நெஞ்சை கொய்தாள் வஞ்சி -1

அத்தியாயம் -1

அந்த நடு இரவில் புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த வீதியில் மக்கள் விழித்துக் கொண்டனர். வெகு நாட்களாக படுக்கையில் கிடந்த தனபாக்கியம் இயற்கை எய்தி விட்டார்.

திடீர் மரணம் இல்லை, சொல்லப் போனால் இப்படி வலி வேதனையோடு அல்லாடுவதற்கு விரைவில் போய் சேர்ந்தால் நல்லதுதான் என்ற மனநிலையில்தான் உற்றார் உறவினர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இந்த மரணம் அங்கிருந்தவர்களை பதற்றம் கொள்ள செய்திருந்தது.

தனபாக்கியத்தின் மூத்த மகன் பாலாஜியை சுற்றி நான்கைந்து  நபர்கள் நின்றிருக்க, சற்று தள்ளி நின்றிருந்த மற்றவர்கள் இவன் என்ன சொல்ல போகிறான் என பார்த்திருந்தனர்.

“நீங்க சொல்றதுல ஏதாவது நியாயம் இருக்குதா? செத்து போன என் அம்மாக்கு அவன்னா உசுரு, அவன் வராம என் அம்மாவ எடுக்க மாட்டேன், மனசாட்சியோட பேசுங்க” என்றான் பாலாஜி.

“அவன் வருவான், அதுக்கப்புறம் ஏதாவது பிரச்சனைன்னா எங்களுக்கும் பிரச்சனை வரும். ஊர்ல உள்ளவன்லாம் ஒழுங்கா குடும்பம் நடத்தறதா வேணாமா? மரியாதையா அவனை வரக்கூடாதுன்னு நீயே சொல்லிடு” என ஒருவன் கோவமாக பேசினான்.

இரவில் குடித்திருந்த மதுவின் தாக்கம் இன்னுமே பாலாஜியிடம் குறைந்திருக்கவில்லை. தாயை இழந்த துக்கம் வேறு. தன்னிலை இழந்து கோவமாக பேசியவனிடன் கை நீட்டி விட்டான்.

அந்த தகராறை தற்காலிகமாக தடுத்து நிறுத்திய ஒருவன், “பெத்த தாய் முகத்தை கடைசியா பார்க்க வர்றவன வராதன்னு சொல்றது அநியாயம்தானப்பா. அதுக்காக திரும்ப ஊர் பிரச்சனை ஆனாலும் நமக்கு வம்புதான். பேசாம தர்மா அண்ணன்கிட்ட போலாம்” என்றான்.

அதுவே சரியென ஒரு மனதாக முடிவு செய்யப் பட்டு பக்கத்து ஊரில் இருக்கும் தர்மாவை தேடிக் கொண்டு நான்கு பேர் புறப்பட்டனர்.

ஒரு மணி நேரத்தில் தர்மா அவனது ஆட்கள் சிலருடன் அங்கு வந்து விட்டான். நெடிய உருவத்துடன், பார்த்தவர்களை பயப்படுத்தும் பார்வையுடன்  நாற்காலி ஒன்றை அடைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான். சிறிது நேரத்தில் இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் கால்களை நீட்டிக் கொண்டு உடலை தளர்த்திய வண்ணம் கண்களை மூடி விட்டான்.

வெறுமனே கண்களை மூடியிருக்கிறானா இல்லை உறங்கி விட்டானா என யாருக்கும் தெரியவில்லை, அவனது ஆட்கள் கூட அவனருகில் செல்லவில்லை.

“ஏதும் பிரச்சனை ஆகாம இருக்க பாதுகாப்புக்கு இவனை கூட்டியாந்தா இவன் என்ன இப்படி குறட்டை அடிக்கிறான்?” அங்கலாய்த்தான் ஒருவன்.

“ஷ்… மெல்லமா பேசுய்யா, அவர் காதுல விழுந்தா அவ்ளோதான்” என எச்சரிக்கை செய்தான் இன்னொருவன்.

நெருங்கிய உறவுகள் கூட அக்கம் பக்கம்தான் என்பதால் அப்போதே கூட்டமும் ஒப்பாரியுமாக அந்த இடம் சத்தமாக இருந்தது. அதில் எந்த தொந்தரவும் இல்லை என்பது போல  இருந்தான் தர்மா.

பாக்கியத்தின் இரண்டாவது மகன் வேற்று இனப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். அதில் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கே மறுப்பு இல்லை. ஆனாலும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை, அவ்வாறு செய்தால் அவரின் சொந்த பந்தம் அவர்களை தள்ளி வைத்து விடுவார்களாம்.

அந்த பெண்ணின் இனத்தை சேர்ந்த மற்ற ஆட்கள்தான் நமக்கு கவுரவக் குறைச்சல் ஆகி விட்டதென துள்ளிக் கொண்டு நிற்கின்றனர்.

விடியற்காலை மூன்று மணி அளவில் பாக்கியத்தின் இரண்டாவது மகன் அவனது மனைவி மற்றும் நான்கு மாத கைக் குழந்தையுடன் வந்து சேர்ந்தான்.

