“சஞ்சய், என்ன பண்ண?” சந்திரசேகர் சினமுடன் கேட்டார்.
சார்…அவன் தயங்கி அவனறையை பார்த்தான்.
பிரியா வெளிய வாம்மா. சஞ்சய் எங்கும் போக மாட்டான். அந்த ஹர்சா நம்ம சென்னைக்கு ஏற்கனவே கிளம்பீட்டான்..
“சார்…” திகைத்தான் சஞ்சய்.
ஆமா சஞ்சய், நாங்க அவனிடம் பேசினோம். அவன் சேதுவையும் சமரனையும் இங்கே அழைச்சிட்டு வாரானாம். அவனை டிராக் பண்ணீட்டு தான் இருக்காங்க நம்ம டிப்பார்ட்மென்ட் ஆளுங்க..
சார், எங்க திட்டமே ஹர்சாவை ஆதாரத்துடன் பிடிக்க தான். அவன் இங்கே வந்தால் காரியமே கெட்ரும்.
“சஞ்சய், உன்னோட ஆள் ஜானி அங்க தான் இருக்கான். எவிடன்ஸ் கலெக்ட் பண்ணீட்டு இருக்கான். அவனை பிடிச்சிறலாம்..” என்றான் ரக்சன்.
அதுக்குள்ள எப்படி சார்?
அவன் உன்னை தான் மீட் பண்ணனும்னு சொன்னான். அதான் அவன் வரும் ஏற்பாட்டை நாங்களே செய்தோம்.
“என்ன…ஓ காட்!” சத்தமிட்டான் சஞ்சய்.
ராஜன் மாதிரி அவன் சாதாரண ஆள் இல்லை. அவனை சமாளிப்பது எளிதில்லை. அதான் ஆட்களை அனுப்பினேன். சஞ்சய் அவன் நெஞ்சை சுட்டிக்காட்டி, இந்த காயம் மட்டும் இல்லைன்னா நானே அவனை பிடிக்க கிளம்பி இருப்பேன்.
“வரலாற்றிலே முதல் முறையாக கொலைகாரனுக்கு உதவும் போலீஸ் டீம் நீங்களாக தான் இருப்பீங்க” என்றான் ஹரிஹரன் எகத்தாளமாக..
சந்திரசேகர் அவனை முறைத்தார்.
பிரியசகி கதவை திறக்க, சஞ்சய் அவளை கண்டு என்ன செய்வதென புரியாது விழித்தான்.
சஞ்சய், நீ வீட்ல இரு. நான் அழைக்கும் போது மட்டும் வா. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கிறேன் என்று சந்திரசேகர் பிரியசகியையும் ராக்கியையும் பார்த்தார்.
“இவனை அறைக்குள்ளவே பூட்டி வைம்மா. நாங்க வாரோம்” அவர் நகர,
“சார் அவன் வருவது டேஞ்சர்” சஞ்சய் கூற,
“நான் பார்த்துக்கிறேன் சஞ்சய். நீ இப்பவாது உன்னோட குடும்பத்தை கவனி” என்று பெரியவர்களை கண்டு தலையசைத்து தந்தையும் மகனும் விடை பெற்று சென்றனர்.
சஞ்சய்கு மனம் சரியில்லாது போக, ஜானியை அழைத்தான்.
அழைப்பை ஏற்ற ஜானி, சார் நம்முடைய திட்டப்படி கடத்திய பெண்களை காப்பாற்ற இங்கே போலீஸை பார்க்க சென்றேன். பெண்கள் இருக்கும் வண்டியில் ஏற்கனவே ட்ராக் பிக்ஸ் பண்ணீட்டேன். இங்க சர்ச் பண்ண தொடங்கிட்டாங்க.. சேதுவும் சமரனும் ஹர்சவர்தன் கிட்ட மாட்டிக்கிட்டாங்க. அவன் சென்னை தான் கிளம்புறான்னு நினைக்கிறேன்.
