சூரியன் 25

கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த கடைவீதிகள் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.

பணியின் காரணமாக பிரசாத் மட்டும் அவர்களுடன் வரவில்லை. உணவின் நறுமணத்தில், “அண்ணா” வயிற்றை தடவினாள் இந்துஜா.

பொறித்த மீன், ஸ்பிரிங் பொட்டேட்டோ, கார்ன், ஐஸ்கிரீம் இன்னும் பல வாங்கி  ஓரிடம் அமர்ந்தனர்.

இந்துஜா அவளுக்குரிய உணவை தனியே எடுத்து நாகேந்திரன் கரத்தில் திணித்து நவீனை இழுத்து மோமோஸ் வாங்க செல்ல அவர்களுடன் செல்ல இருந்த ஹரிஹரனை தடுத்து அவனருகே அமர வைத்துக் கொண்டான் சஞ்சய்.

திண்பன்டங்களை உள்ளே தள்ளி விட்டு நடந்தனர். சஞ்சய் அவனாக பிரியசகி கரம் கோர்த்துக் கொண்டான். அவள் மனம் பரவசமானது.

அவர்களை கண்ட சுவர்ணலதா தன் கணவன் கரம் பிடிக்க செல்ல அவர் நகர்ந்து ஹரியுடன் பேசிக் கொண்டே சென்றார். லதாவின் முகம் கூம்பியது.

“சஞ்சய், எனக்கு கன் சூட் பண்ண சொல்லித் தாங்களேன்” ஆசையுடன் பிரியசகி கேட்க, சஞ்சய் கற்றுத் தந்தான். பலமுறை முயன்று பின் பிரியசகி அவளாவே பலூனை உடைக்க மகிழ்ச்சியில் அவன் கரம் பற்றி குதித்தாள்.

மெதுவா சகி…

அன்புடன் அவனை அணைத்துக் கொண்டாள்.

நவீன் தான் இந்துஜாவின் தொல்லை தாங்க முடியாமல் திண்டாடினான். பெரியவர்கள் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் குடும்பமாக தண்ணீரில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். சஞ்சய் அவர்களுடன் இணைந்திருந்தாலும் சுற்றிலும் தன் விழிகளை பதித்திருந்தான்.

எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன் இவர்கள் அருகே வரவும் அவன் முதுகிலிருந்து அரிவாளை எடுத்தான். கவனித்த சஞ்சய், யாருக்கும் ஆபத்து நேரக்கூடாது என்று அவனை இழுத்து தண்ணீருக்குள் சென்றான்.

“மாமா…” நவீன் சத்தமிட, அனைவர் கவனமும் தண்ணீரில் ஒருவனுடன் விழுந்த சஞ்சயை பார்த்தனர்.

அனைவரும் அதிர, “சஞ்சய்.. சஞ்சய்..” அழைத்துக் கொண்டே பிரியசகி கடலை நோக்கி தண்ணீரினுள் சென்றாள்.

“போகாதீங்க! போகாதீங்க!” சுற்றி இருந்தவர்கள் கத்தினர்.

சுயம் வந்த இந்துஜா, “பிரியா…” அவள் பின் செல்ல முனைந்தாள்.

அதற்குள் நவீனும் ஹரிஹரனும் அவளிடம் நெருங்கி அவளை இழுக்க, “சஞ்சய்டா சஞ்சய்டா…” கத்திக் கொண்டே அவர்களையும் இழுத்தாள். பாதுகாப்பு வீரர்கள் கடலினுள் சென்றனர்.

இளைஞர்கள் சிலர் ஹரி, நவீனுடன் சேர்ந்து பிரியசகியை கரைக்கு இழுத்து வந்தனர். அவள் இறுமிக் கொண்டிருக்க, அவளை இழுத்து பளாரென அறைந்தார் சுவர்ணலதா.