முண்டியடித்துக் கொண்டு அவனை வேடிக்கை பார்த்தனர் மக்கள். மோவாயில் கை வைத்து கிசு கிசுப்பாக பேசிக் கொண்டனர். வந்தவன் தாயின் மீது விழுந்து கதறி அழுதான், பின் அண்ணனை கட்டிக் கொண்டு அழுதான்.

அழுகை அடங்கிய பின் சகோதரர்கள் இருவரும் வெளியில் மற்ற ஆண்கள் மத்தியில் வந்தமர்ந்து கொண்டனர்.

“வந்திட்ட, முகத்தையும் பார்த்திட்ட, விடியறதுக்குள்ள கிளம்பிடு. அதான் எல்லாருக்கும் நல்லது” என்றான் ஒருவன்.

பாலாஜி சம்மதிக்காமல் மறுத்து பேச, வாய்த் தகராறு ஆரம்பமானது.

“என்னங்கடா அங்க சத்தம்?” என சத்தமாக ஒலித்தது தர்மாவின் குரல்.

வேடிக்கை பார்த்திருந்த தர்மாவின் ஆள் வேகமாக அவனது அருகில் வந்து நின்று நடந்ததை சொன்னான்.

அமர்ந்த வண்ணம் கழுத்தை மட்டும் திருப்பிய தர்மா, “அவன் இருப்பான், அவன் வீடு இது, அவன் அம்மா காரியம். எப்ப போகணும்னு அவனா முடிவு பண்ணி போய்க்குவான். எவனாவது வாய தொறந்தா…” என வாக்கியத்தை நிறைவு செய்யாமல் கூர்மையாக பார்த்தான்.

மற்றவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதி காக்க, மீண்டும் பழைய படி கண்களை மூடிக் கொண்டான் தர்மா.

வெளிச்சம் முளைக்க ஆரம்பிக்கவுமே அங்கிருந்தவர்களின் இரத்த அழுத்தம் உயரத் துவங்கியிருந்தது. சரியாக ஆறு மணிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இல்லையில்லை யார் வரக்கூடாது என ஆசை கொண்டிருந்தனரோ அவர் வந்து விட்டார்.

ஆளும் கட்சியை சார்ந்த அவர் அந்த பகுதியில் மிகுந்த பிரபலம். மேகநாதன் பெயரை சொன்னால் தெரியாதவர்கள் யாருமில்லை. நாற்பது வயதில், தலையில் ஆங்காங்கே சில நரைத்த முடிகளும், முறுக்கு மீசையும் கட்சி வேஷ்டியுமாக வந்திறங்கினார்.

அவரைக் கண்டதுமே அங்கிருந்தவர்கள் அனிச்சையாக எழுந்து கொண்டனர், சிலர் முகங்களில் அப்பட்டமான பயமும் சிலர் முகங்களில் பயம் கலந்த மரியாதையும்.

மேகநாதனின் பார்வை என்னவோ அவரின் வருகையை பற்றி அலட்டிக் கொள்ளாமல் நாற்காலியில் நீட்டியிருந்த கால்களை ஆட்டிக் கொண்டு தேநீர் பருகிக் கொண்டிருந்த தர்மாவின் மீதே இருந்தது.

மேகநாதன் அவரது ஆள் கொடுத்த பூமாலையை எடுத்துக் கொண்டு தனபாக்கியத்தின் பூத உடல் அருகே சென்றார்.

பாலாஜியின் தம்பிக்கும் தம்பியின் மனைவிக்கும் அந்த இடத்தில் நிற்பது தீயில் நிற்பது போலிருந்தது.

பாலாஜியின் அருகில் சென்றவர் துக்கம் விசாரிப்பதற்காக அவனது கையை பற்றினார். தன்னை தைரியமானவனாக காட்டிக் கொண்ட போதும் அவனது கைகளின் நடுக்கத்தை உணர்ந்து கொண்ட  மேகநாதன் இகழ்ச்சியாக சிரித்தார், பின் முறைத்தார்.

“ஓடுனவன் ஓடுன படியே இருந்தா எனக்கென்ன வந்தது? இவ்ளோ தைரியமா ஊருக்குள்ள வந்தா எம்மேல பயமில்லைனு ஆகிடாதா பாலாஜி?” கட்டைக் குரலில் கேட்டார்.

கோவமாக ஏதாவது பேசி விட வேண்டுமென பாலாஜியின் நாக்கு துடிக்கிறது, அப்படி ஏதேனும் பேசி விட்டால் அதனால் நிகழக் கூடிய பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கற்பனை வர வாயை மூடிக் கொண்டு நின்றான்.

“அஞ்சு நிமிஷத்துல உன் தம்பி இந்த இடத்தை விட்டு போகலைனா அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்ல ராஜா” என சிரித்துக்கொண்டே சொன்னார் மேகநாதன்.

“என்னடா ஓவர் பில்டப்பா இருக்கு, என்ன பண்ணுவாப்லயாம் இந்த மிஸ்டர் நாதன்?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்து நின்றான் தர்மா.

“மரியாதையா பேசுடா” என சொல்லிக் கொண்டே பாயந்து வந்தான் நாதனின் ஆள் ஒருவன்.

“நீ முதல்ல மரியாதையா பேசுடா” என்ற தர்மாவின் ஆள், பாய்ந்து வந்தவனை பதம் பார்த்தான்.