சமய பேதமின்றி ஆத்மநல்லூரின் மாந்தர்கள் அனைவரும் அனுதினமும் சிவஞான சந்திரரை ஆலயத்திற்குச் சென்று தரிசித்த வண்ணம் இருந்தனர்.
“முதலை விழுங்கி உயிர் இழந்த சிறுவனைப் பற்றி ஒரு வருடம் கழித்து அச்சிறுவனின் பெற்றோர்கள் மூலம் கேள்வியுற்ற சந்திரர், ஈசனை வணங்கி துதித்துப் பதிகம் பாடி அச்சிறுவனின் உயிரை மீட்டெடுத்துத் தந்தாராம்”
“யாம் உன்னைத் தடுத்து ஆட்கொண்ட போது இருந்தபடி திருமணக் கோலத்திலேயே எப்போதும் இருப்பாயாக என்று அவரின் பக்தியை மெச்சி சிவபிரானே சந்திரருக்கு அருளினாராம். அதன் பொருட்டே சந்திரர் எப்பொழுதும் திருமணக் கோலம் தாங்கியே இருக்கிறாராம்”
“ஒரு பங்குனி உத்திரத் திருநாள் செலவிற்குப் பொருள் ஏதுமின்றித் தவித்த சந்திரரின் மனைவி அவரிடம் தெரிவித்தாராம். தனது வீட்டின் வறுமை நிலையை மாற்றும்படி சந்திரர் திருப்புகலூர் சென்று சிவபிரானைப் பதிகம் பாடித் தொழுதாராம். அன்று அவர் அக்கோயிலின் அருகேயுள்ள மடத்தில் ஒரு செங்கல்லைத் தலையணையாக்கி உறங்கிய பொழுது சிவபிரான் அருளால் செங்கல் பொன்னாக மாறியதாம்”
இவ்வாறாக அன்றாடம் சிவஞான சந்திரரைத் தரிசித்துச் செல்ல வரும் மக்கள், ஈசனைத் துதித்து பதிகம் பாடிச் சந்திரர் தனது வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களைத் தங்களுக்குள் வியந்து பேசியவாறு அவரைத் தரிசித்து சென்றனர். அவர்கள் மூலம் இதனை கேட்டறிந்த முத்தரசிக்கு சிவஞான சந்திரர் மீதான நன்மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
சிவநேசனுடன் நிறைமதியின் கணவனான சொக்கேசனும் சந்திரரை விட்டு பிரியாது அவருடன் இருந்து பணிவிடைகள் செய்து வந்தான்.
நிறைமதியும் முத்தரசியும் சந்திரருக்கான அமுது படைக்கும் பணிவிடைகளைச் செவ்வனே செய்து வந்தனர்.
ஏழு நாட்களுக்குப் பிறகு சந்திரர் ஆத்மநல்லூரிலிருந்து கிளம்ப வேண்டிய தினமான அன்று அழகிய மாதவப் பெருமாள் ஆலயத்திலிருந்த கைலாசநாதர் சிவலிங்கத் திருமேனி முன்பு அமர்ந்திருந்தார் சிவஞான சந்திரர்.
சந்திரரைப் பிரிய மனமின்றி கலக்கத்துடன் சிவநேசனும் சொக்கேசனும் அவர் முன்பு பணிவுடன் நின்றிருக்க, அவரை வணங்கியவாறு நின்றிருந்தனர் முத்தரசியும் நிறைமதியும். மதுரகவிராயர் சந்திரரின் அருகில் அமர்ந்திருந்தார்.
“தங்களின் பணிவிடையில் மனம் மகிழ்ந்திருக்கிறேன் நான்! தங்களுக்கு வேண்டிய வரத்தினை அருள சித்தமாய் உள்ளேன்! கேளுங்கள் அன்பர்களே” என்று தன் முன்னே நின்றிருந்த நால்வரையும் நோக்கிக் கனிவுடன் கேட்டார் சிவஞான சந்திரர்.
“தங்களைக் காண்பதே வாழ்வின் இலட்சியமென வாழ்ந்த எமக்கு தங்களுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததே வரமாகும் ஐயனே” பணிவுடன் உரைத்தான் சொக்கேசன்.
