை வாங்கும்போது எடுத்துக்கலாம் என்றவர் மறந்து விட்டார். கல்யாணத்திற்கு முன் சுஜி அதை குடுக்க நினைக்க அப்போதும் வைத்திரும்மா ஏதாவது சொத்து வாங்கும்போது அதையும் சேர்த்து பயன்படுத்திடலாம் என்று கூற அப்பணம் முழுவதும் அக்கவுண்ட்ல இருந்தது. அவள் சொன்ன அஞ்சு அஞ்சுலட்சம், சுசிலா புரிந்துகொண்டது அஞ்சாயிரம்.

     “அப்போ நாளைக்கு நீ அந்த பணம் பத்தாயிரத்தையும் எடுத்துக்கிட்டு வந்து எங்கிட்ட கொடு. “ என்ற சுசிலா “தினமும் காலையில் பஸ்ஸூக்கு எங்கிட்ட காசு வாங்கிக்க. கையில பணம் வச்சிருந்தா இவனுங்க எல்லாம் கண்டபடி செலவு செய்வானுங்க. அதுமாதிரி நீயும் செலவு பண்ணிடாம இருக்கனும். அதுக்குதான் நான் வாங்கி பீரோல வைக்கறேன். உனக்கு தேவையாயிருந்தா கீதாகிட்டதான்

சாவி இருக்கும். எதுக்கு பணம் வேணுமுன்னு சொல்லிட்டு பணம் வாங்கிக்கோ. “ என்றார்.

     “அத்த தினமும் காலையில நீங்க வேல பார்த்துட்டு இருக்கும்போது உங்கள டிஸ்டர்ப் பண்ண முடியாது. அதனால நான் ரெண்டாயிரம் எடுத்துட்டு மீதிய உங்ககிட்ட கொடுத்துடறேன்” என சுஜி சொல்ல, “அவளுக்கு ரெண்டாயிரம் செலவுக்கு கொடுத்தா எனக்கும் ரெண்டாயிரம் கொடுங்க. எனக்கும் செலவிருக்கும்” சத்தமாக கீதா சொல்ல

    உடனே விஜயன் “ சுஜி வேலைக்கு வெளியில போகுது. நீயே வீட்ல வெட்டி கதைபேசிக்கிட்டு இருக்கிற.உனக்கு என்ன செலவு? நீயும் வேலைக்கு போயி உன் சம்பளத்தை கொடு. அப்புறம் நீ கேட்டா ரெண்டாயிரம் என்ன அஞ்சாயிரம் தரேன்” என்க

     கீதா “ஒரு நாளைக்கு பஸ்ஸூக்கு முப்பத்தெட்டு ரூபாதான். இருபத்தஞ்சி நாள் பள்ளிக்கூடம் போக தொள்ளாயிரத்து ஐம்பது ரூபாதான். டீச்சரம்மா ரெண்டாயிரம் கேக்கறாங்க அது யாருக்கும் தெரியாது. நான் கேட்டா மட்டும் எங்கிட்ட ஆளாளுக்கு சண்டைக்கு வருவீங்க” என்க

    “தினமும் வெளியே போயிட்டு வரேன். வீட்டுல கவின், பவன் ரெண்டு பசங்க இருக்காங்க. கைய வீசிக்கிட்டா வரமுடியும்? பிஸ்கட்டோ சாக்லேட்டோ வாங்காம வர முடியாது. அதுக்குதான் நான் கேட்டேன். நீ யேன் பசங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வந்து குடுக்க கூடாது, அது தேவையில்லை அப்படின்னு நினைச்சிங்கன்னா,,, என்னோட இடத்துல நீங்க யாரும் இருந்திங்கனா அப்படி ஏதும் வாங்காம வருவீங்கன்னா எனக்கும் வேணாம். ஆனா நாளப்பின்ன மாசாமாசம் சம்பளம் வாங்கறா, யேன் பசங்களுக்கு, யேன் பேரப்பிள்ளைங்களுக்கு ஒன்னும் வாங்கி தரலன்னு பேச்சி வரக்கூடாது. அப்படி பேசமாட்டோம்முன்னு உறுதி கொடுக்க சொல்லுங்க மாமா “ என்றாள் சுஜி விஜயனிடம்.