“ஹம்ம்..ஆமா சேது, அந்த ஹர்சா கமிஷ்னர் சார்கிட்ட ஏதோ பேசி அவர் மூலமாகவே சென்னை வர்றான். எந்த திட்டமும் இல்லாமல் அவன் எதுவும் செய்ய வாய்ப்பில்லை. கண்டிப்பா ஏதோ செய்யப் போகிறான். அதற்குள் அவன் சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரத்தையும் கலெக்ட் செய்யணும். அவன் சென்னை வரும் இதான் சரியான நேரம் ..நீ அங்கேயே இரு. ஒன்றையும் விடக் கூடாது…” சட்டமாக சோபாவில் கால் மீது போட்டு அமர்ந்து சஞ்சய் பேசிக் கொண்டிருந்தான்.
தள்ளி நின்று அனைவரும் வேடிக்கை பார்க்க, அவன் முடிக்க காத்திருந்தாள் பிரியசகி.
பேசி சஞ்சய் அழைப்பை வைக்கவும் மார்புக்கு குறுக்கே கையை கட்டி அவன் முன் நின்றாள் அவனது சகி.
“சகி கோபத்துல தள்ளி விட்டுட்டேன். சாரி” பாவம் போல முகத்தை வைத்தான்.
“நீங்க வெளிய போகவே கூடாது. பிராமிஸ் பண்ணுங்க…” தீர்க்கமான பார்வையுடன் அவனை நோக்கினாள்.
“மாமா, உங்களுக்கு இன்னும் உடம்பு சரியாகலை. இந்த நேரத்தில் இதெல்லாம் அவசியமா?” நவீன் சினமுடன் கேட்டான்.
“நவீன், விசயத்தின் தீவிரம் புரியாமல் பேசுறீங்க” சஞ்சய் தந்தையை பார்த்தான். அவர் ஏதும் பேசாமல் அமர்ந்து விட்டார்.
அப்பா…
“எனக்கு எம் புள்ள வேணும்..” என்று ஒரேதாய் முடித்து விட்டார்..
“போகாமல் இருக்க முயற்சி செய்கிறேன்” சஞ்சய் அவர்களை நகர்த்தி அறைக்கு சென்றான்.
சற்று நேரத்தில் சஞ்சய் பிரியசகியை தேடி வந்தான். அவள் ராக்கிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
சகி, நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வாரேன்…
தீயாய் அவனை வெறித்து பதில் கூறாமல் அவள் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தாள்.
சகி, ஹரி ராக்கியை நம்ம பசங்களாக தத்து எடுக்க பார்மாலிட்டிஸ் இருக்கு. அதை தயார் செய்துட்டு வாரேன்..
“சஞ்சய் அதுக்காக நீ போக வேண்டாம். நான் அதற்காக சொல்லி வச்சிட்டேன். தயாராகிட்டு இருக்கு. நாளை வர சொல்லி இருக்காங்க” நாகேந்திரன் கூற, சுவர்ணலதா அவரை வெறித்தார்.
“நீ வெளியே செல்லும் எந்த அவசியமும் இருக்காது. ஒழுங்கா வீட்ல இரு. முன்னாடி நாங்க மட்டும் தான். இப்ப பிரியா, பசங்க, நவீன், இந்து எல்லாரும் இருக்காங்க.. கேளு….” மகனை சத்தமிட்டு அதட்டினார்.
சஞ்சய் அமைதியாக அமர்ந்தான்.
“மாமா…” ராக்கி அழைக்க, அவனருகே சஞ்சய் செல்ல, படாரென தட்டை கீழே வைத்து “ஹரி மீதிய உன்னோட தம்பிக்கு ஊட்டி விடு” என்று முறைப்புடன் கூறி பிரியசகி அறைக்கு செல்ல, சஞ்சயும் அவள் பின்னாலேயே சென்றான்.
“சகி..” அவளருகே செல்ல, பிரியசகி படுத்து விட்டாள்.
அவன் யாரையும் எதுவும் செய்ய தயங்க மாட்டான்…
அமைதியாகவே இருந்தாள்.
“நான் கேட்பதற்கு பதில் கூறு சகி?” அவளை தன்பக்கம் திருப்பி, “நாம் ஓய்வெடுக்கும் நேரம் என்னையும் சேர்த்து நம்ம குடும்பத்தையும் அவன் ஏதாவது செய்து விட்டால் என்ன செய்ய முடியும்?” கோபமாக அவளை பார்த்தான்..