“லதா…” நாகேந்திரன் சத்தமிட,

“இவளுக்கு ஏதாவது ஆகி சஞ்சய் வந்து கேட்டா நான் என்ன செய்றது?” அழுகையுடன் தன் மகனுக்கு ஏதும் ஆகாது திடமாக இருந்தாலும் அக்காரிருளிலில் கடலை பார்க்க திகிலாகவும் மிரட்சியாகவும் இருந்தது.

லதாவின் மிரட்சியில் அவரை அணைத்துக் கொண்டு, குலதெய்வத்தை மனதில் எண்ணி அக்கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்  நாகேந்திரன். அனைவரும் இவர்களை சூழ்ந்து நின்றிருந்தனர்.

சஞ்சய் கொலைசெய்ய வந்தவனுடன் குதிக்கும் போது கடல்நீரில் நின்று கொண்டிருந்தவர்களும் உதவ சென்றிருப்பர். பாதுகாப்பு வீரர்கள் சஞ்சயையும் உதவ சென்றவர்களையும் இழுத்து வந்தனர். கொலைசெய்ய வந்தவன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை.

அனைத்தும் நேரலையாக ஓடிக் கொண்டிருக்க, ரக்சன், இனியவன், சந்திரசேகர் மேலும் சில போலீஸூம் அவ்விடம் குவிந்து இருந்தனர்.

சஞ்சய்கு அசிஸ்டன்ட் கமிஷ்னர் போஸ்டிங் அவனின் மக்களுக்கு உதவும் நல்ல செயலினால் கிடைக்கப்பட்டது. பெரிய ஆட்களுக்கு தொந்தரவாக இருக்கும் சஞ்சய் பாமர மக்களின் மனதில் நேர்மையான போலீஸாக தெரிந்தான்.

சஞ்சயை தூக்கி வந்த பாதுகாப்பு வீரர் கரங்கள் இரத்தத்தில் நனைந்திருக்க, சுவர்ணலதா, பிரியசகி, இந்துஜாவின் அழுகை கூடியது. அவனோ மயக்கத்தில் இருந்தாள்.

நவீனும் ஹரிஹரனும் அவனை தூக்க அருகே செல்ல, “சார் ஆம்புலன்ஸ் வந்தாச்சு” பெரியவர் ஒருவர் சத்தம் கொடுத்தார்.

பீச் மணலில் போலீஸார் மாறி மாறி சஞ்சயை தூக்கி விரைந்து ஓடி ஆம்புலன்ஸில் சேர்க்க, அவர்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் குடும்பத்தினர் அவர்கள் பின்னே ஓடி வந்தனர்.

ரக்சன் காரை ஆம்புலன்ஸ் வண்டிக்கு பின் நிறுத்தி, சஞ்சய் குடும்பத்தினரை ஏற்றி ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தனர்.

சஞ்சய்….சஞ்சய்…சஞ்சய்…குரல் அழைத்தது. “நீ இப்பவே வெளிய வரணும்” அக்குரல் அவனை மீட்டெடுத்தது. காதினுள்ளே குடும்பத்தினரின் அழுகை சத்தம் பெரிதாக கேட்டது.

பிறகு அமைதியாகி விட, மீண்டும் ஆழ்மனதிற்குள் சென்றான் சஞ்சய். ஆம்புலன்ஸில் செல்லும் போதே அவனுக்கான முதலுதவி நடக்கவும் மெதுவாக திரும்பிய நினைவில் அவனுக்கு மார்பின் குறுக்கே ஏற்பட்ட ஆழமான வெட்டு ரணமாய் கொன்றது.

ஏற்கனவே நிறைய, அடிகள், கத்திக்குத்து, காயங்களால் வளர்ந்து தான் இந்நிலைக்கு வந்தவன். தனக்கென ஒருத்தி இருக்கிறாள். தன்னுயிருடன் கலந்தவள் எனவும் வலியை ஏற்று மெதுவாக இமைகளை பிரித்தான்.

“சஞ்சய் சார், ஆர் யூ ஓ.கே?” செவிலியர் ஒருவர் கேட்க, அவன் விழிகள் அவ்விடத்தை ஆராய்ந்தது தன்னவளை தேடி…

சுற்றிலும் உள்ள அனைவரும் அவனிடம் பேச, என்ன செய்கிறாளோ என்று? அவன் மனம் அவளையே ஏங்கி தவித்தது.

