அத்தியாயம் 32

அன்றிரவு அந்த சோலைவனத்தில் இருந்த உணவகத்தில் அமர்ந்திருந்தனர் இளவஞ்சியும் சக்தீஸ்வரனும்.

“நான் ஹனிமூனுக்கு பிளான் செஞ்ச பிரகாரம் பார்த்தா, நாளைக்கு நாம இங்கிருந்து கிளம்பனும் சக்தி” என்றாள் இளவஞ்சி.

“இந்த மாதிரி தெய்வீகச் சுற்றுலாவா ஹனிமூனைக் கொண்டாடின ஒரே ஜோடி நாமளா தான் இருப்போம்” எனக் கூறி சிரித்தான் சக்தீஸ்வரன்.

அவளும் சிரித்தவளாய், “நாளைக்கு கிளம்பலாமா? வேண்டாமா? எனக்கு இங்கிருந்து கிளம்பவே மனசில்ல” என்றாள்.

இவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்திருக்க, “எனக்கும் தான் மனசில்ல! ஆனா வாழுறதுக்கு சம்பாதிக்கனுமே! அப்பா வேற தனியா அங்கே எல்லாத்தையும் பார்த்துட்டு இருப்பாங்க. போய் தான் ஆகனும்! எனக்கு இந்த கேஸ் முடியாம போக தான் மனசில்ல” என்றவனாய் அவளுக்குத் தட்டில் உணவைப் பரிமாறியவன் தனக்கும் எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தான்.

“இன்னும் ஒரு நாள் தானே! நாம வேணா கேஸ் முடிஞ்சதும் கிளம்பலாமா? ராஜாண்ணாவை வச்சி எல்லார்கிட்டயும் பேசி சிவலிங்கத்தை அங்க வைக்கிற தேதி குறிக்கச் சொல்லிட்டு, அந்த டைம்ல நாம திரும்ப வரலாம்” என்றாள் இளவஞ்சி.

“இல்ல நாம நாளைக்கே கிளம்பிடலாம் வஞ்சி! போட்ட டிக்கெட் காசு வேஸ்ட்டா போய்டும்! ராஜாக்கிட்ட கேஸ் பத்தி கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். இந்த கேஸ்காக எல்லா செலவும் நாம தான் செஞ்சிட்டு இருக்கோம்‌ வஞ்சி. ராஜாவுக்கு, இங்கிருக்க இன்னொரு வக்கீலுக்கு, அப்புறம் இவங்க விசாரணைக்காக வெளியே போறதுன்னு எல்லா செலவும் நம்மளோடது தான். அதனால நாம கிளம்பிடலாம். அவங்களை வச்சி மத்த விஷயங்களைலாம் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்” என்றான் சக்தீஸ்வரன்.

பணத்தை முன்னிருத்தி அவன் கூறவும், ஒத்துக் கொண்டாள் இளவஞ்சி.

“ஊருல சொந்தக்காரங்களை வச்சிக்கிட்டே இப்படி மத்த ஆளுங்களுக்கு காசு கொடுத்து சூழ்நிலையைத் தெரிஞ்சிக்கிற மாதிரி இருக்குது பார்த்தியா!” பெருமூச்சுடன் உரைத்தான் சக்தீஸ்வரன்.

“ஆமா சக்தி! அந்த லட்சுமி அண்ணி பேசின ஒரு வரிலேயே, நல்ல வேளை நீங்க என்னை அவங்க வீட்டுக்குலாம் கூட்டிட்டுப் போகலைனு நினைச்சிக்கிட்டேன்” சற்றுப் பயந்தவளாக உரைத்தவள்,

“ராஜாண்ணா இங்க இடம் வாங்குறது பத்தி சொல்லும் போது தான் எனக்கு நம்ம கனவுல ஒரு இன்சிடென்ட் ஞாபகம் வந்துச்சு சக்தி” என்றாள்.

“என்ன இன்சிடென்ட்?” ஆர்வமாக அவன் கேட்க,

“நமக்கு கல்யாணமான பிறகு அரசர் அந்த கோவிலோட நிர்வாகத்தை நமக்கு தான் கொடுத்திருந்தாரு சக்தி. அதாவது சிவநேசன் முத்தரசியின் பரம்பரை தான் இந்த கோவிலின் பராமரிப்பையும் நிர்வாகத்தையும் பார்த்துக்கனும்னு ஆணைப் பிறப்பித்தாரு‌. அது கல்வெட்டுல கூட இருக்க வாய்ப்பிருக்கு” என்றாள் இளவஞ்சி.