பதில் கூற முடியாமல் இருக்க,
அவன் எத்தனை பொண்ணுங்களை இதுவரை நம் நாட்டிலிருந்து கடத்தி வித்துருக்கான் தெரியுமா? அதில் சிறுவ சிறுமிகளும் அடக்கம்.
சஞ்சய்…
ஆமா சகி, ராஜன் உள்ளுறுப்பை கடத்தி பணம் சம்பாதித்தான். ஆனால் அவர் மகன் பெண்கள், குழந்தைகளை கடத்துவது. கஞ்சா, போதை மருந்து சப்ளை பண்ணீட்டு இருக்கான்.
இவன் மாட்ட மாட்டானா? என்று இங்கிலாந்து அரசும் எதிர்பார்த்து காத்திருக்கு. எல்லா பக்கமும் ஆட்களை வைத்து காய் நகர்த்தி கொண்டிருக்கிறான். எதிர்த்து யார் கேட்டாலும் பாரபட்சம் பார்க்காது கொன்றுவான்..
“இப்ப என்னோட ஆள் சேது, சமரசனும் அவங்கிட்ட மாட்டிட்டு இருக்காங்க. நான் எப்படி சும்மா இருப்பது? சொல்லு? சமரனுக்கு பத்து மாத குழந்தை இருக்கு” சஞ்சய் கூற, பிரியசகிக்கு விழிகள் கலங்கியது.
உங்களுக்கு ஏதும் ஆகிடுமோன்னு பயமா இருக்கு சஞ்சய். இப்ப நீங்க வெட்டு பட்டு கட்டோட இருக்கீங்க. உங்களால சமாளிக்க முடியலைன்னா…நானும்..
அவள் வாயை மூடி, “என்னை அவ்வளவு சாதாரணமா அவனால தொட முடியாது சகி. என்னோட பயம். என்னுடையவர்கள் தான்” அவளை கட்டிக் கொண்டான்.
“சஞ்சய்…” கண்ணீர் வழிந்தது.
சகி, நீ தான் அம்மா, அப்பாவுக்கு தைரியம் சொல்லணும். இப்படி அழுதா நான் எப்படி எதையும் எதிர்கொள்ள முடியும்?
அப்படின்னா இப்ப என்ன பண்ணப் போறீங்க?
“அவனை மீட் பண்ணனும்…” பிரியசகி கண்ணீருடன் சஞ்சயை மேலும் இறுக கட்டிக் கொள்ள,
சகி…லைட்டா வலிக்குது. நகரேன்..
சாரி சாரி சஞ்சய்..
அவன் வந்தவுடன் மீட் பண்ணீட்டு வாரேன் என கதவை திறந்தான். பிரியசகியின் மூலம் அனைவரிடமும் சஞ்சய் பேச, பெரியவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் சஞ்சய்கு வேறு வழியில்லை..
கமிஷ்னரிடம் சஞ்சய் பேச, ஹர்சவர்தன் இரவு தான் வருவான் சஞ்சய். நீ ஓய்வெடு என கூற, இரவு செல்ல வேண்டும் என கூறி அறைக்கு சென்று விட்டான்.
கதிரவன் தன் காதல் மனைவியிடம் சேர தயாராகும் நேரம் ரக்சன் அவன் வீட்டிற்கு வந்தான்.
அலைபேசி அழைக்க, சஞ்சய் எண்ணை பார்த்து சலித்துக் கொண்டவன்…என்னடா சஞ்சய் உனக்கு பிரச்சனை? பிரியா எங்க?
சஞ்சய் மௌனமாகி விட்டான்.
என்னடா பேச்சையே காணோம்…
ஒன்றுமில்லைடா..
பிரியாகிட்ட போனை கொடு என்று ரக்சன் கூற சஞ்சயும் கொடுத்தான்.
பிரியா, நாம தப்பு பண்ணீட்டோம். இப்ப இவனை அடைக்க நினைச்சிருக்க கூடாது. வெட்டு வாங்கி ஹாஸ்பிட்டல்ல சேர்ந்தான்ல அப்பவே சஞ்சயை அடைச்சி வச்சிருக்கணும்…
அப்பக்கம் அமைதி நிலவ, பிரியா…லைன்ல இருக்கியா?
