“ஆமாம் உங்களுக்குதான் சிரமம் பார்த்துக்கோங்க” என அஞ்சலியும் சொன்னாள்.
“எனக்கென்னடி சிரமம்? உன் புள்ளைங்கள நீ பாரு”
“உங்க புள்ளைய நான் பார்க்கிறேன்ல, பதிலுக்கு நீங்க எம்புள்ளைங்கள பாருங்க”
“எம்புள்ள என்ன உம்புள்ளைங்க மாதிரி படுத்துறானா?”
“படுத்தலைன்னு உங்களுக்கு ரொம்ப தெரியமா? உங்க புள்ளைய சமாளிக்கிற சாமர்த்தியம் எனக்கிருக்கு, உங்களுக்கு இல்லைனா நான் என்ன பண்றது?” எனக் கேட்டாள் அஞ்சலி.
“பார்த்தியாடா உன் பொண்டாட்டி பேச்சை” மகனிடம் குறை சொன்னார் அலமேலு.
மாமியார் மருமகளின் இந்த அடாவடி பேச்சுக்கள் அந்த வீட்டின் வாடிக்கை. யாருக்கும் சாதகமாக பேசாமல் வழக்கம் போல சிரித்து மழுப்பி நழுவி சென்று விட்டான் யுகி.
சனிக்கிழமை காலையே குடும்பத்தோடு வந்து விட்டான் வாசு. சுப்ரியாவும் இருந்தாள். மாலையில் பைரவி கணவனோடு வந்தாள். பிள்ளைகள் எல்லாம் ஒரே ஆட்டம். வெளிநாட்டில் இருக்கும் நந்தினி, ஷிவானி ஆகியோருடன் காணொளி அழைப்பில் பேசினார்கள்.
மாடியில் ஏதோ புதிய திரைப்படம் பார்க்க தயாராகி இருந்தனர். அலமேலு, வெங்கட் இருவருக்கும் வயோதிகம் காரணமாக மாடியேற சற்று சிரமம்தான். வாசு உதவி செய்து மாடிக்கு அழைத்து வந்து விட்டான்.
சோஃபாவை ஓரமாக நகர்த்தி போட்டு, தளத்தில் மெத்தை விரித்து, மாமனாருக்கு சாய்வான இருக்கை போட்டு, உணவையும் மேலே எடுத்து வர செய்து என எல்லா ஏற்பாடுகளும் அஞ்சலிதான்.
சேர்ந்து சாப்பிட்ட பிறகு படம் போட்டு விட்டான் யுகி. ஆனால் படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அலுப்பின் காரணமாக உறங்கிப் போய் விட்டாள் அஞ்சலி.
பிள்ளைகள் படத்தோடு ஒன்றி விட்டனர். அலமேலுவுக்கு படம் பிடிக்கவில்லை, ஆனாலும் அனைவரும் இருக்க அங்கேயே படுத்து விட்டார்.
உறங்கிய மனைவியை எழுப்பி விட்டான் யுகி.
“கண்ட நேரத்திலேயும் உங்களுக்கு மூட் வரும், தொல்லை பண்ணாம தள்ளி போங்க” என சொல்லி புரண்டு படுத்தாள் அஞ்சலி.
அருகிலிருந்த அலமேலு, பைரவி, வாசு, ஸ்ரீஜா காதுகளில் அவள் பேசியது விழுந்து விட்டது. முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வது என தெரியாமல் தலையை குனிந்து நெற்றியில் கை வைத்துக்கொண்டான் யுகி.
தள்ளி அமர்ந்திருந்த வெங்கட், “என்னடா அஞ்சலி தூங்கிட்டு இருக்கு, எழுப்பி விடு, படம் பார்க்கட்டும்” என யுகியிடம் சொன்னார்.
“சும்மான்னு இருங்க” என கணவரை கடிந்தார் அலமேலு.
“என்னை எதுக்கு சத்தம் போடுற?” என மனைவியை கடிந்தவர், “அஞ்சலி அம்மாடி அஞ்சலி…” என மருமகளை அவரே எழுப்பி விட முயன்றார்.
ஏதும் உளறுவாளோ என பயந்த யுகி, வேகமாக அஞ்சலியின் வாயை மூடினான். அவனது உடன் பிறப்புகள் வாயை மூடிக் கொண்டு சிரிக்க, கணவரை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு “சும்மான்னு இருங்க” என சத்தமில்லாமல் அதட்டினார் அலமேலு.
ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் திரும்பிக் கொண்ட வெங்கட், “என்னம்மா நடக்குது?” என ஸ்ரீஜாவிடம் விசாரித்தார்.
“அவளுக்கு டயர்டாம் மாமா” என சொல்லி விட்டு கணவனை பார்த்து சிரித்தாள் ஸ்ரீஜா. ‘இந்த விஷயத்துல உன்னை மாதிரியே உன் தம்பியும்’ என்ற ரகசிய செய்தி இருந்தது அவளின் பார்வையில். புரிந்தவனாக அவனும் வெட்கப்பட்டு சிரித்தான்.
