தன் கடுமையை தூர வைத்து விட்டு நிதானமாக அவனை கையாள ஆரம்பித்தார் நம்பி. பதப் படுத்தும் தொழிற்சாலைக்கு தன்னுடன் அழைத்து செல்ல ஆரம்பித்தார்.
அப்பா எனும் உறவின்றி வளர்ந்த தர்மாவுக்கு நம்பியை பிடிக்க ஆரம்பித்து விட்டது. மனைவியின் இறப்புக்கு பின் மகளை கூட தள்ளி நிறுத்திவிட்ட நம்பிக்கும் தர்மா நெருக்கமானவாகிப் போனான்.
மாமன் இருக்கும் தைரியம் என்பதை விட மனதிற்குள் கனன்று கொண்டிருக்கும் கோவம், வடிகால் இல்லாமல் தர்மாவின் கை பட் பட் என நீண்டது. அவனை திருத்துவதற்கு பதிலாக “அப்படியே உன் அப்பனை மாதிரியே இருக்கேடா” என ஏற்றி விட்டார் நம்பி.
ஒரு நாள் குடித்தவனை நல் வழிப் படுத்த அண்ணனிடம் அனுப்பி வைத்த தாமரைக்கு மெதுவாகத்தான் தன் முடிவு தவறு என தெரிய வந்தது. தர்மாவை அழைத்து செல்ல வந்து நின்றார். எங்கே போய் விடுவானோ என தவித்து விட்டார் நம்பி, அம்மாவின் மீதுள்ள கோவம் மாமனுடன் ஏற்பட்டு விட்ட பிணைப்பு என இரு காரணங்கள் இருந்தன தர்மா இங்கேயே தங்கி விட.
தாமரை எவ்வளவோ முயன்றும் பிடிவாதமாக இருந்த தர்மாவுக்கு முன்னர் தெரியாத சில உண்மைகள் தெரிய வரவும் மாமனுடனே நின்று விட்டான்.
முன்பிலிருந்தே அடிதடி என நிற்கும் அண்ணனின் செயலில் தாமரைக்கு உடன்பாடு இருந்ததில்லை. இப்போது மகனும் அந்த வழியில் செல்ல, நொந்து விட்டார்.
வருடங்கள் போகத்தான் தர்மாவுக்கு தன் அம்மா பக்க நியாயம் புரிந்தது, அதற்குள் நிறைய கடந்து விட்டான். மகனை அவர் தள்ளி வைத்து விட, இவனும் அப்படியே விட்டு விட்டான்.
எப்போதாவது அம்மாவின் வீட்டிற்கு வருவான், தாத்தா பாட்டியை பார்த்து செல்வான், தம்பி தங்கையின் மீது கவனம் வைத்துக்கொள்வான், கண்டு கொள்ளவே மாட்டார் தாமரை.
தாத்தா இறந்த போது அவன்தான் எல்லாம் செய்து அவரை காடு சேர்த்தான். அப்போது கூட மகனிடம் ஒரு வார்த்தை பேசாமல் வீம்பாக இருந்து விட்டார் தாமரை.
அவர்தான் அப்படி என்றால் தர்மாவும் அம்மாவுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றதே இல்லை. வீட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் அவன் செய்த போது கூட, ‘எல்லாம் அவனை சுத்தி நிக்கிற ஆபத்து, நார்மலா போக வேண்டிய வாழ்க்கையை சிக்கலாக்கி வச்சிருக்கான்’ என அவனை திட்டதான் செய்தார் தாமரை.
அவர் சுதந்திரமாக இருக்கிறார், எங்கள் சுதந்திரம்தான் பறி போய் விட்டது என அஜய்க்கும் கோவம்.
நிதிலா வந்த பின் அவள்தான் கனியை எழுப்பி விட்டாள். அஜய் எப்போதும் இந்த பெண்கள் கூட்டணியுடன் சேர மாட்டான், அவனுக்கு தனி செட் நண்பர்கள் இருந்தனர்.
கொழுக்கட்டை செய்திருந்தார் தாமரை. கனி வந்தால் வீடு கொஞ்சம் கல கலப்பாகும், இன்றும் அப்படியே.
தங்கும் திட்டத்தோடு வந்திருக்கவில்லை கனி, இப்போது அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரியில் ஏதோ கலைவிழாவை முன்னிட்டு தான் விடுப்பு எடுக்க போவதாக சொன்னாள் நிதிலா. கனிக்கும் தங்கும் ஆசை பிறந்தது. அவளுக்கு மாற்று ஆடைகள் வேண்டும், நிதிலாவின் அளவு இவளுக்கு சரியாக இருக்காது.