     “சுஜி நீ செலவுக்கு எடுத்துக்கிட்டே குடுமா. சின்ன பசங்க இருக்கிற வீட்டுக்கு போகும் போது ஏதாவது வாங்கிக்கிட்டு போகணும் என்பதுகூட தெரியாதவங்களுக்கு என்ன சொல்லி புரியவைக்க? சரி நீ போய் வேலைய பாருமா” என்க சுஜி உள்ளே காய்ந்த துணிகளை மடிக்க சென்றாள்.

    சுசிலா “டேய் விஜி உனக்கென்ன தெரியும் நீ பஞ்சாயத்து பண்ண வந்துட்ட? இப்பவே புடிச்சாதான் இல்லை பயமில்லாம போயிடும். “என்க  கீதாவோ   “ எனக்கு முன்னாடியே தெரியும் இப்படித்தான் நடக்குமுன்னு. அவ பாட்டுக்கு பேக்கை மாட்டிக்கிட்டு கிளம்பி போயிடுவா. நா மட்டும் இங்கனவே கிடந்து வேலையெல்லாஞ் செய்யனும். அவ சம்பளமும் அவளுக்கு, இங்க வார வருமானத்திலும் அவளுக்கு பங்கு அழுவனும். அதுக்குதான் பத்தாவது படிச்ச யேன் சொந்தகாரி நர்மதாவை ஜெயனுக்கு கட்டலாம் ன்னு சொன்னேன் யாரு கேட்டா யேன் பேச்சை” என ஒப்பேரி வைக்க தொடங்கினாள்.

     “அவள கட்டியிருந்தா பத்து ஏக்கர் நிலமும் நூறு பவுனு நகையும் குடுக்கறதா சொன்னாங்களே. என்ன வீட்டோட மாப்பிளையா வரனுமுன்னு கேட்டாங்க. ஒத்த புள்ளைய வச்சிருக்கவுங்க கேக்கறதுதான. அப்படி அவன் போனா இந்த சொத்து முழுசும் எனக்கே வருமுன்னு கனவு கண்டேனே. இந்த மவராசிய பாத்துப்புட்டு கட்டுனா இவளதான் கட்டுவேன்னு யேன் கனவுல மண்ணள்ளி போட்டுட்டானே யேங் கொழுந்தன்”

    கீதாவின் குரல் வீடு முழுவதும் கேட்க,” கட்டி வைக்கிறத யாரு வேணாமுன்னு சொன்னது? நா என்ன ஓடியா வந்தேன்? ஒரு தடவைக்கு ஏழு தடவை நடையா நடந்து கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு என்னா பேச்சி இதுன்னு? “ கேட்க சுஜி விரும்பினாலும் ஜெய்யின் எண்ணம் தெரியாமல் அவள் ஏதும் பேசவில்லை.

 ஜெய்யும் சுசிலாவும் அவளை சமாதானப் படுத்தினர்.

     இரவு அவள் சாப்பிட வரவில்லை. சுசிலாவும் கீதாவும் கவனித்தாலும்  யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. தூங்க செல்லும்போது மீதமிருந்த சாதத்தில் நீரூற்றிய கீதா, “ அரிசி விக்கிற விலையில இப்படி வீண் பண்றாளே! அத்த இத காலையில அவளையே குடிக்க சொல்லுங்க. அப்பதான் இனிமே ஒழுங்கா இருப்பா” என்றாள்.

    சுசிலாவும் சரியென்க இருவரும் தூங்கச் சொல்ல, டீவீ பார்த்துக் கொண்டிருந்த விஜயனிடம் வந்த சுஜி “மாமா உங்க அக்கவுண்ட்……………. இந்த பேங்க்ல தான இருக்கு? அந்த அக்கவுண்ட் நம்பர் குடுங்க. நான் என் சம்பள பணத்தை அனுப்பிடுறேன். “ என்க அவன் அதை குறித்து கொடுக்க வாங்கிச் சென்றாள்.