ம்ம்! குரலில் நடுக்கம் தெரிய…
அழுறியா?
சத்தமில்லாது போக ரக்சனும் அமைதியாகி விட்டான்.
“சரி. அவன் வரவும் கால் பண்ணு. நான் உன்னை அழைக்கலை…” சஞ்சய் அழைப்பை துண்டிக்கப் போக…
டேய் ரோசக்காரா…பிரியா எதுக்கு அழுறா?
எனக்கு எதுவும் ஆகிடும்னு பயப்படுறா. முதல்ல சரின்னு ஒத்துக்கிட்டா. நேரம் ஆக ஆக பயப்படுறா..
பயப்படாம என்ன செய்வா? ராஜன் மகன் பிரச்சனையை எதுக்கு இப்ப இழுத்து வச்ச? உனக்கு உடல் சரியாகவும் பார்க்க வேண்டியது தான? ஆளுங்கள இங்கிலாந்து அனுப்பி இப்ப பாரு அவனுக சிக்கி அவனே இங்க வாரான்…எனக்கும் பதட்டமா தான் இருக்கு..
இப்பவே அப்பனோடு சேர்த்து இவனையும் பிடித்தால் தான் உண்டு இல்லை அவன் பக்கம் கூட நெருங்க முடியாதவாறு அவன் ஏற்பாடு செஞ்சுப்பான்..
அதுக்கு இதுவா நேரம்? எனக்கும் டென்சனா இருக்குடா..
அப்ப வராத…சஞ்சய் அழைப்பை துண்டிக்க, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் ரக்சன்.
சந்திரசேகருக்கு அழைப்பு வர, ரக்சனும் அவரும் கிளம்பினார்கள்.
சென்னை விமானநிலையத்தில் சில ஃபாரினர் மற்றும் பல காயங்களுடன் சேது மற்றும் சமரனுடன் சென்னைக்கு அடியெடுத்து வைத்தான் ஹர்சவர்தன். கிளம்பியதிலிருந்து அவன் கைபேசியை உபயோகிக்கவில்லை இல்லை இல்லை அதற்கு பிளைட்டில் அனுமதிக்கவில்லை. அதனால் தற்பொழுது அவன் கைபேசியை எடுக்க, அங்கு வந்த சில போலீஸார்கள் அவன் கைபேசியை பறிக்க, உக்கிரமாக அவர்களை வெறித்தான்.
சஞ்சயை திட்டி சதீஸ் அவர் மனைவியிடம் பேச அவரோ கணவனென்றும் பாராது…அதுவும் போலீஸ்காரனென்றும் பாராது பளாரென அறை விட்டிருந்தார். அவர் மனைவியின் கழுத்தை பற்ற, அவரை ஆக்ரோசமாக தள்ளிய சதீஸ் மனைவி கதறி அழுதார்.
பதறி மனைவியிடம் சென்றார் சதீஸ்..
என் மானத்தையும் நம் குழந்தையையும் காப்பாற்றிய கடவுள் மாமா அவரு. அவரை பத்தி தப்பு தப்பா பேசாதீங்க..
என்னடி சொல்ற?
ஆமா மாமா, இரவு என் அம்மா வீட்டிலிருந்து நம் வீட்டிற்கு வரும் போதும் சிலர் என்னையும் நம் குழந்தையையும்…என அன்றைய தாக்கத்தில் சதீஸ் மார்பில் புதைந்து அழுதார்.
ஏன்டி, எங்கிட்ட சொல்லலை?
சார் தான், நீங்க வருத்தப்படுவீங்கன்னு சொல்ல வேண்டாம்னு சொன்னார்.
சதீஸ் அன்றிலிருந்து சஞ்சய்கு உதவியாக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்திருந்தார். இப்பொழுதும் போலீஸ் ஆடையில்லாது மப்டியில் சஞ்சய்காக உதவ தன் ஆட்களுடன் வந்திருந்தார்.