“அந்த காலத்துல நாம செஞ்சிருக்கலாம். கல்வெட்டு கூட இருக்கலாம். ஆனா அதை வச்சி இப்ப நாம எதுவும் செய்ய முடியாது. இப்ப எல்லாமே கவர்மெண்ட்கிட்ட தானே இருக்கு. நம்மளால முடிஞ்ச வரைக்கும் இந்தக் கோவிலுக்கு என்ன செய்ய முடியுமோ செய்யலாம் வஞ்சி‌” என்றான் சக்தீஸ்வரன்.

“ஹ்ம்ம் நம்மளோட உரிமையை நாம விட்டுக் கொடுத்தனால தான் இவ்ளோ பிரச்சனைகள் சக்தி. நீங்க உங்க பெரியப்பா வீட்டுக்குச் சொத்தை விட்டு கொடுத்து இங்க வராமலே இருந்தது தான் சிவலிங்கத்தை அவங்க தோண்டி எடுக்கிற வரைக்கும் போய்டுச்சு. நீங்க இந்த ஊருக்கே வராம இருந்தனால, என்னைப் பிடிச்சி உங்களுக்கு கல்யாணம் செஞ்சி வச்சி இங்க வர வச்சிருக்காரு எம்பெருமான். இதுவே நீங்க தொடர்ந்து உங்க ஊருக்கு வந்துட்டு போய்ட்டு இருந்திருந்தீங்கனா பிரச்சனை ஆரம்பிச்சதுமே உங்களுக்கு தெரிய வந்திருக்கும்” தீவிரமாக இளவஞ்சி உரைக்க,

“ஆமா உண்மை தான் வஞ்சி! இப்படி சொந்த ஊருக்கே வராம போய் தான், பரம்பரை பரம்பரையா கோவில் கைங்கர்யங்கள் செஞ்சிட்டு இருந்த குடும்பங்களுக்கு அவங்க அப்படி செஞ்சிட்டு இருந்ததே தெரியாம போய்டுச்சு‌!” என்றவன்,

“ஆனாலும் சிவலிங்கப் பிரச்சனை வராமலே போயிருந்தாலும் இந்த சக்தீஸ்வரனோட மனைவியாக இளவஞ்சி தான் இருந்திருப்பாள்! ஏன்னா என்னோட உயிரே அவள் தானே!” எனக் கண் சிமிட்டிச் சிரித்தான் சக்தீஸ்வரன்.

அவன் கூறுவதும் உண்மை தானே! இவளை மணமுடிக்காது நீண்ட நாள் உயிருடன் வாழ முடியாது என்பது தானே அவனது விதி! அதை மனதில் வைத்தே அவன் அவ்வாறு கூற,

“எல்லாம் அவன் செயல்” எனப் புன்னகை புரிந்தாள் அவள்.

*****

மறுநாள் சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் சென்னைக்குப் பயணப்பட, அதற்கு மறுநாள் நீதிமன்றத்தில் இவர்கள் தொடுத்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் அறநிலையத்துறை விளக்கமளிக்க வேண்டுமென நீதிபதி ஏற்கனவே ஆணைப் பிறப்பித்ததற்கு இணங்க, தமிழக அரசு ஒரு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், சிவலிங்கத்தை அகற்றியது தொடர்பாக தமிழக அரசின் அறநிலையத்துறையின் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதி, வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக சிவலிங்கத்தை அகற்றியது செல்லாது என்றும், அதே இடத்தில் மீண்டும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைச் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை நேரலையாய் பதிவிட்டிருந்த ஒரு யூ டியூப் சேனலில் இந்தச் செய்தியைப் பார்த்தவாறு சென்னையில் தனது வீட்டில் அமர்ந்திருந்த சக்தீஸ்வரன்‌, ராஜாவிற்கு அழைத்தான்.

“இப்ப தான் கோர்ட்லருந்து வெளில வரேன்! போன் செய்றீங்க” என்றான் ராஜா.

