அத்தியாயம் 31

காவலர் கிளம்ப கூறியதும் அக்கோவிலில் இருந்து சக்தியும் வஞ்சியும் வெளியே வந்து வாசலை அடைந்த போது எதிரே வந்த பெண்மணி ஒருவர் அவர்களைக் கண்டதும், கண்டும் காணாதது போல் செல்ல முற்பட்டார்.

ஆனால் அப்பெண்மணியைக் கண்டதும் இளவஞ்சியின் கையைப் பிடித்து நிறுத்திய சக்தீஸ்வரன், அப்பெண்மணியை அழுத்தமாய் பார்த்தவனாய் அப்படியே நின்றான்.

இதற்கு மேலும் காணாதது போல் செல்ல முடியாதென இவர்களின் அருகே வந்தவராய், “தம்பி! எப்படி இருக்கீங்க? இது தான் நீங்க கட்டிக்கிட்ட பொண்ணா?” எனக் கேட்டார்.

“நல்லா இருக்கேன் அண்ணி” என்றவனாய், “வஞ்சி! இவங்க தான் லட்சுமி அண்ணி! என் பெரியப்பா பையன்னு சங்கர் அண்ணானு ஒருத்தங்ககிட்ட பேசினேன்ல! அவங்க மனைவி இவங்க” என்று அறிமுகம் செய்து வைத்தான்.

நாற்பது வயது மதிக்கத்தக்கவராய் இருந்தார் அவர். சக்தியின் பெரியப்பா மகனுக்கு நாற்பது வயதிற்கு மேல் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். நேற்று சக்தி அவரிடம் பேசி தான் இந்த சிவலிங்கத்தை எப்பொழுது தோண்டி எடுத்தார்கள் என்ற தகவலை கேட்டறிந்து வைத்திருந்தான்.

சக்தியின் தந்தை ஏற்கனவே அவரின் அண்ணன் குடும்பத்தினருடன் சண்டையிட்டு, இந்த ஊருக்குச் செல்வதையே நிறுத்தி இருந்ததாக கூறியிருந்ததினால், இவர்களுக்குள் பெரியதாக ஒட்டுறவு இல்லை என்று புரிந்தது இளவஞ்சிக்கு.

“ரொம்ப நாளா பொண்ணு கிடைக்காம, கோவில் கிட்ட பூக்கடை வச்சிருக்க பொண்ணைக் கட்டிக்கிட்டதா சொன்னாங்களே! அந்தப் பொண்ணா இது” ஒரு மாதிரி குத்தலாய் கேட்டார் அந்த லட்சுமி அண்ணி.

‘இதென்ன அவமானப்படுத்துற மாதிரி பேச்சு’ என்று இளவஞ்சி ஏதோ கூற வாயெடுக்கும் முன்,

“ஆமா அண்ணி! குடும்பச் சொத்தை புடுங்கித் திங்காம, சொந்தமா சம்பாதிச்சு வாழுற குடும்பத்துல தான் பொண்ணை எடுக்கனும்ங்கிற வைராக்கியத்துல தான் தேடிப் பிடிச்சி வஞ்சியைக் கட்டிக்கிட்டேன்” என்றான் சக்தீஸ்வரன்.

சொல்லாலேயே‌ நச்சென நெஞ்சில் குத்தியிருந்தான் சக்தீஸ்வரன்.

“ஓ நாங்க உங்க சொத்தைப் புடுங்கி திங்குறோம்னு குத்தி காமிக்கிறியா! சொந்தக்கார பையன் நம்ம ஊருக்கு வந்திருக்கியேனு நின்னு பேசினதுக்கு நல்ல மரியாதை செஞ்சிட்டப்பா” என்று கோபமாக உரைத்தவராய் முகத்தைத் திருப்பிக் கொண்டு பூக்கடைக்காரரிடம் சென்றார்.

“ஏன்மா பூ விக்கிறவங்கனா அவ்ளோ இளப்பமா உங்களுக்கு! ஏன் உங்க மருமகளை அப்படி குத்தி பேசினீங்க?” என்று அன்று இளவஞ்சியிடம் பேசிய அதே பூக்காரம்மா இன்று இளவஞ்சிக்காகப் பரிந்து வந்து கேட்க, அந்த பூக்காரம்மாவை முறைத்தவாறு பூ வாங்காமலேயே கோவிலுக்குள் சென்றார் லட்சுமி‌.