“பிரதிபலன் பாராது செய்யும் பணிவிடை தான் இறைவனைச் சென்றடையும் ஐயனே! தாங்கள் எமக்கு இறைவனாவீர்கள்” என்றான் சிவநேசன்.
“தங்களைக் காண வேண்டும் என்ற எனது கணவரின் லட்சியத்திற்கு நான் உறுதுணையாக நின்றேன். நாங்கள் இருவரும் இணைப்பிரியா தம்பதியராக என்றென்றும் வாழ்ந்திருக்க ஆசி வழங்க வேண்டும் ஐயனே” எனக் கேட்டுக் கொண்டாள் நிறைமதி.
நிறைமதியும் சொக்கேசனும் தம்பதியராக அவரின் முன் சென்று நிற்க, இருவருக்கும் திருநீறு பூசிய சந்திரர், “தாங்கள் இருவரும் என்றும் இணைபிரியா தம்பதியராய் மக்கட் செல்வம் பெற்று இன்புற்று வாழ்வீர்கள்” என்று வரமளித்து ஆசி வழங்கினார்.
தாங்கள் கேட்காத பிள்ளைச் செல்வத்தை வரமாய் அருளிச் செய்த சந்திரரை மனமகிழ்வுடன் பணிந்து வணங்கினர் இருவரும்.
சந்திரரின் முன்பு வணங்கியவாறு வந்து நின்ற முத்தரசி, “எம் சுவாமியின் ஆயுள் கண்டத்தைப் போக்கி அவருக்குத் தீர்க்காயுளை நல்க வேண்டும் ஐயனே” பணிந்து கேட்டாள்.
மகளின் இந்த வேண்டுதலில் அவளைச் சட்டென மதுரகவிராயர் திரும்பிப் பார்க்க, இந்நிலையிலும் தனக்காக வரம் வேண்டி நிற்கும் தன்னவளை சிவநேசனின் கண்கள் வருடியிருந்தன.
“யாரது தங்களின் சுவாமி அம்மையே” எனக் குறுஞ்சிரிப்புடன் கேட்டார் சந்திரர்.
சட்டென அவளின் பார்வை உயர்ந்து சிவநேசனைப் பார்த்தது.
அவளது பார்வையின் திசை நோக்கி பார்த்தவராய், “ஆயுள் கண்டம் நீங்கினால் மட்டும் போதுமா? உங்களின் சுவாமி உங்களவராய் உங்களுக்கு வேண்டாமா?” எனக் குறும்பாய் கேட்டார் சந்திரர்.
“என்னை வேண்டாமென உதறிச் சென்றவரே விரும்பி வந்து கேட்டால் மட்டுமே அவரிடம் சரண் புகுவேன் ஐயனே! ஆயுள் முழுவதும் தனித்து வாழ்ந்து மடிந்து போவேனேயன்றி அவரிடம் சென்று நிற்க மாட்டேன்” தீர்க்கமாய் வந்து விழுந்தன அவளின் வார்த்தைகள்.
தன்னையும் மீறி அவளின் முன் வந்து நின்றவனாய், “என்ன வார்த்தை இது தேவி! ஆயுள் முழுவதும் தாங்கள் தனிமரமாய் நின்று விடக் கூடாது என்பதற்காகத் தானே தங்களின் காதலை நிராகரித்தேன். அதற்காக என்னை நிராகரிப்பீர்களா? தாங்கள் என்னுடன் வாழாத இவ்வாழ்வில் நீண்ட ஆயுள் வேண்டாம் எனக்கு” அத்தனை ஆதங்கத்துடன் வந்து விழுந்தன சிவநேசனின் வார்த்தைகள்.
தான் அவளை நிராகரித்த போது வந்த வலியை விட இப்பொழுது அவள் தன்னை நிராகரித்தப்போது பன்மடங்கு வலியை உணர்ந்தான் சிவநேசன்.