சுவர்ணலதா மகனின் வெட்டுக்காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை எண்ணி கதறி அழ, வலியை காட்ட முடியாமல் கண்ணீருடன் தன் மனைவியை சாய்த்துக் கொண்டிருந்தார் நாகேந்திரன்.

காரில் ஏறும் முன்னே மயங்கிய பிரியசகியை தெளிய வைத்து ஹரி அவள் கரம் பற்றியிருக்க, சோர்ந்து கார்க்கண்ணாடியில் சாய்ந்திருந்தாள் பிரியசகி. இந்துஜா காரின் சீட்டில் சாய்ந்து இருந்தாள்.

மருத்துவமனையில் ஏற்கனவே அறிவித்து இருந்ததால் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தன. சஞ்சயை மருத்துவமனையின் சிகிச்சை பிரிவில் சேர்க்கவும் ரக்சன் அவ்வறைக்குள் சென்றான்.

கதவருகே அமர்ந்து விட்டாள் பிரியசகி. இந்துஜா ஏதும் பேசாமல் அவளருகே அமர்ந்து கொள்ள, அவர்களை பார்த்து இனியவன் பிரசாத்தை அழைத்தான். அவனுக்கு விசயம் எட்டி தான் வந்து கொண்டிருந்தான்.

சஞ்சய் பற்றிய பேச்சு தான் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு பெண்மணிகள் சுவர்ணலதாவை அழைக்க, அவர் அழைப்பை ஏற்கவில்லை. சஞ்சயின் உறவுக்காரர்கள் வந்து விட்டனர். வந்தவர்கள் பிரியசகியை முறைத்து சுவர்ணலதாவிற்கு ஆறுதலாக பேசினார்கள். ஒருவர் கூட பிரியசகி அருகே கூட வரவில்லை.

சற்று நேரத்தில் வெளிய வந்த ரக்சன், உயிருக்கு பிரச்சனையில்லை. ஒரு மாதமாவது சஞ்சய் ஓய்வெடுக்கணும். வெட்டு ஆழமா இருக்கு என்று செவிலியரிடம் ஏதோ கூறி சென்றான்.

ரக்சனுக்கு ஒரு மருத்துவர் மூலம் சஞ்சய் செய்தி வரவும் பீச் கிளம்பியவன், உஃபென காற்றை வெளியேற்றி தற்பொழுது அமர்ந்தான்.

நாகேந்திரனும் நவீனும் ரக்சன் அறைக்கு வந்தனர்.

“உட்காருங்க” இருவரையும் அமர சொல்ல, பிரசாத்தும் அறைக்குள் வந்தான்.

அங்கிள், சஞ்சய் வெளியே செல்லாமல் பார்த்துக்கோங்க. ஹெவி ப்ளீடாகி இருக்கு. அவன் எந்தளவிற்கு ஓய்வெடுக்கிறானோ அந்த அளவிற்கு அவன் உடல் சீக்கிரம் சரியாகும்..

“தேங்க்யூ சார். நாங்க பார்த்துக்கிறோம்” என்று பிரசாத் ரக்சனிடம் கரம் நீட்ட, அவன் சிந்தனையுடன் அவனை பார்த்தான்.

போலீஸ் ஆட்கள் முதற்கொண்டு வந்து விட்டார்கள். சஞ்சய்கு முக்கியமான நபர் நீங்க? ரக்சன் சிந்தனை மேலோங்கியது.

நேற்றிலிருந்து நான் மாமாவை பார்க்கவில்லை. நான் ஒரு வேலையாக சென்றிருந்தேன். அதனால் விரைந்து என்னால் வர முடியவில்லை சார். ஏன் சார்? என் மீது சந்தேகமா? பிரசாத் கேட்க, சந்திரசேகர் ஹரியுடன் வந்தார்.

“சும்மா தான் கேட்டேன்” தன் தந்தையை பார்த்தான்.