ஹர்சனையும் அவன் ஆட்கள் மற்றும் அவனிடம் பிடிப்பட்ட சஞ்சய் ஆட்களையும் தனித்த ஓரிடத்திற்கு அழைத்து சென்றார் இன்ஸ்பெக்டர் சதீஸ். ஒரு வார்த்தை கூட ஹர்சனிடம் பேசவில்லை. அவன் கேள்விக்கு பதிலளிக்கவும் இல்லை..
இவர்கள் வரவும் சஞ்சய், ரக்சன், சந்திரசேகரும் அவ்விடம் வந்தனர்.
அவ்வீட்டிற்குள் வந்தவுடன் சஞ்சய் தெனாவட்டாக நாற்காலியை இழுத்து ஹர்சனை பார்த்தவாறு அமர்ந்தான். அவன் பார்வையில் ஹர்சாவிற்கு புன்னகை அரும்பியது.
ம்ம்!!!! டாட் சொல்லி இருந்தார் சஞ்சய் பற்றி…சரியா தான் இருக்க? அவனும் நாற்காலியை இழுத்து அமர முனைய, பட்டென அவனது நாற்காலியை எத்தி தள்ளி அமைதியாக அவனிருக்கையில் அமர்ந்தான் சஞ்சய்.
புருவம் உயர முறைப்புடன் ஹர்சவர்தன் சஞ்சயை பார்க்க, சேது, சமரனை பார்த்து அவர்களிடம் கண்காட்ட, அவர்கள் சஞ்சயை நெருங்க ஹர்சவர்தனின் ஆட்கள் அவர்களை செல்ல விடாமல் தடுத்தனர்.
பதில் அளிக்காமல் அவனது பேண்டு பாக்கெட்டில் கை விட்டவாறு, இவனை சும்மா பார்க்க வருவேன்னு நினைச்சீங்களா கமிஷ்னர் சார்? என்று யாரும் எதிர்பார்க்காத நேரம் துப்பாக்கியை எடுத்து சந்திரசேகரனை சுட ரக்சன் பதறி விட்டான்.
டாட்…அவன் சந்திரசேகரனிடம் செல்ல, அவரின் தோள்ப்பட்டையில் குண்டு உரசி சென்றது.
சீற்றமுடன் எழுந்த சஞ்சய் பாரபட்சம் பார்க்காமல் சேது, சமரன் அருகே இருந்த ஹர்சாவின் ஆட்கள் ஐவரை நெற்றிப் பொட்டில் பட்டுபட்டென சுட்டு தள்ளினான். குறி தப்பாமல் தோட்டா துளைத்து கீழே சரிந்தனர் அவர்கள்..
ஏய்ய்ய்….ஹர்சவர்தன் சத்தமிட,
“யார் மேல கை வைக்கிற? அவர் என்னோட இன்னொரு தந்தை” கர்ஜித்தான் சஞ்சய்.
சதீஸ்…சஞ்சய் சத்தமிட,
எஸ் சார் என்று சேது மற்றும் சமரனையும் அவன் ஆட்களுடன் அழைத்துவெளியேறினான். செல்லும் முன் ஹர்சவர்தனின் கைபேசியை சதீஸ் கொடுத்து அவனை முறைத்து சந்திரசேகரனையும் அழைத்து சென்றான்.
சஞ்சயை குரூரமாக பார்த்துக் கொண்டே பேசியவன் கடுப்பில் அக்கைபேசியை விட்டெறிந்தான். அது சில்லுசில்லாய் நொருங்கிப் போனது..
என்ன ஹர்சா? உன்னோட போதை பொருட்கள் கடலில் மூழ்கிடுச்சாமே! அப்புறம் நீங்க கடல் தாண்டி அனுப்ப வேண்டிய பெண்களும், குழந்தைகளும் தப்பிச்சாட்டாங்களாமே! உன்னோட எல்லா தொழிலும் சீஸ் பண்ணீட்டாங்க. உன்னோட போதை மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை இழுத்து மூடிட்டாங்களாமே! அச்சோ! நீ இப்ப வெறும் ஹர்சவர்தன் தானாமே! நக்கலாக சஞ்சய் கேட்க, சஞ்சயை அவன் அடிக்க, இருவருக்கும் சண்டை ஆரம்பமானது.