அவனின் பேச்சிற்குப் பதிலுரைக்காது, “எனக்கு என் சுவாமி தீர்க்காயுளுடன் வாழ வேண்டும். அதற்கான வரமளியுங்கள் ஐயனே” என்று கரங்களைக் கூப்பியவாறு பணிந்து நின்று கேட்டாள் முத்தரசி.
“தாங்கள் இல்லாது நான் யாருக்காக தீர்க்காயுளுடன் வாழ வேண்டும் தேவி” மனம் பொறுக்காது கலங்கிய குரலில் கேட்டவன் சந்திரரை வணங்கியவனாய்,
“எம்பெருமான் ஈசனை நேசிக்கும் அளவு எம் தேவியையும் நான் நேசிக்கிறேன் ஐயனே! எம் தேவியை நான் மணமுடித்து அவருடன் தம்பதியராய் சிவத்தொண்டாற்றி தீர்க்காயுளுடன் வாழ வேண்டுமென்று வரமளியுங்கள் ஐயனே” வரம் வேண்டி நின்றான் சிவநேசன்.
‘தாங்களின்றி என்னைத் தனித்து விட்டு விடாதீர்கள் தேவி’ என்று மனதிற்குள் பேசியவனாய் கெஞ்சல் பார்வையுடன் அவளைப் பார்த்திருந்தான் சிவநேசன்.
இவர்களின் பேச்சைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த சந்திரர்,
“இத்தனை நேசத்தை மனத்தினில் வைத்துக் கொண்டு ஏன் கண்ணாமூச்சு ஆடுனீர்கள் சிவநேசரே! நீங்கள் இல்லாது அம்மையார் வாழ்வார் என்று தாங்கள் நினைத்ததே அபத்தமானது” என்றவர்,
பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி!
பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி!
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி!
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி!
அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி!
அன்று அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும்,
சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
என்று மெய் மறந்து மனமுருக தொடர்ந்து சிவஞான சந்திரர் பாட,
சிவலிங்கத் திருமேனியிலிருந்து வீசிய ஒளி முத்தரசி சிவநேசன் மீது விழுந்தது.
“முத்தரசி சிவநேசரே” அசரீரி ஒலித்தது.
மனமுருக இறைவனை நினைத்து பாடி முடித்த சந்திரருக்கு அசரீரியின் குரலில் மேனி சிலிர்த்தடங்கியது.
“எம்பெருமானே” எனத் தம்மை மறந்து முத்தரசியும் சிவநேசனும் சிவலிங்கத்தினை நோக்கி மண்டியிட்டு பணிந்து அமர்ந்தவாறு கூற, மற்ற அனைவரும் பிரமித்து நின்றனர்.
“இது ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் சிவநேசரே! தங்களுக்கும் முத்தரசிக்கும் மட்டுமல்லாது தங்களுக்கும் இந்த சிவலிங்கத்திற்குமே இது ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்!
முற்பிறவியில் இது தாங்கள் நிறுவி பூஜித்த சிவலிங்கம் சிவநேசரே!
முத்தரசியே! சிவநேசரின் ஆயுள் கண்டம் நீங்க தாங்கள் வேண்டுதல் வைத்து செய்த பக்தியில் மனம் குளிர்ந்தேன்.
சக்தியில்லாமல் சிவமில்லை என்பதற்கேற்ப எப்பிறவி எடுத்தாலும் முத்தரசி இல்லாமல் தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ முடியாது என்பது தங்களின் விதி சிவநேசரே! முத்தரசியை மணம் செய்தால் மட்டுமே தாங்கள் தீர்க்காயுளுடன் வாழ முடியும். அதோடு இச்சிவலிங்கத்தினைக் காக்கும் பொறுப்பு தங்களுடையது. இதற்கு இன்னல் நேரும் சமயங்களில் எல்லாம் தாங்கள் இப்பூமியில் பிறப்பெடுப்பீர்கள்”
“ஆதர்ச தம்பதியராய் இருவரும் தீர்க்காயுளுடன் வாழ்வீர்கள்” என்று ஆசி வழங்க அந்த ஒளி மறைந்தது.