சஞ்சய் எப்பொழுதும் போல வேலை பார்க்கலாமா? கேட்டார் சந்திரசேகர்.

தற்பொழுது சஞ்சய்கு ஓய்வு மிக மிக அவசியம். பின் அவன் உடல்நிலை பார்த்து தான் சொல்லணும் என்றான். நாகேந்திரனுக்கு விழிகள் கலங்கியது.

ஒன்றுமில்லை சார். சஞ்சய் சீக்கிரம் சரியாகிடுவான். அவனுக்கு தைரியம் அதிகம் என்று ஆறுதலாக பேசி, மருந்துசீட்டை நீட்டினான்.

நாகேந்திரன் வாங்கி, மூவரையும் பார்த்தார்.

“நாகேந்திரன் சார் முதல்ல இவனை பத்திரமா பார்த்துக்கோங்க” சந்திரசேகர் ஹரிஹரன் தோளில் தட்டி, கோபமாக மருத்துவமனை விட்டு வெளிய செல்லப் பார்த்தான். அவங்க குறி முதல்ல ஹரி தான்…

“நானே போயிடுறேன்” ஹரி அவரை முறைத்து பேச, “எங்க போகப் போற?” சினமுடன் ரக்சன் கேட்டான்.

ராஜனை சந்திக்கப் போகிறேன்…

உனக்கு ஏதும் ஆகிடக் கூடாதுன்னு தான் சஞ்சய் கடல்னு பார்க்காமல் அவனையும் இழுத்து உள்ள போயிட்டு வந்திருக்கான். சஞ்சய் பிழைத்ததே பெரிய விசயம். அந்த இருள் மூழ்கிய கடலில் சென்று உயிரோட வந்திருக்கான். அவன் உன்னை உயிர் கொடுத்து காப்பாற்றினால் நீயே உன் உயிரை எடுப்பவனிடம் போறேன்னு சொல்ற? ஆவேசமுடன் சத்தமிட்டான்.

நான் என்ன செய்றது? ஹரிஹரன் கேட்க,

சஞ்சய் மாமா வீட்டை விட்டு வெளியே வராமல் நீ பார்த்துக்கோ என்றான் பிரசாத்.

“அப்புறம் யாரு இவனுகளுக்கு தண்டனை வாங்கித் தருவது?” ஹரி சீற்றமுடன் கேட்டான்.

“நாங்க பார்த்துக்கிறோம் ஹரி” ரக்சன் கூற,

நீங்க பயந்து ஓடிப் போனவர் தான?

என்ன சொன்ன? ரக்சன் சத்தமிட,

யாரும் ஏதும் செய்ய வேண்டாம். இப்பொழுதைக்கு எல்லாரும் அமைதியா இருங்க என்ற நவீன் ஹரிஹரனை முறைத்து, “வாங்க அங்கிள்” நாகேந்திரனுடன் வெளியேறினான்.

சஞ்சய் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான். அவனது கட்டுகளுடனான உடலை காண காண அழுகை பொங்கியது சுவர்ணலதாவிற்கு. அவர் வெளியே வரவும் பிரியசகி அவனை காண உள்ளே செல்ல முனைந்தாள். அவளை தடுத்தனர் உறவினர்கள்.

“நல்லா இருந்த புள்ளய மயக்கீ கல்யாணம் பண்ணீட்டு அவ உருசுறயே குடிச்சிட்டியேடி பாவி…” பிரியசகியை அடிக்க சஞ்சயின் சித்தி ஒருவர் கையை ஓங்கினார்.

அவ்விடம் வந்த இனியவன் அவர் கரத்தை தள்ளி விட்டு, “உள்ள போங்க பிரியசகி” என்றான்.

“நீ யாருடா? இவ்வளவு உரிமையா அவகிட்ட பேசுற? சும்மா பழக்கம் தானா?” அவர் மனதின் வக்கிர எண்ணம் புரிந்து அவன் கரங்கள் இறுக, தன் கணவனை வெளியேயிருந்து பார்த்தவாறு கண்ணீருடன் நின்றாள் பிரியசகி.