“என்னவோ அஞ்சலிதான் ரொம்ப ஆர்வமா இருந்துச்சு, எழுப்பி விட்டது ஒரு குத்தமா?” எனக் கேட்ட வெங்கட், படத்தில் ஒன்றி விட்டார்.
உறக்கத்திலேயே கணவனின் மடியில் தலை வைத்துக்கொண்டாள் அஞ்சலி. இன்னும் கிண்டலாக தன்னை பார்ப்பார்களோ என நினைத்தவன் மெல்ல அவளின் தலையை மடியிலிருந்து இறக்கினான்.
சற்று நேரத்தில் மீண்டும் கணவனின் மடியில் தலை வைத்தவள் அணைவாக அவனது இடுப்பை சுற்றிப் பிடித்துக்கொண்டாள்.
யுகி நெளிய, அவனது தோளில் அடி வைத்த அலமேலு, “போ, அவளை ரூம்க்கு அழைச்சிட்டு போய் தூங்க வை” என சின்ன குரலில் அதட்டினார்.
“எழுப்பிடாத டா” என எச்சரிக்கை செய்தாள் பைரவி.
“அஞ்சலி எந்திரி டி” பல்லை கடித்துக் கொண்டு மெதுவாக மனைவியை எழுப்பி விட்டான் யுகி.
நல்ல வேளையாக எதுவும் உளறாமல் விழித்துக் கொண்டாள். ஆனால் உறக்கம் கலையவில்லை, அவளை அறையில் கொண்டு போய் விட்டான். படுத்துக் கொண்டவள் அவனையும் இழுத்துப் பிடித்துக்கொண்டாள்.
“இரு இரு வர்றேன்” என்றவன் வெளியேறினான்.
ஹால் வந்தவன் அக்காவிடம் சின்ன குரலில், “அவனுங்க தூங்கிட்டா கால் பண்ணுக்கா, வந்து தூக்கிட்டு போறேன்” என்றான்.
“போடா நானே என் கூட படுக்க வச்சிக்கிறேன்” என்றாள் பைரவி.
கைகள் குவித்து வேடிக்கையாக நன்றிகள் சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
“என்ன யுகி… அஞ்சலி தூங்க போயிடுச்சா? நீ இங்க வா” என அழைத்தான் சேகர்.
“எனக்கும் தூக்கம் வருது மாமா” என்றான் யுகி.
“அட வா, நாளைக்கு பகல்ல தூங்கிக்க, வா வா” என்றான் சேகர்.
“விடுங்க மாமா, அவன் காலைல கடைக்கு போகணும்” என சொல்லி காப்பாற்றி விட்டான் வாசு.
யுகி தன்னை கடந்து செல்கையில் தம்பியின் முதுகில் செல்லமாக அடி வைத்து, “ஓடிப் போடா இங்கேருந்து” என்றான் வாசு.
அண்ணன் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கி, முதுகை தடவிக் கொண்டே விரைந்து விட்டான் யுகி.
அவன் அறைக்கு வந்த போது சற்று முன் ஓய்வறை சென்று திரும்பியிருந்த அஞ்சலி உறக்கம் கலைந்தவளாக அவனை பார்த்தாள். அவளிடம் நடந்ததை சொல்லி, “ஒருத்தர் மூஞ்ச கூட பார்க்க விடாம செஞ்சிட்ட” என்றான்.
“நிஜமா அப்படியா சொன்னேன், அச்சோ… என்னை பேச விட்டு வேடிக்கை பார்த்தீங்களா? என்ன நினைச்சிருப்பாங்க எல்லாரும்” என சங்கட பட்டாள்.
தலையாட்டிக் கொண்டே படுக்க போனவளை முறைத்துக் கொண்டே தன்னிடம் இழுத்துக் கொண்டான்.
வருடங்கள் கடந்தாலும் மனைவியின் மீதான அவனது பித்து கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை. அஞ்சலிக்கும் தொழிலில் உயர்ந்து, பக்கவமும் கூடிப் போயிருந்தாலும் கணவன் தன்னை சீராட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
அவனது சிகையை ஆசையாக கலைத்து விளையாடினாள் அஞ்சலி. நாற்பதை தாண்டி விட்டவன் மனதின் மகிழ்ச்சி காரணமாக தேஜஸ் குறையாமல் இருந்தான். இமைக்காமல் கணவனை கண்களால் விழுங்கினாள்.
அவனது கன்னங்களில் முத்தமிட்ட அஞ்சலி, “நாளைக்கு ஷாப் போக வேணாம், கூட இருங்க” என்றாள்.
“ம்ம்…” என சம்மதம் சொல்லிக் கொண்டே மையலாக மனைவியை அணுகத் தொடங்கினான் யுகி.