“இது எப்படி சாத்தியமாச்சு ராஜா! எல்லாருக்கும் தெரிஞ்சு தானே இதெல்லாம் நடந்துச்சு! எல்லாரும் பிரெஞ்சுக்காரன்கிட்ட காசு வாங்கி உடைந்தையாகித் தானே இதை செஞ்சாங்க. இப்ப எப்படி இப்படி அந்தர் பல்டி அடிச்சிருக்காங்க” என்று கேட்டான் சக்தீஸ்வரன்‌.

“இப்படி ஒரு முட்டாள்தனமான மூடநம்பிக்கையான காரணத்துக்கு நாங்க அனுமதி கொடுத்தோம்னு அவங்க எப்படி சொல்லுவாங்க சக்தி! இதுவே அந்த பிரெஞ்சுக்காரன் திரும்ப வந்து காசு கொடுத்திருந்தா சொல்லிருப்பாங்களா இருக்கும். ஆனா இப்ப அவங்க சமாளிக்க வேண்டிய நிலைமைல இருக்காங்க. அதுவும் இல்லாம சிவலிங்கத்தைத் தொட்டவன்லாம் கெட்டான்ங்கிற மாதிரி வாங்கிக் கட்டிக்கிட்டுத் தானே இருக்காங்க. அதை பார்த்துப் பயந்திருப்பாங்க. நீங்க மட்டும் கேஸ் போடலைனா கண்டிப்பாக இந்த சிவலிங்கம் வெளிநாட்டுக்கு போயிருக்கும் சக்தி! ஏன்னா இந்த ஊருல கேஸ் போட யாருமே முன் வரலை. இந்த ஊரு வக்கீலுக்கே நாம தானே காசு கொடுத்து கேஸ் போட வச்சோம். சரியான நேரத்துல நாம களத்துல குதிச்சி காப்பாத்திருக்கோம் சக்தி” வழக்கு தங்களுக்குச் சாதகமாக முடிந்த மகிழ்வில் பேசியிருந்தான் ராஜா.

“அந்த சிவலிங்கத்தைத் திரும்பவும் அதே மாதிரி அங்க வச்சா தான் எனக்கு மனசு நிம்மதி ஆகும் ராஜா. அந்த பிரெஞ்சுக்காரன் திரும்பவும் வந்து எதுவும் குட்டையைக் குழப்பி விட்டுடுவானோனு பயமாவே இருக்கு” என்றான் சக்தீஸ்வரன்.

“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் அங்கே சிவலிங்கத்தை அமைக்கிறதுக்கு நான் பேசுறேன். திரும்பவும் பிரசன்னம் அது இதுன்னு சொல்லுவாங்க தான். நான் கோவில்ல பேசிட்டுச் சொல்றேன்” என்று இணைப்பைத் துண்டித்தான் ராஜா.

“கேஸ் பத்தி தெரியாம எனக்கு வேலை ஓடாதுனு நீங்களும் ஆபிஸ் போகாம என்னையும் காலேஜ் போக விடாம உட்கார வச்சிட்டு இப்ப ஏன் இப்படி முழிச்சிட்டு இருக்கீங்க. அதான் எல்லாம் சரியாகிடுச்சே” எனக் கேட்டாள் இளவஞ்சி.

“இல்ல வஞ்சி! என்னோட பலம் பலவீனம் இரண்டுமே ஈசன் தான். சிவலிங்கத்தை அங்க பிரதிஷ்டை செய்ற வரைக்கும் என் மனசு நிம்மதியாகாது” என்றான் சக்தீஸ்வரன்.

“எல்லாம் சரி ஆகிடும்! ஈசன் சரி செஞ்சிடுவார்! இறைவன்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லி அவரைச் சரணாகதி அடைஞ்சு நம்ம கஷ்டத்தை அவர் பாதத்தில் நாம சமர்ப்பித்த பிறகு அதை நினைச்சு கவலைப்படக் கூடாது. அப்படி கவலைப்பட்டா இறைவனை நாம நம்பலைனு அர்த்தம் ஆகிடும்” எனக் கூறி இளவஞ்சி கண் சிமிட்ட,

“என் டயலாக்கை எனக்கே சொல்றியா?” என அவளின் தலையை ஆட்டியவனாய் சிரித்தான் சக்தீஸ்வரன்.

புன்னகைத்தவளாய் அவனை அணைத்து முதுகை வருடி, “ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!” என அவனின் காதினுள் உரைத்தவள், தலை கோதியவளாய், “எல்லாம் சரியாகிடும்” என்றாள். உள்ளம் ஆசுவாசமாக அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் சக்தீஸ்வரன்.