ஆகவே தர்மாவுக்கு அழைத்தாள். வேண்டுமென்றே காணொளி அழைப்பு செய்திருந்தாள். அன்னலக்ஷ்மி கண்ணாடியை துடைத்துக் கொண்டு பேரனை நன்றாக பார்த்தார், ஒரு முறை வந்து விட்டு போ என்றார். நிதிலாவும் பேசினாள், அப்படியே அத்தையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு தனக்கு உடைகள் கொடுத்தனுப்பும் படி கேட்டுக் கொண்டிருந்தாள் கனி.
தாமரை எழப் போக, அவரை பிடித்து வைத்துக்கொண்டே அவனிடம் பேசினாள்.
“ரெண்டு போட்டேன்னா தெரியும்!” கனியை அதட்டிய தாமரை எழுந்து சென்று விட்டார்.
‘இது உனக்கு தேவையா?’ என்பது போல பார்த்தான் தர்மா.
“ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை, ட்ரெஸ் கொடுத்து விடு மாமா, நான் வைக்கிறேன்” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள் கனி.
“அம்மா ஒரு பொம்பள ஹிட்லர், அண்ணா ஒரு ஆம்பள ஹிட்லர், அவ்ளோதான் கனி வித்தியாசம். நீ ஏன் இவங்க இடைல வர்ற? வா நாம கேரம் விளையாடலாம்” என சமாதானம் செய்தாள் நிதிலா.
அதற்குள் தாமரையை வந்து விட்டார். அடுத்து என்ன செய்வதாக இருக்கிறாய் என கனியிடம் இயல்பாக கேட்டார்.
ஏதோ கோர்ஸ் பெயரை சொன்னவர் அதை படிக்கும் படி அறிவுறுத்தினார், அல்லது வேலைக்கு முயன்று சென்னை செல்ல சொன்னார்.
“அப்படிலாம் எனக்கு ஐடியா இல்லையே அத்தை” என்றாள் கனி.
“இதுவரை இல்லைனா பரவாயில்லை, இனி இருக்கணும். நாளைக்கு யாரும் உன் துணைக்கு வர மாட்டாங்க, படிப்பும் அது வாங்கி தர்ற வேலையும்தான் தூக்கி நிறுத்தும்” என கடின தொனியில் சொன்னார் தாமரை.
“சரி அத்தை, ரெண்டு மாசம் போகட்டுமே”
“யாருக்காகவும் வாய்ப்பும் காலமும் காத்து கிடக்கிறது இல்லை கனி. ரெண்டு நாள்ல யோசிச்சு சொல்லு” என சொல்லி சென்ற அத்தையிடமிருந்து பார்வையை திருப்பி நிதிலாவை பாவமாக பார்த்தாள் கனி.
நிதிலாவுக்கும் என்ன சொல்வதென தெரியவில்லை. பள்ளிப் படிப்பு முடியவுமே வீட்டிலிருந்த படியே கல்லூரி செல்கிறேன் என கனி சொன்னதற்கு தாமரைதான் முட்டுக்கட்டை போட்டது.
குறும்பானவள் என்றாலும் பயந்த சுபாவம் கொண்டவள் கனி. எதிர்காலத்தில் இக்கட்டுக்கள் வந்து நின்றால் தனியாக அவளால் சமாளிக்க முடியுமா என தாமரைக்கு சந்தேகம். ஆகவே அவர்தான் அவளை சென்னைக்கு அனுப்பி வைத்தது.
அண்ணனிடம் பேச மாட்டார் என்றாலும் தன் அம்மா மூலமாக சொல்லி அண்ணனை செய்ய வைத்தார். தங்கையின் வார்த்தைக்கு நம்பியிடம் எப்போதுமே மதிப்பு உண்டு.
உறவுகளின் அன்புக்காக ஏங்கி நிற்கும் கனிக்கு விடுதி வாழ்க்கை அறவே பிடிக்கவில்லை. சென்னையும் ஏனோ அவளின் மனதை கவரவில்லை. எப்போதடா படிப்பு முடியும், ஊர் போய் சேரலாம் என அவள் இருக்க, மேற்படிப்பும் அங்கேயே.
ஏனோதானோ என்றெல்லாம் படிக்க முடியாது, நல்ல மதிப்பெண் இல்லையென்றால் தாமரை கண்டிப்பாக கேள்வி கேட்பார், அவர் மூலம் நம்பிக்கு விஷயம் தெரிந்தால் படிக்க சென்றவளுக்கு வேறு என்ன அலுவல் என பிடித்துக்கொள்வார்.