இந்துஜாவிற்கு சினம் எகிற, “சித்தி….” சத்தமிட்டாள்.

நீ எத்தனை நாள் இவளுக்காக பரிஞ்சுட்டு வர்றன்னு பாக்குறேன்.

ஏன்டி இவள முன்னாடியே வீட்டை விட்டு பத்திருன்னு சொன்னேன்ல…கேட்டியா? சுவர்ணலதாவிடம் அவர் ஒப்பாரியை தொடங்கினார். இந்துஜா தன்னால் முடிந்தமட்டும் சுவர்ணலதாவை வெறித்தாள்.

“இந்த மலடிய கட்டி வச்சு பிள்ளைய பறி கொடுத்துட்டு நிக்குறீயே?” அவர் வார்த்தையை கொட்ட, சுவர்ணலதா அதிர்ந்து, “என்னடி சொன்ன?” அவரை பளாரென அறைந்து விட்டார்.

“பறி கொடுத்துட்டேனா? எம் புள்ள சுட்டெறிக்கும் ஆகாய சூரியன்டி. அவனை யாரும் லேசுக்குள்ள சாய்க்க முடியாது. அவன் நல்லா இருக்கான்டி. இந்த கட்டெல்லாம் சாதாரணம். அவன் பலம் போல அவன் மனசு யாருக்கும் வராதுடி. எம் பிள்ள நல்லா இருக்கணும்னு தவியா தவிக்கும் போது பேசும் பேச்சாடி இது. நீயெல்லாம் தங்கைன்னு வந்து நிக்குற. போடி இங்கிருந்து….” அனைவர் முன்னும் ஆங்காரமாக சத்தமிட்டு சஞ்சயின் சித்தியை தள்ளினார்.

“நான் என்னடி தப்பா சொன்னேன்? இவ்வளவு அடியில அவன் உயிரோட இருந்தாலும் முன் போல இருக்க முடியாதுல்ல..அதான் சொன்னேன்” அவர் எழுந்து சுவர்ணலதாவிடம் சண்டைக்கு வந்தார். அங்கே நடக்கும் அனைத்தும் அவள் செவியை அடைக்க கேட்க முடியவில்லை பிரியசகியால்.

சஞ்சயின் நிலையில் சுனாமி அடித்தது போல இருந்த மனதை அடக்கி இருந்த பிரியசகி மனதில் இப்பெண்மணியின் பேச்சு புயலாகி சூறாவளியானது.

சஞ்சய் மீட்டெடுத்த பிரியசகியின் உள்ளம் ஆணியால் அடிப்பது போல சுள்ளென்று வலி தோன்றியது.

அவர் கூறுவது தவறில்லை. நான் மலடி தானே! தாயாக இருந்து மூன்று கருவை காப்பாற்ற முடியாத பாவி தானே! என்னால் என் குழந்தையையே காப்பாற்ற முடியவில்லை.. இனி குழந்தை பெற்றுக் கொள்ளவும் முடியாது. சஞ்சய் வாழ்க்கையும் என்னால் தானே பாழாய் போனது. அவளது குறையிலே அவளின் எண்ண ஓட்டங்கள் சுழல, தாங்க முடியாதவளாக மயங்கி சரிந்தாள்.

இந்துஜாவோ அப்பெண்மணியிடம் சண்டையிட தயாராக அவரை நோக்கி நகர,  பிரியசகி கீழே விழவும் நாகேந்திரனும் நவீனும் அவளிடம் ஓடி வந்தனர். திகைத்த பெண்களும் அவளிடம் வந்தனர்.

“பிரியா…” இந்துஜா அழ, இனியவனோ கையை கட்டிக் கொண்டு அவர்களை வெறித்து பார்த்தான்.

பிரியசகியை விழிக்க வைத்து அனைவரும் பேச, அவளுக்கு மேலும் கண்ணை கட்டிக் கொண்டு வந்தது. அமர்ந்தவாறே இருந்தாள். அப்பெண்மணி கிளம்பி விட்டார்.