இந்த உரையாடலைக் கேட்ட சக்தியின் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்ற அதை இளவஞ்சியிடம் கூறியவனாய் அந்த பூக்கடைக்குச் சென்றான்.

இளவஞ்சியும் பூக்காரம்மாவும் அவர்களின் தொழிலையும் வாழ்க்கையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்க, “ஏன்க்கா இங்க முன்னாடி இருந்த சிவலிங்கம் இப்ப இல்லையே! எங்கப் போச்சு?” என இயல்பாய் கேட்டிருந்தாள் இளவஞ்சி‌.

இது வரை சத்தமாகப் பேசிக் கொண்டிருந்த அந்த பூக்காரம்மா, குரலைத் தாழ்த்தியவராய், “யாருக்கும் சொல்லாம கொள்ளாம திடீர்னு நட்ட நடுராத்திரில தோண்டி எடுத்துட்டாங்கமா‌‌. மறுநாள் ஊர் மக்கள்லாம் சேர்ந்து வந்து சண்டை போட்டு கேட்டாங்க. ‘இங்க மக்களுக்குலாம் விஷக் காய்ச்சல் வந்துச்சுல அதுக்கு இந்த சிவலிங்கம் அங்க இருக்கிறது தான் காரணம்னு பிரசன்னம் பார்த்து பெரிய சாமிங்கலாம் சொன்னாங்கனு அதை தோண்டி எடுத்து வச்சிருக்கோம். வேற திசைல இதை நாள் பார்த்து வைப்போம்னு’ சொன்னாங்கமா. சரி சிவலிங்கம் இங்க தானே இருக்குனு மக்கள் அமைதியாகிட்டாங்க. ஆனா இந்த சைவ அமைப்பு தலைவர் கூட்டத்தோட வந்து சண்டைப் போட்டுட்டு இருந்தாங்க‌. அப்புறம் யாரும் எதுவும் கேட்டுக்கலை” என்றார் அந்த பூக்காரம்மா‌.

உள்ளே குருமூர்த்தி காவலரிடம் சொல்லிக் கொண்டிருந்த காரணத்தை வெளியே பூக்காரம்மா இவர்களிடம் சொல்லியிருந்தார்.

“வா வஞ்சி போவோம்! அந்த போலீஸ்காரர் வெளியே வந்து பார்த்தா நம்ம மேல சந்தேகம் வரும்” என்று அவளின் காதோடு மெல்ல உரைத்தவனாய் அங்கிருந்து கிளம்பினான் சக்தீஸ்வரன்.

கோதை ஆற்றை கடக்கையில், முன் ஜென்ம நினைவில் அந்த ஆற்றில் அவர்கள் கழித்த பொழுதுகளை எண்ணி அந்த ஆற்றை ரசித்து பார்த்தவளாய் வந்திருந்தவளின் மனநிலையை உணர்ந்தவனாக அமைதியாக வண்டியை ஓட்டினான் சக்தீஸ்வரன்.

ஆற்றை கடந்ததும் அந்த அமைதியைக் கலைத்தவளாய், “என்ன சக்தி இது! இந்தளவுக்கு மூடநம்பிக்கை உள்ளவங்களா இந்த ஊரு மக்கள்?” என்று வியப்பாகக் கேட்டாள்‌.

“இங்க மொத்தமே ஐம்பது குடும்பங்கள்கிட்ட தான் இருக்கு வஞ்சி! அதிலும் வயசானவங்க தான் இருக்காங்க. அடுத்த தலைமுறை பசங்கலாம் வெளியூர் வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு இருக்காங்க. அதனால ஊர் மக்களுக்கு இதை பத்தி அக்கறை இருக்க வாய்ப்பில்லை‌‌. கோவிலுக்குள்ள வேலை செய்ற எல்லாருக்கும் பணம் கொடுத்திருப்பாங்க. சிவலிங்கத்தைத் தோண்டி எடுத்ததுக்காக இவங்க சொல்ற காரணம் பொய்னு நல்லா தெரியுதே!” என்றவன் கூறிக் கொண்டிருந்த சமயத்தில் எதையோ சிந்தித்தவளாய்,

“சக்தி உங்க குலதெய்வக் கோவில் இங்கே தானே இருக்கு! அங்கே போவோமா?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் போகலாமே! ஆனா எங்க இருக்குனு எனக்கே தெரியாதே!” என்றான்.

