“ஏன் திரும்பத் திரும்ப அதையே கேட்குறீங்க! கண்டிப்பா போகனும்” சற்று கோபமாக உரைத்தவாறு அவனருகில் அமர்ந்தாள்.
“சரி நாளைக்கு போகலாம். ஆனா அவங்க உன்னை ஏதாவது சொன்னாங்கனா நான் கண்டிப்பா திட்டிடுவேன். அப்புறம் என் மேல கோவிச்சிக்கக் கூடாது” என்றவனாய் தனது வேலையைத் தொடர்ந்தான்.
‘அய்யோ நாளைக்கு ஒரு கலவரம் நடக்கும் போலயே! எங்கம்மா என்னிக்கு வாயை வச்சிட்டு சும்மா இருந்தாங்க’ என்று மனதோடு நினைத்தவளாய் படுத்துக் கொண்டாள்.
வேலையை முடித்து விட்டு அவளருகில் படுத்தவனாய், “நீ தானே உங்க அம்மாகிட்ட நீங்களா கூப்பிடாம இந்த வீட்டு வாசப்படிய மிதிக்க மாட்டேன்னு சொன்ன! இப்ப நீயே ஏன் போகனும்னு சொல்ற?” எனக் கேட்டான்.
“வீட்டை விட்டு வந்து இப்படி கல்யாணம் நடந்ததுல ஒரு மாதிரி கில்டி ஃபீலாவே இருக்கு சக்தி. அப்ப அவங்க உங்களை பேசின கோவத்துல சொல்லிட்டேன். ரிசப்ஷனுக்கும் அவங்க வராம இருந்துட்டாங்கனா இந்த கில்டி ஃபீல் அதிகமாகிடும் சக்தி. என்ன இருந்தாலும் அவங்க என் அம்மா தானே! திட்டினாலும் நான் வாங்கிக்கிறேன். நீங்க அமைதியா இருந்தா போதும்ங்க எனக்கு” என்றவளாய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அவளை அணைத்தவனாய், “ஹ்ம்ம் அப்ப மணிகண்டனையும் நாளைக்கு வர சொல்லுவோம்” என்றான்.
எதுக்கு என்பது போல் அவனை அவள் நிமிர்ந்து பார்க்க, “எதுக்குன்னு நாளைக்கு தெரியும்” என்றவனாய் அவளுள் புதைந்தான்.
மறுநாள் மாலை வேளையில் மணிகண்டன் எதிர்வீட்டு வாசலில் வந்து நிற்கவும், இளவஞ்சியும் சக்தீஸ்வரனும் மணிகண்டனிடம் பேசியவாறு எதிர்வீட்டு உள்ளே நுழைந்தனர்.
மங்கை அவர்களை வரவேற்று உள்ளே அமர வைத்தவளாய், “அம்மா இப்ப வந்துடுவாங்க” என்றாள்.
வீட்டின் வாசலிலேயே வண்டியைப் பார்த்து விட்டு யோசனையுடன் உள்ளே வந்த வசந்தா, இவர்களைப் பார்த்ததும் கோபம் கொண்டவராய், “யாரைக் கேட்டு இந்த ஓடுகாலியை வீட்டுக்குள்ள விட்ட நீ?” என்று மங்கையிடம் பொங்கினார்.
“அம்மா” என்று இளவஞ்சியும், “அத்த” என்று சக்தீஸ்வரனும் கோபமாய் கத்த, “நான் சொல்றதுக்கு முன்னாடி நீங்களே வீட்டை விட்டு போனா நல்லா இருக்கும்” என்று கத்தினார் வசந்தா.
சக்தீஸ்வரன் பல்லைக் கடித்தவாறு இளவஞ்சியைப் பார்க்க, கண்களைச் சுருக்கி கெஞ்சும் விதமாக சக்தியைப் பார்த்து வைத்தாள் இளவஞ்சி.
அச்சமயம் உள்ளே வந்த அவளின் தம்பி திருச்செல்வம், “எதுக்குமா கத்திட்டு கிடக்க! அக்கா என்ன சொல்லுதுனு கேட்டுட்டு பேசு” என்றவனாய், பேசுமாறு அவர்களிடம் கண் காண்பித்தான்.
காலையிலேயே மணிகண்டன், மங்கை மற்றும் திருச்செல்வத்தையும் ஒரு பொது இடத்திற்கு வர வைத்து இளவஞ்சியைப் பேச வைத்திருந்தான் சக்தீஸ்வரன்.
“இந்த வீட்டை உன் பேருல மாத்துறது பத்தி பேச தான்மா வந்திருக்கோம்” என்றதும் சற்று அமைதியானவராய் சமையலறைக்குச் சென்று தண்ணீர் அருந்தி விட்டு வந்து அமர்ந்தார்.