“கொஞ்ச நேரம் அவளை தனியா விடுங்க” இனியவன் கூற, எல்லாரும் அவனை பார்த்தனர்.

“என்ன ஆன்ட்டி? இத தான எதிர்பார்த்தீங்க? இப்ப உங்களுக்கு சந்தோசமா?” இனியவன் சுவர்ணலதாவிடம் கேட்டான்.

“எதுக்கு பிரியா திடீர்ன்னு மயங்கினா? என்னாச்சு ஜா?” நவீன் கேட்க, அவள் அமைதியாக நகர்ந்து நின்றாள்.

நான்…சுவர்ணலதா தயங்க, உங்களுக்கும் இப்ப பேசுனாங்களே அவங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவங்க வார்த்தையால காயப்படுத்துனாங்க. நீங்க செயலால காயப்படுத்தி இருக்கீங்க…

உங்கள் மகனுக்கு பிரியசகி யாரு? அவரு பிரியசகி கழுத்தில் கட்டிய தாலிக்கு என்ன மரியாதை? எல்லாரும் குழந்தை குழந்தைன்னு கேக்குறீங்க? அதை பற்றி கேட்கும் போதெல்லாம் மூன்று குழந்தையை இழந்த பிரியசகி எவ்வளவு வேதனைபட்டுருப்பா?

பிரியசகி அமர்ந்த வாக்கிலே காலை தரையில் ஊன்றி முகத்தை காலில் மறைத்து கதறி அழுதாள்.

இப்ப என்னடான்னா சஞ்சய் மாமாவின் நிலை பிரியசகியாலன்னு சொல்றாங்க. உங்க மகனுக்கு இதற்கு முன் எந்த காயமும் இருந்ததில்லையா? சொல்லுங்க…

ஹரிஹரனும் பிரசாத்தும் வந்து கொண்டிருந்தவர்கள் இனியவனின் பேச்சில் நின்று விட்டனர்.

பரவாயில்லை ஆன்ட்டி. உங்க மகனுக்காக உங்களால பேச முடியும். ஆனால் பிரியசகிக்காக பேச முடியாது…பல்லை கடித்த இனியவன்…

குழந்தை பற்றி பேசும் போது உங்களால அவங்க வாயை ஏன் அடைக்க முடியல. சஞ்சய் மாமா உங்க மகன் தான? உங்க குடும்பம் விசயம் தான? மத்தவங்கள பேச விட்டு வேடிக்கை பாக்குறீங்க. குழந்தை பெத்துக்க முடியாதுன்னு ஏற்கனவே சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் பெண்ணோட வலி ஒரு பொண்ணா உங்களுக்கு புரியாதா? அவங்களுக்கு அந்த ஏக்கம் இருக்காதா? உங்கள மாதிரி ஆளுங்களால தான் பிரியசகி மாதிரி பொண்ணுங்க யாரிடமும் மனதில் உள்ளதை பேச முடியாமல் மனஅழுத்தம் ஏற்பட்டு உடலாலும் மனதாலும் வேதனையிலே வாழ்றாங்க.

இப்ப என்ன பிரியசகிக்கு குழந்தை பிறக்காது. அவங்களுக்கு வாழ தகுதியில்லையா? குழந்தை பிறக்கலைன்னா அவ செத்துறலாமா? என்றவன் சீற்றமுடன் செவிலியர் ஒருவர் கையிலிருந்த ட்ரேயில் இருக்கும் கத்தியை எடுத்து சுவர்ணலதா முன் தூக்கி போட்டான்.

குழந்தை இல்லைனு அவங்கள பேசி பேசி சாவடிக்கிறதுக்கு கத்தியால் உங்க மகன் சஞ்சய் மனைவியை கொன்றுங்க. அப்புறம் நல்லா குழந்தை பெத்துக் கொடுக்குற பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வைங்க” மருத்துவமனையே அதிரும் வண்ணம் கத்தினான்.