“இங்க தான் பக்கத்துல எங்கேயோ இருக்குனு நம்ம டிரைவர் சொன்னாரு. அவர்கிட்ட போன் செஞ்சிக் கேட்டு பாருங்க” என்றாள் இளவஞ்சி.

சக்தீஸ்வரன் ஓட்டுனரிடம் பாதையைக் கேட்டுவிட்டு குலதெய்வக் கோவிலுக்குச் சென்றான்.

கருபண்ணசாமியை தரிசித்தவர்களாய், “நாங்க தேடிட்டு இருக்க சிவலிங்கத்திற்குப் பாதுகாப்பாக நீங்க இருக்கனும் கருப்பா. அந்த லிங்கம் நம்ம ஊர் எல்லையை விட்டு போய்ட கூடாது! அதுக்கு நீங்க தான் காவலா இருக்கனும்” எனச் சூடம் ஏற்றி வேண்டிக் கொண்டாள் இளவஞ்சி.

சிலுசிலுவெனக் காற்று வீசிக் கொண்டிருந்த அந்த இடத்தினில் இருந்த சிமெண்ட் தரையில் அப்படியே அமர்ந்து விட்டனர் இருவரும்.

“உங்களுக்குத் தியானத்திலேயே முன் ஜென்ம காட்சிலாம் தெரிஞ்சிதே! இதையும் தியானத்துல உட்கார்ந்து கண்டுபிடிக்க முடியாதா?” எனக் கேட்டாள் இளவஞ்சி‌.

“என்னைப் பார்த்தா வெத்தலைல மை போட்டு ஊரை ஏமாத்துற மந்திரிவாதி மாதிரி தெரியுதா?” எனக் கேட்டு அவளை முறைத்தான் சக்தீஸ்வரன்.

“இல்ல சக்தி. எனக்கு தியானம் செய்ற பழக்கம்லாம் இல்லை. உங்களுக்கு தான் இவ்வளோ விஷயம் தெரிஞ்சிருக்கே! இதுவும் தெரியாமலா இருக்கும்ன்ற எண்ணத்துல கேட்டேன்” என்றாள் இளவஞ்சி.

“முன் ஜென்மங்கிறது நான் முன்னாடி வாழ்ந்த காலம். அதுவும் இந்த ஊருக்கு வந்தனால தான் தெரிஞ்சிது. உடல் அழியும். ஆன்மா அழியாதது! அழிவில்லாதது! என் ஆன்மாக்கு இந்த ஊருலாம் ரொம்பவே பரிச்சயம்! நம்ம ஆன்மாவோட இணைவு கொடுத்த சக்தியினால் தான் என்னால தியானத்துல முன் ஜென்மத்தைப் பார்க்க முடிச்சிடுது வஞ்சி! மத்தபடி தியானத்துல கடவுள் நம்மகிட்ட சொல்ல வர்ற விஷயத்தைப் புரிஞ்சிக்கிற பலம் கிடைக்குமே தவிர மந்திரிவாதி அளவுக்குலாம் எதுவும் தெரியாது” என்றான்.

“ஹ்ம்ம் அடுத்து என்ன செய்றதா பிளான்” எனக் கேட்டாள்.

“நேத்து இங்க இருந்து போனதுமே தமிழக காவல் துறையினர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸூக்கு, இங்க இப்படி இந்த கோவில்ல சிவலிங்கத்தைக் காணோம்னு ராஜாவை ரகசிய தகவல் கொடுக்க சொல்லிருந்தேன் வஞ்சி. சப்போஸ் இன்னிக்கு காலைல நம்மளால கேஸ் கொடுக்க முடியாம போய்ருச்சுனா இந்த போலீஸ் எப்படியும் நைட்க்குள்ள வந்து கோவில்ல செக் பண்ணுவாங்கனு தான் இந்த பிளான் செஞ்சோம்”

“ஓ இன்னிக்கு கேஸ் கொடுக்க தான் ராஜாண்ணாவை சென்னைலருந்து இங்கே வர வச்சீங்களா?” எனக் கேட்டாள்.

“ஆமா இங்க ஒரு வக்கீலைப் பிடிச்சி ராஜாவும் அவங்களும் சேர்ந்து பொதுநல வழக்குனு அவங்க பேருலயே கேஸ் கொடுத்தாங்க. போலீஸ் வரும் போது நாம அங்க உட்கார்ந்து இருக்கனும்றது ராஜா சொன்ன பிளான் தான்”

“எப்படியாவது இந்த ஊருக்குள்ள தான் சிவலிங்கம் இருக்குனு தெரிஞ்சா போதும் வஞ்சி! மனசு நிம்மதி ஆகிடும்! அதுக்குப் பிறகு அதை வாழ்நாள் முழுக்க பாதுகாக்க வேண்டியது என்னோட பொறுப்புனு அதுக்கு தேவையானதை எல்லாம் செஞ்சிடுவேன்” என்றான்.

அச்சமயம் ராஜாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வரவும், ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தான் சக்தீஸ்வரன்.

“சிவலிங்கம் இங்க கோவில்ல தான் இருக்கு சக்தி” என ஸ்மைலிக்களுடன் அனுப்பியிருந்தான் ராஜா.

மகிழ்வுடன் அதனை இளவஞ்சியிடம் காண்பித்தவனாய் கருப்பண்ணசாமியை விழுந்து வணங்கினான்.

“பாருங்க குலதெய்வக் கோவிலுக்கு வந்ததும் நல்ல செய்தி கிடைச்சிருக்கு” என்று மனதார கருபண்ணசாமிக்கு நன்றி உரைத்தாள் இளவஞ்சி.

சில நிமிடங்கள் கழித்து ராஜா சிவலிங்க புகைப்படங்களை அனுப்ப, அந்த புகைப்படத்தை பார்த்தவனின் கண்களில் நீர் கோர்த்தது‌.

மற்ற விவரங்களை நேரில் வந்து கூறுவதாக உரைத்தான் ராஜா.

இருவரும் மகிழ்வுடனேயே சோலை வனத்தில் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

மாலை பொழுதில் அங்கு வந்து நின்ற ராஜா, நடந்த விசாரணை பற்றிக் கூறினான்.

“அந்த குருமூர்த்தி இப்படிக் காரணத்தைச் சொன்னதும், முதல்ல சிவலிங்கத்தைக் காண்பிங்கனு கேட்டோம். அவர் கோவிலோட அறங்காவலர் சொல்லாம காண்பிக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அந்த நேரத்துல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்ஸூம் வந்துட்டாங்க. அதுக்கு மேல பேசி சமாளிக்க முடியாம காண்பிச்சிட்டாரு.

இதுல ஹைலைட் என்ன தெரியுமா சக்தி! அந்த கோவிலோட அறநிலைய துறை அதிகாரிகளும் இதே காரணத்தைச் சொன்னாங்க பாருங்க! அடப்பாவிங்களா எங்களைப் பார்த்தா அவ்ளோ பெரிய முட்டாளாவா தெரியுதுனு இருந்துச்சு.

அவர் அதை காண்பிச்சதும் போட்டோ எடுத்துட்டு போலிஸ் ஸ்டேஷன் போய்ட்டோம் சக்தி. அங்கிருந்து வெளில வந்த பிறகு தான் உங்களுக்கு போன் பண்ணி போட்டோ அனுப்பினேன்”

“கோர்ட்ல இரண்டு நாளைக்கு விசாரணை செய்ய டைம் கொடுத்திருக்காங்க. நாளான்னைக்கு இவங்க சொன்ன காரணத்தைச் சொல்லி, இந்த போட்டோலாம் பிரடியூஸ் செஞ்சி, எவிடென்ஸ்லாம் காண்பிச்சி அந்த சிவலிங்கத்தை எடுத்த இடத்துலேயே வைக்க சொல்லி ஜட்ஜ் தீர்ப்பு சொல்லிட்டாங்கனா அந்த கோர்ட் ஆர்டர் வச்சி சிவலிங்கத்தை அங்க வைக்கச் சொல்லிடலாம்” என்றான் ராஜா.

“இதுல வேற எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கா ராஜா?” எனக் கேட்டான் சக்தீஸ்வரன்.

“இப்போதைக்கு இல்லை‌. கோர்ட்ல தீர்ப்பு வந்த பிறகு கோர்ட் ஆர்டர் வச்சி திரும்பவும் சிலையை அங்க நிறுவ சொல்லிடலாம்” என்றான்‌.

“ஆனா இதுக்கு பின்னணியில் பெரிய ஆளுங்கலாம் இருக்காங்க சக்தி. இப்போதைக்கு எல்லாரும் அடக்கி வாசிச்சிட்டு இருக்காங்க. அதனால இப்ப எல்லாம் சரியா நடந்திடும்‌. ஆனால் இது திரும்பவும் நடக்க வாய்ப்பிருக்கு” தீவிர பாவனையில் உரைத்தான் ராஜா.

எல்லாம் சரியானது போல் தோன்றினாலும், ஏதோ சரியில்லை என்றே சக்தியின் மனம் உரைத்தது.

“இவங்க சிவலிங்கத்தைத் தோண்டி எடுத்ததுக்கான உண்மையான காரணம் என்னனு கண்டுபிடிக்க முடிஞ்சிதா ராஜா?” எனக் கேட்டான் சக்தி.

“உண்மையான காரணம் வெளிநாட்டுக்கு கடத்திட்டுப் போறது தான். அதிலும் குறிப்பாக ஒரு பிரஞ்சுக்காரர் இங்க வந்தப்ப அவரோட மனைவிக்கு இந்த லிங்கம் ரொம்ப பிடிச்சிப் போச்சாம்! அவங்க ஊருல அவங்க வீட்டுல இந்தச் சாமியை வச்சி கும்பிடனும்னு ஆசைப்பட்டாங்கனு இந்த கோவில் தர்மகர்த்தாகிட்ட பேசி அங்க அனுப்பி வைக்க ஏற்பாடு செஞ்சிருக்காரு அந்த பிரஞ்சுக்காரர்” என்றான் ராஜா.

அதிர்ச்சியில் விழிகள் விரிய, “அப்புறம் எப்படி ஏழெட்டு நாள் ஆகியும் சிலை இங்கேயே இருக்கு?” எனக் கேட்டான் சக்தீஸ்வரன்.

“பிரசன்னம் பார்க்கிற மாதிரி நம்பூதிரி வர வச்சி, அவர் மூலமாக சிவலிங்கத்தை மாத்தனும்னு சொல்ல வச்சி கோவில்குள்ள வேலை பார்க்கிற எல்லாரையும் நம்ப வச்சிருக்காங்க. நம்பாதவங்களுக்கு காசு கொடுத்து அடக்கியிருக்காங்க”

“இவங்க சிலையைத் தோண்டின அடுத்த நாள் இதுக்கு காரணமான தர்மகர்த்தா விபத்துல இறந்துட்டாராம். அதுல எல்லாரும் பயந்துட்டாங்க. அதையும் மீறி இதை அனுப்பியே ஆவேன்னு நின்ன கோவில் ஆபிசர் ஒருத்தர் ஆக்சிடெண்ட்ல கால் உடைஞ்சு ஹால்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாராம். இதுக்கு மேல சிவலிங்கம் மேல கை வைக்க தைரியம் இல்லாம அப்படியே வச்சிருந்திருக்காங்க. அந்த பிரஞ்சுகாரர் ரொம்ப புஷ் செய்யவும், இரண்டு நாள் கழிச்சி திரும்ப சிவலிங்கத்தை இந்த ஊரை விட்டு தூக்கிட்டுப் போக வண்டிலாம் ஏற்பாடு செஞ்சாங்களாம். தூக்கி எடுத்து வைக்க வந்தவனுக்கு கோவிலுக்குள்ளேயே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாம். அவனும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கானாம். அந்த பிரெஞ்சு காரரோட அம்மா அவங்க ஊருல ஏதோ திடீர்னு தலை வலினு அட்மிட் ஆகி சீரியஸா இருக்காங்கனு தெரிஞ்சி இவரும் அங்க போய்ட்டாராம். அதான் தோண்டினதை என்ன செய்யனு தெரியாம அப்படியே வச்சிருக்காங்க. கோவிலுக்குள்ள பசு மாட்டை பராமரிக்கிறவர்கிட்ட சில ஆயிரங்கள் கொடுத்து இதை கறந்திருக்கேன் சக்தி. போலீஸூக்கு கூட இந்த விஷயம் தெரியாது” என்றான் ராஜா.

“ஓ அப்ப இந்த பிரெஞ்சுகாரர் சுதாரிச்சு இங்க வரதுக்கு முன்னாடி நாம கேஸ் முடிச்சி சிவலிங்கத்தை வைக்க வச்சிடனும்” என்று சக்தீஸ்வரன் கூற,

“ஆமா சக்தி. அவர் வந்தாருனா இந்த கேஸை திசை திருப்ப வச்சி வேறு மாதிரி போகலாம். இல்லனா அறங்காவலர் ஆபிசர்ஸ் வச்சி இந்த பிரசன்ன காரணத்தையே சொல்லி மேல் முறையீடு போட்டு சிவலிங்கத்தை நிறுவ விடாம தடுக்கலாம்‌. அதனால இதை சீக்கிரம் செய்யனும்” என்றான் ராஜா.

“ஆனால் சிவலிங்கத்தை நிறுவிய பிறகு இவரால பிரச்சனை வரலாம் தானே!” என்று சக்தீஸ்வரன் கேட்க,

“இவராலனு இல்ல சக்தி யார்னாலயும் வரலாம். நாம தான் கவனமா இருக்கனும். நான் அந்த கோவில் பூக்காரம்மாகிட்ட சிவலிங்கத்துக்கு சம்பந்தப்பட்டு எது நடந்தாலும் எனக்கு போன் செஞ்சி சொல்ல சொல்லிருக்கேன்” என்றான்.

“அப்படியா அவங்க நம்பர் வாங்கியிருக்கீங்களா? எனக்கு தாங்கண்ணா! நானும் அந்த அக்காகிட்ட பேசி வைக்கிறேன்” என்றவளாய் அந்த எண்ணை வாங்கி கொண்டு வெளியே சென்றாள் இளவஞ்சி.

சக்தீஸ்வரன் நெற்றிச் சுருங்க ஏதோ யோசித்தவாறு இருக்க, “என்ன சக்தி! ஹேப்பியா இருப்பீங்கனு பார்த்தா பெருத்த யோசனைல இருக்கீங்க” எனக் கேட்டான் ராஜா.

“கவர்மென்ட் மீறி நாம அந்த கோவில்ல எந்த மாதிரி பாதுகாப்புலாம் செய்ய முடியும்னு யோசிக்கிறேன் ராஜா” என்றான்.

“முதல்ல நீங்க ஆத்மநல்லூருல இடம் வாங்கி போடுங்க. நீங்க அந்த ஊருக்கு பெரிய ஆளு மாதிரி கோவிலுக்கு அப்பப்ப செலவு செஞ்சி ஒரு பதவிக்கு வரனும். இல்லனா உங்களுக்கு தெரிஞ்சவங்களை அந்த லெவலுக்கு நீங்க கொண்டு வரனும். அதுக்குப் பிறகு மொத்த கோவிலும் உங்க கட்டுப்பாட்டுக்கு வந்துடும்” என்றான் ராஜா‌.

“ஆனா இது சின்ன விஷயம் இல்லயே ராஜா” சக்தீஸ்வரன் கூற,

“ஆமா சக்தி! கஷ்டமான விஷயம் தான். ஆனா உங்க பக்கம் நியாயமும் தர்மமும் இருக்கும் போது உங்களால சுலபமா அதை செய்ய முடியும்” என்றான் ராஜா.

மகிழ்வுடன் உள்ளே வந்த இளவஞ்சி, “ராஜாண்ணா நானும் அந்த அக்காகிட்ட பேசிட்டேன். அவங்க இனி அங்க எது நடந்தாலும் நம்மகிட்ட சொல்றதா சொல்லிட்டாங்க” என்றாள்.

“அதான் சிவலிங்கமே இங்க தானே இருக்கு. அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க! தன்னைத் தானே காத்துக் கொள்ள‌ முடியும்னு அவரையும் காத்துக்கிட்டு நமக்கான பாதையும் காண்பிச்சிக்கிற எம்பெருமான் ஈசன் வருங்காலத்துலயும் நம்மளை வழி நடத்துவார்‌” என்று நம்பிக்கையுடன் உரைத்தாள் இளவஞ்சி.