“நானும் அக்காவும் தம்பியும் சேர்ந்து இந்த வீட்டை வாங்குறதுக்கு மாசாமாசம் மணிகண்டனுக்குத் தவணை முறையில பணம் கொடுக்கிறதா பேசியிருக்கோம். அவங்க உன் பேருல பத்திரப்பதிவு செஞ்சி இந்தத் தவணை முறை பத்தி எழுதி கையெழுத்து வாங்கிப்பாங்க. நாம கட்டுற பணத்துக்கும் அத்தாட்சி வச்சி தான் செய்ய போறோம்” என்றாள் இளவஞ்சி.
அதன் பிறகு வசந்தா கோபமாக பேசவில்லை என்றாலும் அமைதியாக அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டார்.
திருச்செல்வனிடம் சென்றவர், “என்னமோ தம்பி உன் விருப்பம் போல செஞ்சிக்கோடா” என்றவாறு உள்ளே சென்று விட்டார் வசந்தா.
“ஒரு முக்கியமான விஷயம்!” என்ற சக்தீஸ்வரன் மேலும் தொடர்ந்தவனாய்,
“இப்ப மூனு பேரும் சமமா பணம் கட்டுறதா ஒத்துக்கிட்டு இருக்கீங்க. அதனால் உங்கம்மா காலத்துக்குப் பிறகு இந்தச் சொத்து மூனு பங்காகத் தான் பிரிக்கனும். இதையும் பத்திரத்துல தெளிவா போட்டுடனும்னு சொல்லிக்கிறேன். ஏன்னா நாளைப்பின்ன என் பொண்டாட்டியை யாரும் ஏமாத்திடக் கூடாது பாருங்க” என்றவனை,
‘என்ன பேச்சு இது’ என்று பல்லைக் கடித்தவாறு முறைத்தாள் இளவஞ்சி.
“எனக்கு உன் தம்பி மேலலாம் நம்பிக்கை இல்ல! பொண்ணுங்களுக்கு நான் ஏன் சொத்துத் தரனும்னு கேட்பான். உங்கம்மாவே என் காலத்துக்குப் பிறகு என் பையனுக்குத் தான் இந்த வீடு போகனும்னு எழுதி வச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை. பாசம்ன்ற பேர்ல இவங்ககிட்ட நீ ஏமாந்து நின்னுட கூடாதேன்ற பயம் தான் எனக்கு!” என்று சற்றுச் சத்தமாகவே அனைவருக்கும் கேட்கும் விதத்தில் இளவஞ்சியின் காதோடு உரைத்தவன்,
“உன் வீட்டுக்கு நான் கறார் மாப்பிள்ளையா இருக்கிறது தான் சரி” என்பதை அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் உரைத்தான்.
“அப்புறம் சரி சமமாக பணம் கொடுக்கிறதா சொல்லிருக்கனால, ஏதாவது ஒன்னு இரண்டு மாசம் என்னால் கட்ட முடியலை, என் சார்பாக இப்ப நீ கொடுத்திடுனுலாம் என் பொண்டாட்டிக்கிட்ட யாரும் வந்து நிக்க கூடாதுனும் சொல்லிக்கிறேன். அவளோட பணத்தை மட்டும் தான் அவ கட்டுவா” என்றான் சக்தீஸ்வரன்.
அதற்கும் அவனை முறைத்து வைத்தாள் இளவஞ்சி.
மங்கைக்கு தனது தம்பிக்காக தான் சக்தீஸ்வரன் இவ்வாறு கூறுகிறான் எனப் புரிந்ததால் அமைதியாகவே இருந்தாள்.
“தவணை முறைல முழுப்பணமும் என் கைக்கு வந்து சேர்ந்த பிறகு தான் சொத்து முழுசா வசந்தாம்மா பேருல மாத்த போறோம்! அதனால எவ்ளோ சீக்கிரம் நீங்க பணத்தைக் கொடுக்கிறீங்களோ அதை பொறுத்து வீடு உங்க கைக்கு வரும்” என்றான் மணிகண்டன்.
மேலும் சில விஷயங்களை அனைவருக்குமாக பேசி விட்டு கிளம்ப எழுந்திருக்க, இளவஞ்சி படுக்கையறையில் இருந்த தாயிடம் சென்று அவரின் கையில் பத்திரிக்கையை வைத்தவளாய், “கண்டிப்பா வந்திடும்மா” என்றாள். அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
ஏற்கனவே மணிகண்டனின் வீட்டிற்குச் சென்று இருவரும் முந்தைய நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்டு பத்திரிக்கையும் வைத்திருந்ததினால், “நீங்க கண்டிப்பாக வரனும்” என்று மீண்டுமாக அழைப்பை மட்டும் விடுத்தாள் இளவஞ்சி.
“அம்மாவைக் கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு. நீ கவலைப்படாத” என்று தங்கையிடம் உரைத்த மங்கை, அடுத்த இரண்டு மாதத்தில் தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்திற்குத் தயாராகி கொண்டிருந்தாள்.