சுவர்ணலதா அழுது கொண்டே கத்தியை பார்த்து தன் கணவனையும் இந்துஜாவையும் கண்டு பிரியசகியிடம் செல்ல, எங்கே அவளை ஏதும் செய்து விடுவாரோ? என்ற பயத்தில் ஹரிஹரன் பிரியசகிக்கும் சுவர்ணலதாவிற்கும் இடையில் வந்தான்.

வராதீங்க….என்ற ஹரிஹரன், வா சகி நாம இங்கிருந்து போயிடலாம். நீ வேணும்னா உம் புருசன் வரட்டும். இவங்களுக்கு மத்தியில நீ கஷ்டப்படுறதை என்னால வேடிக்கை பார்க்க முடியாது.

“ஆமா பிரியா, போதும்…வந்துரு. நாங்க எல்லாரும் உனக்காக எப்போதும் இருப்போம்” நவீன் தன் அண்ணனை பார்க்க, “பிரியா வரும் முன் மாமாவிடம் சொல்லீட்டு வரணும்” என்றான் பிரசாத்.

“பிரியாம்மா, எங்கேயும் போயிடாதம்மா. சஞ்சய் ரொம்ப கோபப்படுவான். எம் பொண்டாட்டிக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” கண்கலங்க மிகவும் வருந்தி பிரியசகியை பார்த்தார் நாகேந்திரன்.

“மாமா…” வராத குரலில் அழைத்து அனைவரையும் பார்த்தாள்.

“போதும் சகி. இவங்களுக்காக எத்தனை நாள் நடிச்சிட்டு இருப்ப? நானும் அங்கிளும் உன்னை பார்த்துக்கிறோம். வந்துரு…என்னோட அம்மாவை இழந்தது போல என்னால உன்னை இழக்க முடியாது. என்னோட அம்மா, அப்பாவை கொன்றதற்காக தான் என் படிப்பை விட்டு அந்த ராஜனை கொன்றாவது பிடிக்கணும்னு நினைச்சேன்.

இப்ப சொல்றேன். எனக்கு யாரையும் பழி வாங்க வேண்டாம். செத்துப்போன என்னோட அம்மாவை விட உயிரோட இருக்கிற நீ எனக்கு மிகவும் முக்கியம். வந்துரு நாம போயிடலாம்” ஹரிஹரன் கண்ணீருடன் பேசினான்.

“ஹரி…” நாகேந்திரன் சினமுடன் அழைத்தார்.

தாத்தா, உங்க மனைவி மாறுவது போல தெரியல. உங்க பையனுக்கு சகி மீது அதீத காதல் இருந்தாலும் அவரால அவங்க அம்மாவை விட்டுக் கொடுக்காமல் சகியை தான் கஷ்டப்படுத்திட்டு இருக்கார். உங்களால இந்த பிரச்சனைக்கு முடிவு சொல்ல முடியுமா? உங்க மனைவியால மருமகனு சகியை ஏத்துப்பாங்களா? சினமுடன் கேட்டான்.

தன் மனைவி பிரியசகியை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டாள். அதே போல சஞ்சய் தனியே செல்லவும் விட மாட்டான் என்று அவருக்கு உறுதியாக தெரியும் என்பதால் விழிகளில் நீர் கோர்க்க, “இல்லை” தலையசைத்தார்.

அமைதியா இருங்க தாத்தா. உங்க பையனுக்கு பொண்டாட்டி முக்கியம்னா அவரே வரட்டும். இல்ல அம்மா தான் வேணும்ன்னா உங்களுடனே இருக்கட்டும். நான் சகியை அழைச்சிட்டு போறேன் எனக்கு அம்மாவாக என்றான்.

இதுவரை ஹரி விளையாட்டுக்கு பேசுகிறான் என அனைவரும் எண்ணி இருக்க, பிரியசகியை அம்மா என்று அவன் அழைக்கவும் அவள் மனம் ஹரி பக்கம் சாய்ந்தது. அதற்காக சஞ்சயை விடவும் மனமில்லை. இரண்டான் கட்டானாக பிரியசகி மனம் அல்லாடிக் கொண்டிருந்தது.