ஜானியை வைத்து சஞ்சய் ஹர்சவர்தனின் அனைத்து தொழிலுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தான். ஹர்சவர்தனை தேடிக் கொண்டிருந்த போலீஸாருக்கும் அவன் தமிழ்நாட்டில் இருப்பது தெரிய அவர்கள் இவர்களுடன் தொடர்பு கொள்ள, சிலர் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
நன்றாக சென்று கொண்டிருந்த சண்டையில் சஞ்சயின் அடிப்பட்ட மார்பில் அவன் அடிக்க வலி தாங்க முடியாமல் கத்தியவாறு கீழே விழுந்தான் சஞ்சய்.
சஞ்சய் சஞ்சய்…ரக்சன் பதறி அவனை கண்டு ஹர்சவர்தனுடன் அவன் களத்தில் இறங்க, அவனை அசால்ட்டாக சமாளித்த ஹர்சவர்தனின் முரட்டுத்தனமான அடியில் ரக்சனுக்கு இரத்தம் வழிய அடிபட, கடைசியில் ஒரே தள்ளாக ரக்சனை தள்ளி விட்டு ஹர்சவர்தன் அவன் ஆட்கள் இருவருடன் தப்பி ஓடினான்.
“ரக்சா…அவனை பிடி…” சஞ்சய் வலியுடன் கத்திக் கொண்டு எழ, ரக்சன் மயங்கி இருந்தான்.
ரக்சா…ரக்சா…சஞ்சய் பதறி அழைக்க, அவன் எழவில்லை எனவும் பக்கத்து ஸ்டேசன் ஆட்களை அவ்விடம் வர வைத்து ரக்சனை மருத்துவமனையில் சேர்க்க கூறி அவனை தேடி கிளம்பினான்.
சந்திரசேகர், ரக்சன், சேது, சமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சஞ்சய்காக வீட்டிற்கு வெளியே காத்திருந்த பிரியசகி இடுப்பில் ராக்கியும், அருகே ஹரியும் இருந்தனர். திடீரென நால்வர் அங்கு வந்து ஹரியை கட்டையால் மண்டையில் அடித்து பிரியசகி மூக்கில் கைக்குட்டையை அழுத்தி கத்தும் ராக்கியுடன் அவர்களை வேனில் ஏற்ற, சத்தம் கேட்டு வீட்டினர் வெளியே வந்தனர்.
டேய்ய்ய்…நவீன் அவர்கள் பின் ஓட, அதற்குள் மூவரையும் கடத்தி சென்றிருந்தனர். நாகேந்திரன் உடனே தன் மகனை அழைத்து விசயத்தை கூற, நவீன் இனியவனை அழைத்து விட்டான்.
சஞ்சய் தந்தையிடம் பேசியவன் “ஹர்சா…” சத்தமாக கத்தினான். விரைந்து காரை எடுத்து ஓட்டிக் கொண்டே அவன் ஆபிஸ் ஆட்களை அழைத்து அவனை தேட சொன்னான்.
சஞ்சய் கூறிய பாதையின் இடையே செல்லும் வேனை சிசிடிவியில் தேடினார்கள். சில போலீஸார்கள் தேட, சார்…என்று எண் உள்ள வேன் நின்ற இடத்தை கூறினார் ஒருவர்.
வேகமாக காரை திருப்பி சஞ்சய் அவ்விடம் செல்ல, போலீஸார் அனைவருக்கும் தகவல் பகிரப்பட்டு இங்கிலாந்து அரசும் அவ்விடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஹரியை மயக்க நிலையில் கட்டிப் போட்டிருக்க ராக்கி வீல்லென கத்திக் கொண்டிருந்தான். பிரியசகி மயக்கத்தில் படுக்கையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தாள்.
இமைகளை பிரித்த பிரியசகி இருக்குமிடம் அறியாமல் தாங்கள் கடத்தப்பட்டது நினைவிற்கு வர ராக்கியின் சத்தம் கேட்டது.
கை கால்களை அசைக்க முயன்று தோற்றவளாக, ராக்கி ராக்கி….கத்தினாள். ஹரியும் விழித்தான்.