      அறைக்குள் காத்திருந்த ஜெய் “என்ன தைரியம் இருந்தா எங்க அம்மாவை எதிர்த்து பேசுவ? இனிமேல் பேசிப்பாரு என்ன நடக்குதுன்னு. ஒழுங்கா இருந்தா இங்க இரு இல்லையின்னா போயிக்கிட்டேயிரு” என்க, சுஜியோ “எப்போ வக்கீல பாக்க போகலாம் சொல்லுங்க நான் ரெடி “ எனச் சொல்லி கட்டிலில் படுத்தாள்.

      அதிர்ச்சியில் ஆவென பார்த்த ஜெய், “சுஜி என்ன சொன்ன இப்போ? அப்போ எதாவது பிரச்சனை வந்தா என்ன விட்டு போயிடுவியா? “ என்க சுஜி

       “உங்களுக்கு உங்க அம்மா, அண்ணிக்கிட்ட சொல்லிட்டு பணம் வாங்கறது ஈசியா இருக்கலாம். என்னால சோப்பு, சீப்பு, ஷாம்பு, நாப்கின் எல்லாத்துக்கும் கணக்கு சொல்லி வாங்க முடியாது.  உங்க அண்ணி வில்லங்கமா ஏதாச்சும்  பேசினா நானும் பேசிடுவேன். நானா உங்க வீட்டுல யாரையும் படிக்க வேண்டாம்னு சொன்னேன்? படிப்பு ஏறல. பள்ளிக்கூடம் ஒழுங்கா போக முடியல. படிக்க துப்பில்ல வந்துட்டாங்க என்கிட்ட கணக்கு கேக்க. உங்க அண்ணி காட்டுல வேல செஞ்சி எனக்கு அழுவனுமுன்னு சொல்லறாங்க அப்ப நா கஷ்டப்பட்டு கத்தி பாடஞ்சொல்லிக்குடுத்து சம்பளம் வாங்கி உங்க அண்ணிக்கு அழுவனுமா? என்னை நீங்க படிக்க வைச்சிங்களா? வேலை வாங்கி தந்திங்களா? சம்பளம் மட்டும் பைசா கணக்கா கேக்கறீங்க? ஆள் கூலி இங்க அம்பது ரூபாய் தான். நானும் கணக்கு சொல்லவா? உங்க அம்மா, அண்ணி ரெண்டு பேரு நேரம் பாக்காம வேல செஞ்சா ரெண்டாளு வேல செய்யலாம். அப்பையும் ஆளுக்க நூறு ரூபாய் தான் கிடைக்கும். நானும் மூவாயிரம் கொடுத்தா போதுமில்ல. நேத்து யாரோ ஒரு அம்மா சொல்லுது பெரியவன் வீட்டுல இருக்கான். சின்னவன் வீட்டுல ரெண்டு பேரும் வேலக்கி போறாங்க. அதனால பெரியவன கொஞ்சம் கை கொடுத்து தூக்கிவிடுன்னு,,. இங்க பாருங்க இனிமேல் எட்டாயிரத்துக்கு மேல ஒத்த பைசா தரமாட்டேன். இப்பவே இத்தனை நாடகம். உங்கள, உங்க வீட்டாளுங்கள நம்பி எல்லாம் என்னால முழு சம்பளத்தையும் கொடுத்துட்டு நாளைக்கு ஒரு சண்டைன்னா நடுரோட்டுல நிக்க முடியாது. கொண்டவன் துணையிருந்தால் கூரையேறி கோழிபிடிக்கலாம். இங்க பணத்தை எண்ணதான் ஆளிருக்கு. “ என்றவள்

      “உங்க அண்ணி பாத்த பொண்ணையே கட்டியிருக்கலாமில்ல. நானா உங்கள கட்டிக்க ஒத்தகாலுல நின்னேன். ச்சே என்ன வாழ்க்கையிது? இந்த இம்சைக்கா எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கறாங்க? “

      ஜெய் பேச வார்த்தைகள் இன்றி மௌனமாய் படுத்தான். சுஜியின் வாதத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முயற்சித்தான். முடிந்ததா அவனால்?

     ஒவ்வொரு பொருளையும் சுஜி கேட்டு கேட்டு வாங்குவாளா? சாத்தியமா அது?  சம்பளத்தை கேட்ட கீதா நகைகளை விடுவாளா? பொறுத்திருந்து பார்ப்போம்.