சிவஞான சந்திரரின் வேண்டுதலை சிவபெருமான் ஏற்றதற்குச் சாட்சியாக சிவலிங்கத் திருமேனியிலிருந்து வீசிய ஒளி சிவநேசன் முத்தரசியின் மீது இறையாசியாய் பாய்ந்து மறைந்திருந்தது.
“எம்பெருமான் ஈசனே தங்கள் இருவருக்கும் ஆசி வழங்கி விட்டார் சிவநேசரே” என்று மகிழ்வுடன் உரைத்தார் சந்திரர்.
சிவநேசன் முத்தரசியின் உடல்கள் புல்லரித்து உள்ளங்கள் பூரித்து நெகிழ்ந்து கண்கள் ஆனந்த கண்ணீரைப் பொழிந்தன.
மதுரகவிராயரும் நிறைந்த மனத்துடன் சம்மதமளிக்க, சந்திரர் அன்றே முன்நின்று முத்தரசியை சிவநேசருக்கு மணமுடித்து வைத்தார்.
சந்திரரை வழியனுப்ப அரண்மனையிலிருந்து வந்த அரசரும் மகாராணியாரும் இங்கு நிகழ்ந்த அதிசயத்தைக் கேள்வியுற்று நெகிழ்ந்து போயினர். தமது நாட்டில் இத்தகைய பேறுப்பெற்ற சிவனடியாரும் அவரது துணைவியாரும் இருப்பதை தங்களது பாக்கியமாகக் கருதினர்.
******
மணமுடித்த கையோடு மணமாலையுடன் சிவநேசன் முத்தரசியைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.
அழகிய மாதவப் பெருமாள் கோவிலின் பின்னே இருந்த மலைப்பாதை வழியாக இவளை அழைத்துச் சென்றான்.
அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பே இவர்களின் திருமணம் பற்றிய செய்தி அவனின் பெற்றோர்களை எட்டியிருந்தது.
மலை மீது சோலைவனம் என்ற ஊரில் சாம்பல் அருவியின் அருகில் அதன் நீர் ஓடையாய் பாயுமிடத்தில் சிவநேசனின் இல்லம் வீற்றிருந்தது. மணமுடித்து முத்தரசியை அந்த நீரோடையின் அருகில் இருந்த சிவன் கோவிலுக்கு அழைத்து சென்று வணங்கியவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
பெரிய வணிக குடும்பம் என்பதற்கேற்ப சிறிய அரண்மனை போன்று வீட்டினுள்ளேயே சிறிய நீரோடையும், பூந்தோட்டமும் அதன் மத்தியில் பெரிய சிவலிங்கமும் இருந்தன.
முத்தரசியும் சிவநேசனும் மாலையும் கழுத்துமாக அச்சிவலிங்கத்தின் முன் வணங்கி எழுந்தனர்.
அன்றாடம் நாராயணனுக்கு தான் சூடும் மாலையைத் திருமணத்திற்குப் பின்பும் நில்லாது தொடர்ந்தாள் முத்தரசி. சிவநேசனுடன் இணைந்து நமசிவாய மந்திரத்தை ஓதியவாறு சிவத்தொண்டும் ஆற்றினாள். சிவநேசனின் விருப்பத்திற்கு இணங்க தம்பதியராய் இருவரும் அன்றாடம் வீட்டிலிருக்கும் அச்சிவலிங்கத்திற்கு சிவபூஜையும் செய்து வந்தனர்.
காதலாகிக் கசிந்துருகி நல்லறமாய் இனிய இல்லறத்தை நடத்தி இறைவன் அருளிய தீர்க்காயுளுடன் வாழ்ந்திருந்தனர் முத்தரசியும் சிவநேசனும்.
****
சோலைவனம் சிவன் கோவிலில் ஆழ்ந்த தியானத்தில் தனது முற்பிறவியைக் காட்சிகளாய் கண்டிருந்த சக்தீஸ்வரன் பட்டெனக் கண்களை திறந்தான்.
கண்களில் கண்ணீர் பொங்கி வழிய சிவனை வணங்கி எழுந்தவனாய் மனைவியைத் தேடி அறைக்குச